மயிலாத்தாளுக்கு,
உயிர் இழுத்துக்கிட்டுக் கெடக்குது!
இன்னும் கண்ணுல
மட்டும் சின்ன சுடர் துடிச்சுக்கிட்டிருக்குது - எதையோ தேடறமாதிரி!.
கால்மாட்டுல நின்னு
கண்ணீர் வடிக்கற பவானியையும், உதடு
துடிக்க அழுகையை விழுங்கிக்கிட்டு நிக்கற ஊர்ப்பெரியதனக்காரர் வேலு முதலியாரையும். மாறிமாறிப் பார்க்கற கண்ணுல, சுத்தி நிக்கற உறவு சனம் யாரும் பதிஞ்சதாவே
தெரியல!
நொடிக்கொருதரம்
கொல்லையில நிக்கற தென்னைய வெறிச்சுப்பார்க்கற கண்ணுல கண்ணீர் கோடா வழியிது!
இப்படி இழுத்துக் கிட்டே
கெடக்கறதுக்கு போய்ட்டா அவளுக்காவது நிம்மதி என்ற நினைப்ப விரட்டுறது மாதிரி தலைய ஆட்டிக்கிட்டு
திண்ணைக்குப் போனாரு வேலு முதலியார்!
சரியா ஏழு வருசத்துக்கு
முன்னால, மயிலாத்தாளப் பாத்திருந்த
யாராலும் இப்போ கட்டிலில்ல ஒடுங்கிக் கெடக்கறது மயிலாத்தாதான்னு ஒப்புக்கவே
முடியாது!
சலவைச்சீலையும், தூக்கிக்கட்டிய கொண்டையுமா
மேலப்பாளையத்து வீதியில் மயிலாத்தா வரும்போது
பார்த்தா,
யாருக்கும் அவள
நாற்பத்தஞ்சு வயதுக்காரின்னோ, இருபத்திநாலு வயசு ராசமாணிக்கத்துக்கு அம்மான்னோ
கணிக்கவே முடியாது!
பெரியதனம் அடிக்கடி
சொல்லுவாரு,
“சும்மா வெளிய தெருவுக்குப் போகாத மயிலா!
எவனாவது அசலூரான்
பாத்தான்னா, பொண்ணு கேட்டுப்
படியேறி வந்தறப்போறான்!”னு!!
மயிலாத்தாலும் சளைக்க
மாட்டாள்.
“வரட்டுமே மாமா!
வர்ற மாப்ளைய
புடிச்சிருந்தா கட்டிக்கறேன்.
உமக்கு முந்தி
விரிச்சதுக்கு ராசமாணிக்த்தப் பெததமாதிரி அவனுக்கும்தான் ஒரு புள்ளைய
பெத்துக்குடுத்துட்டுப்போறேன்.
நீரென்ன
மறிச்சுக்கிட்டு நிக்கவா போறீரு?”ம்பா, சிரிக்காம!
அம்மன் கோயில் சிலை
மாதிரி மொகம்!
எந்நேரமும் வெத்தல
போட்டு செவந்தமாதிரி ஒதடு!
ஒழச்சு ஒரமேறிப்போன
ஒடம்பு!
எந்தக் கொம்பனும்
மயிலாத்தாள மரியாதையோட திரும்பிப்பாக்காம போனதே இல்லை!
என்னேரமும்
சிரிச்சமூஞ்சி!
எறநூறு ஏக்கர்
பண்ணையத்தையும் தனியா நின்னு சமாளிக்கற சாமார்த்தியம்!
மயிலாத்தா
சம்மதிக்காம, காத்து கூட
தோட்டத்துக்குள்ள போகவும்
முடியாது, வரவும் முடியாது!
கொரல ஒசத்தாம,
அழுத்தமா மயிலாத்தா சொல்றதுதான் கடைசி
வார்த்தை!
அத பண்ணையாளுக
மட்டுமில்ல, முதலியாரும்
மீறுனதில்ல!
அந்த ஒத்தாசையாலதான்
முதலியாரு ஊர் நாட்டாமைய பாத்துக்கிட்டு வெள்ளையுஞ்சொள்ளையுமா சுத்தறதெல்லாம்!
அத்தன அதிகாரம்
கைக்குள்ள இருந்தாலும், முதலியார
ஒருநாள் சொணங்க விட்டதில்ல!
கடேசியா கட்டலோட
படுத்த இந்த ஒருமாசத்துக்கு முன்னாடி வரைக்கும், ஒருவேள சோறு பிந்தியதில்ல, ஒரு வா காப்பித்தண்ணி சூடு கொறஞ்சதில்ல!
எத்தன ஆளு படை
இருந்தாலும், சமையக்கட்டுக்குள்ள
ஒரு டமப்ளர தூக்க ஆளு வெச்சதில்ல.
முதலியாருக்குஞ்சரி,
ஒத்தப்புள்ளயா
பொறந்து இருவத்து நாலு வயசுல தலக்குமேல வளந்து நின்ன ராசுவுக்குஞ்சரி, ஒருநாள் கூட ஒரு உப்புக்கல்லு
கூடக்கொறைய வடிச்சுக்கொட்டுனதில்ல!
எல்லாமே சரியாப்போனா, அந்த பாழாப்போன ஆண்டவன நாமல்லாம் மறந்துருவமே!
அதுக்காக ஒரு பெருங்கவலயக்
கொண்டாந்து,
“இந்தாத்தா, இத எப்புடி சமாளிக்கற
பாப்போம்”னு ஒரு இடியக்கொண்டு எறக்குனான் அந்த சிவமல முருகன்!
ஊர்ப்பள்ளிக்கோடத்துல
பத்தாப்பு படிக்கறவரைக்கும் ஆத்தா முந்தானக்குள்ளயே கெடந்தவந்தேன் ராசுப்பய!
யாரு தூண்டுதலோ,
முதலியாருக்கு பையன டாக்டராக்கிப்
பாக்கோணும்னு ஆச வந்துருச்சு!
உள்ளூருப்
பள்ளிக்கோடம் பத்தாதுன்னு, திருச்செங்கோட்டுல
ஒரு பெரிய பள்ளிக்கோடத்துல கொண்டுபோயி, ஆஸ்டல்ல சேத்திப்போட்டு வந்தாரு முதலியாரு!
சேர்க்கறப்பவே,
அஞ்சு
லச்சதத வாங்கிக்கிட்டு,
“ஆறு மாசத்துக்கு
ஒருவாட்டிதான் வீட்டுக்கு அனுப்புவோம்.
நடுவுல புள்ளய ரண்டு
மாசத்துக்கு ஒருக்கா அரமணி நேரம் வந்து பாக்கலாம்.
நல்லது கெட்டது
எதுக்கும் அனுப்பமாட்டோம்!
உங்க பையன் ஆயரத்தி நூறுக்குமேல மார்க்கு வாங்கறதுக்கு நாங்க
கேரண்டி” ன்னு சொன்ன சொல்ல நம்பி,
கண்ணுத்தண்ணி தளும்ப
உட்டுட்டு வந்தாங்க பையன!
மொதவருசம் வந்துட்டு
ஒருவாரங்கூட இருக்காம, சோக்காளி
வீட்டுக்கு படிக்கப்போறேன்னு கெளம்பி போய்ட்டான்.
போறப்ப, புருஷனும் பொண்டாட்டியும் தனித்தனியா குடுத்த
காசே அம்பதாயிரமிருக்கும்.
ஒத்தப்புள்ள, காசுக்கு மொடையின்னா, அங்க என்ன பண்ணும்னு குடுத்த காசுதான் கொள்ளியாப்
போவும்னு படிக்காத சென்மம் ரண்டும் நெனக்கல!
நம்ப ரத்தத்துல
பொறந்தது தப்பு செய்யாதுன்னு அப்புடி நம்புச்சுக!
ஆத்தா, ஆத்தான்னு காலச்சுத்தி வர்ற புள்ள, எப்ப
பாத்தாலும் தனியா சொணங்கி ஒக்கார்றதும், கிட்ட
ஆள் போனாலே எரிஞ்சு உழுகறதும், ஆஸ்டல்ல
கொண்டுட்டுப்போயி உட்ட கோபம்னு நெனச்சிருச்சுங்க வெள்ளந்திங்க!
ரண்டாவது வருசம்,
பாதி தாண்டல,
“பையனுக்கு ஒடம்பு
சொகமில்ல, ஒடனே வாங்க”ன்னு போன் வந்துது.
பள்ளிக்கோடத்துக்கு
பதறிக்கிட்டுப்போனா, கண்ணு சொருக
ஆஸ்பத்ரில கெடக்குது புள்ள.
சேர்க்கை செரியில்லாம,
பீடி,சிகரெட்டு, தண்ணி மட்டுமில்லாம கஞ்சா வரைக்கும் போனதுல அன்னைக்கு எதோ சாஸ்தியாப்போயி,
பள்ளிக்கோடத்துலயே போதைல
உழுந்ததுக்கப்பறந்தான் ஊட்டுக்கு தகவல் சொல்லீருக்குதுக!
“படிப்பும் வேண்டாம், ஒரு மசுரும் வேண்டாம். புள்ள ஒழுங்கா உசுரு பொழச்சாபோதும்”னு கையோட கூட்டியாந்து,
ஒருமாசம் ஈரோடு
ஆசுபத்திரில வெச்சு பண்டுதம்பாத்து ஊருக்கு கூட்டிக்கிட்டு வந்து
அதுக்கப்புறம் ரெண்டுபேரும் தலையால தண்ணி
குடிச்சுப்பாத்தும் படிப்பு பக்கம் தல வெச்சுப்படுக்கமாட்டேன்னுட்டான் ராசு.
அதோட தொலையட்டும்னு
நிம்மதியா இருக்கமுடியாம, நாள் தவறாம தண்ணி,சிகரெட்டு!
மொதல்ல அரசல் புரசலா
கண்டும் காணாம, அப்புறம் வெளிப்படையாவே!
பெரியவீட்டுல இப்படி
ஒரு புள்ளயான்னு ஊரே பேச,
அடுத்தவிஷயம் இன்னம் கொடுமையா ஆரம்பிச்சுது.
கீழத்தெரு பசங்களோட
சேர்ந்துக்கிட்டு பொம்பளஷோக்கும் ஆரம்பிச்சாச்சுன்னத கேட்டப்ப, நெஞ்சுல நெருப்ப அள்ளிக் கொட்டுன மாதிரி இருந்துச்சு!
ஆத்தா அப்பனோட
கண்ணீரும் கோபமும் அவன ஒன்னும் பண்ணல.
சொந்தபந்தத்துல
பொண்ணு கேட்டுப்போனா படிச்ச
புள்ளைகளா இருக்கு எல்லாம்.
கொஞ்சம் படிஞ்சுவர
எடத்துலயும் உண்மையச்சொல்லி பொண்ணு கேட்டா, ஒரு சனம் தரல,
பொய் சொல்லி பொண்ணு
கேக்க, அதுக மனசு ஒப்பல.
சரி, தானா திருந்தி வந்தா பாப்போம்னு மனசுக்குள்ள புழுங்கிக்கிட்டு
காலத்தக்கடத்துச்சு பெத்த உசுருக.
அஞ்சாறு வருசந்தான்
ஓடுச்சே தவிர புள்ள திருந்தற பாட்டக்காணாம்.
மீறி கண்டிச்ச
ரண்டுதடவ, காணாமபோய் மாசக்கணக்குல தேடிய பொறகு வந்த கோராமையும்
நடந்துச்சு.
வயசும் திமிரும் ஏற
ஏற வக்கரிச்சுக்கிட்டே போனான் ராசு.
ஊட்டுல தனியா இருக்கற
குடியானவப்பொண்டுகள சீண்டனம்பண்றான்னு கேட்ட அன்னைக்கே, புள்ளயே இல்லன்னு தல
முழுகிட்டா மயிலாத்தா.
ஆனா இத்தனைலயும் அவ
சீரும் கொலையல, நிர்வாகமும் கெடல.
அப்பத்தான் ஒருநாளு,
பஞ்சாயத்துல ப்ராது கொடுத்துட்டான் கீழ
வளவு முனியன்.
குளிக்கப்போன அவன்
பொண்டாட்டிய கருக்கல்ல வழி மறிச்சு கையப்புடிச்சு இழுத்திருக்கான் ராசு.
யாருக்கும் குனியாத
தல குனிஞ்சு நிக்கிதுக பெத்தது ரண்டும்.
படக்குன்னு திமிறா
பதில் சொல்லிட்டான் ராசு.
“அவ்வளவு ஒனத்தி இருக்கறவன் பொண்டாட்டிய ஏன்டா
வெளிய உடறே, உன்னால முடிஞ்சத
புடுங்கிக்கோ”ன்னான் எளப்பமா!
அத்தன வருசம் பாக்காத
ஆத்தாள அப்ப பாத்தான் ராசு.
அறைஞ்ச வேகத்துல
தீப்புடிச்சமாதிரி ராசு கன்னம் எரியுது.
“நாதாரி நாயே! உம்பட பொறுக்கித்தனமெல்லாம் காசுக்கு
விக்கற நாயிக கிட்ட வெச்சுக்க.”
“இன்னம் ஒருதடவ, ஊருப்பொம்பள மேல கையில்ல,
கண்ண
வெச்சேன்னு தெரிஞ்சுது, ஒத்தயா
பெத்த புள்ளன்னு பாக்காம, சஙக
அறுத்து வீதீல எறிஞ்சுருவன் நாயே!”
ஊரே அசந்துபோய் நிக்க,
அபராதக்காச கட்டிட்டு ராணிமாதிரி போனா
மயிலாத்தா!
அதுக்கப்புறம் ஒரு
மாசத்தப்போல வீட்டுல இருந்த மவன் மூஞ்சியக்கூட பாக்காம, நாய்க்குப் போடற மாதிரி வட்டில சோத்தப்போட்டவ, அவன் மூஞ்சியப்பாத்து ஒரு வார்த்தை பேசல.
ஆத்தா கோவம்
தாங்காமயோ என்னமோ, அப்பன்
தென்னைக்கு ஒரம் வாங்க ஈரோட்டுக்குப்போன ஒரு ராத்திரீல ஊட்ட உட்டுப் போனவன்தான்
ராசு!
அது ஓடிப்போச்சு இப்ப
ஏழு வருசம்!
ஆனா அதுக்கப்புறம்
மயிலாத்தா நடவடிக்கையெல்லாம் சுத்தமா மாறிப்போச்சு.
முதலியார்தான் ஒரு மாசம்
வரைக்கும் ஊரூராப்போயி தேடீட்டி வந்தாரு.
மயிலாத்தா சுத்தமா
மனசொடிஞ்சுபோனா!
தோட்டவேல செய்யற
குமார் அப்பத்தான் ஆறு மாசத்துக்கு முன்னாடி, பெருந்துறையிலிருந்து தாய் மாமன் மக பவானிய
கட்டிக்கிட்டு வந்திருந்தான்.
குத்து வெளக்கு
மாதிரி அத்தன அழகு அந்தப்புள்ள பவானி!
வீட்டுக்கொல்லைப்பக்கம்
சாலைல குமாரும் பவானியும்.
மாடு கன்னு
பாத்துக்கறது, எரு அள்றதுன்னு
எல்லா வேலையும் அந்தப்புள்ள பவானியோடது.
காரியத்துல அத்தன
பதவுசும் நருவுசும்.
குமாருக்கு வீட்டச்சசுத்தியிருக்கற ஒன்ற ஏக்கரா தோட்டத்த
ஒத்த ஆளா நருவுசு பண்ணி, பராமரிக்கற
வேல.
அன்னைக்கு ராசு
காணாமப்போன அன்னைக்கும், வீட்டச்சுத்தி,
ஆறடி ஆழம், ரண்டடி அகல நீளத்துக்கு, சதுரமா, பதினாறு
குழி எடுத்துட்டு, தென்னங்கன்னுகளையும்
கொண்டாந்து போட்டுட்டு, முதலியாரோட
அடி ஒரம் வாங்கப்போயிருந்தான்.
“இருக்கற ஒரம், கொல்லைல
இருக்கற மூனு குழிக்குத்தான் காணும், முடிஞ்சா அந்த மூணு புள்ளையும் நட்டுவெச்சுரு”ன்னு, பவானிகிட்ட சொல்லீட்டுத்தான் போனான்.
அவஞ்சொல்லீட்டுப்போன
நேரம், மொதல்ல மூலைக்குழிய நட்டு
மூடறதுக்குள்ள மழை பெருசா புடிச்சுக்கிச்சு.
நனஞ்சுக்கிட்டே
சாலைக்குள்ற போய்ட்டா பவானி.
அன்னைக்கு ராவுல,
ஐயன் வாரதுக்குள்ள ஓடிப்போனவந்தான் ராசு.
இந்த தடவ, போன மகன் வரமாட்டான்னு முடிவு பண்ணிட்டா போல
மயிலாத்தா!
வீட்டோடவே தன்ன
சுருக்கிக்கிட்டா!
எல்லா சீலத்துணியயும்
தூக்கி பவானிக்கு குடுத்துட்டு,
அன்னைக்கே
மொரட்டு கதர் சீல நாலு வெளிர் நெரத்துல வாங்கிக்கிட்டு வரச்சொன்ன மயிலாத்தா,
ஏழு வருசமா அந்த மாதிரி சீலதான்.
இப்ப இழுத்துக்கிட்டு
கெடக்குற இந்த வேளைலயும் அந்தச்சீலதான்.
அதுமட்டுமிலலாம பவானி, பவானின்னு
எந்நேரமும் அந்தப்புள்ளய கண்ணுக்குள்ளயே வெசசுக்கிட்டா மயிலாத்தா.
தெனமும் சாயங்காலம்
ஆறுமணி அடிச்சா, ரூமுக்குள்ற போய்
கதவச்சாத்திக்குவா!
காலைல விடீறவரைக்கும் உசுரே போனாலும் வெளிய வரமாட்டா!
வெளிய தெருவுக்கு
எஙகயும் போறதில்ல!
பெத்த ஆத்தா
சாகக்கெடந்தப்பவும் ஒரே ஒரு நடை போய் பாத்துட்டு
ஆறு மணிக்கெல்லாம் வந்துட்டா.
முதலியார் எத்தன
சொல்லியும் இழவுக்கும் போகல.
அது மாத்தரமல்ல,
ஊருக்குள்ள
நல்லது கெட்டது எதுக்கும் போறதில்ல!
ராசு கடைசியா
சாப்பிட்ட வட்டிலத்தவிர எதுலயும் சாப்படறது கிடையாது.
அதுவும் ஜெயில்ல போடற
மாதிரி, ஒரு கரண்டி!
ருசிக்கு சாப்பாடு
கெடையாது.
ஆரம்பத்துல ஒருநாள்
பொறுக்க முடியாம, “ ஏன்டி இப்படி உன்னையே வதச்சுக்கறே”ன்னு முதலியார் கேட்டதுக்கும்,
”எம்புள்ளை இப்படி
ஒரே முட்டா போனதுக்கு நாந்தான் காரணம்! அதுக்கு இதுதான் தண்டனை”ன்னு அழுதா!
“நீ என்ன கொலக்குத்தமா செஞ்சே”ன்னு கேட்டதுக்கு,
“ஆமாய்யா எம்மவன
நாந்தான் கொன்னேன். அன்னைக்கு பஞ்சாயத்துல நான் அறஞ்சப்பவே அவன் செத்துட்டான். அதுக்கு எனக்கு இதுதான் தண்டனை”ன்னு தலதலயா
அடிச்சுக்கிட்டு அழுதா!
ஒருநிமிஷம் அசையாம
நின்னு அவளப்பாத்த முதலியார் கண்ணைத் தொடச்சுக்கிட்டு உள்ள போனவரு,
இந்த
ஏழு வருசத்துல ஒருநாள் கூட அவ செய்யற எதையும் ஏன்னு கேட்டதில்ல!
ஆனா, அதிசயமா, பவானி மேல உசுரா இருந்தா.
எல்லாத்துக்கும்
தொட்டது தொன்னூறுக்கும் பவானி பவானி பவானி!
ராசு போயி முழுசா
ரண்டு வருஷம் கழிச்சு,பவானிக்கு
புள்ள பொறந்தப்பவும், மருத்தவச்சிய
வரச்சொல்லி, பெரிய வீட்டுலயே
வெச்சு பிரசவம் பாத்தா.
பவானியும் எந்நேரமும்
ஆத்தா, ஆத்தான்னு எப்பவும் அவளையே
சுத்தி வந்தா.
மயிலாத்தா கிட்ட யார்
எது சொல்லனும்னாலும் அது பவானி மூலமான்னு ஆயிறுச்சு!
ஏழு வருஷம், வைராக்கியமா, வாசப்படியே
தாண்டாம உள்ளுக்குள்ளயே கொமஞ்சுபோனா!
வீடு, வூட்டுக்குப் பின்னாடி கொல்லைல நிக்கற மூனு
தென்னமரம்!
இதுதான்
மயிலாத்தாளுக்கு ஒலகமா மாறிடுச்சு!
எல்லா வேலைக்கும்
கூடத்தொணைக்கு பவானி மட்டுந்தான்!
