ராமாயி என்னும்
ராணித்தேனி!
நீங்கள் தேனீக்களின்
வாழ்க்கை முறையைப் பார்த்ததுண்டா?
ஒரே ஒரு ராணித்தேனி,
அந்த ஒட்டுமொத்தக் கூட்டையும்
கட்டுப்படுத்தி வைத்திருப்பதுகூட வியப்பில்லை. அந்த ராணித்தேனிக்குப் பின், அந்தக் கூடே உரு மாறிப்போவது ராணித்தேனியின் ஆளுமையின்
அடையாளம்.
நம் சமுதாயத்தில்,
குடும்ப அமைப்பும், அதன் கட்டுமானமும், பெண்களை மையம் கொண்டே இயங்கி வருவது உண்மை. இந்தக்
கருத்து, நான் உட்பட பல
ஆண்களுக்கு சம்மதமாகாது அன்பாலும், கட்டுக்கு
உட்பட்ட அதிகாரத்துடனும், ஒரு
குடும்பத்தை வழி நடத்தும் ஆளுமை ஆணைவிட பெண்ணுக்கே அதிகம் இருப்பது, நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.
ஆண் என்பவன், பொருள் கொணரவும், பெண் என்பவள் அதை பேணிக்காத்து குடும்பத்தை நெறிப்படுத்தவுமாகத்தான் நம்
ஆரம்பகாலக் கட்டமைப்புக்கள் இருந்திருக்கக்கூடும். ஆணின் ஈகோ, தன்னைக் குடும்பத்தலைவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, வீட்டுக்குள் பெண்ணை அடக்கி ஆள முயன்றபோதுதான் நம் சமுதாய சீர்கேடுகள்
ஆரம்பித்திருக்கும் என்று எனக்குத்
தோன்றுகிறது.
எதற்கு இத்தனை
முன்னுரை?
எனக்குத் தெரிந்த
பெண் ஆளுமைகளை வரிசைப் படுத்தச் சொன்னால், என் மனதில் முன் நிற்கும் உருவம், என் அப்பாவை பெற்ற பாட்டி, ராமாயி.
வேலூர் சின்னக்கடை
வீதியில், ஒரு தெருவில்
தலைவாசலையும் மறுதெருவில் புறவாசலையும்
வைத்திருந்த தொட்டிகட்டு வீடும், அதில்
இருந்த ஒரு பெரிய குடும்பமும், கட்டியிருந்த
மாடு கன்றுகளும், வயது
வித்தியாசம் இல்லாமல் ராமாயி சொல்லுக்கு மறுவார்த்தை இன்றிக் கட்டுப்படும்.
புகையிலை
வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், வீட்டுக்குள், ராமாயி
வார்த்தைக்கு மறுபேச்சு பேசியதில்லை செல்லாண்டி.
பத்து பிள்ளை பெற்று,
அதில் ஒன்றை பிஞ்சிலேயும், மற்றொன்றை, வயதுக்கு வந்த பெண்ணாயும், பறிகொடுத்து, மற்ற எல்லா குழந்தைகளையும் ஊரே மெச்சும்படி தலையெடுக்க வைத்ததில், பொருள் தேடி வந்து தந்தது தவிர முழுமையும்
ராமாயியின் பங்கு மட்டுமே.
இன்றைய சூழலில் இது
எளிதாக தெரியலாம்.
1950களில் இரண்டு
மகன்களை MA. BT., மற்றொரு மகனை, B.Com படிக்கவைத்ததுடன், கட்டுக்கு அடங்காமல் திமிறிய கடைக்குட்டி மகனையும்,
வியாபாரத்தில் தேர்ச்சிபெற வைத்தது இமாலய
சாதனைதான்.
நான்கு மகன்களையும்,
நெறி தவறாத பிள்ளைகளாய் வளர்த்து, எல்லோருக்கும், தகுதிக்கு மீறிய இடங்களிலேயே பெண் எடுத்தது மட்டுமல்ல, தன் இறுதி நாள் வரைக்கும், எல்லோரும் ஒரே
குடும்பமாய் உணர்ந்து வாழவைத்தது அவர் சாதனை.
அது மட்டுமல்ல, நான்கு பெண்களையும், அதைப்போலவே நல்ல இடங்களில் மணம் புரிய வைததது மட்டுமின்றி, அவர்களையும் அதே ஆளுமையுடன் வார்த்ததும் அவரே.
எல்லோருக்கும்
முதலில் பிறந்து, குறைபட்டு திரும்பிவந்த மூத்த மகள் வள்ளியம்மாள் தோழியாய்த் தோள் கொடுக்க, அடுத்தடுத்த குழந்தைகளை நிலைப்படுத்தியவர் ராமாயி. இரண்டாவது மகள்
பாப்பாத்தி, தன்னைப் போலவே பத்து பிள்ளை பெற்றபோது, தாயுமனவளாய் அங்கு தாங்கிப் பிடிக்க, தன மூத்த மகள்
வள்ளியம்மாவை பணித்தவரும் அவரே.
வருடம் ஒருமுறை, எங்கே எந்தநிலையில் இருந்ததாலும், பொங்கலுக்கு அனைவரும், வீட்டில் கூடிவிட வேண்டும் என்பது அவரது கட்டளை.
இதற்கு, ஹெட் மாஸ்டர் ஆக பணி புரிந்த பெரிய மகன், பள்ளி ஆசிரியராய்
இருந்து, வியாபாரம் என்று போய் பல நாடு கண்ட இரணடாவது மகன், சென்னையில் உயர் பதவி வகித்த மூன்றாம் மகன், உள்ளூரில் வியாபாரம்
செய்த இளைய மகன் அனைவரும் கடைசி வரை கட்டுப்பட்டு குடும்பத்தோடு நான்கு நாட்கள்
வேலூர் வாசம் புரிந்தது ஆச்சர்யம் என்றால், நான்கு மருமகன்களும், அவசர அவசரமாக தங்கள் ஊரில் பொங்கல் முடித்த கையேடு, மாலையே குடும்பத்தோடு வந்து,
நான்கு நாட்களும் தங்கிப் போவது, தவறவே இல்லாத வழக்கம் என் ஆயா இருக்கும் வரை.
கிட்டத்தட்ட ஐம்பது
உருப்படிகள் அந்த வீட்டில்.
எங்கள் வீட்டு
விறகடுப்பு, அந்த நான்கு நாட்களும் பாபா துனி. அநேகமாக
ஏகதேசம் எரிந்துகொண்டே இருக்கும்.
மகளாவது, மருமகளாவது, யாராயிருந்தாலும் ஒன்றுதான். யார் கண்ணில்
பட்டாலும், “இந்தாடி, இந்த வெங்காயத்தை வணக்கு”, “இந்த மாவை அரை” என்று, கட்டளைகள், எல்லா வேலையும் சொந்த மேற்பார்வை. கிணற்றடி நடையில்
கட்டியிருக்கும் பசுக்களுக்கு தீவனம் போடுவதாகட்டும், கடைசி பேத்திக்கு பாலூட்டுவதாக இருக்கட்டும், ஒரே வாஞ்சைதான், அன்பு கலந்த அதட்டல்தான். ஏதோ, ஒரு ஆத்மா பசி என்று
வாய் திறக்க விட்டதில்லை. முகக்குறிப்பு ஒன்று போதும், “அடியே இவளே, அந்த பத்திருவான் பசியோட நிக்கறான் பாரு, மொதல்ல அவனுக்கு சாப்பாடு போடு” என்று, அந்த வயிறு குளிர்ந்தபின்தான் மற்ற வேலை.
ஆற்றில்போய்
ஆடிவிட்டு, கொலை பசியோடு வீடு வரும் அத்தனைபேரும், நீளமான பந்தியாய் உட்கார்ந்திருக்க, அத்தனை பேர் தட்டிலும், ஆவி பறக்க இட்லியும் சட்னி,
சாம்பாரும். போட்டி
போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடிக்கும்போது, மதிய சாப்பாட்டுக்கு, பசி வயிற்றுக்குள் நமநமக்கும்!
மதியம் சாப்பிட்டு
முடித்து, கால்சதம் வாண்டுகளும்
மாடிக்கும் பக்கத்து வீடுகளுக்கும் ஓடி ஆடி களைத்து வரும்போது, தயாராக, இளம் சூட்டில் உளுந்து கஞ்சி. இனிப்பும், வாயில் நிரடும் தேங்காய் துருவலுமாய் ஒரு பெரிய
சொம்பு நிறைய உள்ளே இறங்குவது தெரியாது. தன கை பக்குவம் மாயமாய் மறையும் வேகம்
பார்த்து பூரிக்கும் கண்களில் வழியும் திருப்தியை பார்த்தவர் மட்டுமே உணர
முடியும்.
