திங்கள், 1 டிசம்பர், 2014

ஊழல் வியாதிகளும், மக்களின் மெத்தனமும்!


ஊழலில் மக்களின் பங்கு!
எதைப் பேசவும் பயமாக இருக்கிறது.

விஜய்யை விமர்சித்தால், அஜித் ஆள், ரகுமானை விமர்சித்தால் ராஜா மாபியா.

அதிலும், ஜெ வை விமர்சித்தால்கருணாநிதி அடிவருடி, பெண்ணிய விரோதி என்று இலவசப் பட்டங்கள். 

இலவசம் மலிந்த தமிழ்நாடு.

எனக்கு, ஜெயலலிதா மேல் என்ன கோபம்?

அவரது ஆளுமை, கட்சியில் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்கும் நேர்த்தி, தீபாவளி அன்று, காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்யும் துணிச்சல், (தமிழினத் தலைவருக்கு சுட்டுப்போட்டாலும் அந்த தைரியம் வராது. பார்ப்பன விரோதி, பார்ப்பன ஓட்டையும் இழக்க விரும்பமாட்டார்.) என்று எல்லாமே அவரைப் பற்றிய வியப்பே.

ஆனால், நேர்மைக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே  போவது கண்கூடு.

தனக்கொரு வாரிசும் இல்லாமல், சொத்து சேர்க்கும் அடிப்படைத் தேவை இல்லாத ஜெயலலிதா, வீடியோ கேசட் விற்க வந்த மாபியாவிடம் சரணடைந்தது, தமிழனின் சாபம்.

1. டான்சி நில ஊழல் வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டபோதும், குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்புக் கேட்டதை ஏற்று, கடும் கண்டனங்களுடனே, மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டார் ஜெ. 
அதிலும், அந்த கையெழுத்து, தன்னுடையதில்லை என்ற அவர் வாதம், நீதிபதிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
அப்போதே, முதல்வர் பதவியை வகிக்கும் தார்மீக உரிமையை இழந்தவர் ஜெ.

2. சந்திரலேகா மீதான, ஆசிட் வீச்சு, சேஷன் மீதான கொலைவெறித் தாக்குதல், அரசுச் சொத்தை வாங்குவதை ஆட்சேபித்த ஆடிட்டருக்கு செருப்படி, ஐசியு வார்டுக்குள் செருப்பின்றி வரச்சொன்ன மருத்துவருக்கு அடி, உதை  இதெல்லாம், படித்தவர்கள் மீதும்,.அரசு அதிகாரிகள்மீதும் அம்மா காட்டிய கருணையின் அடையாளங்கள்.

3. சுப்பிரமணிய சாமிக்கு எதிரான மகளிர் அணி ஆபாச ஆர்ப்பாட்டம், மகளுக்கும், மகளின் நெஞ்சுக்கு கெருக்கமானவருக்கும் என்ற கனிமொழி, ராசா பற்றிய மூன்றாம்தர விமர்சனமும், அவரது அரசியல் நயத்தகு நாகரீக வெளிப்பாட்டின் சிறு உதாரணம்.

4. அரசு அதிகாரிகளை, மாதம்தோறும் பந்தாடுவது அரசியல் சாணக்கியமாகவே இருக்கட்டும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மந்திரிகளாய் நியமித்து, உடனே மாற்றும்பொழுது, அவர்கள் எந்த தகுதிகளால் மந்திரிகளாய் நியமிக்கப் பட்டார்கள், எந்த தகுதியிமையால் நீக்கப்பட்டார்கள் என்பதை மக்களுக்கு விளக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இல்லையா? மந்திரி பதவி, அவரது கட்சிப் பதவி அல்ல.

5. சொத்துக்குவிப்பு வழக்கு கின்னஸ் அளவுக்கு இழுக்கடிக்க யார் காரணம்? தன்னை எதிர்த்து, இன்னார்தான் அரசு வழக்கறிஞராக வாதிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழ்க்குத்தொடரும் தைரியத்தை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு யார் கொடுத்தது? தவிர்க்கவே முடியாமல் தீர்ப்பை எதிர்கொள்ள நேர்ந்து, தண்டிக்கப்பட்டபின், தமிழகத்தில் நடந்த கேவலமான ஆர்ப்பாட்டங்களும், நீதிபதி மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்களும் அவர் கண்னசைவில்லாமல் நடந்தவையா?

6. வெறும் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிக்கு அளிக்கப்பட வல்கரான வரவேற்பு அவர் உடன்பாடில்லாமலா ஏற்பாடு செய்யப்பட்டது? இன்றுவரை நடைபெறும் மண்சோறு தின்னல், பறவைக்காவடி, இன்னபிற அபத்தங்கள் அவர் அறியாமல் நடப்பவையா?

7. இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறப்போகும் வருமானவரித்துறை சமரசம் குற்ற ஒப்புதல் ஆகாதா?

இத்தனை இழுக்கைச் சுமந்தவர் நாடாளும் தகுதி உள்ளவர்தானா
மனசாட்சி உள்ளவர்கள் சொல்லட்டும். 

நமக்கிருக்கும் அடுத்த ஆப்சன் கருணாநிதியை விட இவர் மேல் என்பது, தவறான வாதம்.

ஒரு சிறு திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், கொஞ்சம்கூடத் திருந்தாமல், கொலை, கொள்ளை என்று இறங்கினால், அவரை அழைத்து, நம் வீட்டுப் பொறுப்பை அளிப்போமா?

ஜெயலலிதா முன்புபோல் இல்லை, இப்போது மாறிவிட்டார் என்று வாதிடுவோருக்கு,

1. என்றைக்கேனும், அவர் தன் பிழைகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறாரா?

2. தன் கட்சிக்கார அடிமைகளை அவர் எப்படியும் நடத்தட்டும். அது கேவலப்படும் அவரது அடிமைகளின் உரிமை. ஆனால், என்றாவது, சட்டசபையில் எதிர்க்கட்சிகளை பேசவிட்டதுண்டா? இந்த இரண்டு வருட சட்டசபை நடவடிக்கைகள் மனசாட்சிக்கு உகந்தவையா?
தன்னைப் புகழவிட்டு, மந்தகாசப் புன்னகையுடன் ரசிக்கும் கேவலமான மனநோய், ஹிட்லருக்கும் இல்லாதது.
இடிப்பார் இல்லாத மன்னன், கெடுப்பார் இல்லாமலும் கெடுவான் - இது வள்ளுவர் சொன்னதாய் நியாபகம்.

3.  பெங்களுரு நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒருவாரம் முன்னால், கண்ணுக்கு எட்டியதூரம் எதிர்க் கட்சிகளையே காணோம் என்று, சட்டமன்றத்தில், தான் ஒரு முதலமைச்சர் என்பதையும் மறந்து கொக்கரித்தது, அந்த மனோவியாதியின் உச்சம்.

4. இந்த இரண்டு வருடங்களில், நடந்த மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன, சீர்கெட்டு வரும் மின்சார பற்றாக்குறைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? துறை ரீதியாக துறை சார்ந்த விவாதங்கள் எத்தனை நடந்தன, மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டசபைக் கூட்டங்களில்?

5. புதிய சட்டமன்ற வளாகம் கருணாநிதியின் சொந்தப் பணத்தால் கட்டப்பட்டதா? அதை உபயோகிக்க மறுக்கும்  இவரது ஈகோவுக்கு தீனி மக்களின் வரிப்பணமா?

6.  ஒருலட்சம் புத்தகங்களுடன் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு, சற்றும் குறைந்ததா கருணாநிதி என்ற தனி மனிதன் மீதான வெறுப்பினால் அண்ணா நூலகத்தை மூட முற்பட்டது?

7. கல்விச்சாலைகளை மூடி, சாரயக்கடை திறப்பதா, தாயுள்ளம்?

இதை சிந்திப்பது நம் கடமை அல்லவா?

உடனே, நம் ஊடக அறிவுஜீவிகள், ஊழல்வாதி கருணாநிதியை விடுத்து, ஜெயலிதாவை விமர்சிப்பதா என்று ஆரம்பிப்பார்கள்.

இன்று ஆளுபவர் ஜெயலலிதா. வீட்டில் இருக்கும் கருணாநிதி, ஆட்சிக்கு வந்தால் விமர்சிப்போம்.

மக்கள் ஊழல்வாதிகள். அதனால், அரசியல்வாதிகள் ஊழல் தவிர்க்க இயலாதது என்றொரு வாதம்.

மக்களை, ஊழல்வாதிகளாக்கியது யார்?

ஓட்டுக்குப் பணம் மக்கள் கேட்கவில்லை. இவர்களாகவே கொடுத்து ருசி பழக்கினார்கள், தங்களுக்கு சாதகமாக்க.

இன்று, அதை ஒரு அடிப்படை உரிமையாய் எதிர்பார்க்குமளவு மக்கள் மனநிலை மாறிப்போய்விட்டது.

ஊழல்வாதிக்கு, மற்றொரு ஊழல்வாதியா மாற்று என்றொரு வாதம்.
அது, இன்றைய நிலையில் நமக்கு ஒரு சாபம்.

புரையோடிப்போன புண்ணை ஒரே நாளில் குணப்படுத்த முடியாது.

அடுத்த தேர்தலில், அந்தந்தத் தொகுதியில், கட்சி வித்தியாசம் பார்க்காமல், நல்லவர் யாரென்று பார்த்து வாக்களிப்போம்.

ஜெயிக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் மந்தை குணம் மாற்றி, சுயேட்சை ஆயினும், நல்லவனுக்கு வாக்களித்த மன நிறைவு நமக்கு.

வாக்கு வித்தியாசம் குறைவு, வெல்லும் தொகுதிகள் குறைவு என்ற அதிர்ச்சி வைத்தியம் அவர்களுக்கு.

இது, நிச்சயம், திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருக்கும் ஊழல் குறைந்தவர்களை சிந்திக்க வைக்கும்.

மாற்றம் மெல்ல மெல்லத்தான் வரும். 
ஆனால், நாம் எடுத்து வைக்கும் அடி, உறுதியான சேதி சொல்லட்டும்.

நம்மைக் கெடுத்த அரசியல்வாதிகளை, நாம்தான் திருத்தவேண்டும்.


மறந்தும், புதிய சுயநலக் கூத்தாடித் தலைவர்களை உருவாக்கி, மேலும் வருத்தப்பட்டு பாரம் சுமக்காதிருப்போம்.

1 கருத்து:

  1. 'இன்று ஆளுபவர் ஜெயலலிதா. வீட்டில் இருக்கும் கருணாநிதி, ஆட்சிக்கு வந்தால் விமர்சிப்போம்' அருமையான வரிகள் சமுதாயத்துக்கு தேவையான நல்ல பதிவுங்க சார்

    பதிலளிநீக்கு