Saturday, 27 December 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் !! 2015 !


New Year Resolution 

 வழக்கமா டிசம்பர் பதினைந்து தாண்டினாலே எனக்கு ஜுரம் வந்ததுபோல் ஆகிவிடும்.
இந்த வருஷம் என்ன தீர்மானம் பண்ணலாம்ன்னு மண்டைக்குள்ள குடைய ஆரம்பிச்சிரும்.

லவ் பண்ணக்கூட அவ்வளவு மெனக்கெட்டதில்லை. 

எங்க இன்ஸ்டிட்யூட் பொண்ணுங்கெல்லாம் எப்போதுமே செட் ஆகாது. அதுங்க வாயைத்திறந்தாலே, டெபிட், கிரடிட், கம்பெனி லா அப்படித்தான் பேசுங்க.

சப்ஜெக்ட் பத்தியே பேசற ஆப்ஜெக்ட் எல்லாம் நம்ம டார்கெட்லயே வராது.

ஸ்டெல்லா மாரிஸ், எத்திராஜ், Q.M.C. அவ்வளவுதான் நம்ம சாய்ஸ்.

அன்னைக்கு எந்த காலேஜ் பக்கம் எவன் போறான்னு பாத்து அங்க போய் ஓசில இறங்கிக்குவேன்
இல்லைன்னா, இருக்கவே இருக்கா, லலிதா
ஏய், என்னைக் கொண்டுபோய் ஏதோ ஒரு காலேஜ் வாசல்ல விடுடீன்னா, திட்டிக்கிட்டே கொண்டு விட்டுருவா.

அன்னைக்கு அந்தக் காலேஜ் வாசல்ல எந்தப் பொண்ணு பளிச்சுன்னு இருக்கோ, அது கூட டூயட் பாடிக்கிட்டே, (மனசுக்குள்ளதான்) வீட்டுக்குப் பொடிநடையா போய் சேரவேண்டியதுதான்.

மறுநாள் வேற காலேஜ், வேற டூயட்!

நமக்கு எப்படியும் வீட்டுல பார்க்கற அருக்காணிதான்!. 
அப்புறம் எதுக்கு இந்தக் கெரகம் புடிச்ச  சீரியஸ் லவ் ரிஸ்க் எல்லாம்.!

உன் மொகரைய எந்தப்பொண்ணு லவ் பண்ணும்ன்னு உண்மையை கண்டுபிடிச்சுட்டதா நினைச்சுக் கேட்டீங்கன்னா
உங்களைக் கேட்டாங்களா முருகேஷா,(ஷி) ???

நாங்களும் தினசரி கண்ணாடி பார்ப்போம், எங்களுக்கும் தெரியும்.

பாருங்க இந்த ஒரு வார்த்தையச் சொன்னாலே ரூட்டு மாறி எங்கெங்கோ போகுதே, லவ் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும்?

இனிமேல் இப்படி சுத்தி வளைச்சு எழுதமாட்டேன்னு முதல்ல ஒரு resolution எடுக்கணும். முடில.

....ம், கதைக்கு வருவோம்.

அநேகமா, இனி நாள் தவறாம டைரி எழுதணும் அப்படின்னு ஒரு நூறு வருஷம் தீர்மானம் போட்டிருப்பேன். 
பிள்ளையார் சுழியெல்லாம் ஜோராத்தான் போடுவேன். 
அப்புறம்தான் பிரச்னை ஆரம்பம். 

யார் படிச்சாலும் மாட்டிக்காத மாதிரி டைரி எழுதணும்ன்னா, கோட் வோர்ட் லதான் எழுதணும். 
அதுனால, உபத்திரவம் இல்லாம, பிள்ளையார் கோயிலுக்குப் போனேன், பால் அரைப்படி வாங்கினேன் அப்படின்னு ஏதாவது எழுத ஆரம்பிச்சா, அடுத்தநாளே, ரத்னா கேப் போய் ஒரு ஆறு இட்லி சாம்பார் சாப்பிட்டதை கோட் வோர்ட்ல எப்படி எழுதறதுன்னு தெரியாம, அறிவா எழுதினேன் பாருங்க,
"ரத்னா வாசம், கைபிடித்து இழுக்க, ரசனையோடு செலவு, ஆறுமுழம் மல்லிகைப் பூ" 
எழுதிவெச்சுட்டு, திருதிருன்னு சுத்தியும் பார்த்துட்டு, கட்டிலுக்கு அடியில ஒளிச்சு வெச்சுட்டு, ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்தா, பொண்டாட்டி மாரியாத்தா கைல டைரி. 
செருப்பை வாசலில் கழற்றிவிடுவது எவ்வளவு ஆரோக்கியமான பழக்கம்!

பேசாம அவளையும் கூட்டிக்கிட்டே போய் ஒரு ரெண்டு டஜன் இட்லி வாங்கிக் கொடுத்திருக்கலாம்.!
அத மறைக்க மல்லிகைப் பூன்னு எழுத, அடுத்து நடந்த நவரச விசாரணைக்கு இடையில் பன்னண்டு தடவை பாத்ரூம் போயிட்டு வந்ததை அடுத்தநாள் டைரில எழுதமுடியல.

விடியவிடிய வராண்டாவுல மார்கழிப் பனியில படுத்துப்பாருங்க, உங்களுக்கும் அடுத்தநாள் நிமோனியாதான் வரும்.

பதினெட்டு மணிநேரம் போனால்தான் சொல்லமுடியும்ன்னு சொல்லி அட்மிஷன் போட்ட டாக்டர் படுபாவி, நல்லா, லட்சணமா ஒரு கேரளத்துக் குட்டியையா ஊசிபோடச் சொல்லணும்?

நம்ம மூஞ்சி லட்சணம் காட்டிக்கொடுத்து, “அவருக்கு எது நடந்தாலும் வீட்டுலயே நடக்கட்டும் டாக்டர்னு சொல்லி வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்தாளே மகராசி.

எதுக்கும் இருக்கட்டும்னு வீட்டுக்குப்போற வழியில இருபது தந்தி பாரம் வாங்கிக்கிட்டுப் போய்ட்டோம். 
ஏதாவது ஆனா, சொந்தக்காரங்களுக்கெல்லாம் தந்தி கொடுக்கணுமே!

என் சாவு செய்திய நானே இருபது தடவை எழுதி வெச்சுட்டு 
பொ/போத்திக்கிட்டுப் படுத்தா,  அனாவசியமாய் அரசாங்கத்துக்கு இருபது தந்தி பாரம் வீணாய்ப்போனது.
அவளோட மெட்டி பாக்கியம், எத்தனை நாளுக்குத்தான் தாலி பாக்கியம்?,  பொழச்சுக்கிட்டேன்.

அந்த மாசம் முழுக்க, தினமும் பத்து ருபாய் பேட்டா வாங்கிக்கிட்டு ஆபிசுக்குப் போன சோகக்கதை இப்போ எதுக்கு.

ஒரு ஏழெட்டு வருஷம் போய், இந்த ஆளுக்கெல்லாம் அவ்வளவு தைரியம் கிடையாதுன்னு பொண்டாட்டிக்குப் புரிஞ்சதுக்கு அப்புறம், எதுக்கும் இருக்கட்டும்னு பூட்டுப் போட்ட நோட்டு ஒன்னு வாங்கிக்கிட்டு வந்து, டைரி எழுத ஆரம்பிச்சேன்.


ஒரு வாரம் கழிச்சு, கோல நோட்டுக்கு அத எடுத்துக்கிட்டாங்க இந்திரா காந்தி.

சரி, இந்த வருஷம், தினமும் ஒரு கவிதை அப்படின்னு முடிவு பண்ணி, ஒரு வருஷம் நல்லா, காஸ்ட்லியா, வழுவழுன்னு வெள்ளைத் தாள்ல ஒரு பெரிய நோட்டும், ஒரு க்ரோஸ் பேனாவும் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தவுடனே, திருவாய்மொழி, “இந்த வருஷம் என்ன தண்டசெலவு?”

பொன்மணிதான் அதுக்கெல்லாம் லாயக்கு. நம்ம வீடு அதுக்கு ஒர்த்தே இல்லை!  
நம்ம வைரமுத்து ஆகவும் முடியாது, கண்ணை மேலே சொருகிக்கிட்டு  பேட்டி கொடுக்கவும் முடியாது அப்படின்னு அப்பவே உறைச்சிருக்கணும்.

ஒரு பத்து நாள் மொட்டைமாடில போய் நிலா, மேகம், புரட்சி, புஷ்பம் ன்னு ஏதேதோ எழுதியாச்சு.

சனி பக்கத்து வீட்டு லச்சுமி வடிவத்துல வீட்டுக்குள்ள வந்துச்சு.
உங்க ஆத்துக்காரர் நான் வாசல் தெளிக்கறச்சே மேல இருந்து ஒருமாதிரி பார்க்கறார்.

அன்னைக்கு நான் வீட்டுக்குத் திரும்பிவரும்போது, பையன மடியில போட்டு உக்காந்துருக்காங்க வீட்டம்மா, பளபளப்பா ஒரு பேப்பர்ல குஷியா கக்கா போயிட்டிருக்கு வாரிசு.

ஏங்க, நீங்க ஏதோ கிறுக்கி வெச்சிருந்தீங்கல்ல, அந்த நோட்ட, நான் தம்பி ஆய் போக எடுத்துக்கிட்டேன்.

இதைவிட ஒரு கவிதைக்கும், கவிஞனுக்கும் வேற விமர்சனம் வேணுமா மக்களே!

கவிஞனை கழுத்தை நெறிச்சு கொன்னுட்டு, லச்சுமி வீட்டுமேல ஒரு கல்லை விட்டெறிஞ்சுட்டு வந்து டிவில வயலும் வாழ்வும் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

துதான் வைரமுத்து சோலோ ஆக  உண்மையான காரணம்!

அதுக்கப்புறம் தொந்தரவே இல்லாம, காந்திமதியை சைட்டடிக்கமாட்டேன், பெருமாள் கோவில் ஐயர் பொண்ணுகிட்ட வழிய மாட்டேன் அப்படின்னு உபத்திரவம் இல்லாத தீர்மானம்தான்.

ஆனா, பெருமாள் கோவில் விஷயத்துல மட்டும் கொஞ்சம் அப்படி இப்படி.... 
விடுங்க, இத மட்டும் ஆர்வமாக் கேப்பீங்களே!

ரொம்பநாள் கழிச்சு, இந்த வருஷம் ஒரு ரெசல்யூசன் எடுத்து மூஞ்சிலையே துப்பு வாங்கின கதைதான் ஊரே சிரிச்சுதே!

(மூஞ்சி நிறையத் துப்பின மகள்
அதை ரசிச்சு சிரிச்ச 
நல்லவன்
ராகமாலினி, 
வாழவந்தான்(Singh), 
என் தங்கை கல்யாணி, சே, சங்கீதா
அதைவிட பலமா துப்புன பெரிய மகள் LaksChumi,  
போன்ற விரோதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்
சொல்லாமல் மனதுக்குள் சிரித்த துரோகிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும் எம் ஆண்டவரே!)

இப்போ, இந்த நாள், இந்த நிமிஷம், நான் ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டேன். 

இனி, நாளை மற்றுமொரு நாளே,

எந்தப் புதுவருஷத் தீர்மானமும், மிச்சமிருக்கப்போற நூத்திச் சொச்சம் வருஷமும் எடுக்கறதில்லை.
இதுதான் இந்த வருஷத் தீர்மானம்!

என்னைக்கு தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு தோணுதோ, அன்னைக்கு நிலா செஞ்ச கேசரியை சாப்பிட்டு சூசைட்!

ஜெய் ஹிந்த்!!

Thursday, 25 December 2014

“அப்பா, நீ ஒரு சைக்கோ!!"

அப்பா, நீ ஒரு சைக்கோ!!
இப்படித்தான் எல்லோரும் சொல்ல நினைத்திருப்பார்கள், ஏதோ உன் வயசுக்கு மரியாதை கொடுத்து வேற மாதிரி பதில் சொல்லியிருக்காங்க!

நேற்று என் பதிவைப் பார்த்துவிட்டு என் மகளின்  விமர்சனம் இது !

உரையாடலின் தொடர்ச்சி!....

உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”

ஒன்னும் இல்லைடா, சும்மா போரடிச்சுது அதுதான்.

அதுக்கு எதுக்கு ட்விட்டர விட்டுப் போறேன்னு முடிவெடுத்தே?” 
யாரோ ப்ளாக் பண்ணாங்க, யாரோ பதில் சொல்லலை, இதெல்லாம் சில்லியா இல்லையா?”

சீச்சீ, அதெல்லாம் ரீசன் இல்லடா, அது சும்மா பகிர்ந்தது. கொஞ்ச நாளா, போர் அடிக்கறமாதிரி ஒரு பீலிங் அதான்.

அதை உன்னைப் படிக்கறவங்க சொல்லவேண்டியது,”
என்னமோ ஓவரா சீன் போடறே,? போறதுன்னா, நீயா போகவேண்டியதுதானே,? எதுக்குப் பெருசா, விடைகொடு என் நாடேன்னு பாட்டெல்லாம்?”

தங்கம்மா,  இத்தனை நாளும் பழகுனவங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு, கிளம்பலாம்ன்னுதான்.

கிளம்பறவனுக்கு என்ன வெங்காயம் நன்றி?”

எனக்கு இத்தனை பேர் நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், மகள்கள் கிடைச்சாங்க, அவங்களோட இந்த ரிலேசன்ஷிப் சாகறவரைக்கும் தொடரணும்! - இது உண்மையா எழுதினதுதானே? இல்லை சும்மா சுவாரசியத்துக்கா?”

போடா லூசு, எனக்குப் பட்டதை மட்டும்தான் எழுதினேன்.

அப்போ, ட்விட்டர விட்டு ஓடிப்போய், எப்படி அதை maintain பண்ணப்போறே?”

நிஜமாத் தெரியலடா சாரி.

எதையும் அவசரக் கோலத்துல செய்யறதே உன் வழக்கமாப் போச்சு.

இப்போ என்ன செய்யச்சொல்ற ?”

இந்தா,  ரிமோட்ட எடுத்துக்கிட்டு அப்படி ஓரமா உக்காந்து நாலு பழைய பாட்டு கேட்டுட்டுப் போய்ப் படு.
நாளைக்கு வழக்கம்போல லூசு மாதிரி எதையாவது எழுதிக்கிட்டிரு.

இல்லடா, வருஷா வருஷம் ஏதோ ஒரு புத்தாண்டுத் தீர்மானம் …..”

அப்படிங்களாதினமும் டைரி எழுதறீங்களா சார்?
அப்புறம்பொய்யே பேசாமதான் வாழ்க்கை நடத்தறையாப்பா? “
இல்லைல்ல ?”
அப்போ மரியாதையா, இந்தவருஷமும் அப்படி மொக்கையா ஏதாவது முடிவு பண்ணிட்டுப்போ! சும்மா இப்படியெல்லாம் சீன் போடாதே!
முடிஞ்சா உங்க தாத்தாவைப் பத்தி எழுது, நான் படிக்கணும்!

 ஓகே டா

அப்புறம், மரியாதையா, எல்லோருக்கும் ஒரு சாரி சொல்லப்பாரு.

 “சரி ராஜா, நாளைக்கு சொல்லிடறேன்.

கொஞ்சநேரம் கழித்து,

தங்கம்மா…”

என்ன….. மறுபடியும்?”

சாரிடா…”

த்தூ!

துடைத்துக்கொண்டு வந்துதான் இப்போ உங்களுக்கெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன்.
SORRY.

நீங்களும் துப்பிடாதீங்க!

266 நாட்களும், நன்றி அறிக்கையும் !!


இன்றோடு 266 நாட்கள்!

அன்புக்கும் நன்றிக்கும் !

ஏனோ இன்று எல்லோருக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது!

Twitter என்றால் என்னவென்றே தெரியாமல், திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் நின்ற என்னை,ஹெட்டர், பயோ, டிபி என எல்லாம் சொல்லிக்கொடுத்து கைப் பிடித்து அழைத்துவந்த, என்னை முதன்முதலாய்த் தொடர்ந்த என் அன்புத் தங்கை யசோதாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இன்றுவரை, நான் எழுதுவது எல்லாம் ஒரு குரு காணிக்கைபோல், முதல் cc அவருக்குப் போடுவது என் நன்றியைக் காட்டவே!

நான் எதைக் கிறுக்கினாலும், உற்சாகப்படுத்திய நண்பர்கள்,
தஞ்சை சபரி மற்றும் அன்புடன் பாலு இருவரும் என்னை வளர்த்தவர்கள்.

ஒருநாள் நான் வராவிட்டாலும், தொலைபேசியில் பிடித்துவந்து எழுத வைக்கும் பாலு அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்!

இணையத்து நட்பை, முதல் சந்திப்பு மூலம் வளர்த்த தோழி சாய் சித்ரா அவர்களுடன் நேர்ந்த பத்து நிமிட சந்திப்பு மறக்க முடியாதது.
உற்சாக ஊற்று அவர். அவரது சிரிப்பும், சந்தோஷமும், highly communicable! இணையம்எனக்குத் தந்த முதல் பரிசு அவர்.

நான் எழுதும் எல்லாவற்றையும் அன்போடு விமர்சிக்கும் நண்பர் திரு. கார்த்தி (நாடோடி),

ஒருமுறை, நான் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய ஒரு கருத்தை, உடனடியாக, மென்மையாக சுட்டிக்காட்டித் திருத்திய சகோதரி (மன்னிக்கவும், பெயர் மறந்துவிட்டது),

வேறொருவரின் ஒரு பதிவுக்கு நான் விளையாட்டாய் பதில் சொல்ல, உடனே என் DMல் வந்து, என்னை அது  போன்றவை தவிர்க்கச்சொல்லி அறிவுறுத்திய இனிய அன்பர் ராதா ராதா,

அக்கறையுடன் சிலவற்றைப் பகிர்ந்துகொண்ட நண்பர் K. கண்ணன் அவர்கள், வாழவந்தான் (Singh), 

மிகுந்த தோழமையுடன் அடிக்கடி தொடர்புகொள்ளும் இனியவர் Xavier,

மேலும், என் எல்லாப்பதிவையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சிக்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்,

அதிலும் குறிப்பாக, நாராயணி அவர்கள்
சித்ரா ரவி அவர்கள்
ராதாகிருஷ்ணன் அவர்கள்
கோபாலகிருஷ்ணன் அவர்கள்,  
கர்ணபாரதி அவர்கள்,
 Lakschumi அவர்கள்,  
என் எல்லாப் பதிவையும் RT செய்து உற்சாகப்படுத்துவதுடன், அன்பாய் விமர்சிக்கும் நண்பர் யாரோ அவர்கள்,

என எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

வியப்புக்கும் மரியாதைக்கும் !!

பார்த்த முதல் பதிவுமுதல் இன்றுவரை மரியாதைக்கு உரியவராய் என் நெஞ்சில் நிற்கும் அம்மா, சுஷிமா சேகர் அவர்கள்,

அரசியல் கருத்துக்களில் வியக்கவைக்கும் உமா அவர்கள்.

எழுதுவதெல்லாமே கவிதையாய் என்றும் என்னைப் பொறாமை கொள்ளவைக்கும் தோழி சொரூபா அவர்கள்.

வெள்ளந்தி என்பதற்கு இணைய எடுத்துக்காட்டு நிலாப்பெண் அவர்கள். ஒரு குழந்தைபோல் அவர் பதிவுகள் அன்பாய் ரசிக்கவைக்கும்!

திடீரென்று எழுத்தாளர் அவதாரம் எடுத்து அழகுற எழுதும் அனு அவர்கள்.

பிரசன்னாவில் எழில் கொஞ்சும் ஓவியங்கள், இன்னொரு வியப்பு அனுபவம். 
சில ஸ்ட்ரோக்குகள் மிரளவைக்கின்றன.

பறவையின் ஓவியங்கள் மற்றொரு வகை ஆச்சர்யம். அதிலும் அவர் வரைந்த திருப்பரங்குன்றம் ஓவியம் ஓர் நுணுக்கப் புதையல்.

அதிர்ச்சியும் வருத்தமும் !

நல்லவை பற்றிச் சொன்னபின் என்னை பாதித்தவை பற்றியும் சற்றே சுருக்கமாய்.

மிகச் சிறப்பாய் எழுதும் ஒரு பிரபலத்தின் பதிவுகளைப் பாராட்டியோ, விமர்சித்தோ மென்ஷன் இட்டால், ஒரு அலட்சிய மௌனம்.
ஒருமுறை என்றால், தவறில்லை,

திரும்பத்திரும்ப அப்படி நடக்கும்போது, என் பதிலுக்கும் நன்றிக்கும் நீ தகுதியில்லை என்ற கர்வம் தொனிக்கும் மௌனம்.
இது உண்மையில் நான் பழக நேர்ந்த மிகப்பெரிய ஆளுமைகளிடமும் காணாத பண்பற்ற போக்கு.
எழுத்து எவ்வளவு சிறப்பாயினும், இனி அவர் பதிவைக் குறித்து கருத்து சொல்வதில்லை - ட்விட்டர் தாண்டிய உலகத்தில் நிச்சயம் என் ஆளுமையும் அனுபவமும் அவரினும் மிகப் பெரிது.

மற்றொன்று, என்னை பிளாக் செய்து வைத்திருக்கும் சிலர்.
அவர்களை எந்தவகையில் நான் காயப்படுத்தினேன் என்பது புரியாத வருத்தம்.

ஒரே ஒருவர் மட்டும் என்னை பிளாக் செய்தது எனக்கு மகிழ்ச்சியே.

பெண்களைப் பற்றி எழுதும்பொதெல்லாம், தான் முதன்முதலாய் பூமிக்கு வந்த வழியாகவும், முதல் உணவை அருந்திய இடமாகவும் மட்டுமே பார்க்கத் தெரிந்த ஒருவர்.

தெருவில் நடந்துபோகையில், யாராவது அசிங்கம் செய்தால் பார்த்துக் காணாததுபோல் கடக்கும் மனம் இன்னும் எனக்கு வரவில்லை. 

அதிலும், அடுத்த பெண்களின் குடும்பவாழ்க்கைவரை கீழ்த்தரமாய் விமர்சிக்கும் அவரை நான் விமர்சனம் செய்ததில் அவர் என்னை ப்ளாக் செய்தது மகிழ்ச்சியே.

இணையம் தந்த மாபெரும் பரிசு.

என் மனைவியே என்னைப்பற்றி உயர்வாய்ச் சொல்லும் ஒரு விஷயம்.
இறைவன் எனக்களித்த வேடங்களில், அண்ணன், அப்பா என்ற இரண்டு வேடங்களை மிகச் சிறப்பாகச் செய்பவன் நான். ஏனெனில், நான் ரசிக்கும் நிமிடங்கள் அவை.

பேசாமல் நான் உங்களுக்குத் தங்கையாய்ப் பிறந்திருக்கலாம் என்று அவளே பலமுறை ஆதங்கமாய்ச் சொன்னதுண்டு!

எனக்கு நூறு தம்பி தங்கைகளும், ஆயிரம் குழந்தைகளும் கிடைத்திருந்தாலும்,  போதும் என்று சொல்லியிருப்பேன் என்று தோன்றவில்லை.

அப்படி, இணையத்தில் என்னை அண்ணா என்று அழைத்து, என்னுடன் பல அந்தரங்கமானவற்றையும் பகிர்ந்துகொண்ட இளைய சகோதரர் சுரேஷ் குமார்,  
சகோதரி என்ற அழைப்புக்கு, என் கூடப் பிறந்தவராகவே மாறிவிட்ட என் தங்கை சங்கீதா
சகோதரர் Yoda
சகோதரி ராகமாலினி
சொல்லவே தேவையற்ற தங்கை யசோதா
இவர்கள் என் வரம் என்றால்,
என்னை  அன்புடன் சித்தப்பா என்றழைத்த ரேணுகா
அப்பா என்று அன்பாய் அழைத்த ஸ்ரீ 
இவர்கள் எனக்கான மாபெரும் பரிசு.

இந்த உறவுகள் ஒன்றுமே குறையாமல் என் வாழும்காலம்வரை தொடர இறை அருள வேண்டுகிறேன்.

இந்த உணர்ச்சிமயம் நகைப்புக்குரியதாகவே தோன்றக்கூடும்- இருப்பினும், emotional idiot ஆக இருக்கவே எனக்கு விருப்பம் வாழ்வின் பல நேரங்களில்!

இந்தப் பதிவுக்கென்ன அவசியம் இப்போது?


புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம், ஒரு தீர்மானம் செய்துகொள்வதுண்டு. தீர்மானம் ஏதும் செய்வதில்லை என்ற தீர்மானங்கள் உட்பட!

இந்த வருடம், இணையத்தை விட்டு ஒதுங்கி இருக்கலாம் என்று தீர்மானம்.

தவறாமல் டைரி எழுதுவது,
எதற்கும் காலம் தாழ்த்தாமை,
பொய்யே சொல்லாத வாழ்க்கை என்ற,
என் முந்தைய, திரும்பத்திரும்ப சுழற்சியில் வரும் ஆண்டுத் தீர்மானங்களின் வரிசையில் இதையும் சேர்க்குமுன், என் மனம் நினைப்பதைச் சொல்ல வந்த பதிவு இது.

இதில் யார் பெயராவது விட்டுப் போயிருந்தால், இப்போதே இதைப் பதிக்கவேண்டும் என்ற என் பிடிவாத அவசரம் காரணமேயன்றி, முக்கியத்துவம் இன்மையால் அல்ல.

எனவே, இந்த நன்றியறிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.

அனைவருக்கும் நன்றி, என் மன ஆழத்திலிருந்து!!

DP யில் முறைக்கும் என் மீசைக்காரப் பாட்டனுக்கும், தமிழைப் புகட்டிய என் தமிழய்யாவுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்!Monday, 22 December 2014

நீயா நானா - என் பார்வையில்!


இந்த நீயா நானா நிகழ்ச்சியை நேற்றுவரை எனக்குப பார்க்க நேர்ந்ததில்லை.

எனக்குப் பொதுவாக, மைக் கிடைத்ததென்று பேசிக்கொண்டே இருக்கும் ஆட்களைப் பிடிப்பதில்லை. அதிலும் இந்த கோபிநாத்தின் அரைகுறைத் தோரணைகள் கொஞ்சம் கூடுதல் அலர்ஜி.

எங்கள் வீட்டில் நல்லவேளையாக, யாரும் சீரியல்கள் மற்றும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை.

பொதுவாக டிவியைத் தவிர்த்துவிடும் நான், இரவு உணவின்போதுமட்டும், தோசைக்குத் தொட்டுக்கொள்ள வசந்த், மெகா டிவி சேனல்களில் பழைய பாடல்களைப் பார்ப்பதுண்டு.

நேற்றைய நீயா நானா, புடவைகள் பற்றி என்பதால், மனைவி, மகள் விருப்பத்தால் உட்கார்ந்து பார்க்க நேர்ந்தது
.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில் நான் புரிந்துகொண்டவை.
1.      கையில் மைக் கிடைத்துவிட்டால், எல்லாவற்றையும் உளறுவது நம் சமூக குணம்.

2.   அதிலும், பெண்கள் கொஞ்சம் அதிகப்படி உற்சாகத்தில் உளறுகிறார்கள்.

3.    இந்த நிகழ்ச்சி, குடும்பங்களிடையே, குழப்பங்களையும் வேறுபாடுகளையும் ஏற்படுத்தவே நடத்தப்படுகிறது.

கோபிநாத்தின் கேள்விகளும், சிரிப்பும் எரிச்சலூட்டும் விதமாகவே அமைந்திருக்கின்றன.

நாத்தனாருக்குப் புடவை எடுக்க, ஒரு நிமிடம் போதும், எங்களுக்கு என்றால் பல கடைகள் ஏறி இறங்குவோம்.
அவர்களுக்கு என்றால் பட்ஜெட்டுக்குள் எடுப்போம், எங்களுக்கு அப்படி அல்ல.
எனக்கு அண்ணன் வாங்கிக்கொடுத்த புடவை பிடிக்கவில்லை. அதைக் கட்டாமல் வேறு யாருக்கோ கொடுத்துவிட்டேன்.
இதெல்லாம், நேற்று, பெண்களின் முத்துச் சிதறல்கள்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு அவர்கள் நேரே வீட்டுக்குத்தானே போவார்கள்?
அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்த அந்த நாத்தனார்களை இவர்களும், இவர்களை அவர்களும் எப்படி எதிர்கொள்வார்கள்?

அவர்களின் பரஸ்பர உறவு என்ன ஆகும்?

இனி, இவர்கள் அவர்களுக்கு எடுத்துக் கொடுக்க நேரும் புடவைகள் அவர்களால் எந்தவித மகிழ்வோடு பெற்றுக்கொள்ளப்படும்?

இப்படியான முட்டாள்க் கேள்விகளைக் கேட்டு, தான் எதிர்பார்த்த பதிலை அவர்கள் வாயிலிருந்து தோண்டியெடுத்து, கை கொட்டிச் சிரிக்கும் கோபிநாத்தின் உளவியல் என்ன?

இளமையில் வறுமை காரணமாக, ஒரே உடையை ஐந்து வருடம் உபயோகித்தேன். அதனால்தான் வசதி வந்ததும் ஆயிரம் சேலைகள் வாங்கினேன் என்று ஒரு பெண்மணி செயற்கையாய்க் கண் கலங்கியது TPR ரேட்டிங்குக்காக என்று பட்டது எனக்கு மட்டும்தானா?

நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு பெண்,
உங்களை, உங்கள் உடையோ, அலங்காரமோ, நிறமோ வைத்து மதிப்பிடுவது உங்களுக்குத்தான் அவமானம் என்று வாதாடியதை, ஒரு பெண்ணும் சற்றும் கவனிக்காததும்,
எனக்கு நல்லவிதமாகத் தைத்துக்கொடுப்பவரின் முகவரியை என் நெருங்கிய தோழிக்குக்கூடச் சொல்லமாட்டேன், என் தனித்தன்மை போய்விடும் என்ற பெண்ணை எல்லோரும் ஆரவாரமாக ஆதரித்ததும்
எனக்கு ஆச்சர்யமாக இருக்கவில்லை.

சராசரிப் பெண்கள் அவ்வளவு அறிவு வளர்ச்சி பெறவில்லை, அவர்கள்  சுயநலமிகள் என்ற வருத்தப்படுத்தும் உண்மை நேற்று மறுபடி இந்த நிகழ்ச்சியில் நிரூபணமானது.

ஒரு பெண், தன அலுவலகத்தில் தன்னைவிடக் குறைந்த பதவியில் இருப்பவர் அதேபோல் ஒரு சேலை கட்டிவந்ததால், ஒரு சேலையை தான் மீண்டு கட்டவே இல்லை, அது, தன் பதவியின் கம்பீரத்துக்கு இழுக்கு என்று பேசியதை, பெரும்பாலும் பெண்கள் ஆதரித்தார்கள்.

மேலும் அவரே, தன்னைவிட மேலதிகாரி அந்தப் புடவையைக் கட்டிவந்தால் தான் பெரிதும் மகிழ்ந்திருப்பேன் என்று சொன்னது, அவரது மேலதிகாரியின் உளவியலுக்குப் பொருந்தாதா என்று தெரியவில்லை.

அந்த மனநிலை அநாகரீகமானது என்று ஒலித்த குரல் ஒற்றையாய் ஒலித்தது சோகம்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வந்த தமிழச்சி தங்கபாண்டியனின் மிகை அலங்காரமும், அடிக்கும் உதட்டுச் சாயமும் அவரால் நியாயப்படுத்தப் பட்டபோதும்,
இன்னொரு விருந்தினராக வந்த வழக்கறிஞர்,- அஜிதாவோ, அபிதாவோ, -  அவரது எளிமையான கம்பீரத்துக்குமுன் அதீத அசிங்கமாகவே பட்டன.

அந்த வழக்கறிஞர், தன் பதின்ம வயதுமுதல், அலங்கார உடைக்கும், பூவுக்கும் அலங்காரத்துக்கும் இடமே கொடுத்ததில்லை. தன் அறிவு சார்ந்தே தான் மதிப்பிடப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று சொன்னபோது பெரிதாக யாரும் அதை அங்கீகரித்ததாய்ப் படவில்லை..

பெண்களை, அழகுசாதனப் பொருட்கள் அடிமையாக்கி வைத்திருப்பதை மீண்டும் ஒருமுறை உணரமுடிந்தது.

இந்த நீயா நானா நிகழ்ச்சிகள்  மூலம் விஜய் டிவி ஏற்படுத்த நினைக்கும் மாறுதலைப் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.

ஆனால்,ஒரே ஒரு பதில் தெரியாத கேள்வி எனக்கு. 

இந்த கோபிநாத்தை ஆங்கிலம் பேசக்கூடாது என்று ஏன் தடைபோடக்கூடாது?

அவரது கைதட்டல்சிரிப்பையும், உடல்மொழியையும் விட, மிகக் கேவலமாக இருந்தது அவரது ஆங்கிலம்.

நேற்று இரு தரப்பிலிருந்தும் ஒருவருக்கு பரிசு வழங்கினார்கள்.
ஆனால், பரிசுக்கு உரியவர்கள், இந்தமாதிரி நிகழ்ச்சியையும் இரண்டுமணிநேரம் பார்க்கும் மன உறுதி மிக்க தமிழர்களே!
Image Courtesy: Google.

Thursday, 18 December 2014

சொல்லாமலே!!
பூக்கள் சொல்லியா வண்டு வரும்?
கிளைகள் தூதுவிட்டா தென்றல் வரும்,
நிலவின் அழைப்பிலா மேகம் வரும், -எனில்
சொன்னால் மட்டுமா காதல் வரும்?”
எப்படி இருக்கு ரவி?  என்று கம்மிய குரலில் கேட்டாள் லலிதா!

என்னடி ஆச்சு உனக்கு, திடீர்ன்னு இப்படி ஆய்ட்டே,
நமக்கெல்லாம் கவிதைன்னா,
போன தையில் திருமணம்,
இந்தத் தையில் குழந்தை,
இரண்டு தைகளுக்கிடையே
ஏதோ நடந்ததால்!
இப்படி, சொல்லவந்ததை நேரா சொல்றதுதான். இதுக்கு எதுக்கு நிலா மேகம்ன்னு வார்த்தை விரயம்.” - இது ரவி.

கேட்டுக்கொண்டிருந்த சுதா, கண்ணீர் வரச் சிரித்தாள். சட்டென்று முகம் மாற விருட்டென்று நகர்ந்து போனாள் லலிதா.

சமீப காலமாக அடிக்கடி இப்படி நடக்கிறது. 
பொதுவாக ரவிதான் இப்படி கதை, கவிதை என்று சுற்றிக்கொண்டிருப்பான். அப்போதெல்லாம் லலிதா, “ஏண்டா இப்படி சீரியஸ்னெஸ் இல்லாம இருக்கே, C.A. படிக்கறவனுக்கு இந்த இலக்கியமெல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி ன்னு மண்டையிலேயே  குட்டுவாள். ஆனால் சமீப காலமாக லலிதாவின் போக்கே மாறிக்கொண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.

ரவிக்கும் லலிதாவுக்கும் மூன்று வருடமாகத்தான் பழக்கம். CA படிப்பதற்கென்று சேலத்திலிருந்து சென்னைக்கு மாறுதல் வாங்கிவந்த ஒரே வாரத்தில் லலிதாவுக்கு அறிமுகம் ஆனான் ரவி.

இரவு பகலாக இயங்கும் இன்ஸ்டிட்யூட் நூலகத்தில், அக்கம் பக்கம் கொலை விழுந்தால்கூட நிமிர்ந்து பார்க்காத நெருப்புக் கோழிகள் புத்தகத்துக்குள் தலை புதைத்து உட்கார்ந்திருக்கும்.
ரவி, வரும்போதே, “மாம்ஸ், குட் ஈவினிங் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வருவான். லைப்ரரியன் சார் என்றே எல்லோரும் கூப்பிடும் இடத்தில் மாம்ஸ் என்ற அழைப்பு புதுசு.  
காஸ்டிங்ல எவனுமே சீண்டாம ஏதாவது புக் இருந்தா குடு மாம்ஸ்!” அப்படின்னு ரவி கேட்ட நாளில்தான் லலிதா முதல் முதலாக அவனை நிமிர்ந்தது பார்த்து சிரித்தாள். 
அதற்குப் பின் அவர்களின் சிரிப்பு சத்தத்துக்கு அந்த லைப்ரரியே பயந்தது.

வாடி,  பாம்புங்கல்லாம் உஷ் உஷ்ன்னு சீற ஆரம்பிச்சுடும், நாம ஒரு டீ அடிக்கப் போவோம்ன்னு கிளம்புவது சகஜமானது. ராத்திரி பத்து மணிக்கு blow hot blow coldல் ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தால், அநேகமாக, பன்னிரண்டு மணிக்குத்தான் வீடு போகும் நினைப்பே வரும். அதுவும், ஸ்டெல்லா மாரிஸ் மாணவிலலிதாவின்  சித்தி மகள் சுதாவும் சேர்ந்துகொண்டால், கேட்கவே வேண்டாம்.

சத்யம் தியேட்டர் இடைவேளையில் கேக் வெட்டிக் கொண்டாடும் பிறந்தநாட்களும், அண்ணா மேம்பாலத்தில் நள்ளிரவில் புத்தாண்டு சரவெடியும், C.A. மாணவர்களின் கெட்ட வார்த்தைகள்.

புத்தாண்டு பிறப்பதுகூடத் தெரியாமல் புத்தகத்தில் ஊரும் புழுக்கள்.

சித்தப்பா வீட்டில் தங்கிப் படிக்கும் ரவிக்கு, லலிதாவின் பைக்கில் உட்கார்ந்து செல்வதில் எந்த ஈகோவும் இருந்ததில்லை. 
சமயத்தில், சுதாவையும் சுமந்துகொண்டு, மூவரும் ECR ரோட்டில் பறப்பதுவும் உண்டு.
ஆனால், அவர்களுக்குள் நட்பைத் தாண்டி எதுவும் நுழைந்ததில்லை. நான் டிக்கெட் வாங்கினால் நீ ஐஸ் கிரீம்,  நீ டின்னர் என்று பங்குபோட்டு சினிமா போவது வாரம் தவறாது நடக்கும்.

தினசரி மாலை இரண்டு அல்லது மூன்று மணி நேரமே படித்து, இரண்டுபேருமே, ஆல் இந்தியா ரேங்க் வாங்கியது மற்றவர்களின் பொறாமை ஆச்சர்யம்!

இண்டர் முடித்து, பைனல் தேர்வு முடிவுகள் நெருங்கும் சமயம், தவிர்க்க முடியாமல், ரவி தன் மாமன் மகளை நிச்சயம் செய்யப் போகும்போதுகூட, ரயில் ஏற்றிவிட வந்தவள் லலிதாதான்.

சுதாவே பலமுறை தனிமையில் கேட்டதுண்டு,
ஏண்டி, அவன் ஐயங்காரா இருந்திருந்தா, ப்ரொபோஸ் பண்ணியிருப்பாயா?”
இல்லைடி எங்களுக்குள்ளே அப்படித் தோன்றியதே இல்லை.
அப்படித் தோணும்போது, கண்டிப்பாக ஜாதி பார்க்குமளவு நாங்க ரெண்டுபேருமே முட்டாள்கள் இல்லை.

ரவி ஒரு சுவாரஸ்யமான ஆள். தினம் தினம் மாறும் ரசனைகள்.

ஒரு நாள் டென்னிஸ் கிளாஸ, அடுத்தநாளே, வயலின் கிளாஸ். திடீர்ன்னு, சிற்றரங்கத்துல நாடகம், அடையாறுல, ஜே. கிருஷ்ணமூர்த்தி உரையாடல். இப்படி கொஞ்சம் தரம் பிரிக்கறதுல சிரமமான ஆளு. இருந்த மாதிரி இஸ்க்கான், கர்நாடக சங்கீதம்ன்னு ஒரு ஆச்சர்யப் புதையல்.
இதுக்கெல்லாம், எங்கிருந்து நேரம் கிடைக்குதுன்னு எல்லாருக்குமே ஆச்சர்யம்.

நிச்சயதார்த்தம் முடித்து வந்து, அடுத்த வாரம் போன lady hawk படத்துல, வழக்கம்போல் ரவி தோளில் தலை சாய்த்துப் படம் பார்த்த லலிதா கண்ணில் மாலை மாலையாகக் கண்ணீர். தோள்பட்டை ஈரமானது கண்டு ரவியும், சுதாவும் கேட்டபோதுகூட, படத்தில் வந்த காதல் சோகக் காட்சிகள் தன்னை உருக்கிவிட்டதாக சமாளித்தாள் லலிதா.

எப்போதுமே, காதல் காட்சிகளை நக்கலான சிரிப்போடு பார்க்கும் லலிதாவின் அந்த மாறுதல் ரவிக்கு புதிராக இருந்தது.

அடுத்து வந்த இரு மாதங்களில் சம்பந்தமே இல்லாமல் லலிதா கோபப்படுவது இருவருக்குமே புரிந்தது.

எதிர்பார்த்தது போலவே, இருவருமே, மிக நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்வாகியிருந்தார்கள். வழக்கம்போல், சர்ட்டிபிகேட் எல்லாம் லலிதா வீட்டில் வைத்துவிட்டு, முட்டுக்காடு போனபோது, சுதா மெதுவாக ஆரம்பித்தாள்.
ரவி, லலிதாவைப் பத்தி என்ன நினைக்கறே?”
என்னடி புதுசா கேக்கறே,  இப்போ ஏனோ அடிக்கடி கோபப்படறா, symptoms எல்லாம் பார்த்தா, லவ் பண்ற மாதிரி இருக்கு. ஆனா அவளுக்கு அதுலல்லாம் நம்பிக்கையே கிடையாது.

தூரத்தில் தனித்து உட்கார்ந்திருந்த லலிதாவை திரும்பிப் பார்த்த சுதா, மெல்லச் சொன்னாள்.
ஆமா, ரவி, அவ லவ் பண்றா!

என்னடி, நீ போட்ட குண்டைவிட பெரிசா இருக்கு? இவளுக்கு யாரு கமலஹாசனா?”
லூசு மாதிரி உளராத ரவி, அவ உன்னைத்தான் லவ் பண்றா!

ஒரு நிமிஷம் அறை வாங்கிய குழந்தை மாதிரி திகைச்சுப் போய் நின்னான் ரவி.
இது விளையாட்டில்லை சுதா, முட்டாள்தனமாப் பேசாதே!
போடா முட்டாள். நீதான் ஒரு பொண்ணோட மனசே புரியாத மடையன். எல்லாமே வாயைத் திறந்து சொல்லணுமா உனக்கு?”
ப்ளீஸ் சுதா, பேத்தாதே. எங்க ரிலேசன்ஷிப் எனக்குத் தெரியும். நீ வந்த இடத்துல ஏதாவது உளராம இரு.
கையைப் பிடித்த சுதா, அமைதியாகச் சொன்னாள். காலைல புறப்படும்போதே, உன்கிட்ட என்னை பேசச் சொன்னதே அவள்தான்.

தலையில் கை வைத்து அப்படியே உட்கார்ந்தான் ரவி.
இது ultimate stupidity.”
ஏற்கனவே என்னென்ன நடந்திருக்கு!  இது எத்தனைபேர் விருப்பம், எத்தனைபேர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவு என்பது உனக்குத் தெரியாதா? இந்த கல்யாண ஏற்பாட்டால எத்தனை குழப்பம், ஒரு உயிரான நட்பை இழந்தது போதும் சுதா. இவளையும் நான் இழக்க விரும்பலை. நல்லவேளை இப்போவாவது நீ சொன்னே, நான் அவகிட்டையே பேசறேன் வான்னு அவளை இழுத்துக்கொண்டு லலிதாவிடம் வந்தான் ரவி.

லலி, இந்த லூசு ஏதோ உளறுது அது உண்மையா?”
மௌனமாகத் .தலை அசைத்தாள் லலிதா. நம்பமுடியாமல் அவளை ஒரு நிமிடம் உத்துப் பார்த்தான் ரவி.

லலி, ப்ளீஸ் விளையாடாதே. ஜோக்தானே பண்றீங்க ரெண்டு பேரும்?.

சீறி வெடித்தாள் லலிதா, “உனக்கு எல்லாமே ஜோக்தான் ரவி. என்னைக்குமே வலி பெண்களுக்குத்தான்.

அயர்ந்துபோனான் ரவி.

என்னைக்காவது, நான் ஆண், நீ பெண் அப்படிங்கறதை நாம உணர்ற அளவில் நாம் நடந்திருக்கோமா? நாம் நல்ல ப்ரெண்ட்ஸ். அதுதானே உண்மை. இப்போ என்னடி இது திடீர் விபரீதம்?”
ஏற்கனவே நடந்து முடிஞ்ச விபரீதம் போதும் லலி. உன்னையும் இழக்க வெச்சுடாதே.
தலையை தடவிக்கொடுத்த ரவியின் கையைத் தட்டி விட்டாள் லலிதா.

இப்படிப் பூனைக்குட்டி மாதிரி பண்ணிவச்சுட்டு, இப்போ ஒன்னுமே புரியாத மாதிரி பேசாதே ரவி.

சுது, நீங்க ரெண்டு பேரும்தானே விடியவிடிய என்னோடு பேசி ஊருக்கு அனுப்பிவைத்தீர்கள்? ஏற்கனவே சிவா என் மூஞ்சியிலயே விழிக்கமாட்டேன்னு சொல்றான், இதுல நீ வேறையா?”

ஆமாடா, எப்போவுமே எல்லா ஆம்பளைங்களும் தங்களை மட்டும்தான் வெச்சு யோசிப்பாங்க. அப்புறம் நீ மட்டும் எப்படி வேற மாதிரி பேசுவே?”

இப்படி பொதுவா பேசாதே. உன்கிட்டே அந்த மாதிரி என்னைக்காவது நடந்திருக்கேனா? அப்படியே ஏதும் இருந்தாலும், நீ முன்னாடியே சொல்லியிருக்கலாமே? என்னை ரயில் ஏத்திவிட்டதே நீதானடி?”

பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி எல்லாமே பண்ணிட்டு, கடைசியில ஒன்னுமே புரியாதமாதிரி நடிக்கவும் ஒரு மனசு வேணும் ரவி.
எப்படியும் ஊருக்குப் போயிட்டு என் ரவியாத் திரும்பி வருவேன்னு நம்பினேன்டா.
முகத்தை மூடிக்கொண்டு அழும் லலிதாவை நம்பவே முடியாமல் பார்த்தான் ரவி.

இது எப்படி சாத்தியம்பழகிய இத்தனை நாட்களில் ஒருபார்வை கூட அப்படி ரெண்டு பேருமே பார்த்ததில்லையே. இந்த விபரீதம் எப்படி?

அவ மனசுக்குள்ளே இந்த எண்ணம்  எப்போதுமே இருந்திருக்கு. இப்போ உனக்கு கல்யாணம் அப்படிங்கற நிலைமை வந்ததும்தான் அவளுக்கே உறைத்திருக்கிறது. உன்னை இழந்துவிடுவோம் என்பது புரிந்திருக்கிறது.

இதில் இழப்பு எங்கிருந்து வருது சுது, கடைசி வரை நட்பாய் இருக்கமுடியாதா? அதில் என்ன இடைஞ்சல் வரப்போகிறது? என்னைக் கல்யாணம் செய்பவளுக்கு என் நட்பைப் புரியவைக்க முடியும். அவளுக்கும் அது சாத்தியமே! காலம் முழுவதும் இதே நட்பு சாத்தியம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

விடு சுதா, அவன் புரியாத மாதிரி நடிக்கிறான்
சொன்ன வேகத்தில், வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் போனவளை நம்பமுடியாமல் பார்த்தான் ரவி.

அதன்பின் சுதா பேசிய எல்லாமே லலிதாவை நியாயப்படுத்துவதாகவே இருந்தது.

இரண்டு கொடுமையான மாதங்கள். 
என்ன செய்வதென்றே தெரியாத திகைப்பில் நகர்ந்தன நாட்கள்.

அதன்பின் அன்றுதான், இன்விடேசன் கொடுக்க, சுதாவை வழக்கமான ரெஸ்டாரண்டில் சந்தித்தான் ரவி.

நீ ஒரு ஹிப்போக்ரேட் ரவி! உனக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. 

எனக்குப்புரியவில்லைன்னு சொல்லிக்கற அளவுக்கு நீ ஒன்னும் முட்டாள் இல்லைன்னு உனக்கே தெரியும்.

ஒரு பெண்ணோட உணர்ச்சிகள வார்த்தையாக் கேட்டுத்தான் புரிஞ்சுக்கமுடியும்ன்னு நீ சொல்லாதே! உன்னோட எல்லா செயல்களுக்கும் அடுத்தவங்கள இம்ப்ரஸ் பண்ணனும்ங்கற நோக்கமே இல்லையா? 
இத என்னை நம்பச்சொல்றியா ? யூ ஆர் எ கிரிமினல் பாஸ்டர்ட்!
கோபத்தில் குரல் உடைந்துபோனது சுதாவுக்கு.

இருவருக்கும் இடையே கிடந்தது ரவியின் கல்யாணப்பத்திரிக்கை

"ரவி, உனக்கும் எனக்கும் லலிதாவின் பிடிவாதம் தெரியும். இதை,அவள் உன் நிச்சயதார்த்ததுக்கு முன் என்னிடமாவது சொல்லியிருந்தால்எப்படியாவது மாற்றியிருக்கலாம். இப்போது வேறு வழியே இல்லையா" என்று சுதா பேசிக்கொண்டிருக்கும்போதே,லலிதா வந்து சேர்ந்தாள்.

விடு சுதா, அவன் C.A.படிப்பதற்கு மட்டும் என்னை உபயோகித்துக்கொண்டது எனக்கு இப்போதுதான் புரிகிறது. இனி என் வாழ்வில் எந்த ஆணுக்கும் இடமில்லை.
இதைச் சொன்ன லலிதா, அத்தனை நாட்களும், அவள் வீட்டில் இருந்த ரவியின் சர்டிபிகேட்டை அவன் மீது எறிந்தாள். 

இதைக் காட்டித்தானே, அந்தப் பெண்ணை மயக்கினாய், மகராசனாக இனி அவளோடு வாழ் என்று, ஆக்ரோஷமும், அழுகையுமாய், எழுந்த லலிதாவை, தோளைப் பிடித்து வலுவாய் அழுத்தி உட்கார வைத்தான் ரவி.

என் இந்தப் பட்டத்தை மூலதனமாய் வைத்துப் பிழைக்கும் பிழையை என் வாழ்வில் நான் செய்யமாட்டேன். இதில் பாதிக்குமேலான உழைப்பு உன்னுடையது 
அவர்கள் சுதாரிக்குமுன் தன் C.A. சர்டிபிகேட்டை சுக்கல் சுக்கலாய் கிழித்து லலிதாவின் கையில் வைத்தவன், சுதாவின் முன் நெற்றியில் முத்தமிட்டு, வெளியேறி இருளில் கலந்து போனான்.


அதன்பின் இருபது  ஆண்டுகள் எந்தத் தொடர்பும் இல்லாமல் கழிந்தபின், இன்று, எதேர்ச்சையாய் இன்ஸ்டிட்யூட் வந்த ரவி, எதிரில் படி இறங்கி வந்தவளை நம்பமுடியாது பார்த்தான்.

லலிதா

அதே வனப்புக் குலையாத வடிவம். இருபது ஆண்டுகள் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை

எப்படி இருக்கே லலி, தயக்கமாய்க் கேட்டான் ரவி.

பார்க்கிறாயே ரவி, அப்படியேதான் இருக்கிறேன். வா, ஒரு காபி குடித்துக்கொண்டே பேசுவோம்!

கார் ஏறி, அவர்களுக்கு மிகப்பிடித்த, கன்னிமாரா வரும்வரை, காரில் மெல்லிய சங்கீதம் தவிர வேறு பேச்சில்லை.

காபியைக் குடித்தபடி, தான் தொழிலில் அடைந்த உயரங்களையும், போனவாரம்கூட, ஒரு I.T. Tribunal வென்றதையும் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள் லலிதா. 
அதே சிரிப்பு,அதே குதூகலக் குரல். 
காலயந்திரம் இருபது வருடம் பின்னோக்கி நகர்ந்ததுபோல் இருந்தது ரவிக்கு. அவள் உற்சாகம் அவன் மனதில் இருந்த முள்ளை நீக்கியதுபோல் இருந்தாலும், அவள் தன்னைப் பற்றி, தன் குடும்பம் பற்றி, எதுவுமே விசாரிக்காதது உறுத்தலாகவே இருந்தது.


ஒருமணி நேரம் போனதே தெரியாமல் போனது. அவனை மீண்டும் அவனது காரை எடுக்க இறக்கிவிட வரும் வழியில் அடக்கமுடியாமல் கேட்டேவிட்டான் ரவி.

உன் கணவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை லலி, என்னைப் பற்றியும் எதுவுமே விசாரிக்கவில்லை. இன்னும் உன் கோபம் தீரவில்லையா?”

ஆழமாக அவனை உற்றுப்பார்த்த லலிதா, இடது கையால் அவன் கரத்தைப் பற்றிக்கொண்டே, காரை நிறுத்தும்வரை எதுவும் பேசாமல் வந்தாள்.

காரை நிறுத்தியபின், மென்மையாகப் புன்னகைத்தாள்.

எனக்குத் தெரியும் ரவி

நீ C.A. ப்ராக்டிஸ் பண்ணவில்லை என்பதுவும், இப்போது நீ எங்கிருக்கிறாய் என்பதுவும்.

உன் குடும்ப வாழ்க்கை பற்றி நான் விசாரிப்பது நாகரீகமல்ல. 
எனக்குப் பிடிக்காததை நான் கேட்க விரும்பவில்லை".

நடந்த எதையும் நம்மால் மாற்றி எழுதமுடியாது.

என் கணவன் நீதான் ரவி, நான் சாகும்வரை.

எனக்கு முன் நீ போகமாட்டாய். அது எனக்குத் தெரியும். 
உனக்கு நான் போன தகவல் நிச்சயம் என்றாவது வரும். அது என் பொறுப்பு. 

அப்போது, நீ வந்து எனக்குக் கொள்ளி மட்டும் வைத்துவிட்டுப்போ.

அந்த ஒன்றுக்காக மட்டும்தான் நான் காத்திருக்கிறேன். 

 Take care ரவி!

திகைத்து நின்ற ரவியைப் பார்த்து புன்னகைத்தவள் போய் வெகுநேரம் உணர்வின்றி நின்றான் ரவி.