வேறு வழியே இல்லையா அரசு- கடந்த சில நாட்களில் நூறாவது முறையாக இந்தக் கேள்வியைக் கேட்கிறாள் தியா!
இரண்டு பேருக்குமே பதில் தெரிந்த கேள்விதான்! அதை ஏற்றுக்கொள்ளும் துணிவு முழுமையாகாத அச்சம்!
அரசுவுக்கும் அப்படித்தான்!
மூன்று மாதங்களாக எல்லாவழிகளிலும் யோசித்தபின் எடுத்த முடிவு!
இளமையில் எல்லோருக்கும் வரும் அவஸ்தைதான் - காதல்!
இருவரும் இருவேறு சமூகம் என்பதில் ஆரம்பத்தில் எந்த உறுத்தும் இல்லை.
நாளொரு பார்க்கும் காஃபி ஷாப்புமாக வளர்ந்த காதலின் ஆரம்பகால உற்சாகங்களில் இந்த பூதம் புலப்படவில்லை.
புரியவந்தபோதும், படிப்பு தந்த அலட்சியம், இரண்டு வீட்டிலும் ஒரே வாரிசு என்ற தைரியம், காதல் வேர் பிடிக்கக் காரணிகள்!
"ஒரே ஊராமே?" என்ற கேள்வி தந்த குறுகுறுப்பு! ஊதிவிட நட்புவட்டம், ஒரே ஊரானாலும் வெவ்வேறு தீவுகளில் வளர்ந்தவர்களுக்கு முதல் அறிமுகம் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த இடத்தில்தான்!
கதையை வளர்த்துவானேன்? காதல் வளர்ந்தது!
சிறுவயதுமுதல் தோளில் தூக்கி வளர்த்த சித்தப்பாவிடம் தியா விளையாட்டாய்க் கேட்டாள்- சித்தப்பா, நான் காலனிப்பையனைக் கட்டிக்கிட்டா என்ன செய்வீங்க?
உன்ன விட்றுவேன்! அந்த நாயையும் உங்க அப்பனையும் கூறு போட்றுவேன்!
அன்றைக்கு ஜாதிவெறியின் கோரமுகம் தியாவின் தூக்கம் கெடுத்ததன் விளைவுதான் இந்த முடிவு!
நாளை மறுநாள் நண்பர்கள் சூழ ரிஜிஸ்டர் மேரேஜ்
நூற்றி ஓராவதுமுறை இந்தக் கேள்விக்கு அரசுவின் அடிபட்ட பார்வை பார்த்து ' சீ! இல்லடா' என்று உறுதியாய் கை கோர்த்து நடக்க ஆரம்பிக்கையில், அந்திவானம், மழைத்தூரல் தந்த குளிர்ச்சி, யாருமற்ற தனிமை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக