STEFFIயும் நானும் !!
உங்களுக்கு டென்னிஸ்
தெரியுமா?
தெரியாட்டி ஒன்னும்
பாதகம் இல்லை,
டென்னிஸ்
தெரியலன்னாலும், STEFFI தெரியுமா? தெரியாதா?
குறிப்பா, என் வயது, வாலிப, வயோதிக
- சாரி ஒரு FLOWல வந்திருச்சு, என்வயது இளைஞரா இருந்து, தெரியாதுன்னா, நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
நயன்தாரா என்ன பெரிய
நயன்தாரா, அந்த நடிகை
போட்டோவ நான் சேர்ந்தாப்பல பத்து
நிமிஷத்துக்குமேல பாக்கறதே இல்லை ஆனா, எங்க STEFFI வெளையாடறத
நான்லாம் ரெகார்ட் பண்ணிவச்சு நாள் கணக்கா பாத்திருக்கேன்.
அந்த நாட்கள்ல, சென்னை அம்பசிடர் பல்லவா ஹோட்டல் டென்னிஸ் கிளப்ல மார்க்கருக்கு அப்புறம்
அதிக நேரம் இருந்தது நான்தான். எப்படியோ, ரெண்டு வருசத்துக்குள்ள, கோர்ட்டுக்குள்ள பால் அடிக்கறதுக்கு கத்துக்கிட்டதுக்கு அப்புறம்தான்
தெரிஞ்சுது, இந்த ரூட்ல போனா, அறுபது வயசுக்குமேல, விம்பிள்டன்ல பந்து பொறுக்கிப் போடற வேலைக்குத்தான் போகமுடியும்னு!
சரி, இந்த நடிகைங்க எல்லாரும் தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கற மாதிரி, STEFFIயும் ஒரு ஆடிட்டரக் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு, நமக்கு எது வருதோ, அத பார்ப்போம்னு, மறுபடியும், படிப்பையே தொரத்த ஆரம்பிச்சேன்.
சரி, எனக்கு ஏன் STEFFI மேல அவ்வளவு, இது, லவ்வு , வந்துச்சுன்னு கேக்கணும்னு உங்களுக்கு தோணுச்சா
இல்லையா?
சரி,… தோணாதுன்னு எனக்கும் தெரியும், அதுக்காக, இழுத்து வைச்சு கதை சொல்ல ஆரம்பிச்சுட்டு, உங்கள விட்ருவனா என்ன!
இந்த உலகத்திலயே STEFFI
மூக்கும், உன் மூக்கும்தான் அழகா இருக்குன்னு, ரஞ்சித் ஹோட்டல்ல ஓசி
டிபன் வாங்கித் தர்ரப்ப எல்லாம்,
என் ப்ரண்ட் ரேவதி சொல்லுவா.
பொதுவா பொண்ணுங்க
பேச்ச நான் நம்பறதில்ல.அதுவும் இந்த ஓசில பொங்கல் வாங்கி திங்கற ஐயங்கார் பொண்ணுங்க சொல்றத. ஆனா, இது என்னமோ, கொஞ்சம் நம்பற மாதிரித்தான் இருந்தது.
எதுக்கும்
இருக்கட்டும், ஒரு செகண்ட்
ஒப்பினியன் வாங்கிக்கலாம்னு, என்
ப்ரண்ட் ராஜாவுக்கு பாலிமர் பார்ல பீர் வாங்கிக் கொடுத்துட்டு, கேட்டா, அவனும், மூணு
பீருக்கு அப்பறம், என் தலைல
அடிச்சு, சத்தியம் பண்றான்.
“மாப்ள, பொதுவா, நான் பொண்ணுங்க
மூஞ்சியவே பாக்கமாட்டேன்,”
( அந்த நாயி எங்க பாக்கும்கறத இப்போ நான் சொன்னா,
இதப் படிக்கற என் பொண்ணு என்னைக்
காறித்துப்பிடுவா).
“ஆனா, எனக்கு அந்தப் பொண்ணு மூக்கைப்
பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தான்டா வரும்”னுட்டு,
“மச்சி, இன்னொரு பீர் சொல்லேன்”னு, மறுபடியும் மொதல்ல
இருந்து ஆரம்பிக்குது சனி.
எத்தனை நேரம்தான்
நானும் அந்த பூனை மூத்திரம் மாதிரி நாற்ற சனியன வாங்கி குடுக்கறதுன்னு, “போலாம் மச்சி, உங்க அப்பா இதே பாருக்கு வருவாருன்னு சொன்னியே”ன்னு ஒருவழியா மேச்சுக்கிட்டு வெளிய வந்துட்டேன்.
குடிச்சிருக்கற ஆணும்,
குள்ளமா இருக்கற பொண்ணும் பொய்
சொல்லாதுங்கற உலக விதிப்படி, இனி STEFFI நமக்குத்தான் அப்படின்னு முடிவு பண்ணியாச்சு.
ஆனா அதுல பெரிய சோகம்
என்னன்னா, அந்தப் பொண்ணு
பாட்டுக்கு, இப்படி அவளுக்கு ஏத்த
ஜோடி ஒன்னு சென்னைல இருக்கறது தெரியாம, ஊர் ஊரா போய் டென்னிஸ் வெளையாடிக்கிட்டிருக்கு.
எனக்கு, ஒவ்வொருதடவை, அது துள்ளிக்குதிச்சு சர்வீஸ் போடும்போதெல்லாம்,
அந்த,
சே
ஏன் உங்களுக்கு இவ்வளவு கேவலமா தோணுது ?
மூக்கு அழகைப் பார்க்கும்போதெல்லாம் நம்ம இருக்கறதா அந்தப்
பொண்ணுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னே தெரியல.
நம்ப இளையராஜகிட்ட சொல்லி,
"ஜெர்மனியின் செந்தேன் மலரே"
அப்படின்னு பாட்டெல்லாம் போட வெச்சேன்.
சரி, சரி, காதல்ல இந்தமாதிரி பொய்யெல்லாம் அலௌடுதான்.
அதை
எப்படியாவது அந்தப் பொண்ணு கேட்டுரும்னு பாத்தா, நம்ம தொரை சொல்லறான், ‘விவிதபாரதி அங்கல்லாம் எடுக்காது”ன்னு.
அப்பல்லாம், இந்த பாழாப்போன இன்டர்நெட் எல்லாம் வரலை.
தபால்ல நம்ம போட்டோவ அனுப்பலாம்னா, அவங்க அப்பா கைல அந்த லெட்டர் கெடைச்சு, யாராவது, மொரட்டு மொறை மாமனுக்கு அத கட்டிவச்சுருவானோன்னு பயம்,
எத்தன தமிழ் சினிமா பாக்கறோம், இதுகூடவா யோசிக்க
மாட்டோம்?
பேசாம, கொஞ்சம் காசு சேத்துக்கிட்டு, வைகோ மாதிரி கள்ளத்தோணி
புடிச்சாவது, ஜெர்மனிக்கு போய்டலாம்னு, அன்னில இருந்து, சிக்கனமா, காசு சேத்திவைக்க
ஆரம்பிச்சேன்.
ஆனா, அதுலயும் ஒரு சிக்கல், ஒவ்வொரு தடவை, ரத்னா கபே
தாண்டும்போதெல்லாம்,
நாளைக்கு கெடைக்கற STEFFIய விட, இன்னைக்கு சாப்பிடுற சாம்பார் இட்லி மேல்ன்னு ஔவையாரோ, ஷேக்ஸ்பியரோ சொன்னது
நியாபகம் வந்து தொலைச்சு, சேமிப்பெல்லாம் இட்லி சாம்பார்ல கரைய
ஆரம்பிச்சிருச்சு.
சரி, அந்தப்பொண்ணு குடுத்துவச்சது அவ்வளவுதான்.
அடுத்த வரிய, என் பாலிசிக்கு(!!!) விரோதமா, இங்கிலீஷ்ல எழுதறேன். அது எதுக்குன்னா, இதை என்னைக்கோ, படிக்கறப்போ, அந்த ஒரு வரியையாவது
படிச்சு, அந்தப்பொண்ணு மனசைத் தேத்திக்கிட்டும்ன்னு.
She had settled for the second best – Agassi.
இதை இத்தனை வருஷம்
கழிச்சு எழுதி ஏண்டா என் கழுத்த அறுக்கறேன்னு நீங்க கண்டிப்பா கேப்பீங்க.
ஆனா, காலைல, வாழைத்தண்டு, பொரியலுக்கு வெட்டச் சொல்லி என் பொண்டாட்டி கொடுத்தப்போ STEFFI GRAF நியாபகம் வந்ததுன்னு, யாராவது, என் குடும்பக் குருவிக்
கூட்டுக்குள்ள குண்டு வச்சுறாதீங்க ப்ளீஸ்.
இப்பல்லாம் அடி தாங்க முடியறதில்லை!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக