திங்கள், 24 நவம்பர், 2014

இதுதான் காதல்!

பாப்பாத்தி, நான் போயிட்டு வர்ரேன்.

இதை, பத்தாவது தடவையாகச் சொன்னார் நம் கதை நாயகர் K.S.  என்று எல்லோரும் அழைக்கும் சுப்பிரமணியம்.

கல்யாணத்துக்குத் தயாராக இருக்கும் மகள்கள் கீதாவும், சுமதியும் ஒருவரை ஒருவர் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொள்ள, வள்ளியம்மாவின்  குரல் தங்கையை பார்த்து ஓங்கி ஒலித்தது.
இந்தாடி, நீ போய், என்னன்னு கேட்கறவரைக்கும் அந்த ஆள் போகமாட்டாரு. போய் அனுப்பிச்சுட்டு வா

குறும்புச்  சிரிப்பு சிரித்துக்கொண்டு இந்த நாடகத்தை ரசித்துக்கொண்டிருந்தார் அவரை கூட்டிச்செல்ல வந்திருந்த பிசினஸ் பார்ட்னரும் உறவினருமான தங்கவேல்.

இது ஒன்றும் புதிதல்ல. இத்தனைக்கும் ஒரு இரண்டுநாள் வியாபார விஷயமாக தஞ்சாவூர் போகப்போகிறார் அவ்வளவே!

பாப்பாத்தி வந்து வழியனுப்பாமல், கல்யாணம் ஆன இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருநாள்கூட அவர் வாசல்படி தாண்டியதில்லை. பாப்பாத்தியும், அவர் தலை தெருமுனையில் திரும்பி மறையும்வரை நின்று பார்க்காமல் உள்ளே போனதில்லை.

பாண்டமங்கலம் கடை வீதிக்கு இந்த நிகழ்ச்சி ஒன்றும் புதிதில்லை.
இன்னைக்கு கல்யாணம் ஆனவர்கள் கூட இப்படி இருக்கமாட்டார்கள் என்று எல்லோருமே சந்தோசத்துடன் சலித்துக்கொள்ளுவார்கள்.

மாமா அலங்காரப்பிரியர். 
சும்மா தெருமுனை வரைக்கும் போய்வருவது என்றால்கூட, அந்த ஊரில் மற்றவர்களைப்போல் ஏதோ ஒரு பனியனையோ, சட்டையையோ மாட்டிக்கொண்டு போகமாட்டார். மனதுக்குப் பிடித்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பா இல்லாமல் அவர் படி இறங்கி, யாரும் பார்த்ததில்லை. 

அதுபோலவே சாப்பாட்டிலும். ஒரு கல் உப்போ, ஒரு துளி இனிப்போ, உறைப்போ குறைந்தாலும், முகம் சுளித்துவிடுவார் எங்காயிருந்தாலும். அப்படி அவர் நாக்கைப் பழக்கி வைத்திருந்தது, திருத்தமான என் அத்தையின் சமையல்.

வியாபாரம் இல்லாத நாட்களில், பொழுதைப் போக்க, மகன்கள் சீனியோடோ, சேகரோடோ காப்பித்தூள் கடையில் உட்கார்ந்திருக்கும்போதும் ஒருநாள்கூட, கசங்கிய சட்டையோடோ, கலைந்த கேசததோடோ அவர் இருந்து யாரும் பார்த்ததில்லை.

ரசித்துக் குளித்து முடித்து, கண்ணாடி முன்னாள் நின்று, அவர் தலையைப் படிய வாரும் அழகை அந்த வயதிலேயே விளையாடுவதை விட்டு வேடிக்கை பார்ப்போம் நானும், தமிழ்செல்வனும். தலைசீவி, பட்டை பட்டையாய் விபூதி இட்டுக்கொண்டு, அவர் ஜவ்வாது டப்பாவை திறக்கும்போது, வீடே மணக்கும். தண்ணீரில் குழைத்து, ஜவ்வாது பூசி, திருப்தியாகாமல் மற்றும் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்து, விலகி இருக்கும் ஒன்றிரண்டு முடியையும் படிய வைத்தாலும், எங்கள் பாப்பாத்தி அத்தை, திருப்தியாய்த் தலை அசைக்காமல் நகரமாட்டார் எங்கள் மாமா.

சிறுவர்கள் எங்கள் எல்லோருக்கும், இது ஒரு ஆனந்தமான காட்சி.  அதிலும்,எனக்கும், தமிழ்செல்வனுக்கும் எங்கள் அத்தையை வெட்கப்பட வைத்து பார்ப்பதில் அப்படி ஒரு ஆனந்தம்.

மாமாவை இப்போது யாராவது பெண்கள் பார்த்தால்கூட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்பாங்க என்று சொன்னால், ஏற்கனவே பூரித்திருக்கும் எங்கள் அத்தை முகம் இன்னும் ஒரு சுற்று பூரித்து மலரும்.

அவரும் ஒன்றும் சளைத்தவரில்லை.
எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தபோதும், எந்நேரம் பார்த்தாலும், மலர்ந்து, சிரிக்கத்தயாரக இருக்கும் அந்த முகத்தில், வேர்த்துவடிந்தோ, வட்டமான அந்த பெரிய குங்குமப்பொட்டு வடிவம் குலைந்தோ நாங்கள் பார்த்ததில்லை.

யாரிடமும் கடிந்து பேசத்தெரியாத குணம் எங்கள் அத்தைக்கு மட்டுமல்ல, மாமாவுக்கும்தான்.
அதுவும், பள்ளிக்கூடத்து சிறுமி போல் எப்போதும் புன்னகை பூத்து நிற்கும் எங்கள் அத்தையை பார்க்கும்போது, அந்த இரும்புப்  பெட்டியில் ஒட்டிவைத்திருக்கும் லட்சுமி படம் உயிரோடு நேரில் வந்தமாதிரிதான் இருக்கும்.

பாப்பாத்தி அத்தை எங்கள் ஆயாவுக்கும், தாத்தாவுக்கும் நாலாவதாய்ப் பிறந்த குழந்தை. உள்ளூரிலேயே ஒரு மூன்று மைல் தூரத்தில் கட்டிக்கொடுத்த மகளும் தன்னைப்போலவே பத்து பிள்ளை பெறுவார் என்று எங்கள் ஆயாவே நினைத்திருக்க மாட்டார்.

இருவரும், மடிப்பு கலையாமல் உடுத்தி, ஜோடியாக எங்காவது விசேஷங்களுக்கு போகும்போது எல்லார் கண்களும் அவர்கள் மேல்தான். பத்து பிள்ளை பெற்ற ஆயாசமோ, அலுப்போ, இருவர் நெருக்கத்திலும் கொஞ்சம் கூட தெரியாது. அன்றைக்குத்தான் கல்யாணம் ஆன புதுமணத்தம்பதிகளைப் பார்ப்பதுபோல்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.
எங்கே எவ்வளவு கூட்டத்திலும், மாமா சாப்பிட்டாரா என்று அத்தைக்குத் தெரியும், அத்தை சாப்பிட்டது மாமாவுக்குத் தெரியும். இரண்டு பேரும், கூட்டத்தில் தனித்தனியே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். எப்படித்தான் சொல்லிவைத்தமாதிரி ஒரே நேரத்தில் வாசலுக்கு வருவார்கள் என்று, கடைசி வரைக்கும் எனக்கு புரிந்ததே இல்லை.
முன்பே சொல்லிவைத்தமாதிரி இருவரும் நடப்பது  அற்புதமான கெமிஸ்ட்ரி, ஒருவருக்கு ஒருவர் காத்திருந்ததுமில்லை, காக்கவைத்ததுமில்லை. அப்படி ஒரு ஒற்றுமை.

பட்டு ஜிப்பாவும் வேஷ்டியுமாக மாமாவும், தலை நிறைய மல்லிகையும், பட்டுப்புடவையுமாக, ஏழு கல் மூக்குத்திக்கு போட்டியாக சிரிக்கும் முகமுமாக அத்தையும் இல்லாமல் எந்த விசேஷமும் நிறைவாய் இருந்ததில்லை.

மூத்த மகள் சுமதிக்குக் கல்யாணவயது வந்தபோதுதான் எங்கள் அத்தைக்கு கடைக்குட்டி சந்துரு பிறந்தான். 
நான் கூட, எங்கள் அத்தை வீட்டில் எனக்கு நினைவு தெரிந்து தொட்டிலை அவிழ்த்ததே இல்லை என்று கிண்டல் செய்ததுண்டு. அதற்கான வெட்கப் புன்னகையில் ஒரு கர்வம்கூடத் தெரியும்.

