புதன், 8 அக்டோபர், 2014

ஒரே ஒரு வனத்திலே...
அது ஒரு அழகிய வனம். உலகத்தின் முன் தோன்றிய மூத்த வளமான வனம். 
அதன் பெருமை கேட்ட வெள்ளைப்பருந்துக்கூட்டம் வியாபாரம் செய்வதாய் வந்தது. 
வனத்து விலங்குகளின் ஒற்றுமை சிதைத்த வெள்ளைப்பருந்துகள் ஆட்சிக்கட்டில் ஏறி ஆட்டம் போட்டன.

சுரண்டியது போதுமென்று புறப்பட்ட பருந்துக்கூட்டம் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை தந்து சென்றன. 

அடிமைவாழ்வு பழகிய மிருகங்கள் ஒரு யானைக்குடும்பத்தையே ஏறத்தாழ தொடர்ந்து தலைமை ஏற்கவைத்தன.

அந்த யானைக்குடும்பத்தில் பறக்க ஆசைப்பட்ட ஒரு யானை வெள்ளையானையை துணையாக கூட்டிவந்தது.

தன் தாய் செய்தது போலவே, வேறொரு தேன்கூட்டில் கைவைத்த பறக்கும்யானையை தேனீக்கள் கொன்றுபோட, முதுகெலும்பற்ற ஓநாய்கள் வாழவந்த வெள்ளையானையை அரசாளச் சொல்லின.

இடையில், வனத்தின் தென்கோடி முனையிலிருந்த பேசத்தெரிந்த கிளியை ராஜகுரு ஆக்கின ஓநாய்கள்!

கிளியின் உயரப்பறக்கும் திறமறிந்த இளவட்ட மிருகங்கள், ராஜகுருவை ஆதர்ஸமாய் கொண்டாடின. 

காலப்போக்கில் அந்தக்கிளி பேசமட்டுமே செய்யும் என்றுணர்ந்த இளவட்டம், பழையபடி அரிதாரக்கூட்டத்திடம் அடைக்கலமாக, அந்தக்கிளி இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறது.
அந்த கிளி, வெள்ளையானை பட்டம் ஏற்க தடைபோட்டதுமட்டுமே ராஜகுருவாய் சாதித்தது!

தனக்கான அடிமையை தேடிய வெள்ளை யானை கண்ணில் ஒரு கரடி பட்டது.
பொருளாதாரத்தில் உலகளவில் பேர்வாங்கிய அந்த சாதுக்கரடி, பட்டுத்துணிக்கு ஆசைப்பட்டு பட்டம் கட்டிக்கொண்டது.

கரடியை முன்வாசலில் உட்காரவைத்த வெள்ளையானை, பின் வாசல் வழி ஓநாய்க்கூட்டத்தோடு சூறையாடியது!

இரண்டாவது முறையும் கரடியை முன்னிறுத்தி வென்ற ஓநாய்க்கூட்டம்,
வெளிச்சத்திலேயே, அலை அலையாய், கற்றைகற்றையாய் கொள்ளையடிக்க ஆரம்பித்தன. பட்டுத்துணி ஆசையில் ஊமையான கரடியும் தன் பங்குக்கு நிலக்கரியை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டது.

அடுத்த தேர்தலில் கரடியை காட்டினால் காறித்துப்புவார் என்பதால் தன் குட்டியை முன்னிருத்தியது. 
இதைப்பார்த்த நிதிநிர்வாகம் பார்த்த, பசியறியா தென்குரங்கும் குட்டியின் கையைவைத்து சூடு பார்த்தது!

இந்தமுறை காவியில் கர்ச்சித்த தாடிவைத்த விலங்கை சிங்கமென நம்பிய விலங்குகள் முழு அதிகாரம் கொடுத்து தலைவனாக்குச்சுங்க!
கூடாநட்பில் கேடாய் முடிந்த கரடி கண் கலங்க வேடிக்கை பார்த்துச்சு!

விலங்குகள் எல்லாம் வயித்துல பசியோடும், கண்ணுல கனவோடும் தங்களோட ரட்சகனாக சிங்கத்தை ஏற்றிவைத்தன.


கதை முடிந்ததா???

சிங்கம் திடீர்னு மொழி மாறிப் பேச ஆரம்பிச்சுது! கரடி போன பாதையிலேயே வேகமாய் ஒடுச்சு!


காவி நிறம், சிங்கமா, நரியான்னு அப்பாவி விலங்கெல்லாம் திகைச்சு நிக்கிது!!

நீங்க தெரிஞ்சா சொல்லுங்களேன் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக