ம்..
உறுமலாய் வந்த மறுப்பில் ஆரத்தித்தட்டை நழுவவிட்டார்
பொட்டுவைக்க வந்த பெரியம்மா!
அடர்ந்த புருவமும்,அறிவும் கோபமுமான கூரிய பார்வையும் நம் கதாநாயகனின்
அறிமுக உருவம்!!
அது 1960களின் ஆரம்ப வருடம்!
மாப்பிள்ளை அழைப்பின்போது முதல்முறை பார்க்க நேர்ந்த
பெண்வீட்டார் கொஞ்சம் அசந்துதான் போனார்கள்!
இருபத்தேழு வயதுக்கு கறுத்த நிறமும், ஆறடி உயரமும்
அதற்கேற்ற அகலமான மார்பும் உடற்கட்டும்!!
நல்ல சிகப்புநிறமான பெண் பக்கத்தில் சுப்பிரமணியம் நின்றபோது
அப்பொதுதான் பிரபலமாக ஆரம்பித்த தி.க. கொடிபோல் இருந்தது!!
டென்னிஸ் வீரர்! அரசுப்பள்ளியின் விளையாட்டு மற்றும்
வரலாற்றுப் பாட ஆசிரியர்!
தீவிர பெரியார் பற்றாளர், கடவுள் மறுப்பாளர்!
திருமணம் முடிவான நாள்முதல், தான் தாயிடம்
விதித்திருந்த நிபந்தனைகள் ஒவ்வொன்றாய் மீறப்படுவது கண்டு, எழுந்த சினத்தின் அடக்கமுடியாத
வெளிப்பாடே,ஆரத்தி
எடுத்து பொட்டுவைக்க வந்தபோது வந்த உறுமல்!
கல்யாணமேடையில் வந்து உட்காரும்போதே தாயை கோபமாய் தேடிய
பார்வைக்கு சிக்காதுபோக,
புரோகிதரிடம்
உரக்கச் சொன்னார் –
“மந்திரத்தை நிறுத்துங்கள்!”
ஹோமத்துக்காய் வைத்திருந்த நெய் ஜாடியைக் கையில் எடுத்தவர் பக்கத்தில் விதிர்த்துப்போய்
உட்கார்ந்திருந்த சிறுவன்,
மைத்துனன்
கையில் கொடுத்து
“கொண்டுபோய் கிச்சனில் கொடு “ என்றார்
உறுமலாய்!
சுற்றிலும் எல்லா இயக்கமும் சட்டென்று நிற்க, ஒரு தர்மசங்கட
அமைதி!
முகம் வெளிறப்பார்த்த புரோகிதருக்கு அடுத்த கட்டளை!
சட்டைப்பையிலிருந்து எடுத்த
திருக்குறளின் மனைமாட்சி
அதிகாரத்தை படிக்கச்சொல்ல,
நடுங்கும்
கரமும் உளறும் மொழியுமாய் அவர் படிக்க, மஙகளநாண் பூட்டி திருமணம் நிறைவுற்றது!
அதுவரை கண்ணிலேயே படாமல் பதுங்கியே இருந்த தாயை ஒதுக்கிவிட்டு,
பெண்ணின் தாயாரைத் தேடி வந்தவர்,
“என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இந்த நிபந்தனைகளை
உங்களிடம் என் தாயார் சொல்லியிருப்பார் என்று நினைத்தேன்!
இனி,என்ன
சம்பிரதாயஙகளானாலும் செய்துகொள்ளுங்கள்!
திருமணம் வள்ளுவர் சாட்சியாக -என்பது என்
ஆசை” என,
அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை!
அந்த நாட்களில் இது மிக மிக அதிகம்!
தமிழ் ஓதும் திருமணத்தைவிட,
அறிமுகமே அற்ற மாமியாரிடம் சகஜமாய் மன்னிப்புக்கேட்டதை
வாய் பிளந்து பார்த்தது சுற்றம்!
அதன்பின் நடந்த எல்லா சடஙகுகளிலும்,
கோவிலுக்குப் போவது உட்பட,
முகம்
சுளிக்காமல் கலந்துகொண்டதும்,
விபூதி பிரசாதம் மட்டும் மறுத்ததும் ஊரே வேடிக்கை பார்த்தது!
அடுத்த சில மாதஙகளுக்கு
சென்னிமலையின் talk of
the village,
மெத்தை வீட்டு மாப்பிள்ளைதான்!
வீட்டிற்கு வள்ளுவர் இல்லம் என்று பேர் வைத்ததும்,
தகப்பன் இல்லாத
மைத்துனர்கள் இருவர் டாக்டராகவும், மாமா மாமா
என்று ஒட்டிக்கொண்ட இரு கொழுந்தியரை நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட வைக்கவும் - கணவரில்லாத
மாமியாருக்கு உதவியாயிருந்ததும், மனைவியோடு
கோவில் குளம் போனாலும், தன் வரையில் கொள்கை
மாறாததும் மீதிக் கதை!
எனக்கென்னவோ, சுப்பிரமணியத்தின் கதை வறட்சியாகப்போவதுபோல் படுகிறது!
எனவே,
இடையில்
என் கதை கொஞ்சம்!!
A little change in colors!
டிகிரி,- என்ன பெரிய கும்பகோணம்
டிகிரி,
- கலா மாஸ்டர் கெட்டவார்த்தையாக்கி வெச்சிருக்கற
கெமிஸ்ட்ரில டிகிரி வாஙகிட்டு,சம்பநதமே இல்லாம
C.A. பண்ணப்போன
பருவம்!
எங்க ஆடிட்டர் படுபாவி, கோனக்கண்ணு
டைப்பிஸ்ட்ட பக்கத்துல வச்சுக்கிட்டு
“எங்க
பசங்களே தடுமாறுவாங்க, நீயெல்லாம் எஙக”
ன்னு கொம்பு சீவுனதுல சிக்குனவன்!
பல சமயம் பாத்ரூம்ல தண்ணி தொறந்து விட்டு “ஓ!”
ன்னு கதறுன உபகதை இப்ப வேண்டாம்.
நம்ம லலிதாவப் பத்தி பேசுவோம்!!
பேரக் கேட்டவுடனே சில்லுன்னு இருக்கில்ல!!
உண்மையிலேயே லல்ல்ல்ல்லிதம்!
ஒரு சைனாக்காரன் பல் டாக்டர் (அப்ப பல் டாக்டர்ல
முக்காவாசி சைனாக்காரனுகதான்) க்ளீனிக்கே
ல்லவ்லித்தாவ - பாருங்க இத்தன வருஷம் கழிச்சும் குளறுது!- நம்பித்தான்
வெச்சிருந்தாரு!
பசங்க பலதடவ சொன்னப்பல்லாம்
“இந்தக்
காஞ்சமாடுக புளுகுதுக!
நம்ம தமிழய்யா பொண்ண விட ஸ்ரீதேவியே அழகில்ல!
லலிதாவாமில்ல!”ன்னு
தமிழய்யா வீட்டு சந்தே கதின்னு கெடந்தவன,
விதி அம்மா பல்லுல வந்து உக்காந்துக்கிட்டு
கையப்
புடிச்சு இழுத்துச்சு!
அம்மாவோட போயி, பல்லர்
க்ளினிக் கதவத்தள்றேன்!
காதுக்குள்ள இளையராஜா,”தம்னன
தம்னன தாளம் வரும்” னு
அடிச்சு உட்ராப்ல.
ஸ்ரீதேவியாவது, தமிழய்யாவாவது,
கூடவந்த அம்மாவையே மறந்து
“ஆ”ன்னு
பார்க்கறேன்!
“டாக்டர்கிட்ட
வாயத்தொறந்தா போதும், இப்ப மூடு”ங்கறான்
எப்போதுமே அங்கயே குடியிருக்கற தொரசாமி!
என் பழிகார சத்ரு!
“ஏம்மா,
என்கிட்ட சொன்னா நான் வந்து கூட்டிட்டு வரமாட்டனா,
படிக்கற பையன தொந்தரவு பண்ணணுமா”ன்னு
சீன் போடுது சனி!
“ஆமப்பா,
பல் டாக்டர் மணிக்கணக்குள பண்ணுவாரு,நீ
போய் படிக்கறவேலையப்பாரு”ங்குது
பெத்தது!
கடவுளே! இந்த வெவரங்கெட்டத ஏன் எனக்கு அம்மாவா
குடுத்தேன்னு,சண்டக்காரன்
கால்லயே உழுந்தேன்!
“தொர,
அன்னைக்கு ஜெராக்ஸ் எடுக்க உங்கிட்ட வாங்குன இருபது
ரூபாய் இந்தாடா”ன்னு
இல்லாத ஒன்னச்சொல்லி,
லஞ்சம்
குடுத்து அந்தப்பாவி வாய மூடினேன்!
பெரிய மனசுபண்ணி, அந்த
பேச்ச விட்டுட்டு,தொழிலப்பாக்கப்போச்சு சகுனி!
வேற என்ன, ஓரமா உக்காந்துக்கிட்டு
ஈன்னு ஸ்நேகா மாதிரி இளிச்சுக்கிட்டு லலிதாவ முழுங்கறதுதான்!
“ஏம்மா,நல்ல
சீலையா ஒன்னு கட்டிக்கிட்டு வரலாம்ல”ன்னா, அத்தன
பல்வலிலயும்,
“போய் பனாரஸ் பொடவ கட்டிக்கிட்டு வருவமா”ங்குது
குசும்புக்கு பொறந்தது!
யாரோ சில்லறைய அள்ளி எறச்சாங்க! லலிதாதாங்க!
சிரிச்சுச்சாம்!!
அன்னைக்கு முழுக்க மந்திரிச்சு உட்ட மாதிரியே
சுத்துனவன், ஒருமாசத்துள,
கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கி,
லல்லுவ
ஃப்ரண்டாகிட்டம்ல!
இருபது ரூபாய்க்கு எடங்கொடுத்த பக்கிய வெறட்டிட்டு
நம்ப பக்கம் திரும்பி பேசவச்சப்ப,
நெஜமாவே பல்வலி!
ஆறுமணி க்ளினிக்குக்கு மூனுமணிக்கே போய்
பல் வலிய
மறந்து ஜொல் வழிய பேசிக்கிட்டிருந்தவன்,
சைனாக்காரன்
வந்தத கவனிக்காம,
“இங்க
இத்தன கொறடு இருக்கே, ஒன்ன
வெச்சு தெனம் கொஞ்சம் அந்த ஆள் மூக்க இழுக்கலாம்ல”ன்ன
மொக்கைக்கு…..
“சார்,
லலிதா சார், சிரிக்குது
சார்”னு விவேக் மாதிரி பொலம்பும்போது
சைனா வெரப்பா மொறச்சுக்கிட்டு நிக்குது!
கூப்புட்டு, சேர்ல
உக்காரவச்சு, “ஆ”
சொல்லுன்னுது!
நானும் வாயத்தொறக்கறேன்,
“என்ன மேன்,
உனக்கு சோறா ஊட்டப்போறேன்?
நல்லா தொற மேன்!”
நானும் காது வரைக்கும் தொறந்தா,
“இன்னம், இன்னம்”ங்குது
சைனா!
படக்குன்னு,
”சார்,
வெளியதான நின்னு பாப்பீங்க,
வாய்க்குள்ள எறங்கறமாதிரி இருந்தா,
ஷூவ கழட்டி வச்சுட்டு எறங்குங்க”ன்னா,
மூடு புரியாம
,
லலி சில்லறைய
எறைக்க,
என் வைத்தியத்துக்கும்,
லலிதா வேலைக்கும்
மஙகளம் பாடிட்டுது மேட் இன் சைனா!
அது ஒன்னும் கம்பசூத்திரம் இல்ல,
உடனே, உடனே,
அப்பாவோட ஆப்தர், டாக்டர்
மனோகரன் க்ளினிக்ல கிளிக்கு வேல வாங்கிக் கொடுத்தாச்சு!
அதுல
ப்ளஸ்,
மனோகர் க்ளினிக்,
நம்ம வீட்டுக்கு எதிர்ல!
மைனஸ்,
அப்பா அங்க அடிக்கடி அரட்டைக்குப் போவாரு!
பார்த்தேன்!
மனோகரோட வீக்னெஸ் புத்தகங்கள்தான்!
அசோகமித்திரன்,ஞானி,தி.ஜா.ன்னு
டாக்டர ஈஸியா வளச்சாச்சு!
லலிதாதான் அடுத்த கட்டத்துக்கு நகராம,குளிப்பாட்ட
கூட்டிட்டுப்போற ஜிம்மி மாதிரி அடமா நிக்குது!
கொமாரபாளையத்துல இருந்து,
தினமும் சேலம் போய் ஆடிட்டர்கிட்ட ரத்தக்கண்ணீர்
வடிச்சுட்டு,தினமும்
கரெக்டா ஏழரைக்கு கிரிமுருகன்ல வந்து எறங்குன உடனே லலிதா தரிசனம்,
மனோகருக்கு கொஞ்சம் இலக்கியம்,
எதுத்தாப்பல வீடு!
செக்குமாடு வாழ்க்கை!
வித்தியாசம் வேணும்னு சொன்னா,
ஆண்டவன் வச்சாம்பாருங்க செம ட்விஸ்ட்டு!
ஏழரைக்கு வந்து சேரும் கிரிமுருகன்ல உக்காந்து ஒலக
இலக்கியம், வேற என்ன,
அரசு பதில்கள்தான்,
படிச்சுக்கிட்டிருக்கறேன்!
வெளிய மழை அடிச்சு ஊத்துது!
சங்ககிரி தாண்டி ஒரு பத்து நிமிஷம்!
வண்டி திடீர்னு வாழப்பழத்தோல்ல ஏறிடுச்சு போல!
வலதுகை பக்கமா இழுத்துக்கிட்டுப்போய்,
ஆறு சக்கரத்தையும் தூக்கிட்டு கரப்பம்பூச்சியாட்டம்
மல்லாந்துருச்சு!
வெளியில பேய் மழை! ஆயிரம் பிரசவ ஆஸ்பத்திரி
அலங்கோலம் வண்டிக்குள்ள.
இப்பமாதிரி செல்ஃபோனும் கிடையாது! சைரன் வச்ச
ஆம்புலன்ஸும் கிடையாது!
நலலவன் அந்த கண்டக்டரும் நானும்தான் எல்லாரையும்,காயமெல்லாம்
தொடச்சு, வர்ர வண்டிலல்லாம் கொஞ்சம் கொஞ்சமா
ஏத்தி அனுப்பிட்டு,
கடைசியா, நாலாவதா
ஒரு பஸ்புடிச்சு கொஞ்ச தூரம் வந்தா, யாரோ
அத்துவானத்துல கை காட்டி ஏற்றாங்க!
பொறுப்பான எஙக டிரைவர்!
நாங்க ஏத்திவிட்ட ஜனத்துலயும் பாதி பஸ்ஸ்டாப்லயே
இருக்கற மனோகரன் க்ளீனிக்ல!
நனஞ்ச கோழிமாதிரி போக இஷ்டமில்லாம வீட்டுக்கு வந்தா,நம்ப
கண்ணாம்பா, கட்டிப்புடிச்சுக்கிட்டு
கதறுது!
என்ன விஷயம் தாயேன்னு கேட்டா,தகவல்
உபயம் மனோகரன்!
தோப்பனார் மனோகரன் க்ளீனிக்ல டாக்ஸிக்கு
சொல்லிவிட்டுட்டு கவலையோட உட்கார்ந்திருக்கிறார். பேஷண்ட் எல்லோரையும் அனுப்பிட்டு
பஸ்ஸுக்கு அடில சிக்கிட்டிருக்கேனான்னு பார்க்கும் உத்தேசம்!
அடிச்சு ஊத்தும் மழைல அவர் நான் தாண்டி வந்தது
பாரக்கலபோல!
சரி, தலைய துவட்டிட்டு க்ளீனிக்
போலாம்னு, வெள்ளை டவல் வச்சு தேய்ச்சா, சிகப்பா
மாறுது!
அத்தனை நேர பரபரப்புல கவனிக்கல, ஒரு
விரல் நீள வெட்டு நடு மண்டைல.
கர்ச்சீப் வெச்சு பொத்ததிக்கிட்டு க்ளீனிக் போனா தெய்வமகன்
சிவாஜி மாதிரி
நைனா!
மனோகரன் எம்ப்ராய்டரி ஊசி மாதிரி ஒன்ன
எடுத்துக்கிட்டு,மண்டைல கை வெச்சதுதான் தெரியும்!!!
என்ன சொல்வேன் பெரியோரே!
லல்லி,இமேஜ், அசோகமித்திரன்
எல்லாம் மறந்து,
போட்ட கூச்சல், பவானி
சஙகமேஸ்வரன் கோவில்ல கேட்டதா மறுநாள் தொரை சொன்னான்!
என்ன ஒரு அராஜகம்,
மறுநாள், DRESSING மாற்ற
போனா, நம்ம
ஹீரோயின் சொல்லுது,
“வா தம்பி, உட்காரு!”
அதைக் கேட்டும் இத்தனை நாள் நான் உயிரோடு இருப்பதா!!
சரி, நம்ம வலி நமக்கு!
சரியாக ஒரு மாசம்.!!
கொல்லிமலை சொசைட்டில இண்டர்னல் ஆடிட்.
தினமும் காலை ஏழு மணிக்குப்போய், சரியாக
மதியம் இரண்டுமணி பஸ் பிடித்தால் ஏழு மணிக்கு வீடு!
எல்லாம் சரியாத்தான் போய்க்கிட்டிருந்தது!
கடைசி நாள் ஆடிட் முடிந்தால் மறுநாள் தமிழ்
வருடப்பிறப்பு!
கொல்லிமலைல இருந்து பழவகையெல்லாம்
வாங்கிட்டுவர்ரேன்னு எதிர்வீட்டு கீதா - இது சும்மா ஊறுகாய்- மேல சத்தியம்
பண்ணிட்டு கெளம்பியாச்சு!
ஆடிட்டிங் முடிச்சு அந்த இன்சார்ஜ் கிட்ட
பழப்பண்ணைக்குப்போகணும்னு கூப்பிட்டா,மூஞ்சிய தூக்கிக்கிட்டு கூடவர்ற
மூதேவி,
உள்ளபோய் மேனேஜர்கிட்ட சொல்லுது!
“குதிரை
(ஆடிட்டர்) சும்மாதான் இருக்கும், லத்திதான் (நாந்தான்!!)
உறுமுமாம்”னு!!
இதை சும்மா விடலாமா மானிடரே!
ப்ரொக்ராம்லயே இல்லாத பலாப்பழத்தை,
சுத்தமா உரிச்சு கொடுத்தாத்தான் ஆச்சு ன்னு சொல்லிட்டு,
“வாஙகளேன்
நாம போய் சாப்டுட்டு வருவோம் அதுக்குள்ளன்னு,” இழுத்தேன்!
மக்களே,
அன்னைக்குத்தான் என் வாழ்க்கைல அத்தன ஐட்டம் சாப்பிட்டது!
சொத்துப்பத்திரம் தவிர அத்தனையும் கொடுத்துட்டு
வந்தார் அந்த நொந்த இன்சார்ஜ்!
இந்த அலப்பரையில, ரெண்டுமணி
பஸ் போய்டுச்சு!
இனி அடுத்த பஸ் நாலரைக்கு!
இங்க அடுத்த ட்விஸ்டு!!
ரெண்டுமணி பஸ் ட்ரைவருக்கு என்ன அவசரமோ!
ஒரு திருப்பத்துல STRAIGHT
ஆ ஒரு
நூறடி கீழ பாஞ்சுட்டாரு!
இந்தமுறை சேதாரம் கொஞ்சம் அதிகம்!
பஸ் கீழபோன வேகத்துல பத்துபேரு மேல போய்ட்டாங்க!!
வருஷகடைசி கழிவு போல!
நாலரைமணி பஸ்ஸும் பிணம் அள்ளப்போக,
ஆறுமணி
பஸ் புடிச்சு, உயிர் காத்த பலாப்பழம் சகிதம் வீடுவந்து
சேரும்போது மணி பத்து!!
வீட்டு வாசல்ல தேர்க்கூட்டம்!
ஆஃபீஸ் வேலையா கோயமுத்தூர் போயிருந்த அப்பா சேதிகேட்டு,
கார்,ஏரோப்ளேன்,கப்பல்னு,
கெடைச்ச வண்டியில
வந்துக்கிட்டிருக்க,
ஏழுமணி செய்தியறிக்கையில் விரிவான நியூஸ் கேட்ட
அம்மா, சொந்தக்காரங்க
எல்லோருக்கும் சொல்லியனுப்ப,
(ஐடியா உபயம்,
பலநாள் பழி தீரத்த துரை!)
அத்தனை ரணகளத்துலயும், தம்பீன்னு
ஓடிவந்து கட்டிப்பிடிச்சது,
YOU ARE RIGHT, லல்லி!!
இதெல்லாம் சரி!
சுப்பிரமணியம் என்ன ஆனாரு?
சொந்தக்கதைய பேச,மத்ததெல்லாமே
மறந்துபோகுது பாருங்க.
No comments:
Post a comment