வியாழன், 13 நவம்பர், 2014

“ க… க… க… கல்லூரி சாலை! “

பாடிக்கிட்டே வந்து உட்கார்ந்த துரையை எரிச்சலோடு பார்த்தான் ரவி!
ஏன்டா, உனக்கென்ன திக்குவாயா?
லூசுமாதிரி ஒரு பாட்டப் பாடிக்கிட்டு திரியற?”
ரவி அப்படி சட்டுன்னு யாருகிட்டயும் கோபப்படமாட்டான்.
அதிலும் துரைகிட்ட!
துரைக்கு ரவிமேல ஒரு மரியாதை கலந்த பிரியம்!!.
கல்லூரித் தோழன், கடைசி பெஞ்ச் பக்கத்து சீட்டுப் பங்காளி என்பதை மீறி,
தொரை, அந்தக் கிணத்துல போய்க் குதி ன்னு ரவி சொன்னா,  “ஏன் னு கேட்கும் நேரத்துக்குள் குதித்துவிடுமளவு!
வா மாப்ள, அந்த வேங்கி சனியன் வந்து தூங்கவைக்கறதுக்குள்ள, கேண்டீன்ல போய் கொசு மருந்து அடிச்சுட்டு வந்துருவோம் னு கூப்பிட்டான்.
ரவிக்கும் அப்போது ஏதாவது தேவைப்படடதால், மறுப்பே  சொல்லாமல் எழுந்திருச்சுப்போனான்.
ரெண்டு டீயை வாங்கிக்கிட்டு ஓரமா உட்கார்ந்த உடனே துரை கேட்டான்!
சொல்லுடா!
உமா காலைல ஃபோன் பண்ணாடா!


சரி!,

அவங்க டீ குடிச்சுட்டுப் போய் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி க்ளாஸ்ல தூங்கட்டும்!
இந்த மூனு வருட கல்லூரி வாழ்க்கையோட சுருக்கமான Synopsis பாரத்துட்டு வருவோம்!

Physics lecturer பாஸ்கர்தான் அந்த காலேஜ் ஹாஸ்டல் வார்டன்!
நல்ல ஃபுட்பால் ப்ளேயர்!
ஆனா கொஞ்சம் சிடுமூஞ்சி!

எட்டு மணிக்குமேல day scholars யாரும், ஹாஸ்டல்ல தங்கக்கூடாதுன்னு நோட்டீஸ் போர்டுல போடலாம்.- அத யாரும் தப்புன்னு சொல்லல,

அதுக்காக, அத ரொம்பத்தீவிரமா அமல்படுத்த நெனச்சுது அந்த அமுல் பேபி.

சார், இதெல்லாம் அந்த ஆர்ட்ஸ் க்ரூப் பசங்க ஒத்துக்கமாட்டாங்க, அதுமட்டுமில்லாம, எங்கள மாதிரி சயன்ஸ் க்ரூப் பசங்க group study  பண்ண எடஞ்சலா இருக்கும்னு நல்லவிதமாத்தான் போய் சொன்னான் ரவி!

சரி, அல்லது வேண்டாம்! - இதுதானே ஒரு நல்ல ஆசிரியர் சொல்லவேண்டிய பதில்?

நல்லாப் படிக்கற நாயி எங்க இருந்தாலும் படிக்கும்,  இப்ப மணி எட்டரையாயிடுச்சு,  நீ மொதல்ல எடத்த காலி பண்ணு ன்னு அன்பார்லிமெண்டரியா பேசலாமா ஒரு சொல்லிக்குடுக்கற குரு?

இது மத்தவங்க யாருக்குத் தெரிஞ்சாலும் பரவால்ல, நாளைக்கு காலேஜ் கேட்லயே நின்னு, “இந்த ரவிப்பயல் எவ்வளவு அசிங்கப்பட்டான் னு உனக்குத் தெரியுமான்னு, செலின் கிட்டப்போயி சொல்லாதா இந்த ரமேஷ் பக்கி ?
ரமேஷ் ?
செலின் ?
ரமேஷ உடுங்க, அது எங்க காலேஜுல ஆயிரம டேஷுல ஒன்னு!
செலின்- எங்க காலேஜுக்குன்னு ஆண்டவன் அனுப்பி வெச்ச ஆசீர்வாதம்.
7 A ல வந்து அந்த அரபிக்குதிரை அப்படியே மெதந்து வரும்போது, எவன் வாயில பூதலாம்னு அந்த ஈக்கே தெரியாது. 
குஜராத்ல இருந்து ஈரோடு வந்து வட்டிக்கு விட்டு வந்த காசுல வளர்நத மயில்.
மறுநாள் விடிஞ்ச உடனே, அம்மா கேட்டப்ப,
நான் ப்ரின்சிபல் கூட கம்பைன்ட்டா பல் தேய்ச்சுக்கறேன்னு சொல்லிட்டு, காலேஜுக்கு வந்துட்டான் ரவி!
அடுத்த வருஷம் ரிட்டயராகப்போற அனந்த பத்மநாப நாடார்ன்னு அப்பா அம்மாவால பேர் வைக்கப்பட்ட அனந்து,  
எங்க ப்ரின்சி, தன்னைவிட தோராயமா ஒரு ஏழெட்டு வருஷம் மூத்த சைக்கிள மிதிச்சுக்கிட்டு வாய் நிறைய மூச்சு விட்டுக்கிட்டே வந்து உட்கார்ந்தா,
கற்பழிப்புக்கு தப்பிச்சு வந்த கதாநாயகி மாதிரி, சோகமா வந்து நின்னான் ரவி!
இந்த ரண்டு வருட பழக்கத்துல, ரவி, பேர் சொன்னா தெரியற அளவுக்கு பிரபலம்.
காலேஜ் டே கல்சுரல், inter college meet ல கவிதைலயோ, பேச்சுலயோ, கட்டாயம் ஒரு கோப்பை,
பழுது சொல்ல முடியாத அளவு aggregate படிப்புல.
போதாதா ஓரளவுக்கு பிரபலமாக ???
அதுபோக, அந்த வருஷம் காலேஜ் சேர்மன் முகமது அலி, ரவியோட கேண்டிடேட்!.
இப்ப மாதிரி காலேஜ் எலெக்க்ஷன்ல, அரசியல் எல்லாம் எட்டிப்பார்க்காத ஆரோக்கியமான சூழல்!
பிட் நோட்டீஸ் ல, வகைதொகையில்லாம வாக்குறுதி!
சில்க் ஸ்மிதாவ காலேஜ் டேக்கு வரவைப்பேன்”,
ஸ்போர்ட்ஸ் டே க்கு கபில்தேவ்”,
ஆண்டுவிழாவுக்கு கலைஞர்
 இப்படி!
ஆனா, இதுல சில்க் சுமிதாவைத்தவிர, மத்த ரண்டையும் சாதிச்சதையும்,
(சில்க் கேட்ட காசுக்கு ஈரோட்டையே வாங்கிடலாம்),
 கலைஞர் வந்து ஒருமணி நேரம் பேசி முடிச்சுக் கிளம்பியதும்,
ப்ரோக்ராம் எப்புடி மாப்ளன்னு கேட்டப்ப,
வெள்ளைக்கலர் பொடவைல சுப்புலட்சுமி சூப்பர் னு மோகன் பதில் ஜொல்லியத விட,
முகம்மது அலிக்கு, டஃப் ஃபைட் கொடுத்த கந்தசாமிய, வெறும் குப்பைத் தொட்டியை வைத்து தோற்கடித்ததையும் வரலாறு சொல்லும்!

ரெண்டுபேருக்கும் ரொம்ப நெருக்கமான போட்டி!

ஆர்ட்ஸ் பசங்க கந்தனுக்கு தீயா வேல செய்யறானுக!

கேண்டீன்ல கேட்டபோதெல்லாம், நாய்க்காது மாதிரி ஒரு வாழைக்காய் பஜ்ஜியும், ஒரு லோட்டா நிறைய டீயும் எல்லோருக்கும் ஃப்ரீ!
கந்தன் உபயம்!

அதையும் வெட்கமே இல்லாம வாங்கித்தின்னுக்கிட்டே, சதியாலோசனை!
பொண்ணுங்க ஓட்டெல்லாம் கந்துக்குத்தான்டா! இது செலின் கொடுத்த வாக்குமூலம்!

அவனோட வாக்குறுதி, “கல்ச்சுரல்ஸுக்கு கமலஹாசன்!

என்னடீ பண்ணலாம், நீயே சொல்லு ன்னு கேட்டா, தேவதைக்கும் பதில் தெரியல.

போனவாரம் செலின் ஏறத்தாழ கண்ணீரோட பொலம்புன, அப்ப சின்னப்பிரச்னைன்னு பட்ட ஒரு விஷயம், ரவிக்கு ஞாபகம் வந்துச்சு!

அலி பாய்கிட்ட ஐநூறு ரூபாய வாங்கிக்கிட்டு, செலினோட ஆட்டோல டவுனுக்கு கெளம்பிட்டான்!
அப்பல்லாம் டூ வீலர் ரொம்ப கம்மி!

நேரா ஃபேன்சி ஸ்டோர் போனவங்க, நல்லதா மூடி போட்ட  ஒரு ஆறு dust bin வாங்கிக்கிட்டு, நேரா காலேஜ்!

எல்லா லேடீஸ் டாய்லட்லயும் ஒன்னொன்னு!

கமலஹாசனா, கன்வீனியன்சியா ன்னு செலின் போடட கோஷம்,
முக்கால்வாசி பொண்ணுக ஓட்டு அலி பாய்க்கு!

எப்பூடி ன்னு பெருமையாக் கேட்டா, அந்த நாய் கேக்குது
"வரும்போது அன்னைக்கு ஆட்டோல எடம் பத்தாம செலின் உன் மடில உட்காந்துக்கிட்டு வந்தாளாமே!"
அத்தன நாளும் நாதாரி எத மனசுல சொமந்திருக்குது பாருங்க !

அனந்து ரூம்லருந்து கதை எஙகயோ போகுது!

யுனிவர்சிட்டி ரேங்க் வாங்க படிப்பு எவ்வளவு முக்கியம், அதுக்கு group study  எவ்வளவு முக்கியம்னு ப்ரின்சிகிட்ட அழுது பொலம்பி,
பாஸ்கர்கிட்ட பேசறேன்னு சொல்ல வைச்சாச்சு!

அன்னைக்கே ஹாஸ்டல்ல தங்கி,  வெற்றி விழா!

ஆனா, துரைக்கு இது பத்தல.

இந்த பாஸ்கர் பயல ஓட்டணும்டா!

ஒரு வாரம் கழிச்சு,
மாப்ள இன்னைக்கு நான் ஹாஸ்டல்ல தங்கிக்கப்போறேன் னு திடீர்னு சொல்லி, அவன் மாத்திரம் தங்கிட்டான்!

மூர்த்தியும் அவனும் ஒரு சதிப்பார்வை பார்த்தத ரவி கவனிக்கல!

அன்னைக்கு ராத்திரி, பேயெல்லாம் தூங்கி, பாஸகரனும் தூங்கற நேரம், தொரையும், மூர்த்தியும் மெதுவா வார்டன் ரூம்கிட்ட வந்தானுக,

கையில, தீபாவளி மிச்சம், செங்கோட்டை வெடி ஒரு பெரிய சரம்!
பாஸ் கொறட்டை சத்தம் கதவ மீறி கேக்குது!
நிதானமா, முழு சரத்தையும் கதவுக்கு அடி சந்து வழியா உள்ள தள்ளி, வெளில நீட்டிக்கிட்டிருந்த திரிய கொளுத்திட்டு, சத்தம் காட்டாம யாருக்குமே தெரியாம வந்து படுத்திருச்சுக ரெண்டும்!

மறுநாள் இந்த கொரங்குகளுக்கு நான் வார்டனா இருக்கமுடியாதுன்னு எழுதிக்குடுத்திருச்சு - பாஸ் என்கிற பாஸ்கரன்!


இன்னும் ஒரே ஒரு டைவர்சனுக்கப்புறம்  உமா கதைக்குப் போகலாம்!

அன்னைக்கு கெமிஸ்ட்ரி இன்டர்னல் எக்ஸாம்!
மூன்று தேர்வுகள், மாதம் ஒன்றாய், எல்லா சப்ஜெக்டிலும்!
மூன்றில் பெஸ்ட் ஒன்று தேர்வுக்கு இன்டர்னல் மதிப்பெண்!

அன்றைக்கு நடப்பது மூன்றாவது!  
அதிலும்,அன்று மேஜர்- கெமிஸ்ட்ரி!

நீயோ எழுபது பர்சன்ட் மட்டுமே இலக்காய் இருப்பவன்!
இப்ப வெச்சிருக்கற மார்க்கே எதேஷ்டம்!
இதோ இந்த தண்டக்கடன் ரமேஷ் தலைகீழா நின்னாலும் பாஸ் பண்ணப்போறதில்லை!
எங்கப்பன் வீட்ல இருந்தா எருமை மேய்க்கச்சொல்லுவான், அதனால, ஒரு டிகிரி வாங்கித் தொலைவோம்னு காலேஜுக்கு வர்ரவன் நான்!
டிகிரி இருந்தா பொண்ணப்பெத்த பாவிகிட்ட ஐம்பது பவுன் அதிகம் கேட்கலாம்னு எங்கப்பனும் கணக்குப்போடறான்!
இதுல இந்தப் பாழாப்போன பரிட்சை முக்கியமா, இல்ல, தலைவர் படம் முக்கியமான்னு
நல்லவனுக்கு நல்லவன் டிக்கெட்டக்காட்டுது தொரை!

நாமளும் வெள்ளைக் கோட்டுப் போடற சயன்டிஸ்ட் ஆகப்போறதில்ல,  இந்த எழவு கெமிஸ்ட்ரிய மேல P.G. படிச்சு இப்படி வாத்தியாராவும் வரப்போறதில்ல
அப்படியே வந்தாலும் இனி படிக்க வர்றதுக நம்மளவிட மோசமாத்தான் இருக்கும்,
நாம படிக்கப்போற M.B.A.க்கு 60% போதும்.
பாவம், மீதி மார்க்கை, மோகன் மாதிரி தயிர்சாதம் வாங்கி்க்கட்டும்னு கெளம்பியாச்சு!

சினிமாவுக்குப் போனமா, மூடிக்கிட்டு படத்த பாத்தமான்னு இருக்காது அந்த ரமேசு?

பின்னாடி சீட்ல ஸ்டைலா உக்காந்திருந்த பொம்பளைக்கு இன்டர்வெல்ல சோடா வாங்கித் தந்து வழியுது சனி!

விநாஷகாலே விபரீத புத்தி!

அது அப்பன் அடி தாங்காம எல்லா சப்ஜெக்ட்டுக்கும் டியூசன் போகும்!
யாருடான்னு கேட்டா, கெமிஸ்ட்ரி சக்திவேல் சார் பொண்டாட்டியாம்!

கேட்கணுமா, குடிச்ச சோடா ஏப்பம் விடறதுக்குள்ள வீட்டுல சார்கிட்ட சொல்லியாச்சு!

அன்னைக்கு டெஸ்ட்டுக்கு ஆப்சன்ட் ஆன மீதி ரண்டு பேர கண்டுபிடிக்கறது ஒன்னும் கம்பசூத்திரமில்லையே!

மறுநாள் காலைல
முதல் பீரியட், இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி - சக்திவேல் சார்!
அப்பாவியா கேக்கறாரு,
நேத்து யாரெல்லாம்பா டெஸ்டுக்கு வரல?”

மூனே மூனு பேரு எந்திருச்சு நிக்கறாங்க.
கடைசி பெஞ்ச் ரண்டு, மொத பெஞ்ச் ஒன்னு!

ஏன் வர்ல ராஜா,  ஏதாவது முக்கியமான வேலையா?”

பேசி வெச்சு சொன்னாலே உளறும் ரமேஷ், “எங்க பாட்டி செத்துட்டாங்க சார்!
துரை, “எங்க பாட்டியும்!

ரவிகிட்ட சொன்னாரு,
நீயாவது வித்தியாசமா எதாவது சொல்லு!

செலின் வேற பக்கத்து வரிசைல இருந்து சிரிக்குது!

சொன்னான் – எங்க பாட்டி வயசுக்கு வந்த சீரு நேத்தைக்கு!
மனை வைக்கப்போய்ட்டோம்!

அந்தியூர் சந்தைமாதிரி ஆகிப்போச்சு வகுப்பு!

கதை கேட்ட அனந்து, சிரிப்ப அடக்கிக்கிட்டு
ரெண்டு நாள் சஸ்பெண்ட்!!

மறுநாள் வீட்டுல,
கரஸ்பாண்டென்ட் மாமனார் செத்துப்போய்ட்டாரு!
ரண்டு நாள் காலேஜ் லீவு!

போதும்!
இனி செகண்ட் பார்ட் எழுதுனா மத்ததைப் பேசுவோம்!

உமாவ அம்போன்னு விட்டு வந்து ரொம்ப நேரம் ஆச்சு!


ரவி, துரை, ரமேஷ், கார்த்தி, மோகன், செலின், உமா, காயத்ரி, இதெல்லாம் ஒரு செட்!

நம்ம எல்லோரும் ஃப்ரெண்டஸ், கடைசி வரைக்கும்!
இந்த லவ் கன்றாவியெல்லாம் வேண்டாம்!
ஜாலியா ஊர சுத்துனமா, படிச்சமா, அப்பா அம்மா சொல்ற கிறுக்கனையோ, கிறுக்கியவோ கல்யாணம் பண்ணுனமான்னு இருக்கணும்!
இதுதான் ஒப்பந்தம்!

கடைசி வருஷம் பாதிவரைக்கும் ஒழுங்காத்தான் போச்சு!

ஒருநாள் உமாதான் மெல்லச் சொன்னாள்!
"நானும் கார்த்தியும் லவ் பண்றோம்!"

ரெண்டும் மத்தவங்களுக்குத் தெரியாம பலநாள் சாயங்காலம் தனியா ஊர் சுத்தியிருக்குதுக!
வழக்கமான சினிமாக்காதல்!
யார் சொன்னதும் காதுல ஏறல!

கார்த்தி சொல்றான் – டேய், நீ ப்ராமின் பாய் மாதிரியே இருக்கேன்னு உமா சொல்றாடா!
காயத்ரிதான் கேட்டா,
ஏன்டா எருமை! அதுக்கு அவ ஒரு ப்ராமின் பையனையே கட்டிக்கலாமேடா!
அதத்தானே அவங்க அப்பாவும் சொல்லுவாரு!
தினமும் எலும்பு கடிக்கறவன் நீ, அவ ரொம்ப ஆசாரமான ஐயர் பொண்ணு! ஏண்டா இந்த பாவமெல்லாம்னா,
ரெண்டும் கோரஸா சொல்லுச்சுக, கல்யாணத்துக்கப்புறம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்!

அதுக்கப்புறம் எல்லாமே வேகமா நடந்துச்சு!

அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு உமா காலேஜ் வர்றது நின்னுச்சு!
பத்துநாளா, கார்த்தி வெறிச்சுப் பார்த்துக்கிட்டே ஹாஸ்டல் ரூமே கதி!

இந்த நிலைலதான் ரவி வீட்டு நமபருக்கு உமா ஃபோன்.
விஷயத்தக் கேட்ட துரை, மத்த எல்லோரையும் போய்க் கூட்டிக்கிட்டு வந்தான்!

விஷயம் இதுதான்!

இன்னும் ரெண்டு நாள்ள உமாவ பொண்ணு பார்க்க வர்றாங்க!

செலின் ஒருத்திதான் தீர்மானமாய்ச் சொன்னாள்!
விடு ரவி, எல்லாம் மறந்துபோகும்!

சைலண்ட்டா உட்கார்ந்திருந்த கார்த்தியப் பார்த்து துரை அலற, என்னன்னு பார்த்தா, பிளேடு எடுத்து கைல தாறுமாறா அறுத்து, ரத்தமா சொட்டுது!
இப்ப என்ன சொல்றேன்னா,
இரக்கமே இல்லாம செலின் சொல்றா, “இவன் சாகமாட்டான்!
நீ ஒரு எமோஷனல் இடியட்!
இப்ப எதுவும் இதுக்கு சாதகமா முடிவெடுக்காதே!

அவ பேச்ச அப்படியே ஒதுக்கி, “கார்த்தி, நீ அவள உங்க ஊருக்கு கூட்டிக்கிட்டுப்போயிறு ன்னான்!

ஐயோ, எங்க ஐயன் கட்டிவெச்சு தோல உறிச்சுருவாரு!

அப்ப மூடிக்கிட்டுப் போய் படிக்கற வேலையப்பாரு! - இது செலின்!

யாருமே எதிர்பார்க்காத ஒன்ன கார்த்தி செஞ்சான்!

அப்படியே தரையில விழுந்தவன், ஏறத்தாழ நூறுபேர் பார்க்க ரவி காலப்புடிச்சுக்கிட்டு கதறுனான்!

எப்படியாவது எங்கள சேர்த்தி வெச்சுரு ரவி!
இல்லாட்டின்னா, நான் செத்துப்போயிருவேன்!

“Bull shit! கல்யாணம் ஆனாத்தான் மெச்சூரிட்டியே இல்லாத நீ செத்துப்போவடா முட்டாளே!ன்னு செலின் கத்த,
முகத்தில் அறைந்துகொண்டு கதறும் கார்த்தியை பரிதாபமாகப் பார்த்தான் ரவி!

அவ்வளவுதான்,
படப்படன்னு முடிவெடுத்தான் ரவி!

ரமேஷோட சித்தப்பா திருச்சில ஃபர்னிச்சர் கடை வெச்சிருக்காரு! அங்க கார்த்திக்கு வேலயும் தங்க இடமும் ரெடி பண்ணவேண்டியது ரமேஷ் வேலை!

மணியோட கார எடுத்துக்கிட்டு சங்ககிரி போய் உமாவை திருச்சிக்கு கூட்டிட்டுப்போறது ரவி வேலை!

பணம் ஒரு ஐயாயிரம் ரெடி பண்ணவேண்டியது துரை வேலை!

“Stupid fellows!! இந்தக் காரியத்துக்கு வாழ்நாள் பூரா வருத்தப்படப்போறீங்க ன்னு கோபத்தில் முகம் சிவக்க எழுந்துபோனாள் செலின்!

எல்லாமே திட்டப்படி நடந்தது!

ரெண்டாம்நாள் காலை ஏழு மணிக்கு உமா வீட்டுக்கதவைத் தட்டினான் ரவி!
ஏற்கனவே பேசியபடி, பொட்டுத்தங்கம் இல்லாமல், ரெடியாய் இருந்தாள் உமா!
காருக்குள் ரெடியாய் துரை!
ஐயர் சுதாரிக்கறதுக்குள்ள படி இறங்குனவங்கள மறித்தான் உமாவோட தம்பி!
இடது கையால் அவனை ஒதுக்கிய ரவி உறுமலாய்ச் சொன்னான்!
எவனாவது குறுக்க வந்தீங்க, வெட்டி வீசிடுவேன்!

அப்புறமென்ன, நேராய்த் திருச்சி,
உடனே சமயபுரத்தில் கல்யாணம்!!
வயலூர் ரோட்ல வீடு!
கையிலிருந்த ஐயாயிரத்தை உமா கையில் கொடுத்தவன்,
பெரிய மனுஷன் மாதிரி சொன்னான், “ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகும்!

ஃபேண்டஸி கதைகள் இப்படித்தானே முடியும்?எதுவுமே சரியாகவில்லை!

கல்யாணத்துக்குப்பின் வந்த திடீர் சுமையில் குறைகள், கலாச்சார முரண் எல்லாம் பெரிதாகத் தெரிய, ஓயாத சண்டையில்,
மூன்றாவது மாதம், கார்த்தி விஷம் குடித்து செத்துப்போனான்.


உமா,??பெருந்தன்மையான அத்தை மகனை அடுத்தவருடம் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியா போனாள்!!!

2 கருத்துகள்:

 1. செம்ம சேட்டையான கதை..

  ரசித்த வரிகள்..

  க… க… க… கல்லூரி சாலை! “
  பாடிக்கிட்டே வந்து உட்கார்ந்த துரையை எரிச்சலோடு பார்த்தான் ரவி!

  நான் ப்ரின்சிபல் கூட கம்பைன்ட்டா பல் தேய்ச்சுக்கறேன்”
  கேண்டீன்ல போய் கொசு மருந்து அடிச்சுட்டு வந்துருவோம்”

  எட்டணா வாடகைக்கு எங்க ரூம் கெடைக்கும்னு விசாரிக்க எறங்கிப்போச்சு ஒரு க்ரூப்!

  “கரஸ்பாண்டென்ட் மாமனார் செத்துப்போய்ட்டாரு!
  ரண்டு நாள் காலேஜ் லீவு!”

  கல்யாணம் ஆனாத்தான் மெச்சூரிட்டியே இல்லாத நீ செத்துப்போவடா முட்டாளே!”

  செமிஸ்ட்ரி வகுப்புல தமிழ் லிட்டரேச்சர் மாணவன் மாதிரி கொஞ்சம் அங்க இங்க போன கதையால கதை முடிவு பாதிக்கவே இல்லை.
  நல்ல முயற்சி, தொடருங்கள். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thanks a lot daughter!
   The love plot was used only as pickle! Thought of writing only the college life.
   An unbelievable real love story with lots of twists is there. But have to get nod from all the people around who are very much alive still!

   நீக்கு