புதன், 8 அக்டோபர், 2014

இளையராஜாவுக்கு என்ன ஆச்சு???ஈரோடு வந்த இளையராஜாவின் முழுப்பேச்சையும் இன்றுதான் கேட்க நேர்ந்தது - 
என்ன ஆச்சு இளையராஜாவுக்கு?

எங்கள் இசைராஜா வசைராஜாவாக என்ன காரணம்?

அர்ஜுனன் அம்பு கடைசி காரணி- கர்ணன் பலரால் பலபோதில் கொல்லப்பட்டான்!
அதுபோல் இளையராஜாவை வீழ்த்தியது பல காரணிகள்!

பண்ணைப்புரத்திலிருந்து பட்டணம் வந்து போராடி ஜெயித்தகதை பலரும் அறிந்ததே!

இசை ஒவ்வொரு அணுவிலும் ஊறித்ததும்பும் மனமே அப்படி ஓர் இசையமைக்கமுடியும் என்பது அவரது எதிரிகளும் ஒப்புக்கொள்ளும் உண்மை!

மேட்டுக்குடிக்கென்றே சபிக்கப்பட்ட கர்னாடகஇசை ராகங்களையும், 
அடித்தட்டில் அலைபாய்ந்த நாட்டுப்புறப்பாடலையும் 
ஒரு கோட்டில் இசைவாய் இணைக்கமுடிந்தது இவரது மேதைமை!
அவரது எந்தப்பாடலை எடுத்துக்கொண்டாலும், 
அது முழு நான்கு நிமிடமும் ஒரே லயத்தில் தடம் மாறாமல் ஒரே தளத்தில் சஞ்சரிக்கும்! 
இது இன்றுவரை யாருக்கும் வசப்படாத வசீகரம்- உலகையே வென்ற இசைப்புயல் உட்பட!
பிறகு எப்படி வந்தது இந்த விரக்தி?
தியாகராஜ பாகவதர் காலத்துக்குப்பின், இந்தநாள்வரை வெறுமனே பாட்டுக்காக மட்டும் படம் ஓடியது இளையராஜா இசையில் மட்டுமே! 
என்னால் அப்படி நூறுபடங்களை பட்டியலிட முடியும். 
பல இயக்குனர், நடிகர்களின் அரிசியில் இன்றும் உபயம் என்றுஇளையராஜா பெயரே எழுதியிருக்கும்!

அவர் உச்சத்தில் இருந்தபோது துதிபாடி காரியம் சாதித்த பலரின் மனதளவில் வன்மம் வளர்த்த எளிய உண்மை புரியாத வெள்ளை மனம்!

இறைவனுக்கு இணை வைத்துக்கொண்டாடியதை உண்மையாய் நினைத்த கிராமத்து எளியமனம் இளையராஜாவின் பலவீனம்! 
அதை உண்மை என்று நம்பிய வாக்குமூலம்தான் "பாட்டாலே புத்தி சொன்னார்" பாடல்!

பொருந்தாது எனத்தெரிந்தும், opening song அவரைப்பாடவைத்தது, 
அவரை ஞானியென்றும், இறைவனென்றும் முகத்துக்கு நேரே துதிபாடியது இயக்குனர் கூட்டம்!

வைரமுத்துவுடன் தனக்கொரு சிறு பிணக்கு நேர்ந்தபோதில், 
இன்றைய திரைப்பாடலாசிரியர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு பாரதிராஜாவின் பதில் 
"வருகிறது நாடோடித்தென்றல்!"

அந்தப்படத்தின் பாடலாசிரியர் இளையராஜா!
இது ஓர் உதாரணமே! 
பாரதிராஜாவை விடுங்கள்!

சிந்துபைரவியும், அக்னிநட்சத்திரமும் யாருடைய வெற்றி? மனசாட்சியுள்ளவர் சொல்லட்டும்!

தன் பாடல்களில் ராஜா செய்த திருத்தங்கள்! 
அதனால் அவை அடைந்த பரிணாமம் என பட்டியலிட்டவர் இன்றுவரை வால் பிடிப்பதில் வல்லவரான வைரமுத்து!

தேசியவிருது வாங்கித்தந்தவருக்கு காத்திருக்க மனமின்றி 
வேறொருவரை பிண்ணனி இசை கோர்க்கவைத்த பாலசந்தர்!

இன்றுவரை RR என்றாலே ராஜாதான்- 
 உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், முதல்மரியாதை 
ஒரு கடுகளவு உதாரணம்!

புகழ்போதை தலைக்கு ஏறி, சற்றே தலைக்குமேல் தர்மரின் ரதமாய் மிதந்தகாலத்தில் போலிகளின் புகழ்ச்சியில் மயங்கியது வீழ்ச்சியின் முதற்படி!

சாமரம் வீசி சாதித்த கும்பல் காற்றடித்தபக்கம் சாய்ந்தது! 
வேறொருபுயல் வேகமாய்ப்புறப்பட, 
அதன்பின் வேகமாய் ஓடியது துதிபாடும் கூட்டம்!
MSV க்கு இருந்த பெருந்தன்மை இல்லாதுபோனதும், 
ஒருமுறை பிணக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற மறுத்த வெள்ளந்திப்பிடிவாதமும் 
அத்தனை உயரத்திலிருந்து இழுத்து வந்தன!
அந்த ஆதங்கம், ஒதுக்கப்பட்ட துயரம் இவையே இளையராஜாவின் இன்றைய பேச்சுக்களின் காரணிகள்!

அதற்கென அவர் திறமை மறத்தல் மடமை!

இன்றும், இன்னும் ஒரு நூற்றாண்டும் இளையராஜா இசை ரசிக்கப்படுவது நிச்சயம்! நிச்சயம்!!

அந்த மஹாகலைஞனை அவரது சமீபகாலப்பேச்சுகளுக்காக தூற்றுவதும், 
நேற்று காலை இசையமைக்கவந்த அனிருத்துடன் எல்லாம் டெக்னிகலாக ஒப்பிட்டுத்தாழ்த்துவதும்

அந்த மாபெரும் கலைஞனிடம் கடன்பட்ட நமக்கு அழகல்ல!
இசைபாடும் குயில் இன்று வசைபாட ஆயிரம் காரணம்!

ஆயினும் அது நம் உள்ளம் குளிர்வித்த கோடைமழை!

அதைப் போற்றி வணங்காவிடினும், 
தூற்றி இகழாதிருப்போம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக