புதன், 19 நவம்பர், 2014

பேய் அரசு செய்ய....


கடந்த இரு நாட்களாக அதிகம் இணைய கவனம் ஈர்க்காது ஒரு விஷயம் தரமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்துள்ளது!

இங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பன்னிரண்டு பச்சிளம் குழந்தைகள் இறந்திருக்கின்றன!
பன்னிரண்டு குடும்பங்களின் கனவுகள் இரண்டு நாட்களில் ஒரே கூரையின்கீழ் கலைந்தன.

தி ஹிண்டு புகைப்பட ஆதாரத்துடன் சொல்லும் புள்ளி விபரம்:

v  குழந்தைகளுக்கான ICU வில் AC வேலை செய்யவில்லை! எனவே வேறு வழியின்றி கதவுகளை திறந்துவைக்கவேண்டியுள்ளது.

v  ஈக்களும் கொசுக்களும், உள்ளே நுழைவதால்நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது!

v  பற்றாக்குறை காரணமாக ஒரு குழந்தைக்கான வார்மரில் நான்கு குழந்தைகள் வைக்கும் நிலை!

v  இதன் மூலமும் நோய்த்தொற்று ஏற்படுவதோடு, ஒரு குழந்தை கை அசைக்கையில் மறு குழந்தையின் சலைன் இணைப்பு போன்றவை துண்டிக்கப்படுகிறது!

v  போராடி வாங்கிய ஜெனரேட்டரிலும் AUTO ON வசதி இல்லை!

இந்த லட்சணத்தில், உயிர் காக்கும் மருந்துகள் எந்த அளவில் கையிருப்பில் இருக்கும் என்பது எளிதில் யூகிக்கக்கூடியதே!

எவ்வளவு அவலமான உண்மை!

இதில் அரசு மருத்துவர்களை குறை சொல்வது மடமை!

அரசுப்பணிக்கு வரும் மருத்துவர்களில் 90 சதவிகிதம் பேர்,  பழுது சொல்லமுடியாத அர்ப்பணிப்பு உடையவர்களே!

அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்,
அரசும், அதிகாரிகளும் காட்டும் அலட்சியத்தில்,
கடமையை நிறைவேற்ற மன உளைச்சலுடன் போராடும் அவர்களை குறைகூறல் பாவம்!

நம் பொம்மை முதல்வர் ஒரு அறிக்கை விடுகிறார்!

அவர் கவனம் எல்லாம் முதல்வர் தோரணை தெரிந்துவிடக்கூடாது என்று முகத்தை சவம் போல் வைத்துக்கொள்வதில்தான் இருக்கிறது!
பாவம்! அவர் கவலை அவருக்கு!

மாதம் 39 பச்சிளம் குழந்தைகள் சாகும் தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் நடந்த சாவுகள் மிகைப்படுத்தப்படுகின்றன என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் முதல்வர்!

எத்தனை கயமை!

இந்த மாத இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என்கிறாரா திருவாளர் பன்னீர் செல்வம்?

இதில் இந்திய அளவில் ஒப்பீட்டுப் புள்ளிவிபரம் வேறு!

இவரால் இதுபோல்,
விபத்து பற்றிய கேள்விகளுக்கு,
இலக்கை எட்டாத டிரைவர்களையும்,

கற்பழிப்பு பற்றிய கேள்விகளுக்கு,
இலக்கை எட்டாத இளைஞர்களையும், சாமியார்களையும்
புள்ளி விபரத்துடன் ஊக்குவிக்க முடியும் என்று  நம்புகிறேன்!

அடிமை முதல்வருக்கு, முதல் சாவு நடந்தவுடன் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளை சரிசெய்யத் தோன்றவில்லையா?

நாளிதழில் குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட, ஒருமணி நேரம் போதாதா?

ஒரு வார்டு கவுன்சிலர் நகர் பவனி வர நான்கு காரும்,
ஒரு ஊழல் குற்றவாளி பறந்து வர தனி விமானமும்
இருக்கும் நாட்டில், ஏழைக்குழந்தைகளின் உயிர் காக்க ஓரிரு லட்சங்களை ஒதுக்கமுடியாதா?

பாவம்,
ஆளும் கட்சிக்கு,
தலைவியின் தண்டனையிலிருந்து மக்களை திசை திருப்ப,
அடுத்த தேர்தல் வாக்குறுதியாக,
 டாஸ்மாக் உபயத்தில் ஈரல் வெந்து செத்தால்,
இலவச வாய்க்கரிசி திட்டம்
தயாரிக்கும் மும்முரம்!

கள்ள மௌனம் சாதிக்கும் தமிழினத் தலைவருக்கோ,
மனைவியையும் மகளையும் காப்பாற்றும் வழியே தெரியாத கவலை!

மேலும் அவர் எதிர்வரும் தேர்தலில்
இலவச மலர்வளையம் திட்டத்தை யோசித்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ!

சுதந்திரம் "வாங்கித்தந்ததாய்" மார் தட்டும் கட்சியின் மாநிலத் தலைமைக்கோ,
இருக்கும் ஆறு உறுப்பினர்களின் ஏழு கோஷ்டிகளிடையே,
கட்டிய வேஷ்டியை காப்பாற்றிக்கொள்ள நேரமில்லை!

நாடாளும் கட்சிக்கோ,
நடிகரை இழுத்து, தாமரைக்கு வண்ணம் தீட்டும் மும்முரம்!

பிரதான எதிர்க்கட்சித்தலைவருக்கு
தேர்தல் பேரத்துக்கு நாக்கைக் கடித்துக்கொண்டு வந்தால் போதும் என்ற எண்ணம்!

ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
கண்ணீர்க் கட்டுரை ஒன்றை, கலர் படங்களுடன் பிரசுரித்துவிட்டு, அடுத்த பரபரப்பை முந்தித் தரும் சர்க்குலேசன் லட்சியம்!

எங்கே போய் முறையிடும் ஏழை ஜனம்?

தூய்மை இந்தியா திட்டம் எக்கேடோ கெடட்டும்!

அதை, நடிகர்களும், பிரமுகர்களும் கேமரா முன்பு பார்த்துக்கொள்வார்கள்!
அவர்களுக்குத் தேவையான குப்பை தாராளமாகக்  கிடைத்துவிடும்!

வசதியிருப்போரும், வாய்ப்பிருப்போரும்,
ஆளுக்கொரு அரசு மருத்துவமனையையும்,
கூடவே ஒரு அரசுப் பள்ளியையும் தத்தெடுக்கட்டும்!

பிறக்குமுன்பே அப்துல் கலாம்களும், சகுந்தலா தேவிகளும், பச்சிளம் குழந்தைகளாய்ச் சாகவும்,
பிறந்தபின்பு படிக்கும் வசதியற்று வாடவும் நேரும் அவலம் ஒழியட்டும்!

கல் தோனறி மண் தோன்றாக்காலத்து மூத்த குடிப் பொது மக்கள்
சாராயம் குடித்து மாண்டும்,

தேர்தல் திருவிழாக்களில் மடிப்பிச்சை எடுத்தும் வீழட்டும்!விதியே, விதியே இன்னும் என்னசெய்யப் போகிறாய் என் தமிழினத்தை!

1 கருத்து:

  1. சரியான சாட்டை அடி நடுநிலையான சமுக பார்வை தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்

    பதிலளிநீக்கு