ஆனா, பவானிக்கும், அனுமதியில்லாத ஒரு வேல!
கொல்லைல இருந்த மூனு
தென்ன மரத்துக்கும் ரெண்டுவேளையும் தண்ணி வெக்கற வேலய, வேற யாருக்கும் உட்டுத்தந்ததில்ல.
அதுமட்டுமில்ல,
அ்த மூனு மரத்துலயும்,செரையெடுக்கவும், காய் புடுங்கவும் கூட யாரையும் உட்றதில்ல.
காயோ,மட்டையோ, பழுத்து உழுந்தாத்தான்.
அப்படி உழுகற காயும், கொலதெய்வம் கோயிலுக்கு மட்டுந்தான்.
இதுவரைக்கும் யாரும்
கைநீட்டித் தொட உட்டதில்ல!
அவளுக்கு ஏனோ அந்த
மூனு மரங்களும் உசுரு.
அதுலயும் அந்த நடு மரத்தடிதான் அவளுக்கு எந்நேரமும்
குடியிருப்பு.
தூரத்திலிருந்து பாத்தா அவ அந்த மரத்தோட பேசறாளோன்னு சந்தேகமா
தோணும்.
இந்த ஏழு வருஷமும், முதலியாரு, பவானி, கொல்லை தென்ன மரம் தவிர
வேத்து உசுரப் பாக்கறதே அபூர்வமாப்போச்சு!
கொஞ்சஙகொஞ்சமா அவ
உசுரு உள்ளுக்குள்ள அடங்கிப்போனது முதலியாருக்குப் புரிஞ்சுது!
வருஷாவருஷம் ராசு
ஓடிப்போன நாள்ள மட்டும், அன்னம் தண்ணி பல்லுள படாம, கொல்லைத்தென்னமரத்தடிதான் பொழுது அடையறவரைக்கும்!
இந்த ஒருமாசமா, புருஷனப் பாக்கறப்பல்லாம் கண்ணுக்குள்ள ஏதோ சொல்லத்துடிக்கற வார்த்தை
தொண்டைக்குள்ள சிக்கிக்கிட்ட மாதிரி மூச்சுத் தெணறுது!
தன்னோட உசுரு போற
காலம் பக்கத்துல வந்துட்டது மயிலாத்தாளுக்கு புரிஞ்சுபோச்சு!
சாகற நேரத்துலயும்
அந்த உசுருக்குள்ள பொதச்சுவெச்ச ரகசியத்த புருஷனுக்கு சொல்லாமயே போயிருவமோன்னு
இழுத்துக்கிட்டுக் கெடக்குது!
இந்தன வருச
வாழ்க்கையில ரண்டுபேருக்கும் நடுவுல மறைக்கறதுக்கு எதுமே இருந்ததில்ல.
ஒருவேள அந்த
ரகசியத்தோட பாரம் தாங்காமதான் உசுரு அழுந்திப்போச்சு போல!
முதலியாருக்கு
மனசுக்குள்ள யாரோ கையவிட்டு பிசையிறமாதிரி வலி!
நேத்து வந்து
பாத்துட்டுப்போன டாக்டர் தெளிவா சொல்லீட்டுப் போயிட்டாரு!
“வாழணுங்கற ஆசை விட்டுப்போன ஒடம்பு மருந்த
ஏத்துக்காது!
ஏதோ உசுரமட்டும்
இழுத்துப்புடிச்சிருக்கு! இனி எத்தன நாளுங்கறத அந்த உசுருதான் முடிவு செய்யணும்” னு!
தூரத்துல முதலியாரு
கண்ணுல தண்ணியப் பாத்த மயிலாளுக்கு உசுரு பதறுது!
“என் ராசாவே, அந்த விஷயத்த நான் உங்கிட்ட எப்படி சொல்லுவேன்?சொல்லாம நான் எப்புடி சாவேன்?.”
மயிலாத்தா மனசுல, ஏழு வருசத்துக்கு முன்னாடி நடந்த அந்த கொடும படமா ஓடுது.
முதலியாரும், கொமாரும், ஒரம் வாங்கப்போயிட்டாங்க!
மழையா அடிச்சு
ஊத்துது!
