Thursday, 22 November 2018

பெண்களே, பெண்களே!


பெண்களே பெண்களே!“Dare not touch me!”

ஒரு நிமிடம் தான் கேட்டது என்ன என்று புரியாமல் பின்வாங்கினான் சிபி!

“என்ன சொல்றே கண்ணம்மா?”

“Sibi, this irritates me, don’t ever call me so.”

“சாரிடா, செல்லமா...”

“கட் இட் சிபி, எனக்கு என்று சொந்தமாக ஒரு பெயர் இருக்கிறது - கால் மீ ரம்யா!”

“சரி அண்ட் ஸாரி! முதலிரவில் இந்த ஆராய்ச்சி தேவையா, நாம் ஆராய எத்தனையோ இருக்கும்போது..”

புன்னகைத்தபடி நெருங்கிய சிபியை சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தாள் ரம்யா!
“என்னைத் தொடாதே சிபி!”

ஒரு நிமிடம் அபத்தமான டீவி சீரியல் பார்ப்பதுபோல் உணர்ந்தான் சிபி!

“ஏன்?”

“எனக்கு பிடிக்கல”

“சரி ரிலாக்ஸ்... சும்மா பேசிக்கிட்டிருப்போம்.”

“நோ சிபி! ஐம் நாட் இந்த மூட் டு டாக் நவ்
நான் தூங்கப்போறேன்! குட் நைட்!”

சொல்லியபடியே தலையோடு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள் ரம்யா!

ஒரு நிமிடம் அசையாமல் போர்த்திய போர்வையையே பார்த்துக்கொண்டு நின்றான் சிபி!

ஏறத்தாழ நான்கு மாதம்!

சம்பிரதாயமாக மருதமலையில் போய் பெண்ணைப் பார்த்தபோதே இவள்தான் என்று முடிவு செய்துவிட்டான் சிபி!

தங்கள் வீட்டு சார்பில் ரம்யாவிடம் பேசிய சிபியின் தாய்மாமன் ரவியின் கருத்து அப்போதே வேறுவிதமாக இருந்தது.

"சிபி, பொண்ணு இப்போதே கொஞ்சம் பூசுன மாதிரி இருக்கு, கல்யாணத்துக்கப்புறம் இன்னும் கொஞ்சம் குண்டாக சான்ஸ் இருக்கு. மேலும், நான் பேசியவரைக்கும் அந்தப் பெண்ணுக்கு ஒரு ஸ்டெடி மைண்ட் இருக்கறமாதிரி தெரியல. நாம் கொஞ்சம் அவசரப்பட வேண்டாமே"

இல்லை மாமா, நீங்க ஆபீஸ் போகணும்ன்னு அவசரமா போனதுக்கப்புறம் நாங்க எல்லோருமே பேசிக்கிட்டிருந்தோம். எனக்கு என்னவோ, இவதான் எனக்குன்னு படுது!

ஒரு நிமிடம் உற்றுப்பார்த்துவிட்டு புன்னகைத்தான் ரவி

ஆல் தி பெஸ்ட் சிபி! இத்தனை வருடத்தில் இன்னுமே உன் அத்தையைப்பற்றி எனக்கு இப்படித் தோன்றியதில்லை!
முறைத்த மனைவியைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் ரவி!

அதன்பிறகு மின்னல் வேகத்தில் காரியங்கள்!

அடுத்த வாரத்திலேயே ஆடம்பரமாக ஒரு நிச்சயதார்த்தம்!


கல்யாண தேதிதான் நான்கு மாதம் தள்ளி..

ஒரு வகையில் சிபிக்கு அதில் உடன்பாடே!

நான்கு மாதங்களில் அவன் வைத்த வாட்ஸாப் ஸ்டேட்டஸ் எல்லாமே உறவினர் வட்டத்தில் அத்தனை பிரசித்தம்!

மறக்காமல் 117 டேஸ் டு கோ, 116 டேஸ் டு கோ என்று கவுண்ட் டவுன் போடவும் மறப்பதில்லை!

ரவிதான் ஓயாமல் கிண்டல் செய்துகொண்டே இருப்பான்!
ஏண்டா இப்படி தேன் குடித்த நரிபோல அலைகிறாய்?
இது அரேன்ஜ்ட் மேரேஜ் சிபி, லவ் மேரேஜ் இல்லை!

இல்லை மாமா, இப்போ இது லவ் மேரேஜ்தான் 
சொல்லிவிட்டு நகருபவனை யோசனையாகப் பார்ப்பான் ரவி.

அவ்வப்போது மனைவியிடம்கூட புலம்பியதுண்டு!
இவன் ஏண்டி இவ்வளவு வேகமா போறான், எனக்கென்னவோ இது சரியாகப்படலை!

விடுங்க, அதெல்லாம் சின்னப்பசங்க விஷயம், உங்களுக்கு புரியாது!

தினசரி போனைப் பிடித்துக்கொண்டே சிபி தூங்கிப்போவது வழக்கமாகிப்போனது!

ஒருநாள் ரம்யா, சிபியோடு ஹோட்டலுக்கு போய்விட்டு வந்த ரவியின் மகன் சொன்னான்,
அப்பா, எனக்கென்னவோ சிபி உருகும் அளவுக்கு ரம்யா ஒர்த் இல்லைன்னு படுது!

டேய், எப்போதுமே வயசுக்கு மீறின வாய் உனக்கு!

அட போப்பா, சிபி உருகி உருகி போடற ஸ்டேடஸ்க்கு ரம்யா ஒரு ஸ்மைலி கூட போடறதில்லை!

விடுடா, நீ போய் படிக்கற வழியை பாரு!

இதுபற்றி ஆதங்கமாய் ஒருமுறை சிபியே கேட்டபோது எனக்கு எதையும் வெளிப்படுத்தத் தெரியாது, நான் மெளனமாக இருப்பதே நான் இதையெல்லாம் ரசிக்கிறேன் என்றுதான் அர்த்தம் என்று சுலபமாய் சொல்லி வாயை அடைத்துவிட்டாள் ரம்யா!

அதன் பிறகு வந்த கல்யாணத்துக்கு இடைப்பட்ட நாட்கள் ரெக்கை கட்டிப்பறந்தன!
தினம் ஒரு ஹோட்டல், தினம் நூறு கதைகள் தினம் ஆயிரம் செல்ஃபி என்று ஒருபுறம்,
ஒரே பையன் என்று இழைத்து இழைத்து கல்யாண வேலைகள் மறுபுறம்!


ஒவ்வொரு ஞாயிறும் திருச்சியிலிருந்து கோவை வந்துவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டனர் சிபியின் பெற்றோர்.
காலை முதல் மாலை வரை வருங்கால சம்பந்தியுடன் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக திட்டமிடல், பத்திரிக்கை வடிவமைப்பிலிருந்து ஸ்டேஜ் டெக்கரேஷன், கேட்டரிங் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து ஏற்பாடு செய்ய
இடைப்பட்ட நாளில் வந்த ரம்யாவின் பிறந்தநாளுக்கு சிபியின் வீடு அமர்க்களப் பட்டது!

பெண் குழந்தை இல்லாத வீட்டில் ரம்யாவின் வருகை வரமாக கொண்டாடப்பட, அன்றுதான் முதல் ஸ்டேட்டஸ் ரம்யாவிடமிருந்து - ஐயம் மூவ்ட்.

வழக்கம்போல் மடியில் உட்கார்ந்து, தோளில் கைபோட்டு என்று சிபி போடும் செல்ஃபி ஸ்டேட்டஸ்கள் உறவினர் மத்தியில் கேலி சிரிப்பையும், நட்பு வட்டத்திலும் லைக்ஸும் அள்ள, தேன் குடித்த வண்டாய் கிறங்கி அலைந்தான் சிபி!

கடைவீதியில் கண்ணில் பட்டதெல்லாம் ரம்யாவுக்கு அன்பளிப்பு!

ரம்யா அப்பாவே ஒருமுறை கேட்டார், மாப்ள,  இதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஓவரா தெரியுது!

ஒரு அசுப வேளையில் சிபியிடம் ரவி கேட்டான் ஏன்டா, இந்த டேஸ் டு கோ ஸ்டேட்டஸை கல்யாணத்தன்றைக்கு எப்படி முடிப்பாய், இட் இஸ் கான் அப்படின்னா?

சுட்டிநின்ற தேவதைகள் ததாஸ்து என்று ஆர்ப்பரித்தது அப்போது தெரியவில்லை பாவம்!

எதிர்பார்த்ததைவிட வெகு சிறப்பாய் நடந்து முடிந்தது கல்யாணம்!

ரிசப்ஷன் கச்சேரியில் சிபி பாடிய பாட்டும், அப்போது திரையில் ஒளிர்ந்த ஸ்லைட் ஷோவும் பாடல் முடிவில் மண்டியிட்டு அவன் கொடுத்த ரோஜாவும், ஒரு ஃபீல் குட் காதல் கதை பார்ப்பதுபோல்!
சிண்ட்ரெல்லா முகத்தில்தான் ஏனோ சிரிப்பே இல்லை!

திருமணம் முடிந்த அடுத்த வாரம் ஸ்விட்சர்லாண்ட் ஹனிமூனுக்கு டிக்கெட்டோடு, ஒவ்வொரு இடத்திலும் ரம்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சிபியின் திட்டமும் பக்காவாக ரெடி!

திருமணம் முடிந்த அடுத்தநாள் குலதெய்வம் கோவில், சம்பந்தி விருந்து என்று அலைச்சல்!
இரண்டாவது நாள் முதலிரவு!
அன்று நடந்ததுதான் இந்தக் கதையின் முதல் பாரா!

தூக்கம் வருகிறது என்று போர்த்திப்படுத்த ரம்யாவின் போர்வைக்குள் நள்ளிரவு ரெண்டுமணி வரை ஒளிர்ந்த செல்போனை வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் சிபி!

மறுநாளும் இதே கதை!

பொறுக்கமுடியாமல் ஒருமணிக்கு வெடித்துவிட்டான் சிபி.

தூக்கம் வருவதாய் சொல்லிவிட்டு யாரிடம் அப்படி சேட்டிங்?

அப்போ, நீ என்னை சந்தேகப்படறயா?

சந்தேகம் இல்ல ரம்யா, நாம் கொஞ்சநேரம் பேசிக்கிட்டாவது இருக்கலாமே?

எனக்கு உன்னோட பேச எதுவும் இல்ல சிபி.

என்ன ரம்யா இப்படி சொல்றே?

நாளை மறுநாள் ஹனிமூன் கிளம்பறோமே அதைப்பத்தி பேசலாமே?

ஹனிமூனா? யாரு?
கேட்டபடி போர்வைக்குள் சுருண்டுகொண்டாள் ரம்யா!

கண்ணில் வழியும் நீரோடு, திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தான் சிபி!

மறுநாள் விடிந்ததும், காஃபியோடு வந்த மாமியாரிடம் சொன்னாள்,
அத்தை, நான் எங்க வீட்டுக்கு போறேன்!

வில்லங்கம் தெரியாத வெள்ளந்தி கேட்டது
ஏன் ரம்மி, நைட்டெல்லாம் ரொம்ப தொந்தரவு செய்யறானா?

சீ  - சீறலாய் வந்தது மறுமொழி!

நான் எங்க அப்பாவுக்கு போன் பண்ணிட்டேன், அவங்க வந்துக்கிட்டிருக்காங்க!

நாளை மறுநாள் ஊருக்குப் போகணுமே ரம்யா?

இல்லை, இன்னைக்கு ஒன்ஸ் ஃபார் ஆல், நான் ஊருக்குப் போறேன்! எனக்கு இந்தக் கல்யாணமே பிடிக்கல!
சொல்லியபடியே, விறுவிறு என பேக் செய்ய ஆரம்பித்தாள் ரம்யா!

நடப்பதே புரியாமல் வாயடைத்து உட்கார்ந்திருந்த மூன்று ஜீவனும்!

ரம்யா பெற்றோர் வருவதற்குள் ஒரு ஃபிளாஷ் பேக்!

ரம்யா, யாருடி இவன்?
சீதாவின் குரலில் கோபமும் நடுக்கமும்!

கையில் ரம்யாவின் மொபைல்!
அந்தரங்கமான புகைப்படங்கள் அத்தனையும்!
ரம்யாவோடு யார் இவன்?

நானே சொல்லணும்னு நினைச்சேன், இவன் என் பாய்ஃப்ரெண்ட் அம்மா! இவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!

சுளீரென்று விழுந்தது ரம்யாவுக்கு வாழ்க்கையின் முதல் அறை!

நீ யாருடீ அதை முடிவு பண்ண?

என் வாழ்க்கை, நான் முடிவு பண்ணாம யார் பண்ண?

உனக்கு அவ்வளவு அனுபவம் பத்தாது ரம்யா?

இந்த டெம்பிளேட்டை மாத்தும்மா, எஞ்சினீரிங் படிக்கும் எனக்கு என் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு தெரியும், இதில் உன் அட்வைஸ் எனக்கு தேவையில்லை!

தொடர்ந்த வாதப்பிரதிவாதங்கள் இயல்பிலேயே பிடிவாதக்காரியான ரம்யாவை கொஞ்சமும் அசைக்கவில்லை!

ரம்யா, அவள் தம்பி, அம்மா - இதுதான் அங்கிருக்கும் குடும்பம்!
அப்பா?
நாடாறு மாதம் காடாறு மாதம் என்று அபுதாபியில் காசை வாரிக்கொண்டு இங்கே வந்து கொட்டும் யந்திரம்!
கொஞ்சம் கோபக்கார வெகுளி!

அடியே, உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாரு
சொல்லு, யார் அந்தப் பையன், நான் பேசிப்பார்க்கறேன்!

போய் பேசு, காலேஜுக்கு எதிரே பேக்கரி வைத்திருக்கிறான் - ராஜான்னு பேரு!

பேக்கரியா? என்ன படிச்சிருக்கான்?

எட்டாவது!

ஐயோ, ஏன்டி உன் புத்தி இப்படி வேலை செய்யுது? உனக்கு பார்த்துப்பார்த்து எல்லாம் செய்து வெச்சிருக்கார் உங்க அப்பா!
கல்யாணம் பண்ணி நீ வாழ உன்பேரில் தனி வீடுகூட ரெடி!
நீ இப்படி பேக்கரிக்காரன் லாண்டரிக்காரன் ன்னு வந்து நிக்கறியே, நியாயமாடி?
நான் இதுக்கு ஒருநாளும் சம்மதிக்கமாட்டேன்!

அம்மா, மைண்ட் யுவர் லிமிட்ஸ்! நான் அரசல்புரசலாய் கண்டும்காணாமல் போற சில விஷயங்களை நான் அப்பாகிட்ட சொன்னா, உன் வாழ்க்கை என்னாகும்னு தெரியுமா?

அதிர்ந்துபோய் நின்றாள் சீதா!

ஒருமாதம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஓட, ஆறுமாத விடுப்பில் வந்தார் குமரன்! - ரம்யாவின் அப்பா!

வந்த மறுநாள், ஞாயிறு!

ரம்யா, இங்கே வாடா

ஆசையாய் அழைத்த அப்பாவின் கையில் லேப்டாப்!
எட்டிப்பார்த்தால், புன்னகையோடு ஒரு இளைஞன் படம்!

பேரு சிபி!
அப்பா அம்மாவுக்கு ஒரே பையன்! ஆஸ்திரேலியாவில் எம் எஸ் படிச்சுட்டு இங்கே கோயமுத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை!
தமிழ் மேட்ரிமோனியில் பிடித்தேன்!
நாளைக்கு மருதமலையில் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்!
நான் திரும்ப ஊருக்குப் போறதுக்குள்ள உனக்கு கல்யாணம்!

அப்பா, என்று ஏதோ ஆரம்பித்தவள் கண்ணில் பட்டது கிச்சனிலிருந்து கைகூப்பிய சீதாவின் உருவம்!

கிச்சனுக்குள் கோபமாய் நுழைந்தவள், என்னம்மா இது? இப்போ நீ இதை வேண்டாம்ன்னு சொல்லப்போறியா இல்லையா?

இப்போ என்னாச்சுடி, பொண்ணு பார்க்கத்தானே வரப்போறாங்க? நான் பேசிப்பார்க்கறேன், ஆனா நீயும் கொஞ்சம் மனச மாத்திக்க ட்ரை பண்ணு ப்ளீஸ்!

போம்மா, எனக்கு நீ என்ன பண்ணுவேன்னு தெரியாது, ஏதாவது ஏடாகூடமா பண்ணுனே, நான் பாட்டுக்கு ராஜாவோட போய்க்கிட்டே இருப்பேன்!

மறுநாள் பெண் பார்க்கும் வைபவம் சிறப்பாக முடிந்து, சிபி, அவன் குடும்பம் சம்மதம் சொல்லிப்போக, இங்கு கச்சேரி ஆரம்பம்!

அப்பா, எனக்கு பையனை பிடிக்கல!

ஏன்?

குண்டா இருக்கான்!

நீ மாத்திரம் என்ன, சிம்ரன் மாதிரி இருக்கியா? கண்ணாடில போய் பாரு!

இல்லப்பா, நான் மேற்கொண்டு படிக்கணும்!

அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் படி! நான் இந்த வருஷத்தோட வேலையே விட்டு வந்துரலாம்ன்னு இருக்கேன்! இந்த லீவில் உனக்கு கல்யாணம் பண்றது உறுதி! எனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கு, பையனும் ரொம்ப நல்லவனா தெரியறான்!

அம்மாவிடம் சீறியபோது, எதிர்பாராத விதமாக காலிலேயே தொப்பென்று விழுந்தாள்!

உங்க அப்பா கோபம் உனக்குத் தெரியும்! தயவு செஞ்சு ஒத்துக்கடி!

கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா பார்த்துக்கலாம்.

எப்படி, உன்னைமாதிரியா?

தேளாய் கொட்டியது கேள்வி!

இருந்தும் காலில் விழுந்து கதறும் தாயின் கண்ணீர் கொஞ்சமாக அசைத்துப் பார்த்தது!

சரி, நீங்க பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க
ஆனா, என்னைக்கு எனக்கு பிடிக்கல, விலகிக்கலாம்ன்னு தோணுதோ, அன்னைக்கு விலகிக்குவேன்!

அதன் பின் நடந்ததெல்லாம் ரம்யாவை கொஞ்சம் அசைத்துப் பார்த்ததும் உண்மைதான்!

பாவம், இந்தப் பையன் நம்ம மேல இதனை ஆசையாய் காதலாய் சுத்தறானே, சரின்னு சொல்லிடலாமோன்னு நினைக்கிற அன்னைக்கு ராஜா பேக்கரி பெயரை ரம்யா பேக்கரின்னு மாற்றியிருந்தான்
கூடவே, பிளேடால் அவள் பெயரை கையில் கீறிக்கொண்டு ரத்தம் வடிய நின்றான்!

இது போதாதா என்ன?
வேதாளம் முருங்கை மரத்தில் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டது!

இடையிடையே, சிபியிடம் உண்மையை சொல்லிவிடலாமா பாவம் என்று தோன்றும்போதெல்லாம் அப்பா அம்மா மீதான கோபமும் பயமும் வாயைக் கட்டிப்போட்டது!

சிபி வாங்கிக்கொடுக்கும் காதல் ததும்பும் பரிசுகள் எல்லாமே ராஜா ரம்யாவின் கேலிப்பொருள் ஆயின!

இதோ, க்ளைமாக்ஸ் வந்தே விட்டது!

சட்டென்று அழுகையும் கோபமுமாய்,
நீங்க உடனே வந்து என்னை கூட்டிக்கிட்டு போகலேன்னா நான் சூசைட் பண்ணிக்குவேன்”  என்று வந்த போன் கால், குமரனை பதறி ஓடிவர வைத்திருந்தது!

வந்ததும் கேட்டார்,
என்னாச்சு சம்பந்தி?”

என்ன தெரியும் அவர்களுக்கும் சொல்ல?

“நீங்க உங்க பொண்ணையே கேளுங்க!”

தனியறைக்குள் பெண்ணை அழைத்துச் சென்று ஒருமணி நேரம் பேசி வந்தபின் முகத்தை தொங்கப்போட்டபடி குமரன் சொன்னார்,
“சம்பந்தி, நான் இப்போதைக்கு என் பெண்ணை ஊருக்கு கூட்டிப்போறேன், ஒரு வாரம் கழித்து வர்றோம்!”

“சரி, ஆனால், நாளன்றைக்கு ஸ்விட்சர்லாண்ட் கிளம்பணுமே?”

“அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்!”
கூப்பிய கையை விலக்காமல், காரேறி அமர்ந்துகொண்டார் குமரன்.

அழுக்குத்துணி உட்பட அத்தனையும் பேக் செய்து போயே போய்விட்டாள் ரம்யா!

அடுத்தவாரம் அவர்கள் வரும்வரை என்ன காரணம் என்பதே தெரியாமல் பித்துப்பிடித்து உட்கார்ந்திருந்தார்கள் சிபியும் பெற்றோரும்-
பொண்ணு மாப்பிள்ளையை சாப்பாட்டுக்கு வரச்சொல்லி வந்த அழைப்புகளுக்கெல்லாம் வாய்க்குவந்த பொய்களை சொல்லியபடி!

அடுத்த ஞாயிறு, குமரன் மட்டுமே வந்தார்!

எங்களை மன்னிச்சுக்குங்க சம்பந்தி! என் பொண்ணு என்ன காரணம்ன்னு சொல்லவே மாட்டேங்கிறா! அடிச்சுக்கூட கேட்டுப் பார்த்துட்டேன்!
எனக்கு மேரீட் லைப்ல இன்ட்ரஸ்ட் இல்லை! அப்படி என்னை அங்கே கட்டாயப்படுத்தி கொண்டு விட்டீங்கன்னா நான் கண்டிப்பா சூசைட் பண்ணிக்குவேன்!அப்படின்னு சொல்றா! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல!

சரி, இப்போ நாங்க என்ன பண்ண?

மியூச்சுவல் டைவோர்ஸ் அப்ளை பண்ணிக்கலாம்! எனக்கு வேற வழி தெரியல! இடிந்துபோய் நின்றவர்களிடம், பாக்கெட்டில் கைவிட்டவாறே சொன்னார், ரம்யா இதை கொடுத்துவிட்டாள்!

வெளியே எடுத்த கையில் மஞ்சள் சரடில் கோர்க்கப்பட்ட தாலி!

வீட்டிற்குள் விழுந்த பிணத்தைப் பார்த்து அழுவதுபோல் கதற ஆரம்பித்த மனைவியையும் மகனையும் தேற்ற வழி தெரியாது நீர்த்திரையிட்ட கண்களோடு நின்றார் சிபியின் அப்பா!எனக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம்!

இந்த தமிழ் சினிமா க்ளைமாக்சில் எல்லாம், அமெரிக்க மாப்பிள்ளையோடு மணவறையில் உட்கார்ந்திருக்கும் கதாநாயகிகள், தன் - பெரும்பாலும் பொறுக்கியாக திரியும் - காதலன் வந்ததும், மாலையை கழற்றி வீசிவிட்டு எழுந்து போகும்போது, அந்த மாப்பிள்ளையின் மனநிலை என்னவாக இருக்கும்?

எந்த குற்றமும் செய்யாத, எந்த விஷயமும் புரியாத அந்த அப்பாவிக்கு இந்த தண்டனையையும் மன உளைச்சலையும் கொடுக்கும் உரிமையை இந்தப் பெண்களுக்கு யார் கொடுத்தது?

இவர்களின் பெற்றோர் நிர்பந்தத்துக்கு அந்தப் பையன் ஏன் ஆயுளுக்கும் ஒரு ரணத்தை சுமக்கவேண்டும்?

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத ரணம்?

அந்த மணமகன் சைடிலிருந்து ஏன் இதை யாருமே யோசிப்பதில்லை?

சரி, கதை முடிந்தது!

இப்போது வேலைக்குப் போகாமல்  தாடி வளர்த்துத் திரியும் சிபியையும்,
இடிந்து குலைந்துபோய் நிற்கும் அவன் தாயையும்
கவுன்சிலிங்கிற்கு அழைத்துப்போய் வந்துகொண்டிருக்கிறார் சிபியின் அப்பா!
குமரன் கோபித்துக்கொண்டு அபுதாபிக்கே போய்விட்டார்!

ரம்யா?
இந்த உலகம் ரொம்ப சிறியது!
நேற்று மாலை ஃபன் மாலில் முகம் கொள்ளாத சிரிப்போடு படிக்காதவன் தனுஷ் மாதிரி ஒரு பையன் மடியிலேயே உட்கார்ந்து ஏதோ பாட்டில் ட்ரிங்க்கை மெய் மறந்து உறிஞ்சிக்கொண்டிருந்தார்!

பி கு:

பீச்சுக்குக் கூட்டிப்போய் கண்ணைக்கட்டி விளையாடலாம் என்று சொல்லி காதலனோடு சேர்ந்து அடித்துக்கொன்ற புதுமணப்பெண்,
 கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையை தாயின் உதவியோடு தண்ணீர் தொட்டியில் அமிழ்த்திக் கொன்ற பெண்,

இவர்களைப் பார்க்கும்போது

ரம்யாக்களே கடவுளாகத் தெரிய நேர்வது சீரியல்களும் நாகரிகமும் செய்த கோலம்!


No comments:

Post a Comment