புதன், 8 அக்டோபர், 2014

மதுவிலக்கு அவசியமா???என் பால்யத்தில் மது அருந்துபவர்கள் மிகச்சிறுபான்மை!
குடிகாரர்கள் என்று சமுதாயம் அவர்களை இழிவாய் ஒதுக்கிவைத்திருந்தது! குடி ஒரு குற்றமாகவே எங்களுக்கும் போதிக்கப்பட்டது!

இன்று, நிலைமை தலைகீழ்!

"You won't drink?" என்று எள்ளல் தொனியில் கேள்விகள்! அலுவல் காரணமான get together மற்றும் சில விருந்துகளில் இன்று நாங்கள் சிறுபான்மை - untouchables!
He is not sociable என்ற ஏளன ஒதுக்கம்!
எப்படி வந்தது இந்த மாற்றம்?

அம்மாவை mummy என்று பாடம் செய்துவைத்தபோது ஆரம்பித்த மேலைக்கலாச்சார மோகம்!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று ஓரமாய் எழுதிவைத்துவிட்டு ஊற்றிக்கொடுப்பதா அரசாங்கத்தின் வேலை? தர்க்கரீதியில் ஆயிரம் காரணம் சொல்லக்கூடும்!

வருமானம் வருகிறதென்று விபசாரமும் செய்யுமா அரசு?
கள்ளச்சாராயம் பெருகும் என்பதும் அண்டை மாநிலம் போய்க் குடிப்பான் என்பதும் வெற்று வாதம்!
இன்று, மாலையானால் நேராக டாஸ்மாக்குக்கோ வேறு பாருக்கு போவதுபோல் தினசரி கள்ளச்சாராயம் குடிக்கவோ, அண்டைமாநிலம் செல்லவோ முடியுமா? அந்த இடைவெளி அதிகரிக்காதா?
சுலபமாக கிடைப்பது பழக்கத்தை ஊக்குவிக்காதா? புதுக்குடிகாரர்கள் உருவாவது பெருமளவு தவிர்க்கப்படுமே!
பணம் இருந்தால் வாங்கிக்குடிக்கலாம் என்ற நிலை மாறி, அது risk என்று மாறும்போது குடிப்பவர் எண்ணிக்கை குறையுமே!

இது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டதென்றால், எதற்கு அந்த எச்சரிக்கை வாசகம்- ஓரத்தில்!
இதில் தனிமனிதன் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை என்பதன் உண்மை உதாரணங்கள் இறுதியில்!

நண்பர்கள் ஒன்று கூடினால், social drinking என்று காரணங்கள்!
நண்பர்கள் கூடினால் விஷம் குடித்துக் கொண்டாடுவதா? இத்தகைய பார்ட்டிகளில் புகையும் மதுவும் ஓர் இணக்கமற்ற சூழலை ஏற்படுத்துவது சரிதானா?

தனி மனித ஒழுக்கம் சார்ந்ததாய் வாதிடப்படும் குடியின் பாதிப்பைச் சொல்லும் சில உண்மைச் சம்பவங்கள் கீழே:

1. ஈரோடு KMCH ல் சனிதோறும் இரவு வரும் விபத்து கேஸ்களின் எண்ணிக்கை மற்ற நாட்களின் மொத்தத்தைவிட பத்து மடங்கு அதிகம்! 100% குடியால் விளையும் சம்பவங்களில் அடிபட்டவரைவிட, கூட்டிவரும் உறவினர் கதறல் கொடுமை! பெரும்பான்மை இளைஞர்களே!
2. திருப்பூரில் ஓர் அற்புதமான டிசைனர். பிரகாசமான இளைஞர்! குடும்பத்தின் ஒரே வாரிசு! காதல் மணம்! பெண்ணும் ஒரே வாரிசு! திருமணம் ஆகி ஆறு மாதம்! பெண் வயிற்றில் நான்குமாத சிசு!
நண்பர்களுடன் "கொண்டாடி"திரும்பிய சனி இரவில் பள்ளிச்சுவற்றில் வண்டி மோதி உடனடி மரணம்!
கணவன் இறந்த பத்தாவதுநாள் வயிற்றில் கருவுடன் தூக்கிட்டு அந்தப் பெண்ணும் தற்கொலை!

இப்போது இரண்டு குடும்பங்களும் சந்ததியற்று விரக்தியில் கிழங்கள்! அந்தப் பேரிழப்புக்கு யார் பொறுப்பு ?

3. மதுரையில் எங்கள் டிரைவர் முழு போதையில் ஓட்டிச்சென்ற இரண்டுசக்கர வாகனம் எதிரில் ஹெல்மெட் அணிந்து வந்த குடிப்பழக்கம் அறவே அற்ற ஒரு குழந்தைக்கு தந்தையான இஞ்சினீயர் மீது மோதி பலிகொண்ட விபத்தில் அந்தக்கூடு கலைந்ததற்கு சாராயம் விற்ற அரசு பொறுப்பில்லையா?

4. கோவை கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும், கட்டுப்பாடான குடும்பத்தின் பெண் வாரிசு! காதலன் பிறந்தநாள் பரிசாக வாங்கித்தந்த வெளிநாட்டு மதுவை ஒரே ஒருமுறை என்று ஆரம்பித்து, பின் பல விஷயங்களுக்கும் அடிமைப்பட்டுப்போன அவலம்!

இதெல்லாம் எதனால் நடக்கிறது? இனிவரும் தலைமுறையை மனதில் வைத்து சிந்திப்போம்!!

குடிப்பவன்தான் கெட்டவன், குடிக்காதவன் எல்லாம் நல்லவனா என்ற குதர்க்க வாதத்துக்கு நான் வர விரும்பவில்லை!

குடியின் அவலங்களைச் சொல்லி, அதைத் தவிர்க்க இறைஞ்சுவதே இப்பதிவின் நோக்கம்!!

இது ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்துமானால் மகிழ்வேன்!!
நாளைய தலைமுறை நலமாய் வாழ சிந்திப்போம்!!


நன்றி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக