புதன், 29 அக்டோபர், 2014

பேர் சொல்ல முடியாத பிள்ளை!!!

என் சோகக்கதையை ஒரு ஐந்து நிமிடம் படிச்சுட்டுப்போங்க!

ஆசைப்பட்டு, தவமிருந்து ஒன்றை வாங்குகிறீர்கள்!
அதை ஆயுளுக்கும் உங்களால் பயன்படுத்தமுடியாது!!

எப்படி இருக்கும் உங்களுக்கு!!!

இப்படி ஒரு நிலை!

நான் பெற்ற செல்வங்களால்!

ஐந்துவருடம் கஷ்டப்பட்டு, இல்லாத மூளையை கசக்கி யோசிச்சு ஒரு பேர் select பண்ணி வைச்சேனுங்க என் மகளுக்கு!

ஒரு ரெண்டு வருஷம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது!

வெச்சபேர நானே மறக்கற அளவுக்கு, எப்ப பார்த்தாலும்,

"தங்கம்மா, செல்லம், மயிலு" -இப்படி கொஞ்சிக்கொஞ்சி அது எப்படியோ  பதிஞ்சே போச்சு குழந்தை மனசுல!

மூணு வயதிருக்கும் பொண்ணுக்கு!

ஒருநாள் நான் ஒரிஜனலா, ஆசையா வச்ச பேரைச்சொல்லி கூப்பிட்டேன்!

திரும்பி முறைச்சுப்பாத்த பொண்ணு கண்ணிலிருந்து மாலை மாலையா கண்ணீர்!
ஒரே ஓட்டம் கிச்சனுக்குள்ள!!

நமக்கு மொதல்ல பொண்டாட்டி மேலதானே சந்தேகமே வரும்?

"ஏண்டி, புள்ளய எதாவது திட்டுனயான்னு" எகிற,

பலவருஷமா பதிலே தெரியாம கேக்கற அதே கேள்விய என்னை கேக்கறா, - "உங்களுக்கு எதாச்சும் அறிவு இருக்கா?"

கல்யாணத்துக்கப்புறம் எந்த ஆம்பளக்கு இருக்குதுன்னு (மனசுக்குள்ளதான்) சொல்லிக்கிட்டு,
"ஏன்டா அழறே"ன்னு பொண்ண கேட்டா, "நீ ஏன் என்ன பேர் சொல்லிக்கூப்பிட்டே"ன்னு ஒரே அழுகை!

தோப்புக்கரணம், குட்டிகரணமெல்லாம் போட்டு ஒருவழியா சமாதானம் பண்ணி, இனி உன்ன பேர்சொல்லி கூப்பிட மாட்டேன்னு சத்தியம் பண்ணி சிரிக்கவைக்கறதுக்குள்ள, பொறந்தநாள் கண்டுடுச்சு!

பொண்ணுக்கு இப்போ பத்தொன்பது வயசாய்ப்போச்சு!

நான் ஆசையா வெச்சபேரச் சொல்லி, நண்டு சிண்டிலிருந்து நாளைக்கு சாகப்போறது வரைக்கும் கூப்பிடுதுக!!

இன்னும் மொத்தமா ஒரு அஞ்சாறு தடவை நான் அந்தப்பேர சொல்லியிருந்தா அதிகம்!!

எங்க போனாலும், டேய், தங்கம்மா, மயிலு, ராஜாத்தி,.. இப்படித்தான்!!

இதோட கதை முடியலங்க!

நமக்குத்தான் பட்டாலும் புத்தி வராதே -

அடுத்ததா பொறந்த பையனையாவது பொறந்ததிலிருந்தே பேரச்சொல்லி கூப்பிட்டருக்கலாம்ல?

வீட்டம்மா அதுலல்லாம் படு விபரம்!

நமக்குத்தான் கொழந்தைய கண்டுட்டா கள்ளு குடிச்ச நரி மாதிரி  ஆயிடுவோமே!

அவனையும் ராஜா, செல்லம், மயிலுக்குட்டின்னு ஆரம்பிச்சு, பத்தாத குறைக்கு,

அக்காக்காரி வேற,

"என்னையெல்லாம் அப்பா பேர் சொல்லி கூப்பிடமாட்டாரே"!!!!

இது போதாதா இளசுக்கு?

இப்ப என் பொண்டாட்டி ரெண்டுபேரையும் பேரச்சொல்லி - " அடியே! நான் வச்ச பேருடி"ன்னு மனசுக்குள்ள கத்த - கூப்பிடும்போது,

டேய் மயிலுக்குட்டி ன்னா பொண்ணும்'

அடி குட்டி மயிலு ன்னா பையனும் ஏன்னு கேக்கற நெலமை!!

யாராச்சும் "இன்னார் உங்க கொழந்தையா?" ன்னு கேட்டாகூட,

அந்த பேரு நான் வெச்சதுதான்!

ஆனா நான் அப்படி கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிடறேன்!

என்ன கொடுமை சார் இது!!!!!!!!!!திங்கள், 27 அக்டோபர், 2014

A Small Explanation

Kindly excuse me. 
I always prefer writing in my language - Tamil. 
But unfortunately the Tamil typing in the system failed to respond today.

I have no literary background and  I am not a writer by any scale.

My connection with the literary word is very minimal that 
I had  a little association with Kanaiyaazhi when it had it's office at Bells Road and that time I was a student doing C.A.

I used to visit them regularly and had chances to participate in lots of discussions with Ashohamitran (Once) and Suthangan, Maalan, Bala and many other and I preferred to stay as an observer only watching the veterans discuss.

God gave the opportunity to visit a couple of occasions to Suthangan's house at Journalist colony and meet Baala there too and I never dream that I can write a story or whatever. 

My small contribution to literature was a short poem in the Saavi special issue had Sujatha as its editor for that particular issue. 

That too was posted by my friends without my knowledge.

the other connection was with Koothupattarai Mr. Muthuswamy and I was a very small part in the discussion of the play Pirahoru Indrajith.

Then for almost a couple of decades, i was chasing my office animals. 

I  had time only to browse through some nice books. Luckily for me I am a regular reader.  

O.K. Why all these explanations now?

The following was the convo this morning between me and Mr. Nadodi. about my so called story attempt.

One of my Twitter friends called me after reading the entire convo felt that my reply was not pointed and vague

@indiavaasan வணக்கம் தல...உங்க சிறுகதை பத்தி மூணு விஷயம் பேசலாம் 

முதல்ல யுத்தி இதுல சுஜாதா பாரம்பரிய யுத்தி வேற இப்போ வர ப்ளாக்கர் இத விட முதலில் வாசிப்பவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து பின் சொல்ல வந்ததை சொல்லுகிறார். ஆக இன்னும் பழய ஒட்டை ஒடிசலான அந்த டெக்னிக்கை மாற்றி புதிய வழிக்கு வரவும்.

2. எழுத்து நடை முத மூணு பத்தி படிச்ச வுடனே தெரிஞ்சு போச்சு உங்க ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரனு. ஏன் அதே நடையே பாலோவுறீங்க? இல்ல அவரு இல்லனா உங்க நடை அவரே ஒட்டி இருக்கு அத மாத்தனும்

3. கருத்து பாக்க நல்லா இருந்தாலும் பெண்மையே அழகா இழிவுபடுத்தறீங்க. "ஒரு மாத்து கம்மி நிறத்தில" ஏன் கருப்பான பொண்ணு குறையா? எந்த விதத்தில. அப்புறம் பேச்சு.. வாழ்வாளிக்க முடியாதே மாதிரி அவங்க பெற்றோர் கவலை எங்க இருக்கீங்க பாஸ்? கதாநாயன் தியாகியாகுறார். ஏன் நாளைக்கு நான் வாழ்வளிச்சிட்டேன் பெருமை பீத்திக்க. இதல்லாம் கருத்தா பேசுனா பின்னாடி இருந்து தாக்குற குள்ளநரிதனம். என்னை கேட்டா ரவி மனகுறை உள்ளவன் தான் தோணுச்சி. எங்கயோ கெட்டு போச்சு சென்ட் போட்டாலும் நாறும் இந்த முடிவு. 
இது பாரதி போட்டோ இல்லனா என் கவனத்தை ஈர்த்திருக்காது. மிக சுகந்திரமான எண்ணங்களே ஒடுக்காதே நல்ல படைப்பா தருவிங்க எதிர்பாக்குறேன்.
ம் முடிச்சிட்டேன். அப்புறம் உங்க வாக்கியமைப்பு நல்லாயிருக்கு. அத மறந்திட்டேன் சொல்ல.

நல்லது. இன்றைய ப்ளாக்கர் இது போல் கதையமைப்பு செய்வதில்லை. பின் ஜெயகாந்தனின் அக்னி பிரவேசம் படித்துண்டா?

My reply:

இன்னும் முற்றுப்பெறவில்லை நண்பரே உங்கள் விமர்சனம்! இறுதிப்பகுதிக்காக காத்திருக்கிறேன்! படித்தபின் பதிலளிக்கிறேன்!

@kkarthic நன்றி நண்பரே! இது என் மிக எளிய முயற்சி! தாங்கள் குறிப்பிட்ட அனைத்து குறைகளையும் படிப்படியாக குறைத்து செழுமைப்படுத்த முயல்கிறேன்

சில, சிறிய மறுப்புகள்! பாலகுமாரன் என் பழைய ஆதர்சம்! இரும்புக்குதிரைகள் காலத்துக்குப்பின் அவர் என்னை ஏனோ ஈர்க்கவில்லை! அவர் பாணி என்பதை மாற்ற முயல்கிறேன்! 

என் சில குறும்படைப்பு முயற்சிகளுக்கு இடையே என் இரண்டாவது குறுங்கதை முயற்சி இது! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் அவற்றையும் வாசித்து விமர்சித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்! 

தங்கள் விமர்சனங்கள் என்னை நெறிப்படுத்தும் என்று நம்புகிறேன்! 

தங்கள் கவனத்தை ஈர்க்க உதவிய பாரதிக்கு என் மரியாதைமிக்க நன்றி! 

தங்கள் விமர்சனத்துக்கு என் முதல் கதை முயற்சி கீழே

@kkarthic http://indiavaasans.blogspot.in/2014/10/blog-post_72.html?m=1  இதையும் என் குறும் கட்டுரை முயற்சிகளையும் படித்து விமர்சித்தால் மகிழ்வேன்! மிக்க நன்றிகளுடன்,

So, in this I feel that I ve responded to the point only. I even felt happy that someone had time to analyse my writing also seriously and commented on that. 
 But as my friend suggested, I feel that I ve never tend to insult ladies and the comment on the colour of the girl was also a mild comparison that too in my words,  ஏதாவது குறை என்று சொன்னால் only. 
Then, I never say that Ravi is sacrificing his life and 

"வாழ்வாளிக்க முடியாதே மாதிரி அவங்க பெற்றோர் கவலை எங்க இருக்கீங்க பாஸ்கதாநாயன் தியாகியாகுறார். ஏன் நாளைக்கு நான் வாழ்வளிச்சிட்டேன் பெருமை பீத்திக்க. இதல்லாம் கருத்தா பேசுனா பின்னாடி இருந்து தாக்குற குள்ளநரிதனம். என்னை கேட்டா ரவி மனகுறை உள்ளவன் தான் தோணுச்சி. எங்கயோ கெட்டு போச்சு சென்ட் போட்டாலும் நாறும் இந்த முடிவு."

Strong words. 
This portion is only a cynical review and even at a humble note this is not an acceptable comment. He naturally has to worry about the parents because he owes his life to both the girl's parents and I feel it right he analyses their problems.

And to top it all, Keeping Bharathi in my DP is not to attract the superior's attention but to show my respect to that great soul. 
I feel I have all the rights to do so.

I can proudly say that  my Tamil  is far more superior with less number of spelling mistakes.

I might ve been blunt in this reply too, because my English is not so polished and I m not good in handling that language also.

Sorry I consumed lot of time and I pretty well know that the stupid story is not worth to be discussed like this repeatedly.

Hope I can write better in future if time and God permit. But never intended to compete with the writers here in the web world.

I know my limits


Thanks to everyone lent the time to read this uncalled for article. - INDIAVAASAN.


For all who wished me good morning while i was driving,

காதல் தூதர்கள் ஏனோ
அழகாயிருப்பதில்லை!
பூக்களுக்கே
வண்டுகள்தானே!
கூடி முயங்கும்
சுகமறியாமலே
பெற்றுத்தள்ளுகின்றன
மலர்கள்!!
பல்லியின் வாலாய்
துண்டித்துப்போட்டாலும்
மீண்டும் வளர்ந்து தொலைகிறது
உன் நினைவு!
எதைத்தின்பது
எதை வளர்ப்பது?
பகுக்கத் தெரிகிறது
மண்ணுக்கு!
ஆசீர்வதித்துப் பெறும் காசும்
யாசகம்தான் என்பதறியும்வரை
கம்பீரம் குலைவதில்லை
கோவில் யானையும்-
கடவுளும்!
மழை, பெருமழை, மழையில்லா வெறுமை, மீண்டும் மழையென கடக்கநேரும் நெடும்பயணம் அமையப்பெற்ற காலை அழகு!


வெள்ளி, 24 அக்டோபர், 2014

சொல்லிவிடு ரவி!

"What do you think of yourself Ravi? Decide today or let me be off this from tomorrow! உன்ன மாதிரி குழப்பவாதிக்கு எத்தனை நாள் டைம் கொடுத்தாலும் முடிவெடுக்கத் தெரியாது ரவி!"
பொட்டிலறைந்தமாதிரி நிதானமாய் ஆனால் தீர்க்கமாய்ச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள் சௌமி!

அம்மா இன்னுமே எதுவும் பேசமுடியாது வாயடைத்து நிற்பதைப்பார்க்க ரவிக்கு பாவமாக இருந்தது!

இந்த சௌமி போல் ஒரு பெண்ணை யாராலுமே எதிர்கொள்ள முடியாது!
தெளிவும் பட்டவர்த்தனமாயும் மட்டைக்கு இரண்டு கீற்றாய் மனதை பிளந்துகாட்ட சௌமியால்தான் முடியும்!

காலையில் வந்தவள் அம்மாவிடமும் அவனிடமும் நன்றாகத்தான் பேசக்கொண்டிருந்தாள்!

வந்தவுடன் நேரே சமையலறை!
ஞாயிறு காலை என்பதால் சற்றே நிதானமாய் காய்கறி ஆய்ந்துகொண்டிருந்த அம்மாவை "எப்படியிருக்கீங்க அத்தை?" என்ற கேள்வியோடு, பதிலே எதிர்பார்க்காமல், ஹாட்பேக்கில் இருந்த இட்லியில் இரண்டை எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு அம்மா எதிரே உட்கார்ந்தாள்!

சாப்பிட்டு முடிப்பதற்குள் ஒருவார கதை மொத்தமும் படபடவென்று பேசியபடி சமையலறையை ஒரு நோட்டம்!

மதியம் நான் சமைக்கிறேன் அத்தை என்றவள், எந்த பதிலையோ, அனுமதியையோ எதிர்பார்க்காமல், தன்னிச்சையாய் காய்கறிகளை தன்பக்கம் நகர்த்திக்கொண்டாள்!

அனுமதி எதிர்பார்க்க அவள் ஒன்றும் அந்நியம் கிடையாது!

ரவி பத்துவயதாயிருக்கும்போது, தூங்குவதுபோல் செத்துப்போன அப்பாவின் தங்கை மகள்!

வீட்டுக்கு ஒரே பெண்! ஏக செல்லம்! மனதில் நினைப்பதை பட்டென்று வார்த்தையில் சொல்லும் சுபாவம்!
ஆனால் வாயாடியோ, திமிர் பிடித்தவளோ அல்ல என்றாலும், ஏன் இந்தப்பெண் இப்படி சுருக் என்று பேசுகிறது என்று நினைக்குமளவு வார்த்தைகள்!

அப்பா இல்லை என்ற நினைவே வராமல் பார்த்துக்கொண்டதில் அத்தைக்கும் மாமாவுக்கும் பெரும் பங்கு! அம்மா முகம் பார்த்தே தேவைகளை ஊகித்துக்கொள்ளும் குணம்!

இவர்கள் இப்படியென்றால், மாலை வந்த நிரஞ்சனா, வேறுவகை!

அம்மாவின் அண்ணன் மகள்! அடக்கம், எளிமை, அதிரப்பேசாத குணம்!
தனக்கு என்ன வேண்டும் என்பதையே, மற்றவர் மனம் கோண சொல்லத்தெரியாத பதவிசு!

விதவைத் தங்கையை தலைமேல் தாங்கும் மாமா, அவருக்கும் மேலான அன்பே உருவான மாமி!
ஒருபையன், பெண் என்ற அளவான குடும்பம்! பையன் இப்போதுதான் பத்தாவது படிக்கிறான்!

இப்போது ரவிக்குமுன் நிற்கும் கேள்வி_
நிரஞ்சுவா, சௌமியா என்பதுதான்!

ரவி, ஒற்றைப்பெண்ணாய் அம்மாவால் ஊட்டிவளர்க்கப்பட்ட பையன்!
தகப்பன் இல்லாத குறை தெரியாமல் வளர்க்கப்பட்டாலும், அம்மாவின் வலி அறிந்த சமர்த்துப்பிள்ளை!!

இஞ்சினீயரிங் முடித்து, வந்த வெளிநாட்டு வேலைகளையெல்லாம் அம்மாவுக்காக விட்ட பிள்ளை! உள்ளூரிலேயே நல்ல உத்தியோகம்!
தேடினாலும் குறை கண்டுபிடிக்கமுடியாத குணம்!
அம்மாவின் கண்டிப்பான கெடு, இந்த ஐப்பசிக்குள் இருவரில் ஒருத்தியை தேரந்தெடுத்தாகவேண்டிய கட்டாயம்!

ரவிக்கு குழப்பம் தீர்ந்தபாடில்லை!
இருபது வருடங்களுக்குமேல் ஒன்றாகப் பழகி, இருவரின் நிறை, குறை இரண்டும் தெரிந்தவன்!
சௌமி, M.Com முடித்து, வங்கியில் ஆஃபீசர்!

நிரஞ்சனா, B.E., system analyst!

இருவருமே ரவிக்கு ஏற்ற உயரம், அழகு, ஏதாவது குறை என்று சொன்னால் சௌமி ஒரே ஒரு மாற்று  குறைவு நிறத்தில்!

இரண்டு பெற்றோருக்கும், ரவி மீது கொள்ளைப்பிரியம்!
அவனை மருமகனாக்கிக்கொள்ள இருவருக்குமே ஆவல்!

இவன் பதில் தெரிந்தபின்பே, ஜாதகக்கட்டை எடுப்பது என்ற தீர்மானம்!

நீண்ட யோசனைக்குப்பின் அம்மா இரண்டு பெண்களிடமுமே தனித்தனியாக கேட்டுவிட்டாள்!

இருவருக்கும் ஓகே!

இப்போது முடிவு ரவி கையில்!

மாலை வந்த நிரஞ்சு, அம்மாவிடம், ரவி என்ன முடிவெடுத்தாலும் தனக்கு சம்மதம் என்றும் இன்னும் சிலநாட்கள் தாமதிப்பதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை என்றும், ரவியை கட்டாயப்படுத்தவேண்டாம் என்றும் சொல்லிவிட்டுப்போனாள்!

அவள் எப்போதும் இப்படித்தான்! தீபத்தின் சுடர்போல் ஒரு பாந்தமான அழகு!
மொத்தத்தில் நிரஞ்சுவை கட்டிக்கொள்பவன் அதிர்ஷ்டசாலி!

சௌமியை புரிந்துகொள்ளாமல் புதிதாய் ஒருவன் கட்டிக்கொண்டால் சிரமம்தான்!
அவள் straight forward approach மற்றும் பளிச் reactions நிச்சயம் அவளை அனுசரித்துப்போக சிரமப்படவைக்கும்!

அத்தையும் மாமாவும்கூட பாவம் சற்றே பயந்த சுபாவிகள்!
அவர்களால் எப்படி சௌமியை கரையேற்ற முடியும் என்று பயமாகத்தான் இருக்கிறது!

நிரஞ்சு விஷயத்தில் குளறுபடியே இல்லை!
எங்கும் எல்லோருடனும் அனுசரித்துப்போகும் குணம்! அதிர்ந்துபேசத் தெரியாத அமைதி!
மாமாவும்கூட நன்கு விபரம் தெரிந்தவர்!
நிச்சயம் மருமகனுக்கு எல்லாசமயமும் தோள் கொடுக்கும் திறமுள்ளவர்!
அம்மாவுக்கும் கூடப்பிறந்தவன் மகள் என்ற ஒரு கூடுதல் கனிவு!!

மொத்தத்தில் நிரஞ்சுவோடு வாழ்க்கை எந்த காம்பரமைசும் இல்லாமல் அமைதியாக ஓடும்!

சௌமி, கொஞ்சம் அனுசரணையாக அரவனைத்துச் செல்லவேண்டிய முரட்டுக்குழந்தை!
ரவிக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!

நன்றிக்கடன் என்றே பார்த்தாலும் இரண்டுபுறமும் சமமாகவே! எனில் எதற்கு கடினமான ஒன்றை சுமக்கவேண்டும்? அத்தையை நினைத்து கொஞ்சம் பாவமாக இருந்தாலும், தன் வாழ்க்கை முக்கியம் என்றே பட்டது!

"அம்மா, நாளைக்கு மாலை நிரஞ்சுவை என் ஆஃபீஸுக்கு வரச்சொல்! நான் முதலில் என் முடிவை அவளிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்றபோது அம்மா முகத்தின் பிரகாசத்தை காணத்தவறவில்லை!

மறுநாள், வெட்கத்தோடு தன் எதிரில் வந்தமர்ந்த நிரஞ்சனாவிடம் தன் மனதில் நினைத்த எல்லாவற்றையும் தயக்கமில்லாமல் சொல்ல ஆரம்பித்தான் ரவி!

ஆகவே, நிரஞ்சு, இப்போது என் முடிவு என்ன என்பது உனக்குப் புரிந்திருக்கும்!


"நான் சௌமியை கல்யாணம் செய்துகொள்வதுதான் நியாயம் என்பதை உனக்கு முதலில் கூறவே உன்னை வரச்சொன்னேன்!"


புதன், 8 அக்டோபர், 2014

கடவுளின் கோரமுகம் காணவா வந்தேன் முகநூலுக்கு???

அவ்வளவாய் ஈடுபாடோ பரிச்சயமோ இல்லாமல், மனைவியும் மகளும் என்பெயரில் நடத்திவந்த முகநூல் பக்கத்திற்கு எப்போதாவது நான் வருவதுண்டு!

அப்படி வரும்போதெல்லாம் தவறாமல் உன் பக்கத்தை பார்க்காமல் நான் போனதில்லை!

கொடைக்கானல் பாலத்தில் கோபித்து அமர்ந்த குழந்தை, வெட்கப்புன்முறுவலோடு ஒரு பிறந்தநாளில் பார்த்ததுவரை நேர்கோட்டில் நகர்ந்தது வாழ்க்கை!

சம்பவ சூறாவளி சுழற்றி அடித்ததில் என் வாழ்க்கை, காற்றின் பிடியில் சருகாய் பறந்துகொண்டிருந்த இடைக்காலத்தில் அந்த சிறுமி - டாக்டர். அஸ்வினியாய் பரிணமித்ததை எனக்கு சொன்னது இந்த முகப்புத்தகம்தான்!

என் இரண்டு குழந்தைகளையும் இந்த உலகுக்கு இழுத்துவந்து என் கையில் கொடுத்த என் உயிரில் உறையும் என் அன்புத்தங்கை, உன் தாய், நேருக்கு நேர் பார்க்க நேர்ந்த தருணத்திலும் அறியாதவர்போல் விலகிப்போன காலத்தின் காயத்தை சகிக்கமுடியாது தவித்திருக்கும் காலத்தில்,
உன் திருமணநாள் சேதி சொன்னதும் இந்த முகநூல்தானே!
எங்கிருந்தாலும் எங்கள் குழந்தை நலமாயிருக்கிறது என்றிருந்த நாளில் "என் அக்கா நலம் பெற அனைவரும் பிரார்த்திப்போம்" என்ற உன் குட்டித்தம்பியின் முகநூல் பதிவை,
ஏதோ காய்ச்சல் குறித்த குழந்தைப்பதிவென புன்னகைத்துக் கடந்துபோனேன்!

இரண்டுநாள் கழித்து ஒரு அதிகாலை வந்த தொலைபேசி தகவல் என் உயிரை உருவிப்போட்டது!
அந்த அதிர்ச்சி விலகாமல் உடனே உடனே என்று பதறிப் பறந்துவந்து நான் பெங்களூரு சேர்ந்தபோது எல்லாமே முடிந்து போயிருந்தது!

கடவுளோ, காலமோ என்னை தண்டிக்க நினைத்திருந்தால் அப்படி ஓர் கொடும்கணத்தை எனக்கு தந்திருக்கவேண்டாம்!!

Dr. Ashwini என்ற என் விசாரிப்புகள் அந்த வார்டுக்குள் என்னை தடையின்றி இட்டுச்சென்றபோதே என்னுள் ஏதோ முறிந்துபோனது!

என் கையில் தவழ்ந்த அந்த சின்னக்குழந்தை, தனியே, யாருமற்றுப்படுத்திருந்த கோலம், அங்கிருந்த இளம் மருத்துவர், தயங்கித்தயங்கி நான் கேட்ட "does she?" என்ற கேள்விக்கு மௌனமாய்த்தலையசைத்து நகர்ந்துபோக, குளிரத்தொடங்கியிருந்த அந்தக் கரம்பிடித்து உடைந்துபோனேன்!
யாருமற்ற அந்த தனிமையில் உன்னை நான் பார்த்த அந்த நிமிடங்கள் என் வாழ்வின் மகத்தான சாபம்!!

"தங்க மாமா" என்று என்னை அழைத்த தங்கத் தேவதையை அப்படிப்பார்க்க நேர்ந்ததில் உடைந்து கதறித் தவித்த அந்த சில நிமிடங்கள் என் ஆயுள் வரை மறக்காது!!

இது எனக்கு தெரியாமலே போயிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

எங்காவது எங்கள் தேவதை நலமாய் வாழ்வதாய் கற்பனையில் என் காலம் கரைந்தருக்குமே!

லாரிச் சக்கரத்திலா பூவைப்பறிப்பான் அந்த இரக்கமற்ற இறைவன்?

கதறித்தவித்த அந்த சில நிமிடங்களில், இனி யாரைப்பார்த்து என்ன பேசுவது?
நான் சாகும்வரை கண்ணீரே பார்க்கக்கூடாது என்று நான் விரும்பும் என் அன்புப் புகழை எதிர்கொள்ள மனமின்றி, எப்படி வந்து வண்டியை எடுத்தேன், எத்தனைமுறை நிறுத்தி அழுதேன், எப்படி ஊர் வந்து சேர்ந்தேன்?
இன்றுவரை நினைவில்லை!!

இன்று உன் நினைவு தினம்!!

கடவுளின் அருகிருந்து கட்டாயம் இதை நீ படித்துக்கொண்டிருப்பாய்!!

என் விதி முடிந்து, உன்னைத்தேடி நான் பறந்து வரும் நாளில்,

அந்தக் கொடைக்கானல் பாலத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிப்போம் நம் நாட்களை!!

அதுவரை, அந்தக் கொடிய நிமிடங்களை மறக்கும் வரத்தை அந்த கடவுளிடம் வாங்கிக்கொடு!

என்றும் உன் நினைவைச்சுமக்கும்-

உன் தங்கமாமா!!

பிள்ளைக்கனியமுதே ... பேசும் பொற்சித்திரமே...


வாழ்க்கையின் அர்த்தம்!

"இதுவரைக்கும் என் மனைவிக்கு ஆறுமுறை அபார்ஷன் ஆயிருக்குடா நொன்னைங்களா"என்று சசிகுமார் குரலில் கத்தத்தோன்றும் ஒவ்வொருமுறையும், "எல்லாம் சரியாய்த்தானே மாப்ள போயிட்டுருக்கு?" என்ற நக்கல் கேள்விகளுக்கு!

இதுவரை பரம்பரையில் பிள்ளையில்லா நிலை யாருக்கும் வந்ததில்லை!

தாத்தா பத்தைப் பெற்றவர்!
அதிலிருந்து வம்சவிருத்திக்கு ஒரு குறையும் இல்லை!
மனைவி குடும்பத்திலும் குறையற்ற மக்கட்செல்வம்!

வீடுமுழுக்க பெண்குழந்தைகளாய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவன் திருமணத்தின் ஓரம்சத்திட்டம்!

வயது, ரசனை வித்தியாச ஆரம்ப முரண்பாடுகளிலும், முதல் குழந்தை பெண்ணாய் என்பதில் மனைவியும் ஒத்துப்போனது அதிர்ஷ்டம்!

அது ஏன் பெண்குழந்தை?

கணவனற்ற பாட்டியும், திருமணத்துக்கு காத்திருந்த சித்திகளும் சீராட்டி வளர்த்த பால்யம்!

எங்கு போனாலும், குழந்தைகளுடனும், பெண்களுடனுமே தோழமை!

சொந்தங்களில், குழந்தைகளின் காதலன், பெண்களின் தோழன்!
பிறந்த குழந்தையை, பயமின்றிக் கை நீட்டி வாங்கி கொஞ்சுமளவு குழந்தைகள் மேல் அதீத அன்பு!

எனவே, திருமணத்தின் முதலும் முக்கியமானதுமான கனவே குழந்தைப்பேறு என்றானதில் வியப்பில்லை!

முதல் வருடமே முள் மேல் கழிந்தது!

தொடர்ந்த வருடங்களில், அன்பான, அக்கறையான, கேலியான விசாரிப்புகளும், விசேஷங்களிலும் குறிப்பாக வளைகாப்புகளிலும், நேரிடை, மறைமுக ரணங்களும்!

ஆயிரம் கோயில்கள், அனுதினம் பரிகாரங்கள்!

மருத்துவர் குறித்தநாளில் கட்டாய உறவுக்காய் பறந்தும், பயணித்தும் வந்த நாட்கள்!

மனைவிக்குத்  தைராய்டு குறைபாடென்று வரிசையாய் குறை பிரசவங்கள்!


நான்கு வருடங்கள் முள்ளில் நகர, சென்னையின் மிகப்பிரபல மருத்துவரிடம் வருடத்தின் முதல்நாள் காலை முதல் மாலைவரை இருவருக்கும் ஆயிரம் சோதனைகள்! 

இறுதியாய் மருத்துவர் இடியை இறக்கினார்!

" உங்கள் இருவருக்கும் இயற்கை கரு வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை! செயற்கை கருத்தரிப்பே ஒரே வழி!"


உடைந்துபோனது மனம் என்பது மிக சாதாரண வார்த்தை!

எந்த மருத்துவத்தையும் நாட மனமின்றி கழிந்தது காலம்- விரக்தியில்!

சம்பவங்களால் உருண்ட ஓராண்டுக்குப்பின் மனைவி மீண்டும் கர்ப்பம்!

இம்முறை தெய்வம் அருகிலேயே வசித்தது- அன்பான பெண் மருத்துவர் வடிவில்!

வாரம்தோறும் ஊசி! மாதம் இரு ஸ்கேன் !
எனினும் நம்பிக்கையற்றே நகர்ந்தன நாட்கள்!

முதல் முறையாய், நான்கு மாதங்களை தொட்டது கர்ப்பம்!

துளிர்க்க ஆரம்பித்தது நம்பிக்கை!

தொடர்ந்த கண்காணிப்பு, ஒன்பது மாதங்களையும் நகர்த்த,

அன்றைய காலையே மனைவியின் அலறலோடு ஆரம்பித்தது!

அருகிலேயே இருந்த அன்பான மருத்துவர் மருத்துவமனையில் அட்மிஷன்!

நேரம் மனைவியின் கதறலோடு நகர,
இவன் முகத்தில் கவலைக்கண்ணீர்!


வலி பொறுக்காத மனைவியும், பார்க்க சகிக்காத அவனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்ட, முதல் முறையாய் மருத்துவரின் கோபமுகம்!


"என்ன செய்யவேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லவேண்டாம்!" என்ற ஒற்றை வரி பதில்!

"வலி பொறுக்கப் பழகு" என்ற ஒற்றை அறிவுரை!


மதியம் கடக்க, பக்கத்திலேயே இருந்த தாதி மருத்துவரிடம் விரைய,
மதியம் இரண்டு மணிக்கு பிரசவ வார்டுக்குள் மனைவி,
வலியும் தவிப்புமாய் வாசலில் இவன்!!

பத்து யுகமாய் நீண்ட பத்து நிமிடங்கள்!

ஓங்கி ஒலித்த ஒற்றைக்கதறல்!

இவன் இதயத்துடிப்பு காதில் எதிரொலிக்க, மூடிய கதவை வெறித்துக்கொண்டு ஐந்தாண்டு தவம்!

கதவு திறந்தது!

புன்னகை முகத்துடன் வந்த அந்த மருத்துவ தெய்வத்தின் கையில், 
இவன் உயிர்!

நடுங்கும் கைகளில் வாங்கிய குழந்தையின் மேனியில் பட்டுத் தெறித்தது ஆனந்தக்கண்ணீர்!

ஐந்தாண்டுகளுக்கு முன் முடிவு செய்த முதல் பெயரை காதோடு சொன்னான்!!

"தென்றல்!"


என்னைப் பெற்ற என் மகளின் பிறந்த தினம்!

அக்டோபர் 6!
என் மனைவிக்கு யாராவது புத்தி சொல்லுங்களேன்.. ப்ளீஸ் .....!எங்களிடம் ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது- வளமான பூமி! ஒரு வயதானவரை நிர்வகிக்க விட்டிருந்தோம்! சொந்த பந்தம் பற்றி கவலையின்றி, எங்கள் தோட்டத்தை கண்ணாய் காத்த தூய்மையாளர்!
களைகள் இல்லாமல் விளைச்சலை பெருக்கிவந்தவர், வயதாகிவிட்டது என்று தானாக விலகியபின் ஏனோ என்மனைவிக்கு அவரைப் பிடிக்காமலே போய்விட்டது!
அதற்கு வேறு ஒரு காரணமும் கூட!
உள்ளூர் நாடகக் கொட்டகையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர், தன் தம்பிகளுடன், வருடம் முப்போகம் விளைச்சல் எடுத்துத்தருவதாக சொல்லி எங்களை அணுகினார்!
சாத்தியமற்ற உறுதிமொழி என்ற என் முணுமுணுப்பு காதில் ஏறாதவண்ணம் அவர்களின் வாய்ப்பந்தல்!
மனைவி ஜெயித்து அவர்கள் நிர்வாகியானார்கள்!
பதவியேற்றதுமே, "மூன்று போகம் லட்சியம்- ஒரு போகம் நிச்சயம்" என்று பேச்சு மாறியது என் மனைவிக்கு உறைக்கவே இல்லை!
அண்ணன் ஆயுள் சட்டென்று முடிய, தம்பி கைக்கு நிர்வாகம் போனது! பாவம்! பெரும் குடும்பஸ்தர்!
அவருக்கு, தோட்டம் எங்களுடையது என்றே மறந்துபோய் தனக்கும் தன் குடும்பத்துக்கும் போக மீதி மட்டுமே எங்களுக்கு என்றானது!
அதே நாடகக் கொட்டகையிலிருந்து ஊரே நல்லவர் என்று புகழ்ந்த ஒருவரை நிர்வாகியாக்க, எல்லாம் சரியாகப் போவதுபோல் பட்டது!
ஊழல்வாதி என்று ஒதுக்கப்பட்ட குடும்பஸ்தர் எத்தனை முயன்றும் என் மனைவி மனம் மாறவில்லை!
காலம் மாறி, புதிய நிர்வாகி காலமானார்!
என் மனைவிக்கு அப்பாவியான அவர் மனைவியைவிட, அழகான அவரது தோழியை மிகவும் பிடித்துப்போக, சுலபமாக புதிய நிர்வாகி ஆனார்!

ஆரம்பத்திலிருந்து அந்தப் பெண்ணைவிட, அவருக்கு துணையாய் வந்த மற்றொரு பெண், அவரது குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருந்தது!

நான் பலமுறை சுட்டிக்காட்டியும், ஆடம்பரமாய் நடந்த அவர் வீட்டு விழா ஒன்றை என் மனைவியே பார்க்கும்வரை என் மனைவிக்கு உறைக்கவே இல்லை!

"தேனெடுத்தவன் புறங்கையை நக்கினேன்" என்ற விபரீத வியாக்கியானத்துடன் வந்த பழைய குடும்பஸ்தரை மீண்டும் நிர்வாகியாக்கியபோதும், சைக்கிளில் வந்த பண்ணையார் கையில் நிர்வாகம் தரலாம் என்ற என் முணுமுணுப்பு என் மனைவி காதில் ஏறவேயில்லை- வழக்கம்போல!
குடும்பஸ்தர் தன்னை நல்லவனாய்க்காட்ட, அந்தப் பெண்மணி தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்க, விஷயம் கோர்ட்டுக்குப்போனது!
இந்தமுறை, எங்கள் தோட்டத்தின் தென் பாதியை தன் மூத்த மகன் பொறுப்பில் விட்ட குடும்பஸ்தரின் அத்துமீறல் பிடிக்காத என் மனைவி அந்தப் பெண்மணியையே திரும்ப அழைத்தார்!

இந்தமுறை, சற்றே தன் தோழியை விலக்கியே வைத்தவர், என் தோட்டக் கனிகளையே இலவசம் என்று கொடுத்து என் மனைவியை மயக்கத்திலேயே வைத்திருந்தார்!!

தெய்வம் நின்று கொன்றது!

பழைய வழக்கில் அந்தப் பெண்மணி கைதாக, பழையதை மறந்து,
பறிபோனது தன் பாட்டன் சொத்து என்பதையும் சிந்திக்க சக்தியற்று என் மனைவி இதற்கெல்லாம் அந்த குடும்பஸ்தர் காரணமென்று வினோதமாய் அனுதாபப்படுகிறார்!

இரண்டு நாட்களாக வீடே ரணகளம்!!

பறி போனது நம் பரம்பரை சொத்து!
அதை உணராமல் மீண்டும் மீண்டும் முறை மாற்றி அந்த இருவர் கையிலேயே சாவியைத் தராதே!

தண்டிக்கப்பட்டவர் பெண்மணி என்பதாலோ,
தண்டனைக்கு காத்திருப்பவர் பழக்கப்பட்டவர் என்பதாலோ மீண்டும் அவர்களையே அழைக்காதே!

புதிய நிர்வாகியையும் நாடகக்கொட்டகையிலேயே தேடாதே!

நல்லவராய் ஒரு புதியவரை தேர்ந்தெடு என்று
என் மனைவிக்கு புரியும்படி சொல்ல எனக்குத் தெரியவில்லை!!

நீங்களாவது சொல்லுங்களேன்- தயவு மிகக்கொண்டு!!

அப்போது அவருக்கு வயது முப்பதுகளின் நடுவே! எப்போதும்...எப்போதுமே தும்பை வெள்ளையில் பேண்டும் சர்ட்டும்தான்!

நல்ல, தொட்டால் ஒட்டும் கறுப்பு நிறம்! மிக களையான முகம்! பார்த்தவுடன் அறிவாளி என்று அறிவிக்கும் முகம்!
எங்கள் கல்லூரியின் ஆங்கில பேராசிரியர்!
அப்படி ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும்- ஆனால் மாப்பிள்ளை பென்ச் எனப்படும் கடைசி பென்ச் மாணவர்களான எங்களுக்கும் அவர் வகுப்பென்றால் அத்தனை விருப்பம்!
அனேகமாக ஃபுல் அட்டெண்டன்ஸ் என்பது எங்கள் கல்லூரியில் அத்திப்பூ!

விருப்ப(?)பாடத்துக்கே எட்டிப்பார்க்காத துரையன் கூட எங்கிருந்தாலும் வந்து ஒட்டிக்கொள்ள வைக்குமளவு ஆளுமை!
எங்கள் எல்லோருக்கும் ஆங்கிலத்தின் மீது காதலே வரவைத்தவர்!

எப்போது உன்னிகடை மாநாடு நடந்தாலும் தவறாத விவாதப் பொருள் அவரது உடைதான்!

ஏண்டா இந்த சிரிக்காமாரி- அவருக்கு பட்டப்பெயர்- இப்படி அடிக்கிற வெள்ளைலயே வராரு? தார் ரோடு மாதிரி அவர் கலருக்கு இது பொருந்தவே இல்லையே! வீட்டில் அந்தம்மா சொல்லமாட்டாங்களா? இந்த அங்கலாய்ப்பை நேரில் அவரிடம் சொல்லும் தைரியம் மட்டும் யாருக்கும் வந்ததில்லை!

தொடக்கப்பள்ளி காலத்தில் சாமிநாத ஆசிரியர் வீட்டில் போய் காத்திருந்து புதுப்புத்தகம் - யப்பா! என்ன வாசனை, புதுப்புத்தகமும் நோட்டும்- வாங்கிவருவது,
ஞாயிறு காலையானால் இரண்டு மைல் ஓட்டமாய் ஓடி, ஜெயலட்சுமி டீச்சர் வீட்டிற்கு எதற்கென்றே தெரியாமல் பூனைக்குட்டியாய் சுற்றிவருவது முதல்,

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டாஃப் ரூமில் போய் தமிழய்யாவிடம் போண்டா வாங்கித்தின்பது வரை ஆசிரியர்களுக்கு ஏதோ ஒர் வகையில் நான் செல்லப்பிள்ளை!

பளிச்சென்று கன்னத்தில் அறையும் கணக்கு ஆசிரியர் சக்திவேல் - நான் அறைந்து திருத்தாவிட்டால் வாழ்க்கை உன் வயிற்றில் அறைந்து திருத்தும்- எவ்வளவு தீர்க்கமான போதனை!
ஒருமுறை அம்மை கண்டு நான் வீட்டில் அரற்றிக்கொண்டு தூங்கி எழுந்து பார்க்க, தலைமாட்டில் பனங்கற்கண்டு, பச்சைநாடன் பழம், இளநீர்!
யார் வந்தார்கள் என்று என் கேள்விக்கு அம்மா பதில்- சக்திவேல் சார்!

அந்தக்கால மாணவன் ஆசிரியர் உறவு அப்படி!

அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் விருப்ப மாணவன் என்னால் கூட அவரது வேலியை உடைத்து உள்ளே நெருங்க முடியவில்லை!

கணக்கும் ஆங்கிலமும் எனக்கு எப்போதும் வெல்லம்!
தேர்வு தவறாமல் முதல் மதிப்பெண்கள்- முழு மதிப்பெண்கள்!
தேர்வுத்தாள் வினியோகத்தின்போது மட்டும் அவர் இதழ் ஓரம் ஒரு அங்கீகாரம் கலந்த புன்னகை!

இவ்வளவு இறுக்கமாய் இருந்தாலும் அவர் மீது எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு!

கலர் ட்ரெஸ் மட்டும் போட்டால் ரஜினி மாதிரி இருப்பாருடா!
எல்லா வாத்தி கூடவும் இளிச்சுக்கிட்டு சுத்தறையே? இந்த ஆள் கிட்ட மட்டும் ஏன்டா இத சொல்லமுடியாது என்று கொம்பு சீவிய நண்பர்களே அறியாமல் ஒரு நல்ல வாய்ப்பு ஒரு மாலையில்!

நாலரை மணிக்கு கல்லூரியே மயானமாய் வெறிச்சோடிப்போகும்!
கெமிஸ்ட்ரி அசைன்மெண்ட் கடனைக்கட்டி வகுப்பிலிருந்து தனி ஆளாய் உன்னிகடை கடைசி சுடுதண்ணிக்குப் போனால், ஓரமாய் ஒற்றை ஆள் - எங்கள் கறுப்பழகர்- வெள்ளை ஆடையில்!

இன்னைக்கு என்ன ஆனாலும் சரி என்று அவர் எதிரில் போய் உட்கார்ந்து ஆரம்பித்தேன்!

சார்! எங்க எல்லோருக்கும் ஒரு வருத்தம் உங்கள் மேல்! தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஒன்று கேட்கலாமா? துணிந்து வந்துவிட்டது கேள்வி!

புதிராய்ப் பார்த்தவர் "கேளுப்பா" என்றார்!

சார் - நீங்கள் உங்கள் கலருக்கு மேட்சாய் ட்ரெஸ் செய்யாமல் ஏன் சார் இப்படி எப்போதும் வெள்ளையே போடுகிறீர்கள்- சற்றும் பொருந்தாமல்?

டீ குடித்து முடிக்கும் வரை கடும் அமைதி!

அவர் கண்கள் சற்றே கலங்கியதுபோல் தோன்ற ஒரு பெருமூச்சு!

யாரிடமும் சொல்லக்கூடாது என்ற கட்டளையுடன் சொன்ன பதில் என்னை அதிர்ந்து போக வைத்தது!

பதினைந்து வருட பள்ளி, கல்லூரி கற்றுத்தராத ஒரு உன்னதமான பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கைப்பாடம் அந்த பதில்!

இத்தனை நாள் என் நெருங்கிய கல்லூரிகால நண்பர்களிடமும் பகிராத அந்த பதில் இப்போது!

எப்போது நினைத்தாலும் கலங்க வைக்கும், அவரை என் ஆசான்கள் பட்டியலில் முதலிடத்தில் உட்காரவைத்த அந்த பதிலை பதிய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகான ஆசிரியர் தினத்தைவிட பொருத்தமான நாள் ஏது!

அவருக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறி இன்று!

ஏன் வெள்ளை ஆடை என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்,

" என் மனைவி இறந்த நாளிலிருந்து இந்த எட்டு வருடமாக வெள்ளை உடைதான்!"

தழுதழுத்த குரலில் காதல், நேசம், கற்பு எல்லாம் சொன்ன அந்தப் பாடத்தைவிட எந்த உயரிய பாடமும் நான் இன்று வரை படிக்கவில்லை!

எனக்கு அன்பை விளங்கவைத்த என் ஆசானுக்கு என் வந்தனங்கள்!!!மதுவிலக்கு அவசியமா???என் பால்யத்தில் மது அருந்துபவர்கள் மிகச்சிறுபான்மை!
குடிகாரர்கள் என்று சமுதாயம் அவர்களை இழிவாய் ஒதுக்கிவைத்திருந்தது! குடி ஒரு குற்றமாகவே எங்களுக்கும் போதிக்கப்பட்டது!

இன்று, நிலைமை தலைகீழ்!

"You won't drink?" என்று எள்ளல் தொனியில் கேள்விகள்! அலுவல் காரணமான get together மற்றும் சில விருந்துகளில் இன்று நாங்கள் சிறுபான்மை - untouchables!
He is not sociable என்ற ஏளன ஒதுக்கம்!
எப்படி வந்தது இந்த மாற்றம்?

அம்மாவை mummy என்று பாடம் செய்துவைத்தபோது ஆரம்பித்த மேலைக்கலாச்சார மோகம்!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று ஓரமாய் எழுதிவைத்துவிட்டு ஊற்றிக்கொடுப்பதா அரசாங்கத்தின் வேலை? தர்க்கரீதியில் ஆயிரம் காரணம் சொல்லக்கூடும்!

வருமானம் வருகிறதென்று விபசாரமும் செய்யுமா அரசு?
கள்ளச்சாராயம் பெருகும் என்பதும் அண்டை மாநிலம் போய்க் குடிப்பான் என்பதும் வெற்று வாதம்!
இன்று, மாலையானால் நேராக டாஸ்மாக்குக்கோ வேறு பாருக்கு போவதுபோல் தினசரி கள்ளச்சாராயம் குடிக்கவோ, அண்டைமாநிலம் செல்லவோ முடியுமா? அந்த இடைவெளி அதிகரிக்காதா?
சுலபமாக கிடைப்பது பழக்கத்தை ஊக்குவிக்காதா? புதுக்குடிகாரர்கள் உருவாவது பெருமளவு தவிர்க்கப்படுமே!
பணம் இருந்தால் வாங்கிக்குடிக்கலாம் என்ற நிலை மாறி, அது risk என்று மாறும்போது குடிப்பவர் எண்ணிக்கை குறையுமே!

இது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டதென்றால், எதற்கு அந்த எச்சரிக்கை வாசகம்- ஓரத்தில்!
இதில் தனிமனிதன் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை என்பதன் உண்மை உதாரணங்கள் இறுதியில்!

நண்பர்கள் ஒன்று கூடினால், social drinking என்று காரணங்கள்!
நண்பர்கள் கூடினால் விஷம் குடித்துக் கொண்டாடுவதா? இத்தகைய பார்ட்டிகளில் புகையும் மதுவும் ஓர் இணக்கமற்ற சூழலை ஏற்படுத்துவது சரிதானா?

தனி மனித ஒழுக்கம் சார்ந்ததாய் வாதிடப்படும் குடியின் பாதிப்பைச் சொல்லும் சில உண்மைச் சம்பவங்கள் கீழே:

1. ஈரோடு KMCH ல் சனிதோறும் இரவு வரும் விபத்து கேஸ்களின் எண்ணிக்கை மற்ற நாட்களின் மொத்தத்தைவிட பத்து மடங்கு அதிகம்! 100% குடியால் விளையும் சம்பவங்களில் அடிபட்டவரைவிட, கூட்டிவரும் உறவினர் கதறல் கொடுமை! பெரும்பான்மை இளைஞர்களே!
2. திருப்பூரில் ஓர் அற்புதமான டிசைனர். பிரகாசமான இளைஞர்! குடும்பத்தின் ஒரே வாரிசு! காதல் மணம்! பெண்ணும் ஒரே வாரிசு! திருமணம் ஆகி ஆறு மாதம்! பெண் வயிற்றில் நான்குமாத சிசு!
நண்பர்களுடன் "கொண்டாடி"திரும்பிய சனி இரவில் பள்ளிச்சுவற்றில் வண்டி மோதி உடனடி மரணம்!
கணவன் இறந்த பத்தாவதுநாள் வயிற்றில் கருவுடன் தூக்கிட்டு அந்தப் பெண்ணும் தற்கொலை!

இப்போது இரண்டு குடும்பங்களும் சந்ததியற்று விரக்தியில் கிழங்கள்! அந்தப் பேரிழப்புக்கு யார் பொறுப்பு ?

3. மதுரையில் எங்கள் டிரைவர் முழு போதையில் ஓட்டிச்சென்ற இரண்டுசக்கர வாகனம் எதிரில் ஹெல்மெட் அணிந்து வந்த குடிப்பழக்கம் அறவே அற்ற ஒரு குழந்தைக்கு தந்தையான இஞ்சினீயர் மீது மோதி பலிகொண்ட விபத்தில் அந்தக்கூடு கலைந்ததற்கு சாராயம் விற்ற அரசு பொறுப்பில்லையா?

4. கோவை கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும், கட்டுப்பாடான குடும்பத்தின் பெண் வாரிசு! காதலன் பிறந்தநாள் பரிசாக வாங்கித்தந்த வெளிநாட்டு மதுவை ஒரே ஒருமுறை என்று ஆரம்பித்து, பின் பல விஷயங்களுக்கும் அடிமைப்பட்டுப்போன அவலம்!

இதெல்லாம் எதனால் நடக்கிறது? இனிவரும் தலைமுறையை மனதில் வைத்து சிந்திப்போம்!!

குடிப்பவன்தான் கெட்டவன், குடிக்காதவன் எல்லாம் நல்லவனா என்ற குதர்க்க வாதத்துக்கு நான் வர விரும்பவில்லை!

குடியின் அவலங்களைச் சொல்லி, அதைத் தவிர்க்க இறைஞ்சுவதே இப்பதிவின் நோக்கம்!!

இது ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்துமானால் மகிழ்வேன்!!
நாளைய தலைமுறை நலமாய் வாழ சிந்திப்போம்!!


நன்றி!!

இளையராஜாவுக்கு என்ன ஆச்சு???ஈரோடு வந்த இளையராஜாவின் முழுப்பேச்சையும் இன்றுதான் கேட்க நேர்ந்தது - 
என்ன ஆச்சு இளையராஜாவுக்கு?

எங்கள் இசைராஜா வசைராஜாவாக என்ன காரணம்?

அர்ஜுனன் அம்பு கடைசி காரணி- கர்ணன் பலரால் பலபோதில் கொல்லப்பட்டான்!
அதுபோல் இளையராஜாவை வீழ்த்தியது பல காரணிகள்!

பண்ணைப்புரத்திலிருந்து பட்டணம் வந்து போராடி ஜெயித்தகதை பலரும் அறிந்ததே!

இசை ஒவ்வொரு அணுவிலும் ஊறித்ததும்பும் மனமே அப்படி ஓர் இசையமைக்கமுடியும் என்பது அவரது எதிரிகளும் ஒப்புக்கொள்ளும் உண்மை!

மேட்டுக்குடிக்கென்றே சபிக்கப்பட்ட கர்னாடகஇசை ராகங்களையும், 
அடித்தட்டில் அலைபாய்ந்த நாட்டுப்புறப்பாடலையும் 
ஒரு கோட்டில் இசைவாய் இணைக்கமுடிந்தது இவரது மேதைமை!
அவரது எந்தப்பாடலை எடுத்துக்கொண்டாலும், 
அது முழு நான்கு நிமிடமும் ஒரே லயத்தில் தடம் மாறாமல் ஒரே தளத்தில் சஞ்சரிக்கும்! 
இது இன்றுவரை யாருக்கும் வசப்படாத வசீகரம்- உலகையே வென்ற இசைப்புயல் உட்பட!
பிறகு எப்படி வந்தது இந்த விரக்தி?
தியாகராஜ பாகவதர் காலத்துக்குப்பின், இந்தநாள்வரை வெறுமனே பாட்டுக்காக மட்டும் படம் ஓடியது இளையராஜா இசையில் மட்டுமே! 
என்னால் அப்படி நூறுபடங்களை பட்டியலிட முடியும். 
பல இயக்குனர், நடிகர்களின் அரிசியில் இன்றும் உபயம் என்றுஇளையராஜா பெயரே எழுதியிருக்கும்!

அவர் உச்சத்தில் இருந்தபோது துதிபாடி காரியம் சாதித்த பலரின் மனதளவில் வன்மம் வளர்த்த எளிய உண்மை புரியாத வெள்ளை மனம்!

இறைவனுக்கு இணை வைத்துக்கொண்டாடியதை உண்மையாய் நினைத்த கிராமத்து எளியமனம் இளையராஜாவின் பலவீனம்! 
அதை உண்மை என்று நம்பிய வாக்குமூலம்தான் "பாட்டாலே புத்தி சொன்னார்" பாடல்!

பொருந்தாது எனத்தெரிந்தும், opening song அவரைப்பாடவைத்தது, 
அவரை ஞானியென்றும், இறைவனென்றும் முகத்துக்கு நேரே துதிபாடியது இயக்குனர் கூட்டம்!

வைரமுத்துவுடன் தனக்கொரு சிறு பிணக்கு நேர்ந்தபோதில், 
இன்றைய திரைப்பாடலாசிரியர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு பாரதிராஜாவின் பதில் 
"வருகிறது நாடோடித்தென்றல்!"

அந்தப்படத்தின் பாடலாசிரியர் இளையராஜா!
இது ஓர் உதாரணமே! 
பாரதிராஜாவை விடுங்கள்!

சிந்துபைரவியும், அக்னிநட்சத்திரமும் யாருடைய வெற்றி? மனசாட்சியுள்ளவர் சொல்லட்டும்!

தன் பாடல்களில் ராஜா செய்த திருத்தங்கள்! 
அதனால் அவை அடைந்த பரிணாமம் என பட்டியலிட்டவர் இன்றுவரை வால் பிடிப்பதில் வல்லவரான வைரமுத்து!

தேசியவிருது வாங்கித்தந்தவருக்கு காத்திருக்க மனமின்றி 
வேறொருவரை பிண்ணனி இசை கோர்க்கவைத்த பாலசந்தர்!

இன்றுவரை RR என்றாலே ராஜாதான்- 
 உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், முதல்மரியாதை 
ஒரு கடுகளவு உதாரணம்!

புகழ்போதை தலைக்கு ஏறி, சற்றே தலைக்குமேல் தர்மரின் ரதமாய் மிதந்தகாலத்தில் போலிகளின் புகழ்ச்சியில் மயங்கியது வீழ்ச்சியின் முதற்படி!

சாமரம் வீசி சாதித்த கும்பல் காற்றடித்தபக்கம் சாய்ந்தது! 
வேறொருபுயல் வேகமாய்ப்புறப்பட, 
அதன்பின் வேகமாய் ஓடியது துதிபாடும் கூட்டம்!
MSV க்கு இருந்த பெருந்தன்மை இல்லாதுபோனதும், 
ஒருமுறை பிணக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற மறுத்த வெள்ளந்திப்பிடிவாதமும் 
அத்தனை உயரத்திலிருந்து இழுத்து வந்தன!
அந்த ஆதங்கம், ஒதுக்கப்பட்ட துயரம் இவையே இளையராஜாவின் இன்றைய பேச்சுக்களின் காரணிகள்!

அதற்கென அவர் திறமை மறத்தல் மடமை!

இன்றும், இன்னும் ஒரு நூற்றாண்டும் இளையராஜா இசை ரசிக்கப்படுவது நிச்சயம்! நிச்சயம்!!

அந்த மஹாகலைஞனை அவரது சமீபகாலப்பேச்சுகளுக்காக தூற்றுவதும், 
நேற்று காலை இசையமைக்கவந்த அனிருத்துடன் எல்லாம் டெக்னிகலாக ஒப்பிட்டுத்தாழ்த்துவதும்

அந்த மாபெரும் கலைஞனிடம் கடன்பட்ட நமக்கு அழகல்ல!
இசைபாடும் குயில் இன்று வசைபாட ஆயிரம் காரணம்!

ஆயினும் அது நம் உள்ளம் குளிர்வித்த கோடைமழை!

அதைப் போற்றி வணங்காவிடினும், 
தூற்றி இகழாதிருப்போம்!