புதன், 8 அக்டோபர், 2014

அப்போது அவருக்கு வயது முப்பதுகளின் நடுவே! எப்போதும்...எப்போதுமே தும்பை வெள்ளையில் பேண்டும் சர்ட்டும்தான்!

நல்ல, தொட்டால் ஒட்டும் கறுப்பு நிறம்! மிக களையான முகம்! பார்த்தவுடன் அறிவாளி என்று அறிவிக்கும் முகம்!
எங்கள் கல்லூரியின் ஆங்கில பேராசிரியர்!
அப்படி ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும்- ஆனால் மாப்பிள்ளை பென்ச் எனப்படும் கடைசி பென்ச் மாணவர்களான எங்களுக்கும் அவர் வகுப்பென்றால் அத்தனை விருப்பம்!
அனேகமாக ஃபுல் அட்டெண்டன்ஸ் என்பது எங்கள் கல்லூரியில் அத்திப்பூ!

விருப்ப(?)பாடத்துக்கே எட்டிப்பார்க்காத துரையன் கூட எங்கிருந்தாலும் வந்து ஒட்டிக்கொள்ள வைக்குமளவு ஆளுமை!
எங்கள் எல்லோருக்கும் ஆங்கிலத்தின் மீது காதலே வரவைத்தவர்!

எப்போது உன்னிகடை மாநாடு நடந்தாலும் தவறாத விவாதப் பொருள் அவரது உடைதான்!

ஏண்டா இந்த சிரிக்காமாரி- அவருக்கு பட்டப்பெயர்- இப்படி அடிக்கிற வெள்ளைலயே வராரு? தார் ரோடு மாதிரி அவர் கலருக்கு இது பொருந்தவே இல்லையே! வீட்டில் அந்தம்மா சொல்லமாட்டாங்களா? இந்த அங்கலாய்ப்பை நேரில் அவரிடம் சொல்லும் தைரியம் மட்டும் யாருக்கும் வந்ததில்லை!

தொடக்கப்பள்ளி காலத்தில் சாமிநாத ஆசிரியர் வீட்டில் போய் காத்திருந்து புதுப்புத்தகம் - யப்பா! என்ன வாசனை, புதுப்புத்தகமும் நோட்டும்- வாங்கிவருவது,
ஞாயிறு காலையானால் இரண்டு மைல் ஓட்டமாய் ஓடி, ஜெயலட்சுமி டீச்சர் வீட்டிற்கு எதற்கென்றே தெரியாமல் பூனைக்குட்டியாய் சுற்றிவருவது முதல்,

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டாஃப் ரூமில் போய் தமிழய்யாவிடம் போண்டா வாங்கித்தின்பது வரை ஆசிரியர்களுக்கு ஏதோ ஒர் வகையில் நான் செல்லப்பிள்ளை!

பளிச்சென்று கன்னத்தில் அறையும் கணக்கு ஆசிரியர் சக்திவேல் - நான் அறைந்து திருத்தாவிட்டால் வாழ்க்கை உன் வயிற்றில் அறைந்து திருத்தும்- எவ்வளவு தீர்க்கமான போதனை!
ஒருமுறை அம்மை கண்டு நான் வீட்டில் அரற்றிக்கொண்டு தூங்கி எழுந்து பார்க்க, தலைமாட்டில் பனங்கற்கண்டு, பச்சைநாடன் பழம், இளநீர்!
யார் வந்தார்கள் என்று என் கேள்விக்கு அம்மா பதில்- சக்திவேல் சார்!

அந்தக்கால மாணவன் ஆசிரியர் உறவு அப்படி!

அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் விருப்ப மாணவன் என்னால் கூட அவரது வேலியை உடைத்து உள்ளே நெருங்க முடியவில்லை!

கணக்கும் ஆங்கிலமும் எனக்கு எப்போதும் வெல்லம்!
தேர்வு தவறாமல் முதல் மதிப்பெண்கள்- முழு மதிப்பெண்கள்!
தேர்வுத்தாள் வினியோகத்தின்போது மட்டும் அவர் இதழ் ஓரம் ஒரு அங்கீகாரம் கலந்த புன்னகை!

இவ்வளவு இறுக்கமாய் இருந்தாலும் அவர் மீது எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு!

கலர் ட்ரெஸ் மட்டும் போட்டால் ரஜினி மாதிரி இருப்பாருடா!
எல்லா வாத்தி கூடவும் இளிச்சுக்கிட்டு சுத்தறையே? இந்த ஆள் கிட்ட மட்டும் ஏன்டா இத சொல்லமுடியாது என்று கொம்பு சீவிய நண்பர்களே அறியாமல் ஒரு நல்ல வாய்ப்பு ஒரு மாலையில்!

நாலரை மணிக்கு கல்லூரியே மயானமாய் வெறிச்சோடிப்போகும்!
கெமிஸ்ட்ரி அசைன்மெண்ட் கடனைக்கட்டி வகுப்பிலிருந்து தனி ஆளாய் உன்னிகடை கடைசி சுடுதண்ணிக்குப் போனால், ஓரமாய் ஒற்றை ஆள் - எங்கள் கறுப்பழகர்- வெள்ளை ஆடையில்!

இன்னைக்கு என்ன ஆனாலும் சரி என்று அவர் எதிரில் போய் உட்கார்ந்து ஆரம்பித்தேன்!

சார்! எங்க எல்லோருக்கும் ஒரு வருத்தம் உங்கள் மேல்! தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஒன்று கேட்கலாமா? துணிந்து வந்துவிட்டது கேள்வி!

புதிராய்ப் பார்த்தவர் "கேளுப்பா" என்றார்!

சார் - நீங்கள் உங்கள் கலருக்கு மேட்சாய் ட்ரெஸ் செய்யாமல் ஏன் சார் இப்படி எப்போதும் வெள்ளையே போடுகிறீர்கள்- சற்றும் பொருந்தாமல்?

டீ குடித்து முடிக்கும் வரை கடும் அமைதி!

அவர் கண்கள் சற்றே கலங்கியதுபோல் தோன்ற ஒரு பெருமூச்சு!

யாரிடமும் சொல்லக்கூடாது என்ற கட்டளையுடன் சொன்ன பதில் என்னை அதிர்ந்து போக வைத்தது!

பதினைந்து வருட பள்ளி, கல்லூரி கற்றுத்தராத ஒரு உன்னதமான பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கைப்பாடம் அந்த பதில்!

இத்தனை நாள் என் நெருங்கிய கல்லூரிகால நண்பர்களிடமும் பகிராத அந்த பதில் இப்போது!

எப்போது நினைத்தாலும் கலங்க வைக்கும், அவரை என் ஆசான்கள் பட்டியலில் முதலிடத்தில் உட்காரவைத்த அந்த பதிலை பதிய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகான ஆசிரியர் தினத்தைவிட பொருத்தமான நாள் ஏது!

அவருக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறி இன்று!

ஏன் வெள்ளை ஆடை என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்,

" என் மனைவி இறந்த நாளிலிருந்து இந்த எட்டு வருடமாக வெள்ளை உடைதான்!"

தழுதழுத்த குரலில் காதல், நேசம், கற்பு எல்லாம் சொன்ன அந்தப் பாடத்தைவிட எந்த உயரிய பாடமும் நான் இன்று வரை படிக்கவில்லை!

எனக்கு அன்பை விளங்கவைத்த என் ஆசானுக்கு என் வந்தனங்கள்!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக