புதன், 8 அக்டோபர், 2014

என்னை மன்னித்துவிடு மகனே!அது ஒரு கனாக்காலம்! எப்போது விடுமுறை வருமென காத்துக்கிடந்த காலம்! தேர்வு முடிந்த மாலை பஸ் பிடிக்கும் நாள் சொர்க்கம்!
அனேகமாய்ப் போவது பாட்டி வீடு!
அம்மா வகையில் ஒரு புறம், அப்பா வகையில் மறுபுறம்!
அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஒருபுறம்- மாமா, சித்திகள் வகையில் எப்படியும் ஏழெட்டு உருப்படிகள்!
அம்மாவைப்பெற்ற பாட்டி வசித்த  ஊரில் 
ஐந்தாறு வீடு கொண்ட வளவுகள்! 
எப்போதும் விளையாட பத்துப்பேர்!

புளியமரத்தில் ஊஞ்சல், பம்ப் செட் குளியல், கூட்டாஞ்சோறு, புளியம்பூ, பிஞ்சு துவையல், சுட்ட பனங்கிழங்கு, வேகவைத்த பனம்பழம்!
ஓய்ந்த நேரம், குச்சி ஐஸ், கடிகாரம் கட்டிக்கொண்ட பம்பாய் மிட்டாய், மணியடித்துவரும் பஞ்சுமிட்டாய், சோன்பப்டி!
நொண்டி, கபடி, கண்ணாமூச்சி, கில்லி, பம்பரம், திருடன் போலீஸ்!
விடிய விடிய கேரம், பல்லாங்குழி, தாயக்கட்டம்- இது ஒருபுறம்!
அப்பாவைப்பெற்ற பாட்டி வகையில், 
மொத்தத் தெருவும் சொந்தம்!

ஆறு, வாய்க்கால் நீச்சல், மொட்டைமாடி ரகசியங்கள், காற்றாடி, சைக்கிள், அரசுப்பள்ளி மைதான வாலிபால், பேட்மிட்டன், பேஸ்பால்!
மாலை ஆற்றங்கரை நிலாச்சோறு, டெண்டுக்கொட்டகை தரை டிக்கெட்! மண் குவித்த சிம்மாசனம்! இடைவேளை முறுக்கு, வடை, கடலைமிட்டாய், சோடா கலர்!
எல்லா வீடும் எங்கள் வீடு! யார் வீட்டிலும் புகுந்து விளையாட்டு!
தீனிக்கும் அன்புக்கும் எப்போதும் பஞ்சமில்லை! 
இதுபோக, இடைவரும் பண்டிகைகள்! தேரிழுக்கும் பண்டிகையில் விடியவிடிய கச்சேரி, தேர்க்கடையில் சீனிமிட்டாய்!
ஆயா, தாத்தா, அத்தை, சித்தப்பா- தேர்க்காசு தர ஆயிரம்பேர்!
யார் வீட்டில் சாப்பாடு, எந்த வீதியில் விளையாட்டு? யாருக்குத்தெரியும்?
கல்யாணவயதில் வீட்டிலிருக்கும் அத்தைகளும் சித்திகளும் அன்பு மழை!

விடுமுறை மாதம் வெறும் மணித்துளியாய், பனித்துளியாய் கரையும்!
எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா அத்தை எல்லோரும் ஈன்றோருக்கு நிகர்!
கஸின்,நீஸ் என்று யாருமில்லை! 
எல்லோருமே அண்ணன் தம்பி, மாமா, அக்கா தங்கை அவ்வளவே! வேற்றுமை என்பது மருந்துக்கும் இல்லாது எல்லோரும் ஒரே குடும்பம்!
அடுத்த விடுமுறைக்கு ஆவலாய்க் காத்திருந்து சந்திக்கும் காலம்வரை மாறாத நேசம்!
தீபாவளி, பொங்கலுக்கு தேடிப்பிடித்து வாழ்த்து அட்டை!
என்னை மன்னித்துவிடு மகனே!
இதில் எதையும் நானுனக்குத் தந்ததில்லை!
எல்லா உறவும் ஆண்ட்டி, அங்கிள்!
எல்லா விளையாட்டும் கம்ப்யூட்டர்
- அதுவும் சுருங்கி மொபைல் கேம்!
முட்டாள் பெட்டிக்குள் உன் செவ்வக உலகு! 
Cartoon, sports channelகளில் எவர் விளையாட்டையோ வேடிக்கை பார்க்கிறாய்!
நீ ஓடி விளையாட உனக்கோர் துணையில்லை! 
எல்லா வீடும் அந்நியம்!
Excuse me Aunt என்று பெல்லடித்து வாசல் நிற்கும் அக்கம்பக்கம்!
ஒற்றைக்குழந்தை பெற்ற உற்றமும் அந்நியம்!
Appointment வாங்கிவரும் அரைநாள் விருந்தினர்கள்!
ஒருவேளை சாப்பாட்டில் ஓய்ந்துபோகும் சொந்தம்!
அவரவர் டிவி, அவரவர் வாழ்க்கை, அவரவர் உலகம்!
என் இளமை மகிழ்வாய் கழிந்ததை நானறிவேன்! 
நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாயா?
எனக்குத் தெரியாது!
கேட்கும் தைரியமும் எனக்கில்லை!
ஒன்று மட்டும் எனக்கு உறுதியாய்த் தெரியும்! 
உன்னை மடிசாய்த்து சொல்ல எனக்கு ஆயிரம்கதையுண்டு!
உன் மகனுக்குச் சொல்ல உன்னிடம் கதைகளே இல்லை!என்னை மன்னித்துவிடடா மகனே!!!

1 கருத்து: