புதன், 8 அக்டோபர், 2014

கடவுளின் கோரமுகம் காணவா வந்தேன் முகநூலுக்கு???

அவ்வளவாய் ஈடுபாடோ பரிச்சயமோ இல்லாமல், மனைவியும் மகளும் என்பெயரில் நடத்திவந்த முகநூல் பக்கத்திற்கு எப்போதாவது நான் வருவதுண்டு!

அப்படி வரும்போதெல்லாம் தவறாமல் உன் பக்கத்தை பார்க்காமல் நான் போனதில்லை!

கொடைக்கானல் பாலத்தில் கோபித்து அமர்ந்த குழந்தை, வெட்கப்புன்முறுவலோடு ஒரு பிறந்தநாளில் பார்த்ததுவரை நேர்கோட்டில் நகர்ந்தது வாழ்க்கை!

சம்பவ சூறாவளி சுழற்றி அடித்ததில் என் வாழ்க்கை, காற்றின் பிடியில் சருகாய் பறந்துகொண்டிருந்த இடைக்காலத்தில் அந்த சிறுமி - டாக்டர். அஸ்வினியாய் பரிணமித்ததை எனக்கு சொன்னது இந்த முகப்புத்தகம்தான்!

என் இரண்டு குழந்தைகளையும் இந்த உலகுக்கு இழுத்துவந்து என் கையில் கொடுத்த என் உயிரில் உறையும் என் அன்புத்தங்கை, உன் தாய், நேருக்கு நேர் பார்க்க நேர்ந்த தருணத்திலும் அறியாதவர்போல் விலகிப்போன காலத்தின் காயத்தை சகிக்கமுடியாது தவித்திருக்கும் காலத்தில்,
உன் திருமணநாள் சேதி சொன்னதும் இந்த முகநூல்தானே!
எங்கிருந்தாலும் எங்கள் குழந்தை நலமாயிருக்கிறது என்றிருந்த நாளில் "என் அக்கா நலம் பெற அனைவரும் பிரார்த்திப்போம்" என்ற உன் குட்டித்தம்பியின் முகநூல் பதிவை,
ஏதோ காய்ச்சல் குறித்த குழந்தைப்பதிவென புன்னகைத்துக் கடந்துபோனேன்!

இரண்டுநாள் கழித்து ஒரு அதிகாலை வந்த தொலைபேசி தகவல் என் உயிரை உருவிப்போட்டது!
அந்த அதிர்ச்சி விலகாமல் உடனே உடனே என்று பதறிப் பறந்துவந்து நான் பெங்களூரு சேர்ந்தபோது எல்லாமே முடிந்து போயிருந்தது!

கடவுளோ, காலமோ என்னை தண்டிக்க நினைத்திருந்தால் அப்படி ஓர் கொடும்கணத்தை எனக்கு தந்திருக்கவேண்டாம்!!

Dr. Ashwini என்ற என் விசாரிப்புகள் அந்த வார்டுக்குள் என்னை தடையின்றி இட்டுச்சென்றபோதே என்னுள் ஏதோ முறிந்துபோனது!

என் கையில் தவழ்ந்த அந்த சின்னக்குழந்தை, தனியே, யாருமற்றுப்படுத்திருந்த கோலம், அங்கிருந்த இளம் மருத்துவர், தயங்கித்தயங்கி நான் கேட்ட "does she?" என்ற கேள்விக்கு மௌனமாய்த்தலையசைத்து நகர்ந்துபோக, குளிரத்தொடங்கியிருந்த அந்தக் கரம்பிடித்து உடைந்துபோனேன்!
யாருமற்ற அந்த தனிமையில் உன்னை நான் பார்த்த அந்த நிமிடங்கள் என் வாழ்வின் மகத்தான சாபம்!!

"தங்க மாமா" என்று என்னை அழைத்த தங்கத் தேவதையை அப்படிப்பார்க்க நேர்ந்ததில் உடைந்து கதறித் தவித்த அந்த சில நிமிடங்கள் என் ஆயுள் வரை மறக்காது!!

இது எனக்கு தெரியாமலே போயிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

எங்காவது எங்கள் தேவதை நலமாய் வாழ்வதாய் கற்பனையில் என் காலம் கரைந்தருக்குமே!

லாரிச் சக்கரத்திலா பூவைப்பறிப்பான் அந்த இரக்கமற்ற இறைவன்?

கதறித்தவித்த அந்த சில நிமிடங்களில், இனி யாரைப்பார்த்து என்ன பேசுவது?
நான் சாகும்வரை கண்ணீரே பார்க்கக்கூடாது என்று நான் விரும்பும் என் அன்புப் புகழை எதிர்கொள்ள மனமின்றி, எப்படி வந்து வண்டியை எடுத்தேன், எத்தனைமுறை நிறுத்தி அழுதேன், எப்படி ஊர் வந்து சேர்ந்தேன்?
இன்றுவரை நினைவில்லை!!

இன்று உன் நினைவு தினம்!!

கடவுளின் அருகிருந்து கட்டாயம் இதை நீ படித்துக்கொண்டிருப்பாய்!!

என் விதி முடிந்து, உன்னைத்தேடி நான் பறந்து வரும் நாளில்,

அந்தக் கொடைக்கானல் பாலத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிப்போம் நம் நாட்களை!!

அதுவரை, அந்தக் கொடிய நிமிடங்களை மறக்கும் வரத்தை அந்த கடவுளிடம் வாங்கிக்கொடு!

என்றும் உன் நினைவைச்சுமக்கும்-

உன் தங்கமாமா!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக