Tuesday, 28 April 2015

இருபத்தைந்து வயது, அதற்கு மேலும், கீழுமுள்ள பெண்களுக்கு!


மீனம்மா என்ற ஒரு மிகப்பிரபலமான பெண் ID இலிருந்து நேற்று (26.4.2015 ​ ஞாயிறு) ஒரு TL காண நேர்ந்தது.
ஷாக் வேல்யுவுக்காகவோ, கவன ஈர்ப்புக்காகவோ (இந்த இரண்டு தேவைகளையும் அந்த ID கடந்து பலநாட்கள் ஆகிறது) சமயங்களில் போடும் பதிவுகளையும் மீறி பல கவிதைத்தனமான பதிவுகள் அதில் வருவதுண்டு.
அந்த TLக்கு எதிர்வினையாக எழுத நினைத்து,
பின் அது தேவையற்றது,
வழக்கமான நம் பாணியில் அந்தக்கருத்தை ஒட்டி ஏதோ எழுதி, நம்மை விரும்பியோ, விரும்பாமலோ cc வரும் கட்டாயத்துக்காகப் படிக்கும் தலையெழுத்துக் கொண்ட ஒரு சிறு குழுவுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்து எழுதும் பதிவு இது!


பெண்களுக்கு - ஒரு ஆணின் பார்வையில்!டிஸ்கி ஏதும் இல்லை- எல்லாப் பெண்களுக்கும் - ட்விட்டரில் இருக்கும் என் மகள் உட்பட!

ஆணுக்குப் பெண் மேலும் பெண்ணுக்கு ஆண் மேலும் பாலினக்கவர்ச்சி தவிர வேறு நட்போ, மரியாதையோ சாத்தியமே இல்லை.
அதிலும், ஆண், படுக்கை ஒன்றே நோக்கமாகக்கொண்டு, மகாத்மா வேடம் வரை பூண்டு எந்நேரமும் காம வெறியில் அலையும் ஜந்து. அவனுக்குப் பெண் என்பவள் அவன் வக்கிர இச்சைகளை எப்பாடு பட்டேனும் தீர்த்துக்கொள்ள தேவைப்படும் ஒரு போகப்பொருள்.

பெண்ணும் ஒன்றும் உயர்ந்தவள் அல்ல. அவளுக்கும் காம இச்சைகள் தவிர ஆணுடன் பகிர்ந்துகொள்ள ஏதுமில்லை.
அப்படி ஒரு ஆண் பின்னால் போவதைவிட, சுய இன்பம் காணுதல் மேலானது மட்டுமல்ல. 18 வயதுக்குமேல் அது அவசியமானதும் கூட!

இது, பெண்களுக்கு, பெண் பெயரால் பிரபலமான ஒருவர் சொல்லும் செய்தியின் சாரம் - என் கீழான ஆண் புத்திக்கு எட்டிய வரையில்.

காதல் புனிதமானது என்று காதலைத் தாங்கிப்பிடிக்க எனக்கு விருப்பமில்லை! என் சான்றிதழ் காதலுக்குத் தேவையில்லை!

உருகி உருகிக் காதல் பதிவுகள் எழுதியவர்களுக்கே இன்று காதல் என்பது காமம் மட்டும் தீர்க்கும் கருமமாய்ப் படும்போது, அதில் நம் கருத்துக்கு வேலை இல்லை.

ஆனால் ஒட்டுமொத்த ஆணும், இருபத்தைந்து வயதுப்பெண்ணும் என்ற பொதுப்படைக் கருத்து வியக்கவைக்கிறது. என்னவொரு தெளிவு, இந்தக் காமாந்திர ஆண்களைப்பற்றியும், காமம் தணிக்க வழி தெரியாத பெண்களைப்பற்றியும்!

இந்தப் பார்வை முற்றிலும் தவறு என்ற புரிதலுடனும், எனக்கிருக்கும் அரை  நூற்றாண்டு ஆணியஅனுபவத்துடனும் இது!

///////////////////////////////////


ஆணும் பெண்ணும் வேறுவேறு கிரகவாசிகள் அல்ல. ஒருவரை ஒருவர் அடித்துத் தின்னப்பார்க்கும் விரோதிகளும் அல்ல.
ஒரு சின்ன க்ரோமோசோம் வேறுபாட்டால், இனவிருத்திக்குத் தேவையாக இருவேறு பால்களாகப் பிறந்த சக உயிரினங்கள்.

மனிதன் ஏதோ அறிந்து, எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே காதல் என்பது காமத்திலிருந்து வேறுபடுத்தியே பார்க்கப்பட்டு வந்துள்ளது.
மட்டுமல்லாமல்,
காமம் என்பதில் காதல் இல்லை என்று வன்மையாக மறுத்த எந்த ஆணும் பெண்ணும்,
காதல் என்பதில் காமமே இல்லை என்று மறுத்ததில்லை!

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உடல், இனக்கவர்ச்சியும் இணைந்த நட்பின் முதிர்ச்சியே காதல்.
இல்லையேல், நட்பைத் தாண்டி ஒரு வார்த்தை தேவையே இல்லை அந்த உறவைக் குறிக்க!

காதல், பள்ளிப் பருவத்திலோ, அல்லது கல்லூரிக் காலத்திலோ வருகையில் காமம், இனக்கவர்ச்சி சார்ந்து மட்டுமே வரமுடியும்.

25 வயதுக்கு மேல் வருகையில் மட்டுமே அது வாழ்க்கைத் துணை என்ற எண்ணத்தையும், திருமணம், எதிர்காலம் என்ற பல புரிதல்களுடன், இவன்/ இவள் நம்மோடு வாழ்நாள் முழுக்கத் துணைவர சரியான இணை என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தோடு வரும்.

இன்றைய வாழ்க்கைச் சூழல் அன்றுபோல் இல்லாமல், ஓரளவுக்கு ஆணையும் பெண்ணையும் நட்போடு பழக அனுமதித்திருக்கிறது!

அந்த நட்பு, காலம் முழுவதும் தொடரவும், காமம் உட்பட எல்லாம் பகிரவும் இவர்தான் ஏற்றவர் என்று அறியும் பக்குவத்தையும், அந்தப் பழக்கமும், அது தந்த புரிதலும் தரும்.

மேலும் அப்படி ஒருவரை மத, ஜாதி, இன மொழி மாறுபாடுகளை மீறியும் தேர்ந்தெடுக்க அவர் கொண்ட கல்வியும், அவர் வளர்ந்த சூழலும் கண்டிப்பாக உதவும்.

அப்படி இல்லாமல் வெறும் காமத்தை உங்கள் விரலின் நுனியில் தேக்கிக்கொண்டுதான் உங்கள் எதிர்ப்பாலினத்தை அணுகமுடியும் என்றால், உங்கள் கல்வியும், வளர்ப்பும் அவ்வளவு உயர்வானதில்லை என்றுதான் பொருள்.


காமம் என்னும் ஆயுதம் தாங்கிப் பெண் வேட்டையாடும் ஆணினத்தைச் சேர்ந்த என் பார்வையில்,
இன்றைய பெண்கள் செய்ய வேண்டியவை.

1. முதலில், சொந்தக்காலில் நின்று உங்களை நீங்களே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ளும், தாய் தகப்பன் உட்பட யாரையும் சார்ந்து நிற்க வேண்டாத, நிலைக்கு உயர்த்திக்கொள்ளுங்கள். அதற்கு, கல்வி என்ற வலுவான ஆயுதத்தை முடிந்தவரை கைக்கொள்ளுங்கள்.

 2. ஆண் என்பவன் உங்கள் ரட்சகனுமல்ல, விரோதியுமல்ல - வெறும் உடற்கூறால் மாறுபட்ட சக உயிரினம் என்பதை உணருங்கள்.

3. உங்களை ஜஸ்ட் presentable என்ற நிலைக்குமேல் அலங்கரித்துக்கொள்ளும் அடிமை நிலையை மாற்றுங்கள். அது ஒரு ஆணை என்னைப்பார் என்று கெஞ்சும் கவன ஈர்ப்பு மட்டுமல்ல, என் சொத்து இந்த உடல்தான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் என்பதை உணருங்கள்.

4. உங்கள் முகமோ, அழகோ, நிறமோ உங்களுக்கு அறிவைத் தருவதில்லை. இவற்றால் வராத அந்த அறிவே உங்களுக்கு வேலை வாங்கித் தரும் உண்மைக் காரணியாகும் என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். உங்கள் நிறமும், முகப்பொலிவும் உங்களை வாழ்வில் உயர்த்தும் என்ற வணிக விபச்சார விளம்பரங்களைப் புறம் தள்ளுங்கள்.
நிச்சயம் உங்கள் நிறமோ, அழகோ, ஒருமுறை உங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கலாம். ஆனால்  உங்கள் பண்பும் நடத்தையுமே மற்றவரை நிரந்தரமாக ஈர்க்கும்.

5. உங்கள் அலுவலிடத்திலும், வீட்டிலும் உங்கள் சம ஆற்றலுள்ள ஆணுக்கு நீங்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவரில்லை என்பதை தெள்ளத்தெளிவாக எல்லா வாய்ப்புகளிலும் உணர்த்துங்கள்.

6. பெண் என்பதற்காக வலிந்து தரப்படும் சலுகைகளை, உங்களால் முடிந்தவரை புறக்கணியுங்கள். அதேசமயம், ஒரு பெண் என்பதற்காக மட்டும்  மறுக்கப்படும் மறுதலிக்கப்படும் உரிமைகளை, பதவி உயர்வுகளை, சம்பளத்தைத் தயக்கமே இல்லாமல் போராடிப் பெறுங்கள்.
ஆணுக்குப்பெண் இளைப்பில்லை காண் என்று படித்ததை உண்மை என்று முதலில் நீங்கள் நம்புங்கள்.

7.  இந்த உடை அணிந்தால் ஆண் உங்கள்மேல் வந்து விழுவான், இந்த நிறம் இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றவகை விளம்பரங்களையும், பெண்கள் என்றாலே வஞ்சகிகள் என்று பேசும் சீரியல்களையும் முற்றாக ஒதுக்கும் மனநிலையைப் பெறுங்கள்.

8. உங்கள் முகமும், நிறமும், சுருக்கமில்லாத தோலும் எடுப்பான மார்பும்தான் உங்களை ஒரு ஆணை அடைய உதவும் என்றால், அவை எல்லாமே கட்டாயம், காலப்போக்கில் மாறும்போது அந்த ஆண் உங்களை என்ன காரணத்துக்காக சகித்துக்கொள்ளுவான் என்பதை சற்றே யோசியுங்கள்!

9. எப்போதும் ஒரு காமம் தீர்க்கும் வடிகாலாக நீங்கள் ஒரு ஆணைப் பார்ப்பதையும், உங்களை ஒருவன் அப்படிப் பார்ப்பதையும் அனுமதிக்காதீர்கள்.

10. உங்களைப்போலவேபுரிதலுக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு சக ஜீவனாகவே ஆணைப் பாருங்கள். உங்கள் மனச் சலனங்களை உங்கள் பெற்றோரிடமும், உங்களைப் புரிந்துகொள்வோரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். 
ஆரம்பத்தில் இவை எதிர்ப்பையோ, அதிர்வையோ ஏற்படுத்தினாலும், உங்கள் நியாயங்களை அவர்கள் புரிந்துகொள்ளுமளவு உயர்வானவை ஆக்குங்கள்.

11. உங்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளையும், உங்கள் நியாயங்களுக்கான மறுதலிப்புக்களையும், அவற்றின் அன்பின் பின்னணியைக் கருத்தில் கொண்டு மதிப்பிடுங்கள். 

12. ஜாக்கிரதை உணர்ச்சி என்பது பெண்களுக்கு இயல்பாகவே உள்ள ஒன்று. அதன் எல்லைகளை மீறி எல்லோரையும், எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

13. சில மில்லிகிராம் சதை இடமாற்றம் ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கொருவர் பார்த்து சந்தேகமோ, வெறியோ, வெறுப்போ கொள்ளவைக்கும் ஆதிமனித மனநிலையிலிருந்து நாம் விடுபட்டுக்கொண்டிருப்பதை உணருங்கள்

14. எங்காவது நடக்கும் சில விரும்பத்தகாத அசிங்கங்களை எல்லோர் மீதும் பொருத்திப் பார்க்காதீர்கள்!

15. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவையே.
உங்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் உங்கள் அறிவிலும் திறமையிலும் உழைப்பிலும் தேடுங்கள்!

16. கிளுகிளுப்புக் கதையோ, பூச்சாண்டி கதையோ சொல்லி, 15 நிமிடங்கள் விரல் நுனியில் இன்பம் தேடச்சொல்லும் அறிவுரைகளைப் புறம் தள்ளி, அந்த சில நிமிடங்களைத் தாண்டியுள்ள மீதி 23.45 மணிநேரத்தை உங்களை உயர்த்தச் செலவிடுங்கள்.

17. காதலித்துத் திருமணம் புரிய நேர்ந்தாலோபெற்றவர் உங்கள் சம்மதத்துடன் திருமணம் முடிக்க நேர்ந்தாலோ, அந்த உறவுக்கு உண்மையாய் இருங்கள்! உங்கள் இணையும் அவ்வாறே இருக்க வற்புறுத்துங்கள்.

கணவன் மனைவி உறவில் மட்டுமல்ல, எல்லா உறவிலும் நேர்மையோடிருங்கள்.

உங்கள் வாழ்வு வளமாய், மகிழ்வாய் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்!

Thursday, 16 April 2015

புது வருடத்தின் முதல் நாள்!

இப்படித்தான் ஆரம்பித்தது மன்மத வருடம்!
ஒருவாரமாக வீட்டில் ஒரே தொல்லை.
"ஏங்க, அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்காரன் வேற போன் பண்ணிக்கிட்டே இருக்கான். ஒருநாள் ஆபீஸுக்கு லேட்டாப் போனா என்ன? அந்த மெடிக்கல் டெஸ்டை முடிச்சுக் குடுத்துடுங்களேன். ஒரு மணிநேர வேலைதானே!"

எனக்கு இந்த ஆஸ்பத்திரி, டாக்டருங்களை எல்லாம் பார்த்தாலே கொஞ்சம் அலர்ஜி.
ஏதோ, இந்த நர்ஸுங்க இருக்கவும், கொஞ்சம் மனசத் தேத்திக்கிட்டுப் அங்கெல்லாம் போகமுடியுது!

நடுவே எனக்கு இன்னொரு டவுட் வேற!!
அம்மணி ஏன் இவ்வளவு வேகமா இருக்கா? இந்த இன்சூரன்ஸ் கம்பெனி படுபாவி டெத் பெனிபிட் பத்தி ரொம்ப சொல்லிட்டானோ!

கெடைக்கிற அரை சாப்பாட்டுக்கும் ஆப்பு வச்சுக்க வேண்டாம்ன்னு வாயை மூடிக்கிட்டு நாளைக்கு, நாளைக்குன்னு தள்ளிக்கிட்டே  வந்தேன்!

சரியா வந்தது புது வருஷம்!

நாளைக்கு லீவுதானப்பா? அப்படின்னு பொண்ணு போன்ல கேட்கும்போதே சுதாரிச்சிருக்கணும்!
"ஆமா செல்லம்"ன்னு சொன்ன மறு நொடி, போன் அம்மணி கைல!
ஸ்பீக்கர் போட்டுப் பேசியிருக்குதுக போல!

அப்போ நாளைக்கு CK ஹாஸ்பிடல்ல அப்பாயின்மெண்ட் வாங்கிடறேன்.
"இல்லம்மா, நாளைக்கு ..... "போன கட்டாகி காத்துகிட்ட பேசிட்டிருந்திருக்கிறேன்.

சரி, காலை சுத்துன பாம்பு கடிக்காம விடாதுன்னு, - ஐயா நான் இன்சூரன்ஸ் கம்பெனியைச சொன்னேன் சம்சாரத்தை அல்ல, -  வீட்டுக்குப் போனதும்      “மறுநாள் எத்தனை மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் போகணும்"னு கேட்டா,
"காலைல ஏந்திருச்ச உடனே, தண்ணி கூடக் குடிக்காம வெறும் வயித்தோட போகணும்!"
"அப்போ சட்டை போடக்கூடாதா" ன்ன மொக்கைக்கு, தீக்காயம் ஆகாம தப்பிச்சது போனஜென்மத்துப் புண்ணியம்!

சரி, காலைல ஆறு மணிக்கெல்லாம் போயிட்டு வந்து, புது வருஷம், பிள்ளைகளுக்கு ஏதாவது ஸ்வீட் பண்ற வழியைப் பாருங்க!
காலைல எந்திருச்சு தூங்கறவங்களத் தொந்தரவு பண்ணாம, நீங்களே கதவைப் பூட்டிக்கிட்டுப் போய்டுங்க!

இருபத்தஞ்சு வருசத்துக்கு இதுகூடப் பழகலன்னா எப்படி?

தலை தன்போக்குல ஆடுது –வழக்கம்போல. சரின்னுதான் அர்த்தம்!

காலைல எதுக்கும் இருக்கட்டும்ன்னு பெர்ப்யூம் கொஞ்சம் தெளிச்சுக்கிட்டு, திண்டல் முருகனை அதிகாலைலயே தொந்தரவு பண்ண வந்திருந்த பட்டுப் புடவைகள சேவிச்சுக்கிட்டு பதினைஞ்சு கிலோமீட்டர் போய் CK ஹாஸ்பிடல் வாசல்ல வண்டிய நிறுத்தி, மூஞ்சியத் தொடச்சுக்கிட்டா, வாட்ச்மேன் படுபாவி நமுட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு சொல்றான், “லேப் டெக்னீசியனுக்கு எங்க சித்தி வயசுன்னு!

என்னடா, மன்மத வருஷம் இப்படி ஆரம்பிக்குதுன்னு எரிச்சலோட லேபுக்குப் போனா, வாட்ச்மேன் மூதேவி பொய் சொல்லியிருக்கு.

அங்கிருந்த ஆயாவுக்கு எங்க பாட்டிவயசு!

எங்க வேணும்னாலும் குத்திக்கங்கன்னு வெறுப்பா கைய நீட்டினா, அரைலிட்டர் சிரிஞ்சு நிறைய ரத்தத்தை உறிஞ்சிக்கிட்டு (அடிப்பாவி, எங்க வீட்டு மொத்தக் கொசுவுக்கும், ஒரு மாசத்துக்கு ஆகாரம்), கையில ஒரு பாட்டிலைக் கொடுத்து, ரெஸ்ட் ரூமுக்குக் கை காமிச்சது பாட்டி.
உள்ளே போய் கதவை சாத்துனா, இருட்டு மூஞ்சில அடிக்குது!

பொக்கிஷம் மாதிரி பாட்டிலைக் கொண்டுவந்து வெச்சுட்டு, “ஏம்மா, உள்ள லைட்டுப் போடக்கூடாதான்னு கேட்டா, கெழவிக்கு குசும்பு, “ஏன், இருட்டுல பைப்புத் தண்ணியப் புடிச்சுக்கிட்டு வந்துட்டியாங்குது.
அது வம்சத்தையே மனசுக்குள்ள திட்டிக்கிட்டே, “எதுக்கும், ப்ரக்னன்சி டெஸ்ட்டும் பாத்துருங்கன்னு பதிலுக்கு சொல்லிட்டு வந்துட்டேன்.

அடுத்தது, ECG அக்கப்போரு எங்கேன்னு பார்த்து, முதல் மாடிக்குப்போனா, ……..
ஆஹா! பாரதியார் வாழ்க!

கேரள நாட்டிளம் பெண்கள் பட்டாளமே அங்கதான் இருக்கு!

ச்சே நல்ல டி ஷர்ட்டா போட்டுக்கிட்டு வந்திருக்கலாமோன்னு அப்பத்தான் தோணிச்சு.

சரி, எப்படியும் கழட்டத்தானே சொல்லப்போறாங்க அப்படின்னு (வக்கிரமா நினைக்காதீங்க பாவிகளே) உள்ள போனதும் ஆர்வக்கோளாருல, எங்க படுக்கணும்னு கேட்டது தப்பாங்க, சேச்சிங்க கூட்டமா மொறைக்குதுங்க!

நம்ம ராசி, உள்ளதுக்குள்ளயே அழகான பொண்ணு ஜொல் - சீ - ஜெல் எடுத்துக்கிட்டு பக்கத்துலவந்தப்போ, காக்க காக்க கனகவேல் காக்கன்னு வெட்கத்துல, கண்ணை நல்லா தெறந்து வெச்சுக்கிட்டு திண்டல் முருகனுக்கு மனசுக்குள்ள ஒரு பெரிய நன்றி சொல்லிக்கிட்டேன்.

மொதல்ல ஒரு மெஷின்ல எடுத்துட்டு, இன்னொரு மெஷின்ல கனெக்ட் பண்ணி, மூச்சை நல்லா இழுத்துப் பிடிங்க அப்படின்னுது அந்த ஸ்ரீதிவ்யா!
மொதல்லையே அப்படித்தான் இருக்கேன்றது அதுக்குத் தெரியல பாவம் (தொப்பை தெரியக்கூடாது பாருங்க!)
எடுத்து முடிச்சு, ரிப்பன் ரிப்பனா கத்திருச்சு ஓட்டும்போது எதுக்கு சேச்சி ரெண்டு மெஷின்ல எடுத்தீங்க அப்படின்னா, "மொத மெஷின் வொர்க் பண்ணல" 

ரிப்போர்ட்ட கைல கொடுத்துட்டு, பத்துமணிக்கு மேல, இந்த ரிப்போர்ட், லேப் ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, டாக்டரம்மாவ வந்து பாருங்க அப்படின்னு சொன்ன சேச்சிக்கு, இருக்கட்டும்ன்னு ஒரு ஹேப்பி விஷு சொல்லிட்டு, வர்ற வழியில ஒரு கும்பகோணம் பில்டர் காப்பி குடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா, குடும்பமே அனந்த சயனத்துல இருக்கு!

தலையெழுத்த நொந்துக்கிட்டு, ஹிண்டு சித்திரை மலரை எடுத்துக்கிட்டு ரெஸ்ட் ரூம் போய் செட்டில் ஆனா, பையன் கதவ ஒடைக்கிறான் - "சீக்கிரம் வாப்பா. பாத்ரூமுக்கு புக்கை எடுத்துக்கிட்டுப் போகாதேன்னு எத்தனை தடவை சொல்றது"ன்னு காலங்கார்த்தால, ஞானோபதேசம் வேற!

தமிழனுக்கு எப்போதான் சுதந்திரம் கிடைக்குமோன்னு வெளியவந்தா, பெண்டாட்டித் தெய்வம் கேட்குது, "என்ன ஆச்சு மெடிக்கல் டெஸ்ட்?"

மாமனாருக்கு அப்புறம், சனி நிரந்தர வாசம், நம்ம நாக்குலதானே!

கிரீன் டீக்கு ஆசைப்பட்டு ECG வைபோகத்தை ஏகப்பட்ட பில்ட் அப் கொடுத்து சொல்லித் தொலைச்சத்துக்கு  கை மேல பலன்.

"சிவா, பத்துமணிக்கு அப்பகூட நீயும் போறியா?"
ரெட்ட ரெடியா வந்து நிக்குது வாரிசு!
பொண்டாட்டிகிட்ட உண்மை பேசுனா என்ன ஆகும்னு பார்த்துக்குங்க!

சரின்னு, ECG ரிப்போர்ட்ட வச்சு சீரியஸா பார்த்துக்கிட்டிருந்தா, பொண்ணு மெதுவா கேட்டா -  "அதுல என்னப்பா பார்க்கறே?"

"இல்லடா, ரெண்டு மெசின்ல எடுத்தாங்க, ஆனா, ஒரு கோடு கூட நேரா இல்லை எல்லாமே மேலும் கீழுமா இருக்கு" அப்படின்னு சீரியஸா சொன்னா, முதுகுலையே ஓங்கி ஒன்னு வைச்சுட்டு தூ ன்னு துப்பிட்டு தூரப் போய்ட்டா!

பத்து மணிக்கு, எதுக்கு வம்புன்னு, கொஞ்சம் சுமாரான சட்டையையே போட்டுக்கிட்டு (வருஷப் பொறப்பு, செவ்வாய்க் கிழமை வேற, ஷேவ் பண்ணவேண்டாம் - அம்மணி திருவாய்மொழி - ECG கதை விளைவு), மறக்காம, ஜேம்ஸ்பாண்ட் – The spy who loves me ஐ கையோட கூட்டிக்கிட்டு அடுத்த பயணம்!

லேப்ல போய் பாட்டிகிட்ட ரிப்போர்ட்ட வாங்கிக்கிட்டு ரிசப்ஷன்ல கொஞ்சம் லட்சணமாய் தெரிஞ்ச பொண்ணுகிட்ட வந்து கொடுத்தா, இன்னொரு பைங்கிளையக் கூப்பிட்டு, BP எடுத்துட்டு, மேட்ரன் கிட்ட கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னா, “வாங்கண்ணான்னு காத்தப் புடுங்குது ஈரோட்டுப் பைங்கிளி!

BP எடுத்துட்டு, 80/120 அப்படின்னு சொன்ன நர்ஸ் கிட்ட, நார்மல் எவ்வளவுன்னு கேட்டா, நீங்க நார்மலாத்தான் இருக்கீங்க அப்படின்னுச்சு!
என்னை நார்மல்ன்னு சொன்னோ மொத ஆளு நீங்கதான் அப்படின்னு வழிஞ்சதுக்கு அந்தப் பொண்ணு சிரிச்சத நல்லவேளை, டீவீ ல நயன்தாராவை பார்த்துக்கிட்டிருந்த பையன் கவனிக்கல!

அடுத்த சோதனை, ஹைட் பார்க்கறதுல ஆரம்பிச்சது.

தலைக்கு மேல தொங்கிய அளவைப் பார்க்க எதிர்ல கிட்ட்ட்ட்ட வந்து எக்கிப் பார்த்தும் எட்டாத அந்தத்தலையிலிருந்து வந்த ஷாம்பூ வாசமும், கலைந்திருந்த சட்டை பட்டனும்.... 
ஈஸ்வரா, இது என்ன சோதனை!
நானே பார்த்துசொல்றேன் அப்படின்னு நகந்துக்கிட்டேன். பின்ன, பையன் பக்கத்துல நிற்கும்போது என்ன செய்ய,
ஆனாலும் சொல்லிட்டேன்- இப்போ BP பார்த்திருந்தீங்கன்னா 180/220 இருந்திருக்கும்!

வெட்கப்படும்போது ஈரோட்டுப் பெண்கள் தனி அழகு.
காம்ப்ளான் குடிங்கம்மா, நல்லா வளருவீங்க அப்படின்னு பொதுவா சொல்லிட்டு, மேட்ரன் கிட்டப்போனா, அது அந்த பார்ம்அ வைச்சுக்கிட்டு ஆயிரம் கேள்வி கேட்குது.

எப்பவாவது ஆபரேசன் பண்ணீருக்கா ? - இல்லைங்க நான் பொறந்தது கூட நார்மல் டெலிவரிதான்!

எங்காவது அடி பட்டிருக்கா- இல்லைங்க, சம்சாரம் கூட அடிக்கறதில்லை!

வயத்துவலி ஏதாவது - இல்லைங்க

ஒட்டுக்குடல் ஆபரேஷன் ஏதாவது - இல்லைங்க, ஆண்டவன் அனுப்பிச்ச ஒரிஜனல் ஸ்பேர் பார்ட் எதுவும் இன்னும் மாத்தல!

சுகர் -  இல்லை
BP - இல்லை
பல் வலி - இல்லை

என்னம்மா இது ரேஷன் கடையா, எதுவுமே இல்லைங்கறீங்க! ( வீட்டுக்குப் போய் மகன் சொன்னது - அப்பாவுக்கு எதுவுமே இல்லையாம்மா - அறிவு கூட! - கொலைகாரக் குடும்பம்)

சரி, ரெண்டு அடையாளம் சொல்லுங்க! - "முழங்கையில மச்சம்!"
வேண்டாம் பார்க்கறமாதிரி இடத்துல சொல்லுங்க, மூஞ்சில ஏதும் இல்லையா!
நீங்களே பார்த்துக்குங்க!
புதைபொருள் ஆராய்ச்சி மாதிரி ரெண்டுபேரும் என் மூஞ்சிய உத்துப் பாக்குதுங்க!
"அப்புடிப் பாக்காத மயிலு, எனக்கு வெக்கமா இருக்கு!"

சிரிச்சு சிரிச்சு ரெண்டுபேருக்கும் மொகமே செவந்திருச்சு- பையனுக்கு கோபத்துல!

தேங்க்ஸ் சொல்லிட்டு மனசே இல்லாம எழுந்திருச்சு டாக்டரம்மா ரூமுக்குப் போனா, அங்க இருந்த டாக்டருக்கு ரொம்பச் சின்ன வயசு

அநேகமா, என் மாமனாருக்கு கிளாஸ் மேட்டா இருக்கும்!

தலை விதியேன்னு அது ரிப்போர்ட் எல்லாம் பார்த்து, கையெழுத்துப் போட்டுட்டு, நீங்க போலாம்ன்னு தலைய ஆட்டினதும், மெதுவா கேட்டேன்,
அந்த இன்ஸூரன்ஸ் பணம் எப்ப தருவீங்க!

அநேகமா CK ஆஸ்பத்திரியில என்னை இந்த வருஷம் முழுக்க மறக்க மாட்டாங்க!


பி கு:
திரும்பி வர்ற வழியில திண்டல் கோவில்ல இருந்து நேரா வண்டியில விழுந்த பெண்ணை, நீ புஷ்பா மகளானனு கேட்க வாய் திறந்தா, பின்னாடி வந்தது காஞ்சனா பொண்ணோ?
போங்கப்பா!

ஈரோட்டுல எத்தனை கொசுவர்த்தி!


Tuesday, 14 April 2015

காதலின் கதை!

காதலின் கதை!மதுரை 2015

எவ்வளவு பெரிய ரகசியத்தை தன்னிடமிருந்து மறைத்திருக்கிறான் தன் கணவன்.

போரடிக்கிறது என்று அவன் பீரோவை சுத்தம் செய்கையில், துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த பழைய டைரியை பார்த்தபோது ஸ்வேதாவுக்கு முதலில் படிக்கத் தோன்றவில்லை.

திருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. தேன் கலந்த நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

திருமண வாழ்வின் முதலிரவில்தன வாழ்வின் எல்லா ரகசியங்களையும் சொல்லிக் கலங்கியபோது அரவணைத்துச் சிரித்தவன், முதலில் படித்தது அவள் உடலின் ரக்சியங்களைத்தான்.

தன உடலில் இத்தனை இடங்களில் பூப் பூக்கும் என்பதை அவளே அறியவைத்தபின், அசந்து உறங்கப்போகும்போது, ஸ்வேதா கேட்டாள், "நீங்கள் சொல்ல இதுபோல் எதுவுமே இல்லையா?"

"இன்னும் ஒருமுறை திறந்துகாட்டுமளவு நான் எதையும் மறைக்கவில்லையே" என்று குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தவன், மீண்டும் ஒருமுறை அவளை இழுத்துத் தன்மேல் சரித்துக்கொண்டான்.

மணவாழ்க்கை இத்தனை பெரிய சுகமும், சுவையுமாய் இருக்கும் என்பதை யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டாள். 

வீட்டிலிருக்கும்போதெல்லாம்  ஒரு நாய்க்குட்டிபோல் அவளை உரசிக்கொண்டே இருப்பான். ஸ்வேதாவுக்குத்தான் அவன் மூச்சுக் காற்றுப் படும் இடங்களெல்லாம் சூடாகும், அதை நினைக்கும்போதெல்லாம் முகமே சிவந்துபோகும்.

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் ….” என்று காதோரம் பாரதியை கிசுகிசுக்கும்போது பற்றவைக்கும் சூடு, ஆட்டம் முடிந்து, “உன்கூந்தல் ஆடை விலக்கி உறங்கப்போகும் எனக்குப் போர்வையாய்ப் போர்த்து என்று சொந்தக் கவியில் தணியும்போது, அயர்வை மீறி சந்தோசம் பொங்கும்!

நம்பவே முடியாத அத்தனை சுகவாழ்க்கை இந்தப் பொய்யின் அடித்தளத்திலாதான் அறியாத ரகசியங்களே தன கணவனிடம் இல்லை என்று நம்பியிருந்தது எத்தனை முட்டாள்தனம்!

அவன் டைரியில் இருந்த கடிதம்,
"நேற்று, நாங்கள் ஒரு தவிர்க்கமுடியாத கணத்தில் எங்களை இழந்தோம். ஆனால், இன்று நடந்த ஒரு சம்பவம், இனி அவளை நான் எதிர்கொள்ளவே முடியாத தளத்துக்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது…….." என்று அவளுக்கு மிகப் பரிச்யமான அவளின் கிருஷ்ணாவின் கையெழுத்தில் ஓடியது!


சென்னை 2012
அன்றைக்கு காலையிலேயே ஏதோ சொல்லியது கிருஷ்ணாவுக்கு, இன்றைக்கு உனக்கு அதிர்ஷ்ட நாள் என்று. 
வண்டியை  சர்வீஸுக்கு விட்டவன், மரியாதையாக  ஆட்டோ பிடித்துப் போகாமல், டவுன் பஸ்ஸில் ஆபீசுக்குப் போக முடிவெடுத்து டெர்மினஸ்ஸில் ஏறியதால் உட்கார  கிடைத்தது அதிர்ஷ்டம். 
அதிலும், அந்த மயில் கழுத்துக் கலர் சேலை பேரழகி அவன் அருகே வந்து நின்றது பேரதிர்ஷ்டம். 

ஆண்களும் பெண்களுமாய் அடைத்துக்கொண்டு நின்ற பஸ்ஸில், அந்தப் பெண் தடுமாறிக்கொண்டு நின்றபோது, கண்களுக்கு மிக அருகே பளிச்சிட்ட  அவள் எலுமிச்சை இடை மின்னலை பார்க்காததுபோல் முகத்தை வைத்துக்கொள்ள அவன் போராட வேண்டியிருந்தது. 

சரியாக அவன் கண்ணின் மட்டத்தில் பட்ட காட்சியும், அவள் கூந்தல் மல்லிகையின் மெல்லிய சுகந்தமும், அந்த இடுப்பின் பொடி வியர்வையும் அவனை வேறுபக்கம் திரும்பவிடாமல் சதி செய்த வேலையிலா அந்த சைக்கிள்காரன் குறுக்கே வரவேண்டும்?

சடக்கென்று பிடித்த ப்ரேக்கில் வண்டி குலுங்கியபோது, ஒரு பஞ்சுப்பொதி தன் முகத்தில் மோதியதும், அதன் வியர்வை ஈரத்தில் தன இதழ் பதிந்ததும், அந்தப் பொன் வயிற்றோடு சேர்த்து அவன் தலையை அந்த மயில் கழுத்து நிற சேலை மூடியதும்,.... 

அன்றைகுக் கிருஷ்ணன் அவளை மனதுக்குள் சுமந்துகொண்டுதான் அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

வேலையில் மூழ்க முயன்றவனை, அந்த இடுப்பில் பதிந்த ஈர முத்தம் கை பிடித்து இழுக்க, இரண்டுமணி நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை.

பன்னிரண்டு மணியளவில், GM  இன்டர்காமில் அழைத்தபோதும் சுவாரஸ்யம் இல்லாமல்தான் உள்ளே போனான்.

"மீட் மிஸ் ஸ்வேதா, உங்கள் டிபார்ட்மெண்டுக்கு புது ரெக்ரூட். உங்களுக்குக் கீழேதான் மூன்று மாத ட்ரைனிங்!"

பஸ்ஸில் பார்த்த அதே தேவதை. 

இடை பதிந்த இதழ் குறுகுறுக்க, அவளைப் பார்த்து, "வெல்கம் மிஸ் ஸ்வேதா" என்றவனை தீயாய் முறைத்தாள்.

சில நாட்களிலேயே, பஸ்ஸில் நிகழ்ந்தது தற்செயல் என்று புரிந்து சமாதானமான ஸ்வேதாவை கிருஷ்ணாவின்  நேரான அணுகுமுறைகளும், ஆறடி உயரமும், சீக்கிரத்திலேயே வசமிழக்க வைத்தன.

அன்று மதியம், கேண்டீனில் மெதுவாக அவன் கையை முதல்முறையாகத் தொட்டு, "கிருஷ்ணா" என்று குழைந்தபோது, நேரிடையாக வந்தது அவன் குரல்.
"நீ என்ன ஜாதி?"

தாக்கப்பட்டவள் போல் விருட்டென்று எழுந்துபோனவளை யோசனையோடு சலனமே இல்லாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா.

ஒருவார மௌனப் போராட்டத்துக்குப்பின், கிருஷ்ணாவே, அவளிடம் கேட்டான், "ஸ்வேதா, இன்று மாலை நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்!"

மறுப்பேதும் சொல்லாமல் தலை ஆட்டிய தன்னையே புரியாமல் உட்கார்ந்திருந்தாள் ஸ்வேதா!

மாலை, பாலிமரின் ஒதுக்குப்புறமான மேஜையில் உட்கார்ந்தவுடன் ஸ்வேதா அடக்கமுடியாமல் கேட்டாள்.

அன்னைக்கு ஏன் அப்படிக் கேட்டீங்க கிருஷ்ணா!"

"இன்னைக்கும் அதேதான் கேட்கப்போகிறேன் ஸ்வேதா!"

எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. 
உனக்கும் என்னைப பிடிச்சிருக்குன்னு தெரியும்.

ஆனால், எனக்கு கல்யாணத்தில் முடியாத காதலில் நம்பிக்கை இல்லை!

"என் ஜாதி இது
உன் ஜாதி குறித்து எனக்குக் கவலை இல்லை. 
ஆனால், என்ன எதிர்ப்பு வந்தாலும், உன்னால் எதிர்த்து நின்று என்னைக் கைபிடிக்க முடியுமானால், காதலிக்கலாம். 
வெறும் டைம் பாஸ் காமத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
இல்லை என்றால் நட்பாய்த் தொடரலாம்"

கண்கள் தளும்ப அத்தனை பேர் பார்ப்பதையும் மறந்து, "உன்னை விடமாட்டேன்டா" என்று உதட்டில் முத்தமிட்டுக் கண்ணீரோடு சிரித்தாள் ஸ்வேதா!

இருட்டுமூலை திரைப்படங்களில்கூட கண்ணியம் காக்கும் அவன் குணம் ஸ்வேதாவுக்கு அவன்மேல் ஈர்ப்பை அதிகப்படுத்த
வந்தது கிருஷ்ணாவின் பிறந்த நாள்.

ஸ்வேதாவின் வற்புறுத்தலில் சில்வர் சேண்ட்ஸ் ரிஸார்ட்ல்  ட்ரீட்!

கடல் காற்றும், நிலவும், தனிமையும், நெருக்கமும் , ஸ்வேதாவின் தகிக்கும் இளமை சுகந்தமும், இளமையும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த, உடைகளும் தளர்ந்தன.

ஸ்வேதா மயக்கத்தின் கிறக்கத்தில் உறங்கிப்போக, குற்ற உணர்ச்சியில் உறக்கம் கொள்ளாமல் விழித்தே இருந்தான் கிருஷ்ணா!

மறுநாள் காலைகண்கள் தளும்ப ஸ்வேதாவிடம் மன்னிப்புக் கேட்டான் கிருஷ்ணா!
உதட்டால் ஒற்றி மன்னித்தாள் ஸ்வேதா.

அன்று மாலை பீச்சில் தனிமையில் ஸ்வேதாவிடம்,
"உன்னிடம் கொஞ்சம் தீவிரமாகப் பேசவேண்டும்.
இதுவரை, என் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் திட்டமிட்டே கழித்துவிட்டேன்.
நேற்று நடந்தது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
நாளை நான் ஊருக்குப் போகிறேன். 
என் தந்தை ஒரு முரட்டு ஆத்மா! 
எது நடந்தாலும், அனுமதியோடுதான் வருவேன்!"

"நேற்று நடந்ததை ஒரு பாவ மன்னிப்பு போல் என் நெருங்கிய நண்பனுக்கு மட்டும் எழுதியிருக்கிறேன்.
நம் திருமணத்துக்கு முன் எனக்கு ஏதும் நடந்தாலும் உனக்கான பாதுகாப்புக்கும் அவன் உறுதுணை வருவான்" 

சொன்னவனைக் கண்ணீரோடும், பயத்தோடும் கட்டிப் பிடித்து
"நாம் கண்டிப்பாக சேருவோம் கிருஷ்ணா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தைரியமாப் போங்க. உங்க அப்பா நிச்சயம் நம்ம கல்யாணத்துக்கு ஒப்புக்குவார்!
அப்படியே எது நடந்தும், உங்களால் அவர்களை எதிர்த்து வரமுடியாவிட்டாலும், உங்களைத் தப்பா நினைக்கமாட்டேன் கிருஷ்ணா" என்றவளை, முதல் முறையாகத் தானே இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் கிருஷ்ணா!

அதுதான் அவனை கடைசியாக உயிரோடு பார்த்தது.

ஊருக்குப் போனவன் மொபைல் மறுநாளிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க, பத்துநாள் கழித்து அலுவலகத்துக்குத் தகவல் வந்தது, அவன் இறந்து எட்டு நாட்கள் ஆனதாக!

அவன் பொருட்களை வாங்கிப்போகக்கூட யாரும் வரவில்லை.

மதுரை 2015


மனது முழுக்க நொறுங்கிப்போய் வேலையை ரிசைன் செய்து சொந்த ஊருக்கே வந்து, கடந்த வருடங்களில்  மனத்தைக் கொஞ்சம் தேற்றி, விடாப்பிடியாக மல்லுக்கு நின்ற ரமேஷின் பெற்றோர்கள் பிடிவாதத்தால், இதோ இப்போது, திருமதி ரமேஷ்.

முதலிரவில், கிருஷ்ணா பற்றி சில்வர் சேண்ட்ஸ் நிகழ்வு தவிர எல்லாம் சொல்லி அழுதபோதும் தெரியும் என்று ஒரு வார்த்தை சொல்லாத ரமேஷின் டைரியில், கிருஷ்ணா எழுதிய கடிதம்.

அவனது உயிர் நண்பன் ரமேஷ்தானா!

கடவுளே, இப்போது நான் ரமேஷை எப்படி எதிர்கொள்வது?

மாலை அலுவலகம் விட்டு வந்த ரமேஷ், உற்சாகத்தில் அவளை அள்ளித் தூக்கினான். 
"அடுத்த மாதம் மொரீசியஸ் போறோம், ரெண்டாவது ஹனிமூன்!"

சுரத்தில்லாம ஏதோ பதில் சொன்னவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன் கண்ணில் பட்டது, வேண்டுமென்றே மேஜையில் வைத்திருந்த அவன் பழைய டைரி.

இரவு படுக்கையறைக் கதவைத் தாளிடும்வரை அவனும் எதுவும் பேசவில்லை.

தயங்கித் தயங்கிப் படுக்கையில் அமர்ந்தவள் மெதுவாகக் கேட்டாள். "உங்களுக்குக் கிருஷ்ணாவைத் தெரியும் என்று ஏன் என்கிட்டே சொல்லலை?"

அவளை இழுத்து நெஞ்சில் சாய்த்தவன் கேட்டான்
"உன் குற்ற உணர்ச்சி தூண்டப்படுவதில் நமக்கு என்ன லாபம்?
என்றோ, இளமைக்குறுகுறுப்பில் நேசத்தின் உச்சத்தில் நடந்துபோன உடல் பங்கீடு இன்றைக்கு எனக்கு விவாதப் பொருளுமல்ல!
மனைவியின் கடந்த காலத்தை தோண்டிக்கொண்டிருந்து இன்றைக்கு கிடைக்கும் இந்த சொர்க்கத்தை இழக்குமளவு நான் முட்டாளுமல்ல!"

சொல்லிக்கொண்டே அவன் தொட்ட இடத்துக்கு முகம் சிவந்து
"ஆனால்...." என்று ஆரம்பித்தவளின் வாயை அடைத்தது அவன் இதழ்.

இரண்டு நிமிடம் கழித்துப் புன்னகையோடு கையை நகர்த்தியவன் கேட்டான்,
"இதுக்கு ஒரு சின்ன ஜிப் வைக்கமாட்டானா"


"ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்"
மொத்த உடலும் வெட்கத்தால் சிவந்தாள் ஸ்வேதா!

Wednesday, 8 April 2015

செம்மரக் கடத்தலும் சில கேள்விகளும்.


பொதுவாகவே, தமிழன் எளிதில் உணர்ச்சிவசப் படுபவன், அதைவிட எளிதாய் அதை மறந்து அடுத்ததைத் தேடுபவன்.

ஏதாவது உணர்ச்சியைத் தூண்டுவதாய் நடக்கையில், ஒரு நாளாவது தாமதித்துப் பதிவது கொஞ்சம் தெளிவைத் தரும் என்பது என் எண்ணம்.

"ஆந்திர"ப் போலீஸ் 20 "தமிழர்களை" சுட்டுக்கொன்றுவிட்டது என்பது நிச்சயம் வருந்தற்குரியதே.

இதை அடிப்படையாய்க் கொண்டு  ஒரு சுவாரசியமான திரைக்கதைப் புனைவும் படிக்க நேர்ந்தது.

எதிர்பாராமல் ஒரு உயிர் பிரிவதும், அதனால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போவதும் மிகக் கொடுமையான விஷயம்.

ஒரு குடும்பத்தின் தலைவன் இறப்பிற்கு எந்த நஷ்டஈடும் ஈடாகாது.
இருப்பினும், உணர்ச்சிவசப் படுவதை ஒதுக்கி, சில அடிப்படைக் கேள்விகள்.

1. அவர்கள் செய்வது என்னதென்று அவர்கள் அறியாததா?
2. வறுமை, நிர்பந்தம், என என்ன காரணம் கூறினும், சட்டவிரோதமான செயலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியுமா?
3. வறியவர்கள் பலரும் நேர்மையான வழியில் உழைக்கையில், இவர்கள் தேர்ந்தெடுத்த வழி தவறல்லவா?
4. ஒருநாள் கூலியாக பத்தாயிரம் ருபாய் வரை கிடைக்கும் எனில், அதன் ஆபத்து அவர்கள் அறியாததா?
5. காடு புகுந்து மரம் திருடுவது, வீடு புகுந்து கொள்ளையடிப்பதற்குக் குறைவானதா?

இது ஒருபுறம்.

அவர்களை கைது செய்து அடித்தே கொன்றதாக சில செய்திகள் கூறுகின்றன. அந்தப் புகைப்படங்கள் பார்க்கும்போது, ஒரு செட் அப் தன்மை தெரிவதையும் தவிர்க்கமுடியவில்லை.

1. அவர்கள் செய்தது குற்றமே ஆயினும், சுற்றிவளைத்து சுட்டுக்கொல்ல என்ன காரணம்?
2. ஒருவரைக்கூடவா உயிரோடு பிடிக்கமுடியவில்லை?
3.  அவர்களை உயிரோடு பிடித்தால், வாக்குமூலங்கள் யாரைக் கை காட்டும் என்று போலீஸ் பயந்தது?
4. இதைப் படிக்கும் யாருக்காவது, செம்மரக் கட்டைகளை எங்கு ரகசியமாக விற்கவேண்டும் என்று தெரியுமா? கோடிகோடியாகப் புரளும் கள்ளச் சந்தையில், இந்தக் கூலிகளா விற்றுப் பணம் பார்த்தார்கள்?
5. டன் கணக்கில் மரங்கள் கடத்தப்படுவதை எந்த நெட் ஒர்க்கும் இல்லாமல் செய்வது சாத்தியமா? இதன் வேர்கள் காவல்துறையும், அவர்களை ஏவும் துரைகளும் அறியாததா?
6. வீரப்பன் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளில், அந்த சந்தன மரங்களும், தந்தங்களும் எப்படி, யாரால்சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன என்பதுகுறித்து ஏதாவது விசாரணைகள் நடந்து, ஒருவராவது கைது செய்யப்பட்டாரா?
7. காட்டில் சுற்றித் திரிந்த வீரப்பன் தனி மனிதனாக சர்வதேச சந்தையில் வியாபாரம் செய்தானா? அவனை சுட்டுக்கொன்ற காவல் துறைக்கும், வீரப்பர் என்று அன்போடும் மரியாதையோடும் அழைத்த தமிழினத் தலைவர்களுக்கும், வீரப்பனை சாதி காட்டி தூக்கிப் பிடித்த சமூகக் காவலர்களுக்கும், சாராயம் விற்கும் அன்னைக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் அந்தக் கொள்ளையில் பங்கில்லையா?
8. ஒற்றை வீரப்பன் கொலையில் எத்தனை உண்மைகள் புதைக்கப்பட்டன?
9. இந்த செம்மரக் கடத்தல் விஷயமும் அப்படி இந்த இருபதுபேர் கொலைக்குப் பின் எரிக்கவோ, புதைக்கவோ படுமா?
10. இதை, செத்தவன் தமிழன் என்று உணர்வுகளை உசுப்பி, மடை மாற்றும் சாமார்த்தியசாலிகள் யார்?

தமிழன் என்ற உணர்வில்லை என்ற விமர்சனங்களுக்கு!

1. முதலில், இதற்கு எந்தத் தமிழன் போராடவேண்டும்? அதிமுக தமிழனா, திமுக தமிழனா, தேசியத் தமிழனா, ஆதித் தமிழனா, இல்லை சாராயக் கடைவாழும் மீதித் தமிழனா, ஏசி அறையில் உட்கார்ந்து இதை எழுதும் இணையப் போர்வீரனா?
2. இவர்கள் யாரையும் இணைக்கும் சரடு இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பது யாருக்கும் தெரியாததா?
3. தமிழன் என்ற ஒரு பொது இனம் இல்லாமல் அடித்த நம் அரசியல்வாதிகளின் நோக்கமே இதுதானே? வெறும் அறிக்கைப் போர், உணர்வுத் தூண்டல், அது அடங்கியபின் கொல்லைப் புறமாக வரும் கொள்ளைப் பணத்தில் பங்கு. இதுதானே இன்றுவரை நடக்கிறது? இது இப்போதுமட்டும் மாறுமா?
4. காவிரியாகட்டும், முல்லைப்பெரியாறு ஆகட்டும், எதிலாவது தமிழன் குரல் ஒருமித்து ஒலிக்க அரசியல்வாதிகள் அனுமதித்திருக்கிறார்களா?
5. தமிழன் ஒற்றுமை லட்சணம் தெரிந்ததால்தான், எல்லா நாய்களும் தமிழனைக் கண்டால் காலைத் தூக்குறது என்பது எந்தத் தலைவருக்கும் தெரியாதா? அந்த ஒருங்கிணைப்பை, சுய லாபம் கருதாது முன்னெடுக்கும் தலைவன் யாராவது கண்ணுக்கெட்டிய தூரம் தெரிகிறானா?

என்னிடம் வெறும் கேள்விகள் மட்டுமே இருக்கின்றன!
(இலங்கைத் தமிழர், மீனவர் பிரச்சினை குறித்தும் என் கேள்விகள் பின்னர்!)