புதன், 8 அக்டோபர், 2014

என் மனைவிக்கு யாராவது புத்தி சொல்லுங்களேன்.. ப்ளீஸ் .....!எங்களிடம் ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது- வளமான பூமி! ஒரு வயதானவரை நிர்வகிக்க விட்டிருந்தோம்! சொந்த பந்தம் பற்றி கவலையின்றி, எங்கள் தோட்டத்தை கண்ணாய் காத்த தூய்மையாளர்!
களைகள் இல்லாமல் விளைச்சலை பெருக்கிவந்தவர், வயதாகிவிட்டது என்று தானாக விலகியபின் ஏனோ என்மனைவிக்கு அவரைப் பிடிக்காமலே போய்விட்டது!
அதற்கு வேறு ஒரு காரணமும் கூட!
உள்ளூர் நாடகக் கொட்டகையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர், தன் தம்பிகளுடன், வருடம் முப்போகம் விளைச்சல் எடுத்துத்தருவதாக சொல்லி எங்களை அணுகினார்!
சாத்தியமற்ற உறுதிமொழி என்ற என் முணுமுணுப்பு காதில் ஏறாதவண்ணம் அவர்களின் வாய்ப்பந்தல்!
மனைவி ஜெயித்து அவர்கள் நிர்வாகியானார்கள்!
பதவியேற்றதுமே, "மூன்று போகம் லட்சியம்- ஒரு போகம் நிச்சயம்" என்று பேச்சு மாறியது என் மனைவிக்கு உறைக்கவே இல்லை!
அண்ணன் ஆயுள் சட்டென்று முடிய, தம்பி கைக்கு நிர்வாகம் போனது! பாவம்! பெரும் குடும்பஸ்தர்!
அவருக்கு, தோட்டம் எங்களுடையது என்றே மறந்துபோய் தனக்கும் தன் குடும்பத்துக்கும் போக மீதி மட்டுமே எங்களுக்கு என்றானது!
அதே நாடகக் கொட்டகையிலிருந்து ஊரே நல்லவர் என்று புகழ்ந்த ஒருவரை நிர்வாகியாக்க, எல்லாம் சரியாகப் போவதுபோல் பட்டது!
ஊழல்வாதி என்று ஒதுக்கப்பட்ட குடும்பஸ்தர் எத்தனை முயன்றும் என் மனைவி மனம் மாறவில்லை!
காலம் மாறி, புதிய நிர்வாகி காலமானார்!
என் மனைவிக்கு அப்பாவியான அவர் மனைவியைவிட, அழகான அவரது தோழியை மிகவும் பிடித்துப்போக, சுலபமாக புதிய நிர்வாகி ஆனார்!

ஆரம்பத்திலிருந்து அந்தப் பெண்ணைவிட, அவருக்கு துணையாய் வந்த மற்றொரு பெண், அவரது குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருந்தது!

நான் பலமுறை சுட்டிக்காட்டியும், ஆடம்பரமாய் நடந்த அவர் வீட்டு விழா ஒன்றை என் மனைவியே பார்க்கும்வரை என் மனைவிக்கு உறைக்கவே இல்லை!

"தேனெடுத்தவன் புறங்கையை நக்கினேன்" என்ற விபரீத வியாக்கியானத்துடன் வந்த பழைய குடும்பஸ்தரை மீண்டும் நிர்வாகியாக்கியபோதும், சைக்கிளில் வந்த பண்ணையார் கையில் நிர்வாகம் தரலாம் என்ற என் முணுமுணுப்பு என் மனைவி காதில் ஏறவேயில்லை- வழக்கம்போல!
குடும்பஸ்தர் தன்னை நல்லவனாய்க்காட்ட, அந்தப் பெண்மணி தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்க, விஷயம் கோர்ட்டுக்குப்போனது!
இந்தமுறை, எங்கள் தோட்டத்தின் தென் பாதியை தன் மூத்த மகன் பொறுப்பில் விட்ட குடும்பஸ்தரின் அத்துமீறல் பிடிக்காத என் மனைவி அந்தப் பெண்மணியையே திரும்ப அழைத்தார்!

இந்தமுறை, சற்றே தன் தோழியை விலக்கியே வைத்தவர், என் தோட்டக் கனிகளையே இலவசம் என்று கொடுத்து என் மனைவியை மயக்கத்திலேயே வைத்திருந்தார்!!

தெய்வம் நின்று கொன்றது!

பழைய வழக்கில் அந்தப் பெண்மணி கைதாக, பழையதை மறந்து,
பறிபோனது தன் பாட்டன் சொத்து என்பதையும் சிந்திக்க சக்தியற்று என் மனைவி இதற்கெல்லாம் அந்த குடும்பஸ்தர் காரணமென்று வினோதமாய் அனுதாபப்படுகிறார்!

இரண்டு நாட்களாக வீடே ரணகளம்!!

பறி போனது நம் பரம்பரை சொத்து!
அதை உணராமல் மீண்டும் மீண்டும் முறை மாற்றி அந்த இருவர் கையிலேயே சாவியைத் தராதே!

தண்டிக்கப்பட்டவர் பெண்மணி என்பதாலோ,
தண்டனைக்கு காத்திருப்பவர் பழக்கப்பட்டவர் என்பதாலோ மீண்டும் அவர்களையே அழைக்காதே!

புதிய நிர்வாகியையும் நாடகக்கொட்டகையிலேயே தேடாதே!

நல்லவராய் ஒரு புதியவரை தேர்ந்தெடு என்று
என் மனைவிக்கு புரியும்படி சொல்ல எனக்குத் தெரியவில்லை!!

நீங்களாவது சொல்லுங்களேன்- தயவு மிகக்கொண்டு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக