புதன், 29 ஜூன், 2022

மருத்துவருடன் ஒரு மாலை நேரம்!

இடம்: வடவள்ளி ….. மருத்துவமனை

காலம்: நேற்று மாலை மழைமேகம் சூழ்ந்து இருண்ட நேரம்!

மறுபடியும் வந்துட்டீங்களா? இப்போ என்ன?

உள்ளே நுழைந்ததும் சிஸ்டர் கேட்ட முதல் கேள்வி!

நம்ம வரலாறு அப்படி! மாசம் ஒருதடவையாவது ஆஸ்பத்திரி விசிட் என்பது எழுதப்படாத விதி! அதனால நர்ஸ் எல்லோருக்குமே நல்ல பரிச்சயம்!

வேற யாருக்கு? உங்க ரெகுலர் பேஷண்ட்டுக்குத்தான்!

டாக்டர் இன்னைக்கு வரமாட்டாரே?

தெரியும். டாக்டரம்மாவை பார்க்கணும்!

அவங்களையா? எதுக்கு?

சும்மாதான், அழகா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்!

ஐயோ! இவரை ஏன் மேடம் கூட்டிட்டு வர்றீங்க?

நீங்ககூட வந்ததிலிருந்து அவர்கிட்டதான் பேசறீங்க சிஸ்டர்!

அவங்க கவலை அவங்களுக்கு!

என்ன பண்றது, மூஞ்சி அப்படி! நீங்க சொல்லுங்க சிஸ்டர்!

ஐயா சாமி, உங்க விளையாட்டுக்கு நான் வரல! டாக்டரம்மா ஆறரைக்குத்தான் வருவாங்க. அவங்க ஓபி மாடில. அங்க வெய்ட் பண்றீங்களா?

இல்லை, இங்கேயே இருக்கோம் உங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டே! உங்க ஆஸ்பத்திரி கொசுவே மேலே தூக்கிட்டுப் போயிடும்!

லேடி டாக்டர் வரட்டும்! காத்திருக்கற நேரத்தில் ஒரு சின்ன ப்ரீலூட்!

காலைல டாக்டர்கூட ஃபோனில் ஓடிய கான்வோ!

நீங்க அனுப்பிய ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன்! இந்த வாரத்திலேயே சர்ஜரி வெச்சுக்கலாம், ஆனா ஒரு சின்ன பிரச்னை!

என்ன டாக்டர்? கிட்னிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?

நீங்க சீரியஸாவே பேசமாட்டீங்களா?

முயற்சி பண்றேன் டாக்டர் சொல்லுங்க!

அவங்களுக்கு கர்ப்பப்பைலயும் ஒரு கட்டி இருக்குஅதையும் கம்பைன் பண்ணிக்கலாமா?

இதென்ன டாக்டர், சினிமாவுக்குப்போனா டிஃபன் சாப்பிட்டு வர்றதில்லையா? பேஷா பண்ணிக்கலாம்

அப்போ, ஈவினிங் என் மிஸ்ஸெஸ்ஸை பார்த்து ஒரு ஒப்பீனியன் வாங்கிடுங்க. நான் இப்போ பேசி டைம் வாங்கித் தர்றேன்!

ஓகே டாக்டர்!

இல்லை, வேண்டாம், நம்பர் தர்றேன் நீங்களே பேசிடுங்க! சொல்றேன், நோட் பண்ணிக்கறீங்களா?

வொய்ஃப் நம்பரை மனப்பாடமா வெச்சிருக்கீங்க, நீங்கள்லாம் ம்யூசியம் பீஸ் டாக்டர்!

ஒரே ஒரு சின்ன ஹெல்ப் டாக்டர்.

என்ன, சொல்லுங்க.

நான் பேசுவேன்னு அவங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுங்களேன், ப்ளீஸ்! அறிமுகம் இல்லாம ஒரு லேடிகிட்ட பேச எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கும்!

யாருக்கு? உங்களுக்கா? மேடத்துக்குப் பதிலா உங்களை படுக்கவெச்சு அறுத்துப் பார்க்கணும்!

எதை டாக்டர்?

யோவ், நான் ஃபோனை வைக்கறேன், எனக்கு சர்ஜரி இருக்கு!

வீட்டம்மாவுக்கு ஆக்ஸிடண்ட் ஆகி சர்ஜரி பண்ணியதிலிருந்து அவ்வளவு நெருக்கம் தல!

அதுக்கப்புறம் டாக்டரம்மாட்ட பேசி, டைம் ஃபிக்ஸ்  பண்ணித்தான் இந்த கொசுக்கடி வெய்ட்டிங்!

கதை பேசிட்டிருந்த நேரத்தில் டாக்டரம்மா வந்தாச்சு!

வ்வாட் ..

வாங்க, ஸாரி, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு!

டாக்டர் சொல்லியிருந்த பேஷண்ட் நீங்கதானே!

சொல்லுங்க. ஜாப்ல இருக்கீங்களா

இல்லை டாக்டர்.

என்ன படிச்சிருக்கீங்க?

BBM டிஸ்கண்ட்டின்யூ!

ஏன்? மேரேஜ்னாலயா?

என்னைப் பார்க்காதீங்க மேம், நான் அதுக்கு காரணம் இல்லை! இன்ஃபேக்ட் நான் படிக்கத்தான் சொன்னேன். இவங்கதான் படிப்பிலிருந்து தப்பிக்க என்னையும் கல்யாணத்தையும் சூஸ் பண்ணி யூஸ் பண்ணிக்கிட்டாங்க!

நானே சமயத்துக்கு படிக்காம இருந்திருக்கலாம்ன்னு நினைக்கறது உண்டு! நாட் ஆல்வேஸ்! பட் இந்தமாதிரி வேலை அதிகம் இருக்கற சில நாட்கள்ல! பாருங்க, இன்னைக்கு உங்களை காக்கவைக்க வேண்டியதாயிடுச்சு!

பரவால்ல மேம்! இவ்வளவு அழகான டாக்டர் வரப்போறாங்கன்னு தெரிஞ்சிருந்தா கொசுக்கடியை மைண்ட் பண்ணாம மணிக்கணக்கா காத்திருக்கலாம்

எங்க ஹஸ்பண்ட் ஆல்ரெடி உங்களைப் பத்தி சொல்லிட்டாரு சார்!

ரைட்டு

சேச்சே, நல்ல விதமாத்தான் சொன்னாரு!

பொய் சொல்லியிருக்காரு!

அப்போ தைரியமா ஒன்னு சொல்லட்டுமா? டாக்டர் ஏன் அவ்வளவு அழகா இருக்காருன்னு உங்களை பார்த்ததும்தான் தெரிஞ்சுது!

ஏன்?

உங்க அழகுல பாதியாவது இருக்கணுமே! அதனாலதான்! யூ லுக் அநியாயத்துக்கு யங்கர் - லைக் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்!

Flirting உங்களுக்கு ரொம்ப இயல்பா வருது. யாருமே இதுவரைக்கும் அஃபெண்ட் ஆனதில்லையா?

உண்மையை சொன்னா எதுக்கு டாக்டர் அஃபெண்ட் ஆகப்போறாங்க?

ரைட்டு! இவங்களைப் பார்த்து சொல்லியிருக்கீங்களா?

அந்தப் பொய்யை சொன்னதுக்குத்தான் முப்பது வருஷ பனிஷ்மெண்ட்!

ரைட்டு! எங்க வீட்டுக்காரர் சொன்ன எதுவுமே தப்பில்லை!

சரி, எத்தனை குழந்தைங்க?

ரெண்டு!

ரெண்டுமே நார்மலா?

ஆமாம் டாக்டர்!

அப்புறம், ஃபேமிலி ப்ளானிங் பண்ணிட்டீங்களா?

ப்ளானிங்லாம் கெட்ட வார்த்தை டாக்டர்! அதெல்லாம் இல்லை! இட் ஹேப்பன்ட் லைக் தட்! அவ்வளவுதான்!

ஓகே! உங்க கர்ப்பப்பை கட்டி போன வருஷம் இருந்ததைவிட சுருங்கியிருக்கு! தேர் ஈஸ் ஆல்வேஸ் பாசிபிலிட்டி ஆஃப் இட் ஸ்ரிங்க்கிங் ஃபர்தர்.

இப்போ, எய்தர் யூ குட் கோ ஃபார் சர்ஜரி ஆர் லீவ் இட் ஏஸ் சச்.

இன்னும் ரெண்டு மூனு வருஷம் போனதுக்கப்புறம் தேவைப்பட்டால் மட்டும் பார்த்துக்கலாம்!

இப்போ நீங்க ரொம்ப டயர்டா இருக்குன்னு ஃபீல் பண்ணினால்கூட, அட் திஸ் ஸ்டேஜ், வில் நாட் ரெக்கமண்ட் ஃபார் சர்ஜரி!

பட், இப்போ, அம்ப்லிக்கல் ஹெர்ணியாவுக்கு நீங்க கண்டிப்பா சர்ஜரி பண்ணிக்கத்தான் வேணும்!

எனிவே, வீ ஆர் கோயிங் டு ஓப்பன். இப்போதே கர்ப்பப்பையையும் ரிமூவ் பண்ணிட்டா, உங்களுக்கு இந்த மாதாந்திர அவஸ்தைகள் இருக்காது, யூ வில் பீ ஃப்ரீ ஆஃப் திஸ் நவ்ஆன்!

பின்னாடி ஏதாவது ப்ராப்ளம் வந்தால் இன்னொரு தடவை கத்தி வைக்கறமாதிரி இருக்கும்! அதை அவாய்ட் பண்ணிக்கலாம்!

யோசிச்சு சொல்லுங்க!

டாக்டர், ஒரு நிமிஷம், திங்க் பண்ற பழக்கம் பரம்பரைக்கே இல்லை! அதனால, லெட் அஸ் டிசைட் ரைட் நவ்!

எப்படியிருந்தாலும் கட் பண்ணப் போறீங்க, எதெல்லாம் இடைஞ்சல், எதெல்லாம் தேவையில்லைன்னு நினைக்கறீங்களோ, அதை கையோட எடுத்து எறிஞ்சுடலாமே?

இல்லை சார், அவங்க இன்னும் யோசனையாதான் பார்க்கறாங்க, கிவ் ஹர் சம் டைம்!

அட நீங்க வேற! அவங்க பார்வையே இப்படித்தான்!

சார், கொஞ்சம் சும்மா இருங்க, நீங்க சொல்லுங்க மேடம், என்ன பண்ணலாம்?

நான் வீட்லயே சொல்லிட்டேன் மேடம், கர்ப்பப்பையையும் எடுத்தடலாம்!

பார்த்தீங்களா? அவங்க சொன்னதைத்தான் நானா சொல்ற மாதிரி சொன்னேன்! அதுக்கு ஆல்ரெடி பர்மிஷன் கொடுத்துட்டாங்க!

அப்படியே இன்னொரு விஷயம் டாக்டர்.

சொல்லுங்க!

ஆபரேஷன் செலவுக்கு வேணும்ன்னாலும், ஒரு கிட்னியை எடுத்துக்கங்க! சும்மாதானே கிடக்குது!

இன்ஃபேக்ட், நான் உங்களை அந்த க்ளீனிக்ல ஒருதடவை வந்து பார்த்தேன்- ஒரு வருஷம் முன்னாடி!

ஸாரிங்க சார், எனக்கு சுத்தமா நியாபகம் இல்லை!

நான் அழகான முகங்களை மறக்கறதில்லை டாக்டர். ஆனா நீங்க மறந்துடுவீங்க போல.

எதை?

அழகான முகங்களை!

இவரை எப்படிம்மா வீட்ல வெச்சு சமாளிக்கறீங்க

வேற ஏதாவது டிஃபெக்ட் இருக்கா டாக்டர்?

எதுவும் அலார்மிங்கா இல்லை! கொஞ்சம் ஃபேட்டி லிவர்!

அதுவுமா?

என்னது?

இல்லை, ஃபேட்டின்னு சொன்னீங்களே? அதுவுமான்னு கேட்டேன்!

சாமி, நீங்க கொஞ்சம் வெளியே உட்காருங்க, நான் ஒரு பாப் ஸ்மீர் எடுத்துக்கறேன்!

டேக் யுவர் டைம் டாக்டர்! நான் கொஞ்சநேரம் தீபா சேச்சி கிட்ட பேசிட்டிருக்கேன்!

நீங்க எப்போவுமே இப்படித்தானா?

அட, நீங்க வேற டாக்டர், காரைத் துரத்தற நாய் கதைதான் இது!

அதென்னது?

அதை ஒய்ஃபை வெச்சுட்டு சொல்லமுடியாது! இமேஜ் ரொம்ப டேமேஜ் ஆய்டும்!

நான் அதை உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன்!

கெஞ்ச நேரமே கிடைக்கல சேச்சிகிட்ட, அதுக்குள்ள உள்ளே கூப்பிட்டுட்டாங்க!

நீங்க சொல்லுங்க, என்னைக்கு அட்மிட் ஆகறீங்க?

நீங்க ஓகே சொன்னீங்கன்னா, இப்போவே விட்டுட்டுப் போறேன் டாக்டர்!

இந்த டெஸ்ட் ரிசல்ட் வர ரெண்டு நாள் ஆகும், வந்ததும் நானே உங்களுக்கு ஃபோன் பண்றேன்! அதுக்கப்புறம் நீங்க சொல்ற டேட்ல சர்ஜரி பண்ணிக்கலாம்!

என் நம்பருக்கு கூப்பிடறீங்களா?

இல்லை, சார் நம்பருக்கே கூப்பிடறேன்! எனக்கு அந்த கார் கதை தெரியணும்!

அது சரி!


சனி, 4 ஜூன், 2022

கடைசி கடிதம்- குல மானம் மறந்த மகளிடமிருந்து!

              அம்மா, அப்பாவுக்கு ஒரு இறுதி மடல்!

அன்புள்ள அம்மா, அப்பா என்று எழுதுவது கேலிக்கூத்தாகிவிடும்!

அன்பிலா என்று ஆரம்பித்தால், it will be too rude.

எதற்கு அடைமொழி எல்லாம்

வெறும் அப்பா, அம்மாவுக்கு,

இது அநேகமாக நான் உங்களுக்கு எழுதும் கடைசி கடிதம்.

ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்துக்கொண்டு எழுதுகிறேன்!

ஆனால், நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த (இந்த சொற்றொடரை பெற்று, வளர்த்து ஆளாக்கிய உங்களிடம் பிரயோகிப்பது எனக்கும் வலிக்கிறது. ஆனால், இந்தக் கடிதத்தில் நான் முழுக்க உண்மையாக இருக்க ஆசைப்படுவதால் தவிர்க்க முடியவில்லை) தற்கொலை வாக்குமூலம் அல்ல!

படுக்கையில் நல்ல சௌகரியமாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டு எழுதுகிறேன்!

அஃப்கோர்ஸ், என் பாரத்தை இறக்கிவைத்துவிட்டு அக்கடா என்று உட்கார்ந்து எழுதுகிறேன்!

அப்பா, உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியும்! என் எல்லா புத்திசாலித்தனங்களும் உங்களிடமிருந்து வந்ததுதானே!

ஆம்! அபார்ஷன் முடிந்து, இன்று ஒருநாள் இங்கேயே ஓய்வு!

அந்த கேடுகெட்ட நாயின் வாரிசை என் வயிற்றில் சுமக்க எனக்கு சம்மதமில்லை!

வசை பாடுமுன், இன்னுமொரு விஷயம்!

இந்த ஒன்றில் மட்டுமல்ல, நாளை இன்னொரு விஷயத்திலும் உங்கள் வார்த்தையை நான் மீறப்போகிறேன்! அதற்கும் சேர்த்தே என்னை சபித்துவிடுங்கள்!

நாளை காலை நாமக்கல் கமிஷனரைப் பார்த்து புகார் மனு கொடுக்கப்போகிறேன் - கூடவே மீடியாவுக்கு ஒரு விரிவான பேட்டியும்!

எப்படியும் உங்கள் ஆசை மருமகன் உள்ளே போவது உறுதி!

இதையெல்லாம் செய்வதற்கு, நீ செத்துப்போயிட்டேன்னா, நாங்க கொஞ்சம் சந்தோஷப்படுவோம்!” - அப்பா, இது கடைசியாக நீங்கள் சொன்ன வார்த்தை!

மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா, உங்கள் கேடுகெட்ட குலப்பெருமையை காப்பாற்றப் பலிகொடுக்குமளவு என் உயிர் அவ்வளவு மட்டமானதுமல்ல, தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் என்னை அப்படி வளர்க்கவுமில்லை!

ஒரே பெண்ணென்று என்னை அவ்வளவு அருமையாக வளர்த்தீர்கள்!

இன்று ஒரு எஞ்சினீயராக என்னால் என் சொந்தக்காலில் நிற்க முடிவதற்கு நீங்கள்தான் காரணம்! அதற்கு என் நன்றி!

அதுவரை உங்கள் செல்லப்பெண்ணாக இருந்த நான், அதற்குப்பிறகு எப்போது பாரமானேன் என்பது இப்போதுவரை எனக்குப் புரியவில்லை!

எதற்கு, மேற்படிப்பு படிக்கவேண்டும் என்ற என் விருப்பத்துக்கு மாறாக, அவ்வளவு அவசரமாக எனக்கு வரன் பார்த்தீர்கள்?

இத்தனை வயதுக்குள் பெண்களுக்கு கல்யாணம் செய்துவைத்தே ஆகவேண்டும் என்று ஏதாவது கட்டாயமா அப்பா?

அப்படி உங்களை வலியுறுத்தி, என்னை இந்தப் படுகுழிக்குள் தள்ளிய எந்த சொந்தக்கார நாயும் என் வாழ்க்கையை வாழப்போவதில்லை! பிறகு எதற்காக அவற்றுக்கு பயந்துகொண்டு இந்த அவசரக் கல்யாணம்?

அப்பா, எப்போது கல்யாணம் என்று பேச ஆரம்பித்து, என் ஜாதகத்தை கையில் எடுத்தீர்களோ, அப்போது முதல், நீங்கள் அதுவரை பார்த்த என் அப்பாவாக இல்லை!

உங்களுக்கு என் கல்யாணம் என்பது ஏதோ, உங்கள் அந்தஸ்தை கூட்டிக்கொள்ள ஒரு ஒப்பந்தமாக, வியாபாரமாகவே பட்டது!

எத்தனையோ நல்ல வரன்கள் வந்தும், அதில் எனக்குப் பிடித்தமான சிலர் இருந்தும், கடைசியில் நீங்கள் இந்தக் கேவலனைத்தான் தேர்ந்தெடுத்தீர்கள்!

அவன் என்னை பெண் பார்க்க வந்த அன்றுதான், நான் அழகாய்ப் பிறந்ததற்கு வருத்தப்பட்டேன்!

ஒரு நிமிடம் மட்டுமே என் முகத்தையும் கண்ணையும் பார்த்த அவன் பார்வை அதற்குப் பிறகு என் மாரிலும், இடுப்பிலும், இன்னும் கீழும் அலைந்துகொண்டிருந்தது ஒரு வேட்டை நாயைப்போல!

அவன் போனபிறகு, அதை உங்களிடம் சொல்லி, அவன் வேண்டாம் என்று சொன்னபோது, அது ஒரு குற்றமாகவே உங்களுக்குப் படவில்லை! உங்களுக்கு சமமான, அல்லது, உங்களுக்கு சற்றே மீறிய அவனது அந்தஸ்தும், வசதியும், காவேரிப் பாசனத்தில் நூற்றைம்பது ஏக்கரும்தான் உங்களுக்கு பிரதானமாகப் பட்டது!

வாக்குவாதம் முற்றி, அழகாக இருந்தால் எல்லோரும் அப்படித்தான் பார்ப்பார்கள், ஏன், நான்கூட அழகான பெண்களைப் பார்த்தால், உற்றுப் பார்ப்பேன், இது மனித இயல்புதானே என்று சொன்னீர்கள்! அப்படி எத்தனை பெண்களின் மாரை நீங்கள் வெறித்துப் பார்த்தீர்கள் என்று நான் கேட்டது இன்றும் எனக்கு தவறாகப் படவில்லை அப்பா

ஆனால் அன்றுதான், என்னை கை நீட்டி அறைந்தீர்கள், என் நினைவு தெரிந்து!

மறுநாளே பரிசம் போட வந்தவர்கள் கொண்டுவந்த அரைக்கோடி ரூபாய் வைரநெக்லஸ், அவனுடைய எல்லா குறைகளையும் மழுப்பியது!

பையன் குடிப்பானாமே

இந்தக் காலத்தில் யார்தான் குடிக்கவில்லை?

ஏதோ மேலத்தெரு பக்கம் அடிக்கடி போவதாக..

அதெல்லாம், கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுவாரு! என் மகள் அத்தனை அழகில் மாப்பிள்ளையை கட்டிப் போட்டுருவா!

அன்றைக்குத்தான், அம்மா, நீங்கள் என்னை மாறி மாறி அறைந்தீர்கள்!

இவர் எனக்கு அப்பாதானே, ஏதோ பொம்பள ப்ரோக்கர் மாதிரி பேசறாரு? நான் அவனுக்கு பெண்டாட்டியா, இல்லை, உடம்பைக் காட்டி மயக்கும் வேசியா? என்ற என் கேள்வி உங்களை ஏன் அப்படி ஆத்திரப்பட வைத்தது

அம்மா, இன்றைக்கும் காமாட்சி காமாட்சி என்று உங்களை அப்பா சுற்றிச்சுற்றிவர, உங்கள் உடம்புதான் காரணமா

எப்படியோ, பணமும் பணமும் சேர்ந்தது! ஊரே பிரமிக்குமளவு தடபுடல் கல்யாணம்! வந்தவனெல்லாம் பரிமாறிய நூறு வகைகளில் பாதியைக்கூட தின்னமுடியாமல், கலக்கிட்டீங்க ராமசாமி, இந்த ஜில்லாவில் இப்படி ஒரு கல்யாணம் எவனுமே செஞ்சதில்லை என்று சொன்னபோது, உங்கள் முகத்தில் அத்தனை பெருமை!

அந்த நாய் மகன் அத்தனை பேர் இருந்த கல்யாண மண்டபத்தில், சாப்பாட்டுக்கூடத்தில் என் இடுப்பைத் தடவியபோது, எனக்கு அருவெறுப்பு குமட்டிக்கொண்டு வந்தது!

திருச்சி ரம்யாவில் ஹனிமூன் ஸ்யூட்டில் முதலிரவு!

பயமும், பதட்டமும், அலுப்புமாக ஏறத்தாழ தூங்கிப்போனவள் மேல் பாய்ந்தவனுக்கு என்னை ஒரு வார்த்தை கேட்கக்கூட தோன்றவில்லை! அவ்வளவு நிர்வாணமும், மூர்க்கமும் எனக்கு ரொம்பவே புதுசு!

மேலும், அவனிடமிருந்து வந்த கெட்ட வாடை, விஸ்கி வாடை என்பது பிறகு அவன் சொல்லித்தான் தெரிந்தது!

காலையில் அம்மாவை தனியாக கூப்பிட்டு சொன்னபோது, அவருக்கு அத்தனை ஆனந்தம்!

இந்த வேகத்தில் போனால், பத்தாவது மாசமே மாப்பிள்ளை எங்களுக்கு ஒரு பேரனைக் கொடுத்துவிடுவார்போல என்ற பெருமை வேறு!

அதற்குப்பின், வருவதும், பாய்வதும், மேய்வதும், ஓய்வதும்தானே தவிர என்னோடு பேசக்கூட அவனுக்கு பொறுமை இல்லை! கூடவே சீமை சரக்கின் கெட்ட வாடை வேறு!

அப்பா, அவன் படுக்கையறையில் என்கூட பேசிய முதல் வார்த்தை என்ன தெரியுமா?

உங்கப்பன் என்னடி அவ்வளவு புத்திசாலியா?

எதற்கு தெரியுமா?

சீதனமாக நீங்கள் தருவதாகச் சொன்ன ஐம்பது ஏக்கரையும், மெர்சிடிஸ் காரையும், என் பெயரில் தந்ததற்கு!

எங்கப்பா எனக்கு தராமல், உங்களுக்கு எதற்கு தரவேண்டும் என்று கேட்டது அவனுக்கு எங்கோ குத்தியிருக்கிறது!

அதற்குப் பிறகு வந்த நாட்களில், சாராய நாற்றம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லி, படுக்க மறுத்தபோதுதான், அவனுடைய சுயரூபம் தெரிந்தது

அப்பா, என் வாழ்நாளில் வாங்காத அத்தனை வசவும் அடியும் அன்றைக்குத்தான் வாங்க ஆரம்பித்தேன்

போதாக்குறைக்கு, கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்த கதையை சொல்லி, அவளை நிறைய தடவை போட்டிருக்கிறேன் என்று பெருமை வேறு

இத்தனை அழகா இருக்கியே, உன்னை எவனுமே போட்டதில்லையா என்ற கேள்வி வேறு!

ஏம்மா, அப்பா எத்தனை பேரைபோட்டிருக்கிறார்?” அல்லது, உன்னை எத்தனைபேர்போட்டிருக்கிறார்கள்?” இதையெல்லாம் ஏன் நீங்கள் எனக்கு சொல்லித்தரவில்லை

இப்படி, “போடத்தான்கல்யாணமா?

அப்போ, கல்யாணம், கேவலம், உடம்புக்காகத்தானா?

அதற்கு மட்டும்தான் என்றால், அதுவும் எனக்கு முழுமையாக கிடைக்கவில்லையே, இதை உங்களிடம் சொல்வது வெட்கக்கேடுதான்! ஆனால், என்ன செய்ய?

உங்கள் மிஷன் ஃபெயிலியர் என்பதை உங்களிடம் சொல்லாமல், யாரிடம் சொல்ல?

இருங்கள்! ஒரு ஃப்ளோவாக, ஒவ்வொரு சம்பவமாக வருகிறேன்!

திரும்பத் திரும்ப கேட்டபிறகு, காலேஜில் ரமேஷ் என்னை காதலிப்பதாய் சொன்னதையும், நான் அதை மறுதலித்ததையும் சொல்லித் தொலைத்துவிட்டேன்!

ரமேஷ் என்னை காதலித்ததை உடனே நம்பிய அவன், நான் அதை மறுத்ததை மட்டும் கடைசி வரை நம்பவில்லை!

மறுநாளிலிருந்தே, அவன் டார்ச்சர் வேறு வகையில் ஆரம்பித்தது!

ரமேஷ் இங்கே தொட்டிருக்கிறானா, இதைச் செய்திருக்கிறானா என்று அவன் செய்ததையெல்லாம், உங்களால் கேட்கமுடியும் என்றால், நான் சொல்லத் தயார்!

எப்படியும் நாளை கமிஷனரிடம் கொடுக்கப்போகும் புகார் மனுவில் அது இருக்கும்!

பேப்பரிலோ, டிவியிலோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!

சாராய நாற்றம் சகிக்கவில்லை என்று எத்தனை தடவை சொல்லியும் அவன் கேட்கவில்லை!

அதற்கு என் பாணியில்தானே நான் பதில் சொல்லமுடியும்?

அடுத்த ஒரு வாரம் நான் பல் தேய்க்கவில்லை! என் வாய் நாற்றம் எனக்கே சகிக்கவில்லை!

சாராய நாற்றத்தை மீறி அது அவனுக்கு குமட்டியதற்கு அன்றிரவு இடுப்பிலேயே உதைத்தான்! ஏனோ எனக்கு சிரிப்புதான் வந்தது!

அப்போது மட்டுமல்ல, அவன் எதையோ சாதித்துவிட்டதாய் என் மீதிருந்து புரண்டு கீழே படுக்கும்போதெல்லாம்!

என்னடி சிரிப்பு என்று அறைந்தபோது என்னால் அடக்க முடியவில்லை! அவ்வளவுதானாடா? என்று சத்தமாக சிரித்தபோது எனக்கு புரையேறிக்கொண்டது! அவன் முகமும் சுருங்கி, தொங்கிப்போனதைப் பார்க்க அத்தனை ஆனந்தமாக இருந்தது!

உண்மையைச் சொல்லப்போனால், மீட்டப்பட்ட என் உடம்பு கேட்ட தீனியில் பாதிகூட அவனால் தரமுடியவில்லை!

சாராயம் அவன் பாதி ஆண்மையை தின்றிருந்தது!

இந்த அரைகுறையையா எனக்கு கோடிகணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கினீர்கள்?

இதைத்தான் சொன்னேன்- உங்கள் மிஷன் ஃபெயிலியர் என்று!

போதாக்குறைக்கு கொல்லையில் வேலைக்காரி மாரைப் பிடித்துப் பார்த்துக்கொண்டிருந்ததைவேறு பார்த்துத் தொலைத்துவிட்டேன்!

கேட்டால், நான் ஆம்பிளை, அப்படித்தான் செய்வேன்!

நீதான் முழு ஆம்பளையே இல்லையேடா என்று கேட்டபோதுதான், வேலைக்காரி முன்னால் அவன் என்னை அடிக்க வந்ததும், முதன்முறையாக, அவன் கையை மறித்து அவனை நான் அடித்து வெளுத்ததும்!

பயந்துபோய் ஓடிப்போன வேலைக்காரி கண்டிப்பாக ஊரெல்லாம் சொல்லியிருப்பாள்!

அன்றைக்கு ராத்திரிதான், இனி என்னைத் தொட்டே, சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுவேன் என்று நான் சொன்னதும்!

மறுநாளே கூட்டப்பட்ட பஞ்சாயத்தில், நீங்களும், அவனை பெற்றதுகளும் அவனுக்கே பரிந்து பேசினீர்கள்!

ஆம்பள, கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பான், நீதான்  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்! நாலு சுவற்றுக்குள் நடப்பது வெளியே தெரிய வந்தால், குடும்ப மானம் கெட்டுப்போகும் என்று நீங்கள்தான் சொன்னீர்கள் அப்பா!

வேலைக்காரி விஷயத்தை நான் சொன்னபோது, நான் ரமேஷை நினைத்துக்கொண்டு அவனுக்கு ஒத்துழைக்க மறுப்பதாய் அபாண்டம் பேசினான்!

அப்படி அடுத்தவனோடு படுத்து வந்தவளை கட்டிக்கொண்டதற்கு இழப்பீடாக இன்னொரு ஐம்பது ஏக்கர் அவன் பெயரில் எழுதிவைக்க வேண்டும், நகை இருக்கும் லாக்கரை அவன் பேரில் மாற்றித் தரவேண்டும், இதெல்லாம் அவன் அப்பன் வைத்த நிபந்தனை!

அப்படி நான் ரமேஷ்கூட படுத்திருந்தால், இந்த ஐம்பது ஏக்கர் என்னோட கற்பை திரும்ப கொண்டுவரும் அப்படின்னா, இன்னொரு ஐம்பது ஏக்கர் எழுதி வெச்சுருங்க, இவன் முழுசா தராத அந்த சுகம் எப்படி இருக்கும்ன்னு அவன் வேலைக்காரி கிட்ட தேடியதை நான் தோட்டக்காரர்கிட்ட தேடி தெரிஞ்சுக்கறேன்னு சொன்னது தப்பா? இல்லை, அதற்கு அவங்க அப்பன் உங்க முன்னாடியே என்னை அடிக்கப் பாய்ந்தது தப்பா?

அன்னைக்கு நீங்க ஊருக்குப் போனதும், அவன் அப்பா, அம்மா, அவன் எல்லோரும் சேர்ந்துகொண்டு என்னை துணியை உருவிக்கொண்டு அறையில் அடைத்துவைத்து இரண்டு நாள் அடி வெளுத்ததும், சந்தடி சாக்கில் அவன் அப்பன் என்னை கண்ட இடத்தில் தடவியதும், தப்பித்து தெருவுக்கு ஓடிவந்து யாரோ ஒரு புண்ணியவான் ஃபோனைப் பிடுங்கி உங்களுக்கு ஃபோன் செய்ததும், அதற்கு நீங்கள் சொன்ன பதிலும்தான் என்னை அடியோடு மாற்றியது!

பொண்ணா லட்சணமா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இரு, இல்லைன்னா எதையாவது குடித்து செத்துப்போ! இப்படி பரம்பரை மானத்தை வாங்காதே!”

அப்பா, என் உயிரைவிட உங்கள் கேடுகெட்ட பரம்பரை மானம் பெரிதாகப் போனதா?

இந்த கல்யாணத்திலோ, அதன் பிறகு நடந்த எந்தக் கேவலத்திலாவது என் தவறு என்ன இருக்கிறது? அதற்கு நான் ஏன் சாகணும்?

நியாயமாகப் பார்த்தால் காசு, பணம், பரம்பரை என்று இந்தக் குப்பையில் போய் பெற்ற மகளை தள்ளிய நீங்கள்தான் அப்பா மருந்து குடிக்கணும்? செய்தது தவறுன்னு தெரிஞ்சும் அதை நான் சகித்துக்கொள்ளணும், முடியாவிட்டால் சாகணும் என்று என்மீது திணிப்பதைவிட, என்னை இங்கிருந்து தப்பவைத்து அழைத்துப் போவதை எது தடுக்கிறது? வாழாவெட்டியாய், (இது என்ன இழவு வார்த்தை?, இப்போதுதான் நான் வாழாத வெட்டி!) நான் இருப்பது உங்கள் பெருமைக்குக் கேடு, ராமசாமி…. தன் மகளை சரியாக வளர்க்கவில்லை, அது நம் சாதி, குலப் பெருமைக்கு கேடு, அவள் உயிரைக் கொடுத்தும் அதை காக்கவேண்டும் என்று நினைக்கும் இவர்தான் உண்மையில் என் அப்பனா அம்மா? இப்படித்தான் நீங்கள் குலப்பெருமையை காத்து வருகிறீர்களா? என் புருஷனைப்போல கேடு கெட்டவனா உன் புருஷனும்?

இதற்கு எதற்கு படிப்பையும் தன்மானத்தையும் சொல்லிக்கொடுத்து என்னை வளர்த்தீர்கள்? பேசாமல், குலப்பெருமை, குனிந்த தலை நிமிராதே, புருஷன் அடித்தால் வாங்கிக்கொண்டு, காலை அகட்டிப் படு! இப்படி சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கலாமே?

அப்பா, உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? பள்ளி இறுதியாண்டு பட்டிமன்றத்தில், நெறி தவறிய கோவலனுக்காக, அந்தணர், அறவோர், பத்தினிப்பெண்டிர், குழவிகள் தவிர அனைவரும் இரையாகுக என்று மதுரைக்கு தீயிட்ட கண்ணகி குற்றவாளி என்று வாதாடி கோப்பை வாங்கிவந்தபோது, மீசையை முறுக்கி என் மகள் சிங்கக்குட்டி என்று ஊரெல்லாம் பெருமை பேசிய ராமசாமி வெறும் நடிகன்தானா அப்பா?

அந்த இரவுக்குப் பிறகு, இனி இவன் சங்காத்தமே வேண்டாம் என்று அந்த அர்த்தமில்லா தாலியை கழற்றி அவன் முகத்தில் எறியப் போன நாளிலா, அந்த நபும்சகன் குழந்தை என் வயிற்றில் வளர்வது தெரியவேண்டும்?

உடனே, குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகும், எல்லாமே மறந்துபோகும்ன்னு வெட்கமே இல்லாமல் எல்லோரும் கட்சி மாறினீர்களே

எது சரியாகும், எது மறந்துபோகும்?

அடியா, வலியா? நாளைக்கு இந்தக் குழந்தைக்கு யார் அப்பா? இந்த நாயா, ரமேஷா, இல்லை, எனக்கு சட்டப்பூர்வமாக அடைக்கலம் கொடுத்து என்னை வழி நடத்தும் காட்டுப்புத்தூர் பெரியவரா என்ற கேள்வி வராதா? இதெல்லாம் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள்தானே அப்பா?

நாளைக்கு, பிறக்கப்போவதும் ஆணாக இருந்து, இவன் மகன் இவன்போலவே தன் மகளை நடத்தமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த கேவலத்துக்கு நானுமா துணை போவது?

அன்றே, அத்தனைபேர் முன்னாலும், நான் தீர்மானமாகச் சொன்னதுதான் என் இறுதி முடிவு!

அந்த கேடுகெட்டவன் குழந்தையை நான் சுமக்கவோ, அது இந்த பூமிக்கு வர நான் வாயிலாக இருக்கவோ எனக்கு சம்மதமில்லை!

எனக்கு செய்த கொடுவினைகளுக்கு அவன் சட்டபூர்வமான தண்டனை அடைந்தே தீரவேண்டும்! அதற்கு காவல்துறையை, நீதித்துறையை நான் நாடப்போவது உறுதி!

கடைசி வழியாக நீங்கள் அத்தனைபேரும் அரை மனதாக ஒப்புக்கொண்ட ம்யூச்சுவல் டைவர்ஸ்!

அதற்கு நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை! இந்த விவாகரத்து அவனுக்கு இன்னொரு பெண்ணை சித்திரவதை செய்ய சட்டப்பூர்வமான அனுமதி வழங்குவது எனக்கு உவப்பில்லை!

சாகும்வரை, அவன் வேறொரு பெண்ணை மணந்துகொள்ள விவாகரத்து இல்லாமல் முடியாது! அவன் இப்படியே சுற்றட்டும்!

எனக்கு ஒன்றும் கவலை இல்லை அப்பா.

விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள நீங்கள் கொடுத்த, என் பாட்டன் சம்பாதித்த, ஐம்பது ஏக்கர் காவேரிப்பாசன பூமி இருக்கிறது!

தங்கிக்கொள்ள இங்கேயே பெரியவர் வீடு இருக்கிறது!

போகவர மெர்சிடெஸ் கார் இருக்கிறது!

உங்கள் முக்கிய கவலையான, உடம்பு அரித்தால் என்னைப் புரிந்துகொண்டு இணைந்து வாழ ஒரு நல்லவனை தேர்ந்தெடுக்கும் அறிவும் துணிவும் நேர்மையும் இருக்கிறது!

செத்தால்கூட வரவேண்டாம் என்று நீங்கள் சொன்ன நிலைப்பாடு தவறென்று புரிந்தால் வரப்போக இருங்கள்! என்றாவது நான் உங்களை மன்னிக்கக்கூடும்.

இல்லாவிட்டால், எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள இங்கிருக்கும் ஆசிரமத்துக் குழந்தைகள் இருக்கவே இருக்கின்றார்கள்!

பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே, இப்போதே உமா டீச்சர் உமா டீச்சர் என்று உருக நூறு குழந்தைகள்!

நாளை டிவியில் பார்ப்போம்

நன்றி!

உங்கள் மகள் 

உமா மகேஸ்வரி