தான் பத்து பெற்றதோடு மட்டுமல்லாமல், தன் மகள்களும், வீட்டுக்கு வந்த மருமகள்களும், என்று, மேலும் ஒரு இருபது குழந்தைகள் தன் மேற்பார்வையில் பெற்றபோதும் அயர்ந்ததில்லை எங்கள் அத்தை. 

அண்ணன், தம்பி, அக்கா தங்கை எல்லோர் வீட்டுப் பிரசவத்திலும் பாப்பாத்தி அத்தை இல்லாமல் எதுவும் நடந்ததில்லை.

நானும் என்  மனைவியும், நம்பிக்கை எல்லாம் இழந்து  தவித்த  வருடங்களிலும் எங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தது மட்டுமல்ல, எங்கள் மகளை, இரண்டுநாள் என் மனைவி கூடவே இருந்து எனக்கு போட்டியாக கைநீட்டி வாங்கியதும் எங்கள் அத்தைதான்.

இத்தனை அன்பும் அனுசரணையும் எங்கிருந்து வந்திருக்கும் என்று இன்றைக்கு யோசித்தால், அவர்களின் வாழ்வில் இருந்த காதல்தான் காரணம் என்று புரிகிறது.
அயர்ச்சியோ, சலிப்போ ஒருகணம் கூட வெளிப்படவில்லை என்பதற்கு, உள்ளுக்குள் உறையும் காதல் தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

வாரத்தில் ஒருநாள், இரண்டுநாள் வசூலுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் என்று போய் நள்ளிரவோ, அதிகாலையோ வீடு வரும் மனிதருக்கு, எந்தவிதமான தொலைதொடர்பும் இல்லாத அந்தக்காலத்தில், தலை கலையாமல், அலங்காரம் குலையாமல் எதிர்பார்த்துப் புன்னகையோடு கதவுதிறக்க எப்படி முடியும்?

அந்தநேரத்திலும், பாப்பாத்திக்கு பிடிக்கும் என்று பதுஷாவோ, ஜாங்கிரியோ, மல்லிகைபந்துடன் வாங்கிவரவும், முகம் கழுவி வரும் முன், துடைக்கத் துண்டு எடுத்து நீட்டிய கையோடு, ஒரு சொம்பு நிறைய காபியோடு பக்கத்தில் உட்கார்ந்து கதை கேட்க முடிவதும் காதலில்லாமல் வராது.

அந்தக்  காப்பி பரிமாறல் அப்படி ஒரு அழகு,

கடைசி வரை, வாய் பொறுக்கும் சூட்டில், ஒவ்வொரு  மிடறாக டம்ளரில் இவர் ஊற்றித் தருவதும், வீட்டை விட்டுக் கிளம்பும்போது செருப்புப்  போட்டதிலிருந்து, இப்போதுவந்து நுழைந்ததுவரை, ஒன்று விடாமல், வரிவரியாய் அவர்  ஒப்பிப்பதும், லயித்துப்போய் இவர் கதை கேட்டு முடிக்கவும், சொம்பு காப்பியும் குடித்துமுடிக்கவும், ஒரு, சரசம் இல்லாத அன்பு இழையோடுவது பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும்.

பத்து குழந்தைகளையும், குறையின்றி, தகுந்த இடத்தில் மணம் முடித்து, வாழ்க்கையிலும் ஒவ்வொருவரையும் நிலை நிறுத்தி நிமிர்வதற்குள், பேத்திகள் திருமணம் என்று, மறுபடியும் அலுப்போ, சலிப்போ இல்லாமல் ஓடியாடிய அவர்களை நினைக்க, இன்றும் மலைப்பாக இருக்கிறது.

மாமா வாங்கித் தந்த இனிப்போ, அல்லது, வாழ்க்கை முழுக்க மனதில் நிறைந்த இனிப்போ, அத்தை உடலில் சுகரை ஏற்ற, அப்போதுகூட இருவரும் மனம் தளரவில்லை.

எல்லாவற்றுக்குமே, ஒரு முடிவு இருக்குமல்லவா, தன வாழ்க்கை முடிவதை, தீர்க்க சுமங்கலியாய், அந்தப் பொட்டும் புன்னகையும் குலையாமல் போவதை உணர்ந்த என் அத்தை, தன் அந்தி நாட்களில், புன்னகையோடு, டாக்டர் சொன்ன எல்லா  பத்தியங்களையும் மறுதலித்து, ஏற்றுக்கொண்டார்.
அவர் கவலை எல்லாம்  தான் போனால் தன் நிழல் நீண்டநாட்கள் இந்த உலகில் தங்காது என்பதாகவே இருந்தது.
அது அப்படித்தான் ஆனது. 
அத்தர் குழைத்துப் பூசாத
தலை கலைந்து
பசிக்கு சாப்பிடும் ருசிமறந்த மாமாவை
அதற்குப்பின்தான் நாங்கள் வேதனையோடு பார்க்க நேர்ந்தது. 

அதேபோல், அதிகநாட்கள் தாங்காமல், தன் பாப்பாத்தியைத் தேடிக்கொண்டு, உறங்குவதுபோல் இயல்பாய் ஒருநாள் புறப்பட்டுப் போனார் எங்கள் K.S.
ஒருவகையில் அந்த இணை பிரிந்து ஒற்றை உயிராய் வேதனைப்படுவதைவிட, இதுதான் நிம்மதியாகவே பட்டது எங்களுக்கும்.


எந்தக் காதல்கதையும் அப்படியே முடிந்துபோக விடுவதில்லை இறைவன்.

அவர்களின் மூத்தமகன் எங்கள் ஞானமாமா, சமீபத்தில், அறுபதாம் கல்யாணம் கண்டார். அவர்களின் எந்த வாரிசுக்கும் இல்லாத அளவுக்கு, என் ஞானமாமாவுக்கும், இந்திரா அக்காவுக்கும், அப்படி ஒரு அன்பும், காதலும்.
சீனியர் தம்பதிகளைப்போல, தளுமபிவழியும் காதல் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இவர்களின் ஊடும்பாவுமாய் இழையும் காதல் இலைமறை காய்.
பெரியகுடும்பத்தில் தலை மகன், அப்பாவோடு தோள் நின்று அத்தனை தம்பி தங்கைகளுக்கும் வழிகாட்டிய அவர் சின்ன கண்டிப்பு முகமூடி போட்டுக்கொண்டிருந்தாலும்
இன்றுவரை, தன தங்கைகள் யாரையும் கண்ணு என்ற வார்த்தை மாறி அழைத்ததில்லை, அவர்களும், பேரன் பேத்தி எடுத்தபின்னும்.

அவருக்கு ஏற்ற குணவதியாய் வந்து வாய்த்த எங்கள் அக்காவும், இன்னொரு பாப்பாத்தி  அத்தையாய், யாருக்கும்  ஒரு குறை வைக்காமல் பார்த்துக்கொள்கிறார்.

அவர்களுக்கு மூன்றும் பையனாய் போனதுதான் எனக்கு இன்றைக்கும் ஒரே குறை. 
எனக்கு பயந்துகொண்டே பெண்பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை என்று சிரிக்காமல் சொல்லுவார் என் அக்கா!

 அவர்களுக்கு பெண் பிறந்திருந்தால், தூக்கிவந்து தாலி கட்டியிருப்பேன்.

அவர்களுக்கு என்மீதான நேசம் சொல்ல, எனக்கு இத்தனை வயதிலும், என் அப்பாவின் எண்பதாம் கல்யாண விழாவில், ஆயிரம்பேர் இருக்க, என் அக்காவின் மடியில், தலை சாய்த்து அமரவும், அவர்களின் அறுபதாம் கல்யாணத்திற்கு, சற்றே தாமதமாகப் போகநேர்ந்தபோது, கொஞ்சமும் தயங்காமல் இருவரையும், பார்க்கும் அத்தனை விழிகளும் விரிய, கட்டிப்பிடித்துக்கொள்ளவும் என்னால் முடிந்தததை சொல்லலாம். 

இத்தனைக்கும், அவர் என் ஞானமாமாவை மணந்தபின்பே எனக்கு அக்கா ஆனவர்.

பாப்பாத்தியும், K.S.உம் ஞானமும், இந்திராவுமாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 


உண்மைக்காதல்,உருவங்களோடு அழிவதில்லை!


எங்கள் பாப்பாத்தியும், K.S.ம்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக