வியாழன், 6 பிப்ரவரி, 2020

மஞ்சுவும் தெருமுனை பிள்ளையாரும்!!
இந்தக் கதையை ஆரம்பிக்க, கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்!

இது பிள்ளையாருக்கும் எனக்கும் சண்டை முடிவுக்கு வந்த கதை!- முதலும் முடிவுமாய் - காரணம் மஞ்சு!

மஞ்சு?- 
நெஞ்சுக்குள் எப்போதாவது நெருடும் கால் நூற்றாண்டு நெருஞ்சி முள்!

அப்பாவுக்கு அறுபது- திருக்கடையூர் போவதில்லை, சொந்தஊர், சொந்த மண்டபம் என்று மாப்பிள்ளை முறுக்கு காட்டிய அப்பாவை- சோனியாவை ஆதரித்த கலைஞராய் - ஆமோதித்த காரணம்- மஞ்சு!

பத்தாண்டுகால சம்சார சாகரத்தில் ஊர்ப்பக்கமே போகாத ஒதுக்கத்தில், கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லாவற்றுக்கும் ஏக ரெப்ரசென்டேடிவ் அப்பாவும் அம்மாவும்! 
கொஞ்சம் கொஞ்சமாக ஊரும் உறவும் மனதை விட்டு மறைந்துபோக, மஞ்சு மட்டும் மனதில்! 

காரணம், 
மொட்டைமாடி ரகசியங்கள்!

அப்போதெல்லாம் விடுமுறை என்றாலே பாட்டி வீடு பயணம்!

பாட்டி வார்த்தைகளில் "பரதேசம் போறதாய்ச் சொல்லியே பத்துப்பிள்ளை பெற்றவர்" தாத்தா!
அந்தப் பத்தும் வஞ்சகமின்றி வம்சவிருத்தியைத் தொடர, எங்கள் வீட்டில் மட்டும் அரை செஞ்சுரி!

அக்கம்பக்கத்திலும் பிரஜாவிருத்தியில் சளைக்காத சுற்றம்!
தெருவே தேர்க்கூட்டம் விடுமுறைகளில்!

உபத்திரமில்லாத திருடன் போலீஸ் விளையாட்டு எப்போதும் எங்கள் சாய்ஸ்!

அப்போதுதான் குரல் உடைய ஆரம்பித்து, வெள்ளுடை ஶ்ரீதேவியை பார்க்கும்போது இனம் புரியா குறுகுறுப்பு! பருவம் வாசல் தட்டும் பருவம்- அந்த வருடம் எல்லாம் மாறியது- 
காரணம் மஞ்சு!

மணிவண்ணன் புயல்வேகத்தில் நூறு எண்ணுவதற்குள் ஒளிந்துகொள்ளும் அவசரம்!

சடாரென்று கை பிடித்து மஞ்சு இழுத்துப்போனது மூன்றாவது வீட்டு மொட்டைமாடி!
இருவர் நெருக்கியடித்து உட்காருமளவு முடியிட்ட, உபயோகமற்ற தண்ணீர் தொட்டி!

என் மடியில் மஞ்சுவா, மஞ்சு மடியில் நானா? 
நெருக்கம், இருட்டு, பாண்ட்ஸ் பவுடர், ரெமி ஸ்னோ, வியர்வை, குழப்பம், நெருக்கம்! 
என்ன இந்த வாசனை? எத்தனை மென்மை, 
இதென்ன ஈரம் கன்னத்தில்? முத்தமா? 
யார் யாரைத் தொட்டது? 
இது எந்த இடம்? ஏன் இந்த சூடு?


விளையாட்டு திசை மாறும் நேரம், கீழே "அவுட்" என்ற பெரும் கூச்சல்! ஓடிச்சென்று, மீண்டும் மீண்டும் ஒளிந்ததில் எங்களை யாரும் கண்டுபிடிக்கவில்லை, 
நாங்களும் எதுவும் கண்டுபிடித்துவிடவில்லை!


மறுநாள் " எனக்கும் மஞ்சுவிற்கும் கல்யாணம் செய்துவை! உனக்கு பதினோரு தேங்காய் உடைக்கிறேன்" என்று தெருமுனை பிள்ளையாருக்கு வேண்டுதல் வைத்தபோது எட்டாம் வகுப்பு அரையாண்டு விடுமுறை!

அடுத்து வந்த வருடங்களில் மஞ்சு என்னைவிட வேகமாய் வளர, கல்லூரி, மேல்படிப்பு என்று காலம் நகர்கையில் 
அத்தை மகனை கை பிடித்த மஞ்சு இரண்டு பெற்றது செவிவழி செய்தி!

அந்த calf love காணாமல்போய், வெள்ளமாய் வந்த காதல்களில் ஜெயித்த காதலி மனைவியாக- குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


இருப்பினும் தெருமுனைப் பிள்ளையார் மட்டும் பிடிக்காமலே போய், இடையில் வந்த கும்பாபிஷேகமும் தட்டிக்கழிப்பு!

இப்போது, விழாவுக்கு வருவதாய் கள்ளம் புரியாது தொலைபேசிய மஞ்சு கணவன்! 
கால் நூற்றாண்டு முந்தைய காதலிக்காய் வழி மேல் விழி வைத்து(எத்தனை நூற்றாண்டு உவமை) வரவேற்பில் நான்!

வந்தான் வில்லன் சந்துரு! "மாமா! கொஞ்சம் போய் அந்த காளிஃப்ளவர் மூட்டையை எடுத்து வந்துருங்க! சில்லிக்கு வேணும்!" சில்லி ஃபெலோ! 

ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் மார்க்கெட் போய்த்திரும்ப, 
மூக்கோட்டை மண்டபம் நிரம்பி வழிய- எங்கே தேடுவேன் மஞ்சுவை!

இடையில் ஒரு சிவத்த கிழவி அப்பாவிடம் வழிய, 
பவுடர் போடாத ராமராஜன் வழிசல் அவர் முகத்தில்!- 
இது எந்த வீட்டு மொட்டை மாடியோ! 
(அவரைச் செடியில் துவரையா முளைக்கும்?-சுய ஆறுதல்!)


பந்திக்குத்தேடிப்போனால், நல்ல அகலமான, குள்ளமான அரைக்கிழவி பாயாசம் கேட்க, வெறுத்துப்போய் தூக்கி எறியாத குறையாக பாயச கப்பை வீசிவிட்டு வந்து, கும்பலில் தொடர்ந்த தேடல்!

வாசலில் முறைவாசலுக்கு வந்து
ஆசைமுகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி என்று தேட பின்னாடி ஒரு குரல்" என்னை நியாபகம் இருக்கா மாமா?"
பாரதிராஜா பட ஹீரோயின் போல துள்ளித்திரும்ப,

அந்த பந்திப்பீப்பாய்- தளும்பத்தளும்ப!
கடுப்புக்கஷாயத்தை விழுங்கி,"தெரீலங்களே" என்று வழிய, 
திருவாய் மலர்ந்தாள் தேவதை!

"நான்தான் மாமா! மஞ்சு!!!"

அன்று மதியநேர மொட்டை வெயிலில் தெருமுனைப்பிள்ளையாருக்கு நூற்றிஒரு தேங்காய்!

திடீர் கதைவசனம் புரியாத மனைவி கேட்க," நம்ம கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா ஒடைக்கறதா வேண்டியிருந்தேன்"

இத்தனை வருட தாம்பத்யத்தில் கிறுக்குத்தனம் பழகிப்போனவள் நொடித்து நகர,
கடனை வட்டியோடு வசூலித்த கள்ளச்சிரிப்பில் கணேசன்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக