வெள்ளி, 24 அக்டோபர், 2014

சொல்லிவிடு ரவி!

"What do you think of yourself Ravi? Decide today or let me be off this from tomorrow! உன்ன மாதிரி குழப்பவாதிக்கு எத்தனை நாள் டைம் கொடுத்தாலும் முடிவெடுக்கத் தெரியாது ரவி!"
பொட்டிலறைந்தமாதிரி நிதானமாய் ஆனால் தீர்க்கமாய்ச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள் சௌமி!

அம்மா இன்னுமே எதுவும் பேசமுடியாது வாயடைத்து நிற்பதைப்பார்க்க ரவிக்கு பாவமாக இருந்தது!

இந்த சௌமி போல் ஒரு பெண்ணை யாராலுமே எதிர்கொள்ள முடியாது!
தெளிவும் பட்டவர்த்தனமாயும் மட்டைக்கு இரண்டு கீற்றாய் மனதை பிளந்துகாட்ட சௌமியால்தான் முடியும்!

காலையில் வந்தவள் அம்மாவிடமும் அவனிடமும் நன்றாகத்தான் பேசக்கொண்டிருந்தாள்!

வந்தவுடன் நேரே சமையலறை!
ஞாயிறு காலை என்பதால் சற்றே நிதானமாய் காய்கறி ஆய்ந்துகொண்டிருந்த அம்மாவை "எப்படியிருக்கீங்க அத்தை?" என்ற கேள்வியோடு, பதிலே எதிர்பார்க்காமல், ஹாட்பேக்கில் இருந்த இட்லியில் இரண்டை எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு அம்மா எதிரே உட்கார்ந்தாள்!

சாப்பிட்டு முடிப்பதற்குள் ஒருவார கதை மொத்தமும் படபடவென்று பேசியபடி சமையலறையை ஒரு நோட்டம்!

மதியம் நான் சமைக்கிறேன் அத்தை என்றவள், எந்த பதிலையோ, அனுமதியையோ எதிர்பார்க்காமல், தன்னிச்சையாய் காய்கறிகளை தன்பக்கம் நகர்த்திக்கொண்டாள்!

அனுமதி எதிர்பார்க்க அவள் ஒன்றும் அந்நியம் கிடையாது!

ரவி பத்துவயதாயிருக்கும்போது, தூங்குவதுபோல் செத்துப்போன அப்பாவின் தங்கை மகள்!

வீட்டுக்கு ஒரே பெண்! ஏக செல்லம்! மனதில் நினைப்பதை பட்டென்று வார்த்தையில் சொல்லும் சுபாவம்!
ஆனால் வாயாடியோ, திமிர் பிடித்தவளோ அல்ல என்றாலும், ஏன் இந்தப்பெண் இப்படி சுருக் என்று பேசுகிறது என்று நினைக்குமளவு வார்த்தைகள்!

அப்பா இல்லை என்ற நினைவே வராமல் பார்த்துக்கொண்டதில் அத்தைக்கும் மாமாவுக்கும் பெரும் பங்கு! அம்மா முகம் பார்த்தே தேவைகளை ஊகித்துக்கொள்ளும் குணம்!

இவர்கள் இப்படியென்றால், மாலை வந்த நிரஞ்சனா, வேறுவகை!

அம்மாவின் அண்ணன் மகள்! அடக்கம், எளிமை, அதிரப்பேசாத குணம்!
தனக்கு என்ன வேண்டும் என்பதையே, மற்றவர் மனம் கோண சொல்லத்தெரியாத பதவிசு!

விதவைத் தங்கையை தலைமேல் தாங்கும் மாமா, அவருக்கும் மேலான அன்பே உருவான மாமி!
ஒருபையன், பெண் என்ற அளவான குடும்பம்! பையன் இப்போதுதான் பத்தாவது படிக்கிறான்!

இப்போது ரவிக்குமுன் நிற்கும் கேள்வி_
நிரஞ்சுவா, சௌமியா என்பதுதான்!

ரவி, ஒற்றைப்பெண்ணாய் அம்மாவால் ஊட்டிவளர்க்கப்பட்ட பையன்!
தகப்பன் இல்லாத குறை தெரியாமல் வளர்க்கப்பட்டாலும், அம்மாவின் வலி அறிந்த சமர்த்துப்பிள்ளை!!

இஞ்சினீயரிங் முடித்து, வந்த வெளிநாட்டு வேலைகளையெல்லாம் அம்மாவுக்காக விட்ட பிள்ளை! உள்ளூரிலேயே நல்ல உத்தியோகம்!
தேடினாலும் குறை கண்டுபிடிக்கமுடியாத குணம்!
அம்மாவின் கண்டிப்பான கெடு, இந்த ஐப்பசிக்குள் இருவரில் ஒருத்தியை தேரந்தெடுத்தாகவேண்டிய கட்டாயம்!

ரவிக்கு குழப்பம் தீர்ந்தபாடில்லை!
இருபது வருடங்களுக்குமேல் ஒன்றாகப் பழகி, இருவரின் நிறை, குறை இரண்டும் தெரிந்தவன்!
சௌமி, M.Com முடித்து, வங்கியில் ஆஃபீசர்!

நிரஞ்சனா, B.E., system analyst!

இருவருமே ரவிக்கு ஏற்ற உயரம், அழகு, ஏதாவது குறை என்று சொன்னால் சௌமி ஒரே ஒரு மாற்று  குறைவு நிறத்தில்!

இரண்டு பெற்றோருக்கும், ரவி மீது கொள்ளைப்பிரியம்!
அவனை மருமகனாக்கிக்கொள்ள இருவருக்குமே ஆவல்!

இவன் பதில் தெரிந்தபின்பே, ஜாதகக்கட்டை எடுப்பது என்ற தீர்மானம்!

நீண்ட யோசனைக்குப்பின் அம்மா இரண்டு பெண்களிடமுமே தனித்தனியாக கேட்டுவிட்டாள்!

இருவருக்கும் ஓகே!

இப்போது முடிவு ரவி கையில்!

மாலை வந்த நிரஞ்சு, அம்மாவிடம், ரவி என்ன முடிவெடுத்தாலும் தனக்கு சம்மதம் என்றும் இன்னும் சிலநாட்கள் தாமதிப்பதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை என்றும், ரவியை கட்டாயப்படுத்தவேண்டாம் என்றும் சொல்லிவிட்டுப்போனாள்!

அவள் எப்போதும் இப்படித்தான்! தீபத்தின் சுடர்போல் ஒரு பாந்தமான அழகு!
மொத்தத்தில் நிரஞ்சுவை கட்டிக்கொள்பவன் அதிர்ஷ்டசாலி!

சௌமியை புரிந்துகொள்ளாமல் புதிதாய் ஒருவன் கட்டிக்கொண்டால் சிரமம்தான்!
அவள் straight forward approach மற்றும் பளிச் reactions நிச்சயம் அவளை அனுசரித்துப்போக சிரமப்படவைக்கும்!

அத்தையும் மாமாவும்கூட பாவம் சற்றே பயந்த சுபாவிகள்!
அவர்களால் எப்படி சௌமியை கரையேற்ற முடியும் என்று பயமாகத்தான் இருக்கிறது!

நிரஞ்சு விஷயத்தில் குளறுபடியே இல்லை!
எங்கும் எல்லோருடனும் அனுசரித்துப்போகும் குணம்! அதிர்ந்துபேசத் தெரியாத அமைதி!
மாமாவும்கூட நன்கு விபரம் தெரிந்தவர்!
நிச்சயம் மருமகனுக்கு எல்லாசமயமும் தோள் கொடுக்கும் திறமுள்ளவர்!
அம்மாவுக்கும் கூடப்பிறந்தவன் மகள் என்ற ஒரு கூடுதல் கனிவு!!

மொத்தத்தில் நிரஞ்சுவோடு வாழ்க்கை எந்த காம்பரமைசும் இல்லாமல் அமைதியாக ஓடும்!

சௌமி, கொஞ்சம் அனுசரணையாக அரவனைத்துச் செல்லவேண்டிய முரட்டுக்குழந்தை!
ரவிக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!

நன்றிக்கடன் என்றே பார்த்தாலும் இரண்டுபுறமும் சமமாகவே! எனில் எதற்கு கடினமான ஒன்றை சுமக்கவேண்டும்? அத்தையை நினைத்து கொஞ்சம் பாவமாக இருந்தாலும், தன் வாழ்க்கை முக்கியம் என்றே பட்டது!

"அம்மா, நாளைக்கு மாலை நிரஞ்சுவை என் ஆஃபீஸுக்கு வரச்சொல்! நான் முதலில் என் முடிவை அவளிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்றபோது அம்மா முகத்தின் பிரகாசத்தை காணத்தவறவில்லை!

மறுநாள், வெட்கத்தோடு தன் எதிரில் வந்தமர்ந்த நிரஞ்சனாவிடம் தன் மனதில் நினைத்த எல்லாவற்றையும் தயக்கமில்லாமல் சொல்ல ஆரம்பித்தான் ரவி!

ஆகவே, நிரஞ்சு, இப்போது என் முடிவு என்ன என்பது உனக்குப் புரிந்திருக்கும்!


"நான் சௌமியை கல்யாணம் செய்துகொள்வதுதான் நியாயம் என்பதை உனக்கு முதலில் கூறவே உன்னை வரச்சொன்னேன்!"


3 கருத்துகள்:

 1. நல்லாருக்கு :-) ரெண்டில் ஒன்று தேர்வு செய்ய நாயகன் செய்யும் முடிவு நன்று :-)

  amas32

  பதிலளிநீக்கு
 2. நல்லாருக்குங்க... கடினமானதை சுமக்க நினைக்கும் முடிவு கதையின் பலம்.. அருமை..

  பதிலளிநீக்கு
 3. முடிவு ஊகிக்க கூடியதாகவே இருந்தாலும். வார்த்தை நடை அபாரம்.

  பதிலளிநீக்கு