அத்தனை பேரும் மென்று
குவித்த கரும்பு சக்கை நடு வாசல் முற்றமெங்கும் சிதறிக் கிடக்கும். அதை
ஒழிப்பதற்குள் இரவு சாப்பாடு. மாலையில், பெரியப்பா தலைமையில் ஆற்றில் ஆடிவந்த களைப்பு, வயிற்றில் தீயாய் மூள, பசியாறி, முற்றத்தில் விரித்த ஜமக்காளத்தில் நிலவையும் நட்சத்திரங்களையும்
பார்த்துக்கொண்டு படுக்கும்போது சொர்க்கம் தெரியும்.
எனக்கு, ஆரம்ப வருடங்களில் ஒரு சந்தேகம் இருந்ததுண்டு.
ஆயா மடியில் வளர்ந்த தமிழ்ச்செல்வன் மேல் அவருக்கு இருக்கும் அன்பும், கவனமும், சென்னிமலை அம்மாயி வீட்டில் வளர்ந்த என் மேல் இருக்குமா
என்று. கொஞ்சம் பட்டும் படாமலும்தான் எனக்கு உறவு என் ஆயாவுடன். ஒருநாள், அத்தனை கும்பலில், எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து, மூன்றாவது இட்லியோடு, இலையை மூடப்போன என் காதில், சமையல்கூட மறுகோடி மூலையில் இருந்த என் ஆயாவின் குரல்
கேட்டது. “:அந்த குமாரபாளையத்துக்காரன் மூணு இட்லிதான்
சாப்பிட்டான். பூஞ்சையா அவங்க ஆத்தாக்காரி மாதிரியே இருக்கறான் பாரு. ஏய் கீதா,
பக்கத்துல நின்னு, அவனுக்கு இன்னும் ரெண்டு இட்லி போடு”.
மனசெல்லாம்,. எங்கள் பின்னால், வெறும் உருவம் மட்டும்தான்
சமையல்கட்டில்.
இது போதாதென்று,
ஒரு பெரிய ஜாடி நிறைய, முழு எலுமிச்சை ஊறுகாய் வடிவில், நல்லெண்ணையில் மிதந்துகொண்டு, கண்ணை உருட்டி விழித்துக்கொண்டு இருக்கும்.
அப்படி ஒரு ருசியை, அதற்குப்பின்
இன்றுவரை நான் சாப்பிட்டதில்லை. சும்மாவே, ஆளுக்கொன்றாய் எடுத்து சாப்பிடுவோம். பூவாய் வாயில் கரையும் எலுமிச்சை ஒரு
அதிசயம். எல்லா வீட்டுக்கும், பாட்டிலில்
ஊறுகாய், வாழைப்பூ, பனித்தடுக்கு இலைகள், தேங்காய் என்று பொதி சுமந்துகொண்டுதான் மனமே இல்லாமல் ஊருக்கு கிளம்புவோம்.
வழியனுப்பும் எங்கள்
ஆயாவின் கண்களில், அன்பு
கனிந்திருக்கும்.
இடையிடையே, காலாண்டு, அரையாண்டு விடுப்புகள், மாரியம்மன் திருவிழா, பெருமாள் கோவில் தேர் என்று வருடத்தில் பலமுறை போனாலும்,
முழு அட்டண்டன்ஸ் விழும் அடுத்த பொங்கல்
எப்போது என்றுதான் எங்களுக்கு எல்லா நாளும் கழியும்.
பெண்கள், முக்கியமாக, ஓர்ப்படிகள், நங்கை நாத்திகள் வளையவரும் அத்தனை நாட்களிலும், ஒரு சிறு முணுமுணுப்புக் கூட எழுந்து நான்
பார்த்ததில்லை. அதைப் போலவே, எதை
கேட்டும் இல்லை என்று அவர் வாய் சொல்லி நான் கேட்டதில்லை.
சந்தைக்குப்
போய்வந்து தாத்தா கொடுக்கும் சில்லறைகளோடு எல்லோரும் செவிடன் கடை
ஜவ்வுமிட்டாய்க்கு ஓடும்போது, திண்ணையில்
உட்கார்ந்திருக்கும் ஆயாவின் பெருமிதம் வெறும் பார்வைக்கே புரியும்.
அத்தனை படித்த
மகன்கள் அம்மாவிடம் பவ்வியமாய் ஆலோசனை கேட்பது வியப்பென்றால், மருமகன்களும், அவர் அபிப்ராயம் மீறி நடக்காதது அதிசயம்.
இதில், என் தாத்தாவை என் ஆயா நடத்தும் விதம், இன்னொரு ஆச்சர்யம்.
திண்ணையில் எங்களோடு
விளையாண்டுகொண்டோ, தெருவில்
போகும் செம்படவர்களை அதிகாரம் செய்துகொண்டோ, உட்கார்ந்திருக்கும் தாத்தாவை, “அந்த ஆளை வந்து காப்பி குடிச்சுட்டு போகச்சொல்லு” என்று, ஒரு சொம்பு காபியை
எடுத்து வைப்பதாகட்டும், “ஏன்,
குளிச்சுட்டு வந்து, நேரத்துக்கு சாப்பிடத் தெரியாதா ஆம்பிள்ளைக்கு?” என்று எந்நேரமும் ஒரு அதட்டல் கலந்த அழைப்புத்தான் பெரும்பாலும்.
அது மட்டுமல்ல,
மக்க மருமக்களிடம் பேசும்போது கூட,
தாத்தாவை, அவரோட முன்கோபத்தை குறிப்பிட்டு பேசும்போது, எனக்கு கொஞ்சம் புரியாத வருத்தமாகவே இருக்கும்.
எனக்கு என்னவோ, தாத்தா கொஞ்சம்
ஸ்பெசல். வருத்தம் தாங்காமல், அவரிடமே,
“ஏன் தாத்தா, ஆயா உங்கள எந்நேரமும் திட்டிக்கிட்டே இருக்காங்க. நீங்க
ஏன் அதுக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க” ன்னு கேட்டா, “அட கிறுக்கு புள்ள, அவ எங்கடா என்ன திட்டறா”ன்னு கேட்டு சிரித்தது,
அடிநாதமான அன்பு என்பது இப்போதுதான் எனக்கு விளங்குகிறது.
மகன், மகளுக்கு மட்டுமல்ல, பேரன் பேத்திகளுக்கும், யாருக்கு யார் என்பதை
அவர்தான் முடிவு செய்வார். அவர் காலம் வரைக்கும்
யாருக்கும், யார் மீதும் ஒரு சிறு வருத்தம் கூட வர அவர்
விட்டதில்லை.
வருடம் ஒருமுறை,
இப்படி, விசேஷ காலத்தில், குடும்பமே ஒரு இடத்தில் கூடுவது, வெறும் பண்டிகைக்காக மட்டுமல்ல, இடையில், கடிதங்கள் மூலம் ஏற்படும் சின்னச்சின்ன உரசல்களையும், மனம் விட்டுப் பேசிக் கலைந்துகொள்ளவே என்ற
உளவியல் காரணம் ஏனோ எங்களுக்கு இவ்வளவு தாமதமாகத்தான் புரிகிறது.
நாமக்கல்
மருத்துவமனையில், இனி பிழைக்க
மாட்டார் என்று எங்கள் உறவுக்கார மருத்துவரே கைவிட்ட நிலையில், பார்க்க வந்த என் தந்தையையும், அவர் தங்கை, பாப்பாத்தியையும் உட்காரவைத்து, என் தங்கைக்கும், அத்தை மகனுக்கும், கல்யாணம் முடிவு செய்துவைத்தார். அப்போது என் தங்கைக்கு,
பதினேழு வயது, அத்தை மகன் சீனுவுக்கு, பதினெட்டு வயது.
“படிப்புக்கு பயந்துக்கிட்டு கல்யாணத்துக்கு
ஒத்துக்கிச்சுக” என்று, எனக்கு மட்டும்தான் சிறு ஆதங்கமே தவிர, வேறு யாரும், என் அம்மா உட்பட, அதற்கு மறுப்பே சொல்லவில்லை.
அது எவ்வளவு நல்ல
முடிவு என்பதை, இன்றைக்கு
அவர்களின் வாழ்க்கைத்தரம் சொல்கிறது.
அந்த கல்யாணமும்
முடிந்து, சந்தோஷ் குமாரும்
பிறந்தபோதுதான் எங்கள் ராமாயி எங்களைப்
பிரிந்தார்.
தங்கை மகனை கையில்
வைத்துக்கொண்டு, அவர் இறுதி
உறக்கம் பார்த்தது எனக்கு இப்போதும்
நினைவிருக்கிறது.
அதன்பின் சில
வருடங்கள் !!
என் தாத்தா, இருந்தார் என்றுதான் சொல்லமுடியும். வாழ்ந்ததெல்லாம் என் ஆயா இருக்கும்
வரைதான்.
வீட்டை பங்கு
பிரித்துக்கொள்ளும் முடிவில், அந்த
வீடு, நான்கு புறாக்கூடுகள்
ஆனதும், நாங்கள் ஆடி ஓடிக் களித்த
அந்த முற்றமெங்கும் சுவர்கள் முளைத்ததும், இன்றைய நிதர்சனம்.
இன்றைக்கு, என் தாயும் தகப்பனும் அங்கு வசித்தாலும்,
மற்ற பங்குகளில், வாடகைக்குக் குடிவந்த முகம் தெரியாத யார் யாரோ!
அந்த வீட்டில்
தங்கும் மனஉறுதி எனக்கு இல்லாததால், ஒரு விசிட்டராகவே அங்கு போய்வரமுடிகிறது.
அதன்பின் எத்தனை
பொங்கல்கள் வந்துபோயவிட்டன. எங்கள் ராணித்தேனீயோடு கலைந்துபோன கூட்டில்,
நினைவுகள் மட்டுமே, இன்னும் மிச்சம் இருக்கின்றன எனக்கும், என்போலவே வேறு யாருக்கேனும்.
எதைத் தொலைத்தோம்
என்பது தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும்
எங்களுக்கு, எது நிரந்தரம் என்பது எப்போது புரியும்?
சமீப தொலைக் காட்சி நிகழ்ச்சில பெண்கள் தரப்புல சொல்லப்பட்ட முதல் தேவை
பதிலளிநீக்குமாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார்..என எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது.
இதுங்கள கட்டி, நாம பழி நாசமா போனதுதா மிச்சம்..
உறவுகளே வேண்டாம் என்பவர்கள் எங்காவது பாலைவனத்தில் போய் வாழலாமே? இந்த ஒற்றைக் குழந்தை முறை விளைக்கும் கேடுகளை அடுத்த தலைமுறை அனுபவிக்கப்போகிறது.
நீக்குஅதான் சகோ, சொன்னது போல் ஒரு 100 வருடம் கூட அல்ல, ஒரு தலைமுறை பெற்ற அனைத்து ஆரோக்கியங்களையும் இழந்து தனிமரமாக எதையோ தேடி ஓடுகின்றோம்.
பதிலளிநீக்குவாழ்வின் மொத்த நாட்களையும் பணத்துக்கும், ஆடம்பரம் என்ற அரக்கனுக்கும் தத்து கொடுத்துவிட்டோம்.
தரிக்கும் கருவில் இருந்து, இறுதியில் எரிக்கும் வரை எல்லாமே இயந்திரமும், இரசாயணமும் கலந்தாச்சு.
எப்படி மாத்துவது இதை??
எங்கு போய் அழுவது?
இந்த வாழ்க்கைமுறை எனக்கு தேவை என்பதற்கு ஆழுக்கொரு காரணம் இருக்கே!.
எழுதுங்கள், பல்லவர்கள் காலம், சோழர்கள் காலம் என இப்போது நாம் படிப்பது போல், அடுத்த தலைமுறை உங்கள் வாழ்க்கை முறையை படித்து, எங்களை கேழ்விகள் கேட்கும். பதில் சொல்லத்தெரியாத பாவிகளாய் நிற்போம்.
இதை படிக்கையில் "இதில் எதையும் நான் உனக்கு கொடுக்கவில்லை மகனே" என்ற உங்கள் மற்றொரு பதிவு தான் நினைவுக்கு வருகிறது.