தாம்பெத்த குடிகார
நாயி எங்கபோயி குடிச்சு சீரழியிதோன்னு ரோசனைலயே கொல்லக்கதவ சாரலடிக்குதுன்னு
சாத்தப்போன மயிலாத்தாளுக்கு,
கொமாரு சாலைக்குள்ள, வெளக்கு வேகமா அசஞ்சமாதிரியும் ஏதோ அரவங்கேட்ட மாதிரியும் பட்டுச்சு.
ஒன்னுமிருக்காதுன்னு, கொல்லக்கதவ சாத்தீட்டு உள்ள வந்து உக்காந்தவளுக்கு ரண்டு நிமிஷங்கூட மனசு
தாங்கல.
ஒரெட்டு பாத்துட்டே
வந்துருவம்னு அந்த சாலைக்கதவ, பவானின்னு
கூப்புட்டுக்கிட்டே தள்ளுனா.
ஒரு கூடை நெருப்ப
அள்ளி தலேல கொட்டுனமாதிரி ஆச்சு.
அந்த பவானிப்புள்ள துள்ளத்துடிக்க, ஒத்தக்கையால அவ வாயப்பொத்திக்கிட்டு அவமேல படர்ந்து அசைய ஆரமபிச்ச ராசுக்கு
ஆத்தா கொரலு கேக்கற நெலம இல்ல.
சாராய வீச்சம் அவனோட நெலய மயிலாத்தாளுக்கு
காட்டிக்குடுக்குது.
உசுரு பதற, சுத்திலும் பாத்தவ கண்ணுல,
எறவானத்துல சொருகியிருந்த
கருக்கறுவா பட்டுச்சு.
கழுத்துல சொருகி, வேகமா ஒரே இழுப்பு!!
பதமா தீட்டுன அருவா!
மூச்சுக்காத்து
பிரியர நேரத்துல, உசுரு போயி சாஞ்சான் பெத்த புள்ள ராசு.
காளியாத்தா மாதிரி
நிக்கற மயிலாத்தா, காலுல,
“தெய்வமே”ன்னு கதறிக்கிட்டு
உழுந்தா பவானி.
தன்னோட மானத்தக்காப்பாத்துன
சாமிமேல பழி வராம தானே கொலப்பழிய ஏத்துக்கறேன்னு கதறுனா!
மழைல நனஞ்சு
சொட்டச்சொட்ட சாலக்குடிசக்குள்ள வந்த பவானிய,, திட்டம்போட்டு உள்ள
பதுங்கீருந்த ராசு வளச்சு இழுக்க,
குடிவெறியும் ஒடம்பு
வெறியும் புடிச்ச மிருகத்துகிட்ட இருந்து தப்பிக்கமுடியாம சரிஞ்சப்பத்தான்
கொலதெய்வமா வந்துருக்கா மயிலாத்தா.
அஞ்சு நிமிஷத்துல
முடிவெடுத்தா மயிலாத்தா.
யாருமேல பழி
உழுந்தாலும் பெரியூட்டு மானம் காத்துல போகும்.
அவமானம் தாங்காம
ரோசக்கார முதலியாரு நாண்டுக்குவாரு!
யோசிக்க நேரமில்ல!
ஒரே உறுமல்ல பவானிய, ராசு ஒடம்ப ஒரு கை புடிக்க வெச்சா!
கொட்ற மழைல, ரண்டு பொம்பளயும், அந்த சவத்தக் கொண்டுபோயி, நடுவாண்ட குழில எறக்குனாங்க!
தன் கையாலயே, தென்னங்கன்ன எடுத்து அதுல நட்டவ.
பரபரன்னு மண்ணத்தள்ளி, குழிய நெறவுனா!
மிச்சமிருந்த இன்னொரு
குழியிலயும் தென்னங்கன்ன நட்டு முடிச்சாங்க.
அந்த அரமணி எடவெளில
அடிச்ச மழை, அத்தன ரத்தத்தையும் கழுவிப்போட்டுது.
சாமி படத்துக்கு நேரா, கட்டுனவங்கிட்டக்கூட சொல்லமாட்டேன்னு பவானிகிட்ட சத்தியம் வாங்கீட்டா.
சின்னப்புள்ளதான, பயந்துபோயிருமேன்னு தாய்க்கோழி மாதிரி அடை காத்தா பவானிய.
சீலத்துணியெல்லாம்
மறுநாள் குடுத்தபோது, கால்ல உழுந்த பவானிய கைநீட்டி அணச்சுக்கிட்டா!
“எங்குலப்பெரும காப்பாத்தற சாமி நீ!
கொலகாரி கால்ல உழுகாத தாயி!
ஈனங்கெட்ட
புள்ளயப் பெத்தாலும், கொல செஞ்ச பாவத்துக்கு தண்டனய அனுபவிக்காம சாகமாட்டேன்” னு சொன்னவ,
இந்த ஏழு வயசு
ரகசியத்த, புருஷனுக்கு
சொல்லாம சாகமுடியாம, உசுர இழுத்துக்கிட்டுக் கெடக்கறா.
எல்லாந் தெரிஞ்ச
பவானியும்,
எதுவுமே தெரியாத புருஷனும் கலஙகித் தவிக்கறத,
போகத்துடிக்கற உசுரு பாக்கமுடியாம மருகுது!
மொத்த உசுரையும்
கையில கூட்டி, புருஷன பக்கத்துல வரச்சொல்லி சாடை காட்டறா.
மயிலா கண்ணுல பேசற
பேச்சு முதலியாரு மனசுல கேக்குது.
கூடி நின்ன அத்தன
சனத்தையும் வெளிய போகச்சொல்றாரு
.
கடைசியா நகந்த பவானிய, சாடை காட்டி நிறுத்துச்சு ரெண்டு சோடி கண்ணு!
உசுரக்கூட்டி
மூஞ்சிக்கு பக்கத்துல இழுக்கறா புருஷன!
வாயத்தொறந்து வார்த்த
சொல்லமுடியாம தவிக்கற மயிலா மூஞ்சியப்பாத்து சொல்றாரு முதலியாரு,
“எனக்குத் தெரியும் மயிலாத்தா! நீ செஞ்சதுதான் நாயம்!”
கண்ணு துளிர்க்க
மலருது மயிலாத்தா மூஞ்சி!
அவ்வளவுதான்!
“எங்குலசாமி போயிருச்சே” ன்னு பவானி போட்ட கூச்சல்ல,
பதறி உள்ள வருது
சனம்!
கண்களில் வழிந்த கண்ணீரின் காரணம் கேட்ட அலுவலக நண்பனிடம், கனினி பார்த்தால் என சொல்லிவிடு, கழிவரை சென்று முகம் கழுவிட்டு வந்தேன்..
பதிலளிநீக்குவேற எதுவும் எனக்கு சொல்ல தெரியல..
இளமையில இன்பத்துக்கு ஏங்கிட்டேன்..
அன்புக்கு ஏங்கி அசிங்கத்ததுல கால வச்சிட்டேன், வழிய மட்டும் நெஞ்சில சுமந்து கிட்டேன்.
மனுசத்தன்மைய மறந்த சில வருசத்துக்கு தண்டனையா மொத்தமா ஓங்கி அடிச்சிட்டான் கடவுளும்..
இப்ப நம்பிக்கைக்காக மட்டும் தான் ஏங்குறேன்.
நாலுபேர அதுக்குமட்டும் தான் தேடுறேன்.
முடிஞ்சா அள்ளி எறிஞ்சிட்டு போங்க, நானும் கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு போய்டுறேன் நல்லவனா..
-நன்றியுடன்
நான் SP
உண்மையிலேயே எனக்கும் கூட கண்கள் நனைந்துவிட்டது. கிராமத்து மண் வாசனை ஒவ்வொரு எழுத்திலும் வீசுகிறது. எனக்கு எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை ஆனா சொல்லியே ஆக வேண்டுமிதை.
பதிலளிநீக்குநீங்கள் தான் அடுத்த பாரதிராஜா
வாழ்த்துக்கள்
மயிலாத்தா மானத்துக்காக மகனை கொன்னா. மனம் மயிலாத்தளைக் கொண்ணுது. உங்க எழுத்து எங்களைக் கொன்னுடுச்சையா... கொங்குச்சீமை சொற்களின் பாந்தமும் வீரியமும் எதார்த்தமாக எதிரொலித்தன!
பதிலளிநீக்குநண்பரே, என்னமா எழுதியிருக்கீங்க!!!!! கொங்கு நடையும், மயிலாத்தா கதாபாத்திர நேர்த்தியும்.... வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே! தங்கள் பாராட்டு எனக்கு பெரு மகிழ்ச்சி
பதிலளிநீக்கு