சனி, 29 நவம்பர், 2014

கடல் கடந்த காதல் கதை!

STEFFIயும் நானும் !!

உங்களுக்கு டென்னிஸ் தெரியுமா?
தெரியாட்டி ஒன்னும் பாதகம் இல்லை,

டென்னிஸ் தெரியலன்னாலும், STEFFI  தெரியுமா? தெரியாதா?

குறிப்பா, என் வயது, வாலிப, வயோதிக - சாரி ஒரு FLOWல வந்திருச்சு, என்வயது இளைஞரா இருந்து, தெரியாதுன்னா, நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.

நயன்தாரா என்ன பெரிய நயன்தாரா, அந்த நடிகை போட்டோவ  நான் சேர்ந்தாப்பல பத்து நிமிஷத்துக்குமேல பாக்கறதே இல்லை ஆனா, எங்க STEFFI  வெளையாடறத நான்லாம் ரெகார்ட் பண்ணிவச்சு நாள் கணக்கா பாத்திருக்கேன்.

அந்த நாட்கள்ல, சென்னை அம்பசிடர் பல்லவா ஹோட்டல் டென்னிஸ் கிளப்ல மார்க்கருக்கு அப்புறம் அதிக நேரம் இருந்தது நான்தான். எப்படியோ, ரெண்டு வருசத்துக்குள்ள, கோர்ட்டுக்குள்ள பால் அடிக்கறதுக்கு கத்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, இந்த ரூட்ல போனா, அறுபது வயசுக்குமேல, விம்பிள்டன்ல பந்து பொறுக்கிப் போடற வேலைக்குத்தான் போகமுடியும்னு!

சரி, இந்த நடிகைங்க எல்லாரும் தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கற மாதிரி, STEFFIயும் ஒரு ஆடிட்டரக் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு, நமக்கு எது வருதோ, அத பார்ப்போம்னு, மறுபடியும், படிப்பையே தொரத்த ஆரம்பிச்சேன்.

சரி, எனக்கு ஏன் STEFFI மேல அவ்வளவு, இது, லவ்வு , வந்துச்சுன்னு கேக்கணும்னு உங்களுக்கு தோணுச்சா இல்லையா?

சரி,… தோணாதுன்னு எனக்கும் தெரியும், அதுக்காக, இழுத்து வைச்சு கதை சொல்ல ஆரம்பிச்சுட்டு, உங்கள விட்ருவனா என்ன!

இந்த உலகத்திலயே STEFFI  மூக்கும், உன் மூக்கும்தான் அழகா இருக்குன்னு, ரஞ்சித் ஹோட்டல்ல ஓசி டிபன் வாங்கித் தர்ரப்ப எல்லாம், என் ப்ரண்ட் ரேவதி சொல்லுவா.

பொதுவா பொண்ணுங்க பேச்ச நான் நம்பறதில்ல.அதுவும் இந்த ஓசில பொங்கல் வாங்கி திங்கற ஐயங்கார் பொண்ணுங்க சொல்றத. ஆனா, இது என்னமோ, கொஞ்சம் நம்பற மாதிரித்தான் இருந்தது.

எதுக்கும் இருக்கட்டும், ஒரு செகண்ட் ஒப்பினியன் வாங்கிக்கலாம்னு, என் ப்ரண்ட் ராஜாவுக்கு பாலிமர் பார்ல பீர் வாங்கிக் கொடுத்துட்டு, கேட்டா, அவனும், மூணு பீருக்கு அப்பறம், என் தலைல அடிச்சு, சத்தியம் பண்றான்.
மாப்ள, பொதுவா, நான் பொண்ணுங்க மூஞ்சியவே பாக்கமாட்டேன்,”  
( அந்த நாயி எங்க பாக்கும்கறத இப்போ நான் சொன்னா, இதப் படிக்கற என் பொண்ணு என்னைக் காறித்துப்பிடுவா). 
ஆனா, எனக்கு அந்தப் பொண்ணு மூக்கைப் பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தான்டா வரும்னுட்டு,
மச்சி, இன்னொரு பீர் சொல்லேன்னு, மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்குது சனி.

எத்தனை நேரம்தான் நானும் அந்த பூனை மூத்திரம் மாதிரி நாற்ற சனியன வாங்கி குடுக்கறதுன்னு, “போலாம் மச்சி, உங்க அப்பா இதே பாருக்கு வருவாருன்னு சொன்னியேன்னு ஒருவழியா மேச்சுக்கிட்டு வெளிய வந்துட்டேன்.

குடிச்சிருக்கற ஆணும், குள்ளமா இருக்கற பொண்ணும் பொய் சொல்லாதுங்கற உலக விதிப்படி, இனி STEFFI நமக்குத்தான் அப்படின்னு  முடிவு பண்ணியாச்சு.

ஆனா அதுல பெரிய சோகம் என்னன்னா, அந்தப் பொண்ணு பாட்டுக்கு, இப்படி அவளுக்கு ஏத்த ஜோடி ஒன்னு சென்னைல இருக்கறது தெரியாம, ஊர் ஊரா போய் டென்னிஸ் வெளையாடிக்கிட்டிருக்கு.

எனக்கு, ஒவ்வொருதடவை, அது துள்ளிக்குதிச்சு சர்வீஸ் போடும்போதெல்லாம், அந்த,    
சே ஏன் உங்களுக்கு இவ்வளவு கேவலமா தோணுது
மூக்கு அழகைப் பார்க்கும்போதெல்லாம் நம்ம இருக்கறதா அந்தப் பொண்ணுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னே தெரியல. 
நம்ப இளையராஜகிட்ட சொல்லி
"ஜெர்மனியின் செந்தேன் மலரே"
அப்படின்னு பாட்டெல்லாம் போட வெச்சேன். 
சரி, சரி, காதல்ல இந்தமாதிரி பொய்யெல்லாம் அலௌடுதான். 

அதை எப்படியாவது அந்தப் பொண்ணு கேட்டுரும்னு பாத்தா, நம்ம தொரை சொல்லறான், ‘விவிதபாரதி அங்கல்லாம் எடுக்காதுன்னு.

அப்பல்லாம், இந்த பாழாப்போன இன்டர்நெட் எல்லாம் வரலை. 

தபால்ல நம்ம போட்டோவ அனுப்பலாம்னா, அவங்க அப்பா கைல அந்த லெட்டர் கெடைச்சு, யாராவது, மொரட்டு மொறை மாமனுக்கு அத கட்டிவச்சுருவானோன்னு பயம்

எத்தன தமிழ் சினிமா பாக்கறோம், இதுகூடவா யோசிக்க மாட்டோம்?

பேசாம, கொஞ்சம் காசு சேத்துக்கிட்டு, வைகோ மாதிரி கள்ளத்தோணி புடிச்சாவது, ஜெர்மனிக்கு போய்டலாம்னு, அன்னில இருந்து, சிக்கனமா, காசு சேத்திவைக்க ஆரம்பிச்சேன்.

ஆனா, அதுலயும் ஒரு சிக்கல், ஒவ்வொரு தடவை, ரத்னா கபே தாண்டும்போதெல்லாம்,
நாளைக்கு கெடைக்கற STEFFIய விட, இன்னைக்கு சாப்பிடுற சாம்பார் இட்லி மேல்ன்னு  ஔவையாரோ, ஷேக்ஸ்பியரோ சொன்னது நியாபகம் வந்து தொலைச்சு, சேமிப்பெல்லாம் இட்லி சாம்பார்ல கரைய ஆரம்பிச்சிருச்சு.

சரி, அந்தப்பொண்ணு குடுத்துவச்சது அவ்வளவுதான்.


அடுத்த வரிய, என் பாலிசிக்கு(!!!) விரோதமா, இங்கிலீஷ்ல எழுதறேன். அது எதுக்குன்னா, இதை என்னைக்கோ, படிக்கறப்போ, அந்த ஒரு வரியையாவது படிச்சு, அந்தப்பொண்ணு மனசைத் தேத்திக்கிட்டும்ன்னு.

She had settled for the second best – Agassi.


இதை இத்தனை வருஷம் கழிச்சு எழுதி ஏண்டா என் கழுத்த அறுக்கறேன்னு நீங்க கண்டிப்பா கேப்பீங்க.


ஆனா, காலைல, வாழைத்தண்டு, பொரியலுக்கு வெட்டச் சொல்லி என் பொண்டாட்டி கொடுத்தப்போ STEFFI GRAF நியாபகம் வந்ததுன்னு, யாராவது, என் குடும்பக்  குருவிக் கூட்டுக்குள்ள குண்டு வச்சுறாதீங்க ப்ளீஸ். 

இப்பல்லாம் அடி தாங்க முடியறதில்லை!!!


நில்லாது ஓடும் நதி!

சித்திரையில் நிலாச்சோறு,
தைப்பூசப்  பால்க்குடங்கள்,
ஆடி மாதம் முளைப்பாரி,
காதோலை கருகமணி !!

அம்மனுக்கு நீராட்டு,
பங்குனியில் தீர்த்தக்குடம் !
கரையோர நாகருக்கு
குடம்குடமாய் அபிஷேகம் !!

இலையோடு பூச்சொரியும்
கரையோர அரசமரம் !!
தலைவணங்கித் தற்காக்கும்
நாணல்களும், கோரைப் புல்லும் !

கடமைக்கு காக்கைக் குளி !
உற்சாக எதிர்நீச்சல் !கரையோர இடுகாட்டில்,
கண்ணீரில் தணல் தணித்து
கரைக்கப்படும் துயரங்கள் !!

குடும்பச்சண்டை,
காதல் தோல்வி,
பரீட்சை பயம்,
கணவனுடன் வேறுபாடு  -
தற்கொலைத் தர்ப்பணங்கள் !!

அத்தனைக்கும் சாட்சி சொல்லி,

நில்லாது ஓடும் நதி!வியாழன், 27 நவம்பர், 2014

தேனீக்களின் ராஜாங்கம்!

ராமாயி என்னும் ராணித்தேனி!

நீங்கள் தேனீக்களின் வாழ்க்கை முறையைப்  பார்த்ததுண்டா?

ஒரே ஒரு ராணித்தேனி, அந்த ஒட்டுமொத்தக் கூட்டையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதுகூட வியப்பில்லை. அந்த  ராணித்தேனிக்குப் பின், அந்தக் கூடே உரு மாறிப்போவது ராணித்தேனியின் ஆளுமையின் அடையாளம்.

நம் சமுதாயத்தில், குடும்ப அமைப்பும், அதன் கட்டுமானமும், பெண்களை மையம் கொண்டே இயங்கி வருவது உண்மை. இந்தக் கருத்து, நான் உட்பட பல ஆண்களுக்கு சம்மதமாகாது அன்பாலும், கட்டுக்கு உட்பட்ட அதிகாரத்துடனும், ஒரு குடும்பத்தை வழி நடத்தும் ஆளுமை ஆணைவிட பெண்ணுக்கே அதிகம் இருப்பது, நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.

ஆண் என்பவன், பொருள் கொணரவும், பெண் என்பவள் அதை பேணிக்காத்து  குடும்பத்தை நெறிப்படுத்தவுமாகத்தான் நம் ஆரம்பகாலக் கட்டமைப்புக்கள் இருந்திருக்கக்கூடும். ஆணின் ஈகோ, தன்னைக் குடும்பத்தலைவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, வீட்டுக்குள் பெண்ணை அடக்கி ஆள முயன்றபோதுதான் நம் சமுதாய சீர்கேடுகள் ஆரம்பித்திருக்கும் என்று எனக்குத்  தோன்றுகிறது.

எதற்கு இத்தனை முன்னுரை?

எனக்குத் தெரிந்த பெண் ஆளுமைகளை வரிசைப் படுத்தச் சொன்னால், என் மனதில் முன் நிற்கும் உருவம், என் அப்பாவை பெற்ற பாட்டி, ராமாயி.

வேலூர் சின்னக்கடை வீதியில், ஒரு தெருவில் தலைவாசலையும்  மறுதெருவில் புறவாசலையும் வைத்திருந்த தொட்டிகட்டு வீடும், அதில் இருந்த ஒரு பெரிய குடும்பமும், கட்டியிருந்த மாடு கன்றுகளும், வயது வித்தியாசம் இல்லாமல் ராமாயி சொல்லுக்கு மறுவார்த்தை இன்றிக் கட்டுப்படும்.

புகையிலை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், வீட்டுக்குள், ராமாயி வார்த்தைக்கு மறுபேச்சு பேசியதில்லை செல்லாண்டி.

பத்து பிள்ளை பெற்று, அதில் ஒன்றை பிஞ்சிலேயும், மற்றொன்றை, வயதுக்கு வந்த பெண்ணாயும், பறிகொடுத்து, மற்ற எல்லா குழந்தைகளையும் ஊரே மெச்சும்படி தலையெடுக்க வைத்ததில், பொருள் தேடி வந்து தந்தது தவிர முழுமையும் ராமாயியின் பங்கு மட்டுமே.

இன்றைய சூழலில் இது எளிதாக தெரியலாம்.
1950களில் இரண்டு மகன்களை  MA. BT., ற்றொரு மகனை, B.Com படிக்கவைத்ததுடன், கட்டுக்கு அடங்காமல் திமிறிய கடைக்குட்டி மகனையும், வியாபாரத்தில் தேர்ச்சிபெற வைத்தது இமாலய சாதனைதான்.
நான்கு மகன்களையும், நெறி தவறாத பிள்ளைகளாய்  வளர்த்து, எல்லோருக்கும், தகுதிக்கு மீறிய இடங்களிலேயே பெண் எடுத்தது மட்டுமல்ல, தன்  இறுதி நாள்  வரைக்கும், எல்லோரும் ஒரே குடும்பமாய் உணர்ந்து வாழவைத்தது அவர் சாதனை.  
அது மட்டுமல்ல, நான்கு பெண்களையும், அதைப்போலவே நல்ல இடங்களில் மணம் புரிய வைததது மட்டுமின்றி, அவர்களையும் அதே ஆளுமையுடன் வார்த்ததும் அவரே.

எல்லோருக்கும் முதலில் பிறந்து, குறைபட்டு திரும்பிவந்த மூத்த மகள் வள்ளியம்மாள் தோழியாய்த் தோள் கொடுக்க, அடுத்தடுத்த குழந்தைகளை நிலைப்படுத்தியவர் ராமாயி. இரண்டாவது மகள் பாப்பாத்தி, தன்னைப் போலவே பத்து பிள்ளை பெற்றபோது, தாயுமனவளாய் அங்கு தாங்கிப் பிடிக்க, தன மூத்த மகள் வள்ளியம்மாவை பணித்தவரும் அவரே.

வருடம் ஒருமுறை, எங்கே எந்தநிலையில் இருந்ததாலும், பொங்கலுக்கு அனைவரும், வீட்டில் கூடிவிட வேண்டும் என்பது அவரது கட்டளை.

இதற்கு, ஹெட் மாஸ்டர் ஆக பணி புரிந்த பெரிய மகன், பள்ளி ஆசிரியராய் இருந்து, வியாபாரம் என்று போய் பல நாடு கண்ட இரணடாவது மகன், சென்னையில் உயர் பதவி வகித்த மூன்றாம் மகன், உள்ளூரில் வியாபாரம் செய்த இளைய மகன் அனைவரும் கடைசி வரை கட்டுப்பட்டு குடும்பத்தோடு நான்கு நாட்கள் வேலூர் வாசம் புரிந்தது ஆச்சர்யம் என்றால், நான்கு மருமகன்களும், அவசர அவசரமாக தங்கள் ஊரில் பொங்கல் முடித்த கையேடு, மாலையே குடும்பத்தோடு வந்து, நான்கு நாட்களும் தங்கிப் போவது, தவறவே இல்லாத வழக்கம் என் ஆயா இருக்கும் வரை.

கிட்டத்தட்ட ஐம்பது உருப்படிகள் அந்த வீட்டில்.

எங்கள் வீட்டு விறகடுப்பு, அந்த நான்கு நாட்களும் பாபா துனி. அநேகமாக ஏகதேசம் எரிந்துகொண்டே இருக்கும்.

மகளாவது, மருமகளாவது, யாராயிருந்தாலும் ஒன்றுதான். யார் கண்ணில் பட்டாலும், “இந்தாடி, இந்த வெங்காயத்தை வணக்கு”, “இந்த மாவை அரை என்று, கட்டளைகள், எல்லா வேலையும் சொந்த மேற்பார்வை. கிணற்றடி நடையில் கட்டியிருக்கும் பசுக்களுக்கு தீவனம் போடுவதாகட்டும், கடைசி பேத்திக்கு பாலூட்டுவதாக இருக்கட்டும், ஒரே வாஞ்சைதான், அன்பு கலந்த அதட்டல்தான். ஏதோ, ஒரு ஆத்மா பசி என்று வாய் திறக்க விட்டதில்லை. முகக்குறிப்பு ஒன்று போதும், “அடியே இவளே, அந்த பத்திருவான் பசியோட நிக்கறான் பாரு, மொதல்ல அவனுக்கு சாப்பாடு போடு என்று, அந்த வயிறு குளிர்ந்தபின்தான் மற்ற வேலை.

ஆற்றில்போய் ஆடிவிட்டு, கொலை பசியோடு வீடு வரும் அத்தனைபேரும், நீளமான பந்தியாய் உட்கார்ந்திருக்க, அத்தனை பேர் தட்டிலும், ஆவி பறக்க இட்லியும் சட்னி, சாம்பாரும். போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடிக்கும்போது, மதிய சாப்பாட்டுக்கு, பசி வயிற்றுக்குள் நமநமக்கும்!

மதியம் சாப்பிட்டு முடித்து, கால்சதம் வாண்டுகளும் மாடிக்கும் பக்கத்து வீடுகளுக்கும் ஓடி ஆடி களைத்து வரும்போது, தயாராக, இளம் சூட்டில் உளுந்து கஞ்சி. இனிப்பும், வாயில் நிரடும் தேங்காய் துருவலுமாய் ஒரு பெரிய சொம்பு நிறைய உள்ளே இறங்குவது தெரியாது. தன கை பக்குவம் மாயமாய் மறையும் வேகம் பார்த்து பூரிக்கும் கண்களில் வழியும் திருப்தியை பார்த்தவர் மட்டுமே உணர முடியும்.

அத்தனை பேரும் மென்று குவித்த கரும்பு சக்கை நடு வாசல் முற்றமெங்கும் சிதறிக் கிடக்கும். அதை ஒழிப்பதற்குள் இரவு சாப்பாடு. மாலையில், பெரியப்பா தலைமையில் ஆற்றில் ஆடிவந்த களைப்பு, வயிற்றில் தீயாய் மூள, பசியாறி, முற்றத்தில் விரித்த ஜமக்காளத்தில் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு படுக்கும்போது சொர்க்கம் தெரியும்.

எனக்கு, ஆரம்ப வருடங்களில் ஒரு சந்தேகம் இருந்ததுண்டு. ஆயா மடியில் வளர்ந்த தமிழ்ச்செல்வன் மேல் அவருக்கு இருக்கும் அன்பும், கவனமும், சென்னிமலை அம்மாயி வீட்டில் வளர்ந்த என் மேல் இருக்குமா என்று. கொஞ்சம் பட்டும் படாமலும்தான் எனக்கு உறவு என் ஆயாவுடன். ஒருநாள், அத்தனை கும்பலில், எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து, மூன்றாவது இட்லியோடு, இலையை மூடப்போன என் காதில், சமையல்கூட மறுகோடி மூலையில் இருந்த என் ஆயாவின் குரல் கேட்டது. “:அந்த குமாரபாளையத்துக்காரன் மூணு இட்லிதான் சாப்பிட்டான். பூஞ்சையா அவங்க ஆத்தாக்காரி மாதிரியே இருக்கறான் பாரு. ஏய் கீதா, பக்கத்துல நின்னு, அவனுக்கு இன்னும் ரெண்டு இட்லி போடு.

மனசெல்லாம்,. எங்கள் பின்னால், வெறும் உருவம் மட்டும்தான் சமையல்கட்டில்.

இது போதாதென்று, ஒரு பெரிய ஜாடி நிறைய, முழு எலுமிச்சை ஊறுகாய் வடிவில், நல்லெண்ணையில் மிதந்துகொண்டு, கண்ணை உருட்டி விழித்துக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு ருசியை, அதற்குப்பின் இன்றுவரை நான் சாப்பிட்டதில்லை. சும்மாவே, ஆளுக்கொன்றாய் எடுத்து சாப்பிடுவோம். பூவாய் வாயில் கரையும் எலுமிச்சை ஒரு அதிசயம். எல்லா வீட்டுக்கும், பாட்டிலில் ஊறுகாய், வாழைப்பூ, பனித்தடுக்கு இலைகள், தேங்காய் என்று பொதி சுமந்துகொண்டுதான் மனமே இல்லாமல் ஊருக்கு கிளம்புவோம்.

வழியனுப்பும் எங்கள் ஆயாவின் கண்களில், அன்பு கனிந்திருக்கும்.
இடையிடையே, காலாண்டு, அரையாண்டு விடுப்புகள், மாரியம்மன் திருவிழா, பெருமாள் கோவில் தேர் என்று வருடத்தில் பலமுறை போனாலும், முழு அட்டண்டன்ஸ் விழும் அடுத்த பொங்கல் எப்போது என்றுதான் எங்களுக்கு எல்லா நாளும் கழியும். 

பெண்கள், முக்கியமாக, ஓர்ப்படிகள், நங்கை நாத்திகள் வளையவரும் அத்தனை நாட்களிலும், ஒரு சிறு முணுமுணுப்புக் கூட எழுந்து நான் பார்த்ததில்லை. அதைப் போலவே, எதை கேட்டும் இல்லை என்று அவர் வாய் சொல்லி நான் கேட்டதில்லை.

சந்தைக்குப் போய்வந்து தாத்தா கொடுக்கும் சில்லறைகளோடு எல்லோரும் செவிடன் கடை ஜவ்வுமிட்டாய்க்கு ஓடும்போது, திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஆயாவின் பெருமிதம் வெறும் பார்வைக்கே புரியும்.

அத்தனை படித்த மகன்கள் அம்மாவிடம் பவ்வியமாய் ஆலோசனை கேட்பது வியப்பென்றால், மருமகன்களும், அவர் அபிப்ராயம் மீறி நடக்காதது அதிசயம்.

இதில், என் தாத்தாவை என் ஆயா நடத்தும் விதம், இன்னொரு ஆச்சர்யம்.
திண்ணையில் எங்களோடு விளையாண்டுகொண்டோ, தெருவில் போகும் செம்படவர்களை அதிகாரம் செய்துகொண்டோ, உட்கார்ந்திருக்கும் தாத்தாவை, “அந்த ஆளை வந்து காப்பி குடிச்சுட்டு போகச்சொல்லு என்று, ஒரு சொம்பு காபியை எடுத்து வைப்பதாகட்டும், “ஏன், குளிச்சுட்டு வந்து, நேரத்துக்கு சாப்பிடத் தெரியாதா ஆம்பிள்ளைக்கு?” என்று எந்நேரமும் ஒரு அதட்டல் கலந்த அழைப்புத்தான் பெரும்பாலும்.

அது மட்டுமல்ல, மக்க மருமக்களிடம் பேசும்போது கூட, தாத்தாவைஅவரோட முன்கோபத்தை குறிப்பிட்டு பேசும்போது, எனக்கு கொஞ்சம் புரியாத வருத்தமாகவே இருக்கும். எனக்கு என்னவோ, தாத்தா கொஞ்சம் ஸ்பெசல். வருத்தம் தாங்காமல், அவரிடமே, “ஏன் தாத்தா, ஆயா உங்கள எந்நேரமும் திட்டிக்கிட்டே இருக்காங்க. நீங்க ஏன் அதுக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க ன்னு கேட்டா, “அட கிறுக்கு புள்ள, அவ எங்கடா என்ன திட்டறான்னு கேட்டு சிரித்தது, அடிநாதமான அன்பு என்பது இப்போதுதான்  எனக்கு விளங்குகிறது.

மகன், மகளுக்கு மட்டுமல்ல, பேரன் பேத்திகளுக்கும், யாருக்கு யார் என்பதை அவர்தான் முடிவு செய்வார். அவர் காலம் வரைக்கும் 

யாருக்கும், யார் மீதும் ஒரு சிறு வருத்தம் கூட வர அவர் விட்டதில்லை.

வருடம் ஒருமுறை, இப்படி, விசேஷ காலத்தில், குடும்பமே ஒரு இடத்தில் கூடுவது, வெறும் பண்டிகைக்காக மட்டுமல்ல, இடையில், கடிதங்கள் மூலம் ஏற்படும் சின்னச்சின்ன உரசல்களையும், மனம் விட்டுப் பேசிக் கலைந்துகொள்ளவே என்ற உளவியல் காரணம் ஏனோ எங்களுக்கு இவ்வளவு தாமதமாகத்தான் புரிகிறது.   

நாமக்கல் மருத்துவமனையில், இனி பிழைக்க மாட்டார் என்று எங்கள் உறவுக்கார மருத்துவரே கைவிட்ட நிலையில், பார்க்க வந்த என் தந்தையையும், அவர் தங்கை, பாப்பாத்தியையும் உட்காரவைத்து, என் தங்கைக்கும், அத்தை மகனுக்கும், கல்யாணம் முடிவு செய்துவைத்தார். அப்போது என் தங்கைக்கு, பதினேழு வயது, அத்தை மகன் சீனுவுக்கு, பதினெட்டு வயது.

படிப்புக்கு பயந்துக்கிட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்கிச்சுக என்று, எனக்கு மட்டும்தான் சிறு ஆதங்கமே தவிர, வேறு யாரும், என் அம்மா உட்பட, அதற்கு மறுப்பே சொல்லவில்லை.
அது எவ்வளவு நல்ல முடிவு என்பதை, இன்றைக்கு அவர்களின் வாழ்க்கைத்தரம் சொல்கிறது.

அந்த கல்யாணமும் முடிந்து, சந்தோஷ் குமாரும் பிறந்தபோதுதான்  எங்கள் ராமாயி எங்களைப் பிரிந்தார்.
தங்கை மகனை கையில் வைத்துக்கொண்டு, அவர் இறுதி உறக்கம் பார்த்தது  எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது.

அதன்பின் சில வருடங்கள் !!

என் தாத்தா, இருந்தார் என்றுதான் சொல்லமுடியும். வாழ்ந்ததெல்லாம் என் ஆயா  இருக்கும் வரைதான்.

வீட்டை பங்கு பிரித்துக்கொள்ளும் முடிவில், அந்த வீடு, நான்கு புறாக்கூடுகள் ஆனதும், நாங்கள் ஆடி ஓடிக் களித்த அந்த முற்றமெங்கும் சுவர்கள் முளைத்ததும், இன்றைய நிதர்சனம்.

இன்றைக்கு, என் தாயும் தகப்பனும் அங்கு வசித்தாலும், மற்ற பங்குகளில், வாடகைக்குக் குடிவந்த முகம் தெரியாத யார் யாரோ!

அந்த வீட்டில் தங்கும் மனஉறுதி எனக்கு இல்லாததால், ஒரு விசிட்டராகவே அங்கு போய்வரமுடிகிறது.

அதன்பின் எத்தனை பொங்கல்கள் வந்துபோயவிட்டன. எங்கள் ராணித்தேனீயோடு கலைந்துபோன கூட்டில்
நினைவுகள் மட்டுமே, இன்னும் மிச்சம் இருக்கின்றன எனக்கும், என்போலவே வேறு யாருக்கேனும்.


எதைத் தொலைத்தோம் என்பது தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும்  எங்களுக்கு, எது நிரந்தரம் என்பது எப்போது புரியும்?


திங்கள், 24 நவம்பர், 2014

இதுதான் காதல்!

பாப்பாத்தி, நான் போயிட்டு வர்ரேன்.

இதை, பத்தாவது தடவையாகச் சொன்னார் நம் கதை நாயகர் K.S.  என்று எல்லோரும் அழைக்கும் சுப்பிரமணியம்.

கல்யாணத்துக்குத் தயாராக இருக்கும் மகள்கள் கீதாவும், சுமதியும் ஒருவரை ஒருவர் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொள்ள, வள்ளியம்மாவின்  குரல் தங்கையை பார்த்து ஓங்கி ஒலித்தது.
இந்தாடி, நீ போய், என்னன்னு கேட்கறவரைக்கும் அந்த ஆள் போகமாட்டாரு. போய் அனுப்பிச்சுட்டு வா

குறும்புச்  சிரிப்பு சிரித்துக்கொண்டு இந்த நாடகத்தை ரசித்துக்கொண்டிருந்தார் அவரை கூட்டிச்செல்ல வந்திருந்த பிசினஸ் பார்ட்னரும் உறவினருமான தங்கவேல்.

இது ஒன்றும் புதிதல்ல. இத்தனைக்கும் ஒரு இரண்டுநாள் வியாபார விஷயமாக தஞ்சாவூர் போகப்போகிறார் அவ்வளவே!

பாப்பாத்தி வந்து வழியனுப்பாமல், கல்யாணம் ஆன இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருநாள்கூட அவர் வாசல்படி தாண்டியதில்லை. பாப்பாத்தியும், அவர் தலை தெருமுனையில் திரும்பி மறையும்வரை நின்று பார்க்காமல் உள்ளே போனதில்லை.

பாண்டமங்கலம் கடை வீதிக்கு இந்த நிகழ்ச்சி ஒன்றும் புதிதில்லை.
இன்னைக்கு கல்யாணம் ஆனவர்கள் கூட இப்படி இருக்கமாட்டார்கள் என்று எல்லோருமே சந்தோசத்துடன் சலித்துக்கொள்ளுவார்கள்.

மாமா அலங்காரப்பிரியர். 
சும்மா தெருமுனை வரைக்கும் போய்வருவது என்றால்கூட, அந்த ஊரில் மற்றவர்களைப்போல் ஏதோ ஒரு பனியனையோ, சட்டையையோ மாட்டிக்கொண்டு போகமாட்டார். மனதுக்குப் பிடித்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பா இல்லாமல் அவர் படி இறங்கி, யாரும் பார்த்ததில்லை. 

அதுபோலவே சாப்பாட்டிலும். ஒரு கல் உப்போ, ஒரு துளி இனிப்போ, உறைப்போ குறைந்தாலும், முகம் சுளித்துவிடுவார் எங்காயிருந்தாலும். அப்படி அவர் நாக்கைப் பழக்கி வைத்திருந்தது, திருத்தமான என் அத்தையின் சமையல்.

வியாபாரம் இல்லாத நாட்களில், பொழுதைப் போக்க, மகன்கள் சீனியோடோ, சேகரோடோ காப்பித்தூள் கடையில் உட்கார்ந்திருக்கும்போதும் ஒருநாள்கூட, கசங்கிய சட்டையோடோ, கலைந்த கேசததோடோ அவர் இருந்து யாரும் பார்த்ததில்லை.

ரசித்துக் குளித்து முடித்து, கண்ணாடி முன்னாள் நின்று, அவர் தலையைப் படிய வாரும் அழகை அந்த வயதிலேயே விளையாடுவதை விட்டு வேடிக்கை பார்ப்போம் நானும், தமிழ்செல்வனும். தலைசீவி, பட்டை பட்டையாய் விபூதி இட்டுக்கொண்டு, அவர் ஜவ்வாது டப்பாவை திறக்கும்போது, வீடே மணக்கும். தண்ணீரில் குழைத்து, ஜவ்வாது பூசி, திருப்தியாகாமல் மற்றும் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்து, விலகி இருக்கும் ஒன்றிரண்டு முடியையும் படிய வைத்தாலும், எங்கள் பாப்பாத்தி அத்தை, திருப்தியாய்த் தலை அசைக்காமல் நகரமாட்டார் எங்கள் மாமா.

சிறுவர்கள் எங்கள் எல்லோருக்கும், இது ஒரு ஆனந்தமான காட்சி.  அதிலும்,எனக்கும், தமிழ்செல்வனுக்கும் எங்கள் அத்தையை வெட்கப்பட வைத்து பார்ப்பதில் அப்படி ஒரு ஆனந்தம்.

மாமாவை இப்போது யாராவது பெண்கள் பார்த்தால்கூட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்பாங்க என்று சொன்னால், ஏற்கனவே பூரித்திருக்கும் எங்கள் அத்தை முகம் இன்னும் ஒரு சுற்று பூரித்து மலரும்.

அவரும் ஒன்றும் சளைத்தவரில்லை.
எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தபோதும், எந்நேரம் பார்த்தாலும், மலர்ந்து, சிரிக்கத்தயாரக இருக்கும் அந்த முகத்தில், வேர்த்துவடிந்தோ, வட்டமான அந்த பெரிய குங்குமப்பொட்டு வடிவம் குலைந்தோ நாங்கள் பார்த்ததில்லை.

யாரிடமும் கடிந்து பேசத்தெரியாத குணம் எங்கள் அத்தைக்கு மட்டுமல்ல, மாமாவுக்கும்தான்.
அதுவும், பள்ளிக்கூடத்து சிறுமி போல் எப்போதும் புன்னகை பூத்து நிற்கும் எங்கள் அத்தையை பார்க்கும்போது, அந்த இரும்புப்  பெட்டியில் ஒட்டிவைத்திருக்கும் லட்சுமி படம் உயிரோடு நேரில் வந்தமாதிரிதான் இருக்கும்.

பாப்பாத்தி அத்தை எங்கள் ஆயாவுக்கும், தாத்தாவுக்கும் நாலாவதாய்ப் பிறந்த குழந்தை. உள்ளூரிலேயே ஒரு மூன்று மைல் தூரத்தில் கட்டிக்கொடுத்த மகளும் தன்னைப்போலவே பத்து பிள்ளை பெறுவார் என்று எங்கள் ஆயாவே நினைத்திருக்க மாட்டார்.

இருவரும், மடிப்பு கலையாமல் உடுத்தி, ஜோடியாக எங்காவது விசேஷங்களுக்கு போகும்போது எல்லார் கண்களும் அவர்கள் மேல்தான். பத்து பிள்ளை பெற்ற ஆயாசமோ, அலுப்போ, இருவர் நெருக்கத்திலும் கொஞ்சம் கூட தெரியாது. அன்றைக்குத்தான் கல்யாணம் ஆன புதுமணத்தம்பதிகளைப் பார்ப்பதுபோல்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.
எங்கே எவ்வளவு கூட்டத்திலும், மாமா சாப்பிட்டாரா என்று அத்தைக்குத் தெரியும், அத்தை சாப்பிட்டது மாமாவுக்குத் தெரியும். இரண்டு பேரும், கூட்டத்தில் தனித்தனியே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். எப்படித்தான் சொல்லிவைத்தமாதிரி ஒரே நேரத்தில் வாசலுக்கு வருவார்கள் என்று, கடைசி வரைக்கும் எனக்கு புரிந்ததே இல்லை.
முன்பே சொல்லிவைத்தமாதிரி இருவரும் நடப்பது  அற்புதமான கெமிஸ்ட்ரி, ஒருவருக்கு ஒருவர் காத்திருந்ததுமில்லை, காக்கவைத்ததுமில்லை. அப்படி ஒரு ஒற்றுமை.

பட்டு ஜிப்பாவும் வேஷ்டியுமாக மாமாவும், தலை நிறைய மல்லிகையும், பட்டுப்புடவையுமாக, ஏழு கல் மூக்குத்திக்கு போட்டியாக சிரிக்கும் முகமுமாக அத்தையும் இல்லாமல் எந்த விசேஷமும் நிறைவாய் இருந்ததில்லை.

மூத்த மகள் சுமதிக்குக் கல்யாணவயது வந்தபோதுதான் எங்கள் அத்தைக்கு கடைக்குட்டி சந்துரு பிறந்தான். 
நான் கூட, எங்கள் அத்தை வீட்டில் எனக்கு நினைவு தெரிந்து தொட்டிலை அவிழ்த்ததே இல்லை என்று கிண்டல் செய்ததுண்டு. அதற்கான வெட்கப் புன்னகையில் ஒரு கர்வம்கூடத் தெரியும்.

தான் பத்து பெற்றதோடு மட்டுமல்லாமல், தன் மகள்களும், வீட்டுக்கு வந்த மருமகள்களும், என்று, மேலும் ஒரு இருபது குழந்தைகள் தன் மேற்பார்வையில் பெற்றபோதும் அயர்ந்ததில்லை எங்கள் அத்தை. 

அண்ணன், தம்பி, அக்கா தங்கை எல்லோர் வீட்டுப் பிரசவத்திலும் பாப்பாத்தி அத்தை இல்லாமல் எதுவும் நடந்ததில்லை.

நானும் என்  மனைவியும், நம்பிக்கை எல்லாம் இழந்து  தவித்த  வருடங்களிலும் எங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தது மட்டுமல்ல, எங்கள் மகளை, இரண்டுநாள் என் மனைவி கூடவே இருந்து எனக்கு போட்டியாக கைநீட்டி வாங்கியதும் எங்கள் அத்தைதான்.

இத்தனை அன்பும் அனுசரணையும் எங்கிருந்து வந்திருக்கும் என்று இன்றைக்கு யோசித்தால், அவர்களின் வாழ்வில் இருந்த காதல்தான் காரணம் என்று புரிகிறது.
அயர்ச்சியோ, சலிப்போ ஒருகணம் கூட வெளிப்படவில்லை என்பதற்கு, உள்ளுக்குள் உறையும் காதல் தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

வாரத்தில் ஒருநாள், இரண்டுநாள் வசூலுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் என்று போய் நள்ளிரவோ, அதிகாலையோ வீடு வரும் மனிதருக்கு, எந்தவிதமான தொலைதொடர்பும் இல்லாத அந்தக்காலத்தில், தலை கலையாமல், அலங்காரம் குலையாமல் எதிர்பார்த்துப் புன்னகையோடு கதவுதிறக்க எப்படி முடியும்?

அந்தநேரத்திலும், பாப்பாத்திக்கு பிடிக்கும் என்று பதுஷாவோ, ஜாங்கிரியோ, மல்லிகைபந்துடன் வாங்கிவரவும், முகம் கழுவி வரும் முன், துடைக்கத் துண்டு எடுத்து நீட்டிய கையோடு, ஒரு சொம்பு நிறைய காபியோடு பக்கத்தில் உட்கார்ந்து கதை கேட்க முடிவதும் காதலில்லாமல் வராது.

அந்தக்  காப்பி பரிமாறல் அப்படி ஒரு அழகு,

கடைசி வரை, வாய் பொறுக்கும் சூட்டில், ஒவ்வொரு  மிடறாக டம்ளரில் இவர் ஊற்றித் தருவதும், வீட்டை விட்டுக் கிளம்பும்போது செருப்புப்  போட்டதிலிருந்து, இப்போதுவந்து நுழைந்ததுவரை, ஒன்று விடாமல், வரிவரியாய் அவர்  ஒப்பிப்பதும், லயித்துப்போய் இவர் கதை கேட்டு முடிக்கவும், சொம்பு காப்பியும் குடித்துமுடிக்கவும், ஒரு, சரசம் இல்லாத அன்பு இழையோடுவது பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும்.

பத்து குழந்தைகளையும், குறையின்றி, தகுந்த இடத்தில் மணம் முடித்து, வாழ்க்கையிலும் ஒவ்வொருவரையும் நிலை நிறுத்தி நிமிர்வதற்குள், பேத்திகள் திருமணம் என்று, மறுபடியும் அலுப்போ, சலிப்போ இல்லாமல் ஓடியாடிய அவர்களை நினைக்க, இன்றும் மலைப்பாக இருக்கிறது.

மாமா வாங்கித் தந்த இனிப்போ, அல்லது, வாழ்க்கை முழுக்க மனதில் நிறைந்த இனிப்போ, அத்தை உடலில் சுகரை ஏற்ற, அப்போதுகூட இருவரும் மனம் தளரவில்லை.

எல்லாவற்றுக்குமே, ஒரு முடிவு இருக்குமல்லவா, தன வாழ்க்கை முடிவதை, தீர்க்க சுமங்கலியாய், அந்தப் பொட்டும் புன்னகையும் குலையாமல் போவதை உணர்ந்த என் அத்தை, தன் அந்தி நாட்களில், புன்னகையோடு, டாக்டர் சொன்ன எல்லா  பத்தியங்களையும் மறுதலித்து, ஏற்றுக்கொண்டார்.
அவர் கவலை எல்லாம்  தான் போனால் தன் நிழல் நீண்டநாட்கள் இந்த உலகில் தங்காது என்பதாகவே இருந்தது.
அது அப்படித்தான் ஆனது. 
அத்தர் குழைத்துப் பூசாத
தலை கலைந்து
பசிக்கு சாப்பிடும் ருசிமறந்த மாமாவை
அதற்குப்பின்தான் நாங்கள் வேதனையோடு பார்க்க நேர்ந்தது. 

அதேபோல், அதிகநாட்கள் தாங்காமல், தன் பாப்பாத்தியைத் தேடிக்கொண்டு, உறங்குவதுபோல் இயல்பாய் ஒருநாள் புறப்பட்டுப் போனார் எங்கள் K.S.
ஒருவகையில் அந்த இணை பிரிந்து ஒற்றை உயிராய் வேதனைப்படுவதைவிட, இதுதான் நிம்மதியாகவே பட்டது எங்களுக்கும்.


எந்தக் காதல்கதையும் அப்படியே முடிந்துபோக விடுவதில்லை இறைவன்.

அவர்களின் மூத்தமகன் எங்கள் ஞானமாமா, சமீபத்தில், அறுபதாம் கல்யாணம் கண்டார். அவர்களின் எந்த வாரிசுக்கும் இல்லாத அளவுக்கு, என் ஞானமாமாவுக்கும், இந்திரா அக்காவுக்கும், அப்படி ஒரு அன்பும், காதலும்.
சீனியர் தம்பதிகளைப்போல, தளுமபிவழியும் காதல் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இவர்களின் ஊடும்பாவுமாய் இழையும் காதல் இலைமறை காய்.
பெரியகுடும்பத்தில் தலை மகன், அப்பாவோடு தோள் நின்று அத்தனை தம்பி தங்கைகளுக்கும் வழிகாட்டிய அவர் சின்ன கண்டிப்பு முகமூடி போட்டுக்கொண்டிருந்தாலும்
இன்றுவரை, தன தங்கைகள் யாரையும் கண்ணு என்ற வார்த்தை மாறி அழைத்ததில்லை, அவர்களும், பேரன் பேத்தி எடுத்தபின்னும்.

அவருக்கு ஏற்ற குணவதியாய் வந்து வாய்த்த எங்கள் அக்காவும், இன்னொரு பாப்பாத்தி  அத்தையாய், யாருக்கும்  ஒரு குறை வைக்காமல் பார்த்துக்கொள்கிறார்.

அவர்களுக்கு மூன்றும் பையனாய் போனதுதான் எனக்கு இன்றைக்கும் ஒரே குறை. 
எனக்கு பயந்துகொண்டே பெண்பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை என்று சிரிக்காமல் சொல்லுவார் என் அக்கா!

 அவர்களுக்கு பெண் பிறந்திருந்தால், தூக்கிவந்து தாலி கட்டியிருப்பேன்.

அவர்களுக்கு என்மீதான நேசம் சொல்ல, எனக்கு இத்தனை வயதிலும், என் அப்பாவின் எண்பதாம் கல்யாண விழாவில், ஆயிரம்பேர் இருக்க, என் அக்காவின் மடியில், தலை சாய்த்து அமரவும், அவர்களின் அறுபதாம் கல்யாணத்திற்கு, சற்றே தாமதமாகப் போகநேர்ந்தபோது, கொஞ்சமும் தயங்காமல் இருவரையும், பார்க்கும் அத்தனை விழிகளும் விரிய, கட்டிப்பிடித்துக்கொள்ளவும் என்னால் முடிந்தததை சொல்லலாம். 

இத்தனைக்கும், அவர் என் ஞானமாமாவை மணந்தபின்பே எனக்கு அக்கா ஆனவர்.

பாப்பாத்தியும், K.S.உம் ஞானமும், இந்திராவுமாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 


உண்மைக்காதல்,உருவங்களோடு அழிவதில்லை!


எங்கள் பாப்பாத்தியும், K.S.ம்    

வடுக்களில் உறையும் வலி!


அதிகாலை "நலமா?" என்ற ஒற்றை அலைபேசி வார்த்தை போதும்
நினைவு வெள்ளத்தின் மதகை உடைக்க!
 _________________________________________________________

ஒற்றை மேகத்தால்,
மழையுமில்லை- நிழலுமில்லை!

___________________________

ரசிக்க ஆளில்லாமல்
பகல் நேர நிலவுபோல்
தனித்து அலைகிறது
என் காதல்!

___________________________

நினைவுகளின் முள் படுக்கையில்
பீஷ்மராய் நான்!
என் உயிர் விடுவிக்கும் காண்டீபமோ,
தொலைந்துபோன உன் கையில்!

__________________________

கண்ணீர்ச் சுரப்பி
வற்றிப்போகும் நாளில்,
காதலின் வெப்பத்தில்
உலர்ந்து தீப்பிடிக்கும் உயிர்!

_________________________


என்றாவது சந்திக்க நேரும்
துயரத் தருணத்தில்,
என் கண்ணீர் வெப்பம்
சுடாத தூரத்தில் நின்றுவிடு!

மோப்பக்குழையும் அனிச்சம் நீ!

_______________________


காதலிக்கத் தெரிந்த உனக்கேனடி
காத்திருக்கும் பொறுமையில்லை?

______________________


எத்தனை ஆழப் புதைத்தால் என்ன,
எட்டிப்பார்த்து வதைக்கிறது உன் வாசம்!

_______________________

நாம் சேர்ந்திருந்தால்,
இந்நேரம் தீர்ந்திருக்குமோ,
தளும்பித் ததும்பும் என் காதல்?

_________________________

உன் கால் நனைத்த அலையை
சேமித்துவைத்திருக்கும்
ஆழ்கடலில் இறங்க ஆசை!
மரணம் என்கிறார்கள் அதை-
அறியாதவர்கள்.

__________________________

உன்னைப் பார்க்க நேராமலே
என் இளமையைக் கடந்திருந்தால்,
வலிகளை அறிந்திருக்கமாட்டேன்!-
வசந்தத்தையும்!

___________________________

தேவதைகள் வரம் தரவே!
சேர்ந்து வாழ ஆசைப்பட்டது
என் பிழையே.

___________________________

செய்த சத்தியங்கள் மறந்து
வெட்கமின்றி என் வானத்தில்
ஒளிர்கிறது சாட்சியாய் நின்ற
நிலவு!

_________________________

நேற்றுப் பார்த்தது
உன் மகளெனில்,
என் மகன் கண்ணில் படாமல்
பார்த்துக்கொள் தயவு மிகக்கொண்டு!!,
என் ரசனைகளே அவனுக்கும்!
என் வலிகளும் பழகவேண்டாம்!

____________________________

பிரிவு நல்லது!
கண்ணாடி காட்டும் என்
முகத்துச் சுருக்கத்தை,
உன்னில் காணும் வலி தவிர்த்ததே!!

____________________________

யார் யாரோ இறங்கிப் பார்க்கிறார்கள்
நம் ரகசியங்கள் அறிந்த நிலவில்.

____________________________

கவலைக் கூர்முனை உழுது
என் உயிர்க்காகும் பழுது!

______________________________

ஆர்ம்ஸ்ட்ராங்கிடம்
எத்தனை கதை சொல்லி
அழுததோ நிலவு-
நம்மைப்பற்றி!!

________________________________

உன் நினைவைத் தராததைத்
தேடியலைந்தேன்!
முன்வந்து நிற்கிறது
மரணம்.

______________________________

அன்பிற் பெருவலி யாதுல?

_______________________________

உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளியைவிடவா பெரிது,
பிரபஞ்சப் பெருவெளி?

_________________________________

எங்கோ அயர்ந்துறங்கும்
உன் ஓயா விக்கலின் காரணம்
எனக்கு மட்டுமே தெரியும்!

__________________________________

நினைவு மேகங்கள் இருண்டதில்
நெஞ்சக் கடலின் ஆழத்தில்
காற்றழுத்தத் தாழ்வு மையம்!

____________________________

எப்போதும் இருக்கும் நிழலை,
என்றேனும் பொழியும் மழை
குலைப்பதுமில்லை,
குறைப்பதுமில்லை!


____________________________________________________________