பொன்னம்மாள்,
பெயருக்கேற்ற பொன்
நிற மேனி.
சொக்க வைக்கும்
பேரழகி!
எப்போதும் சிரிக்கும்
கண்கள்,
செப்பு சிலை போல
உயரமும், உருவமும்!
சுண்டினால் ரத்தம்
வரும் என்பது பழைய வர்ணனை.
உற்றுப் பார்த்தாலே
ரத்தம் வரும் நிறம.
பார்வதியுடன் அவள்
பாவடிக் கிணற்றுக்கு தண்ணீர் மொள்ள வரும் மாலைக்கு,
காலையிலிருந்தே
காத்திருக்கும் இளவட்டம்.
அக்காவும் தங்கையும்
போலில்லாமல், தோழிகள் போல அவர்கள் இருவரும் தண்ணீர்
கிணற்றுக்கு வருகையில் ஊர்க் கண்கள் எல்லாம் அவர்கள் மேல்தான்.
இத்தனை
இளவட்டங்களிலும் அவள் மனம் தேடுவது அவள் மாமன் சிதம்பரத்தைத்தான்.
சிதம்பரம்?
பொன்னம்மாளுக்கேற்ற
பேரழகன்.
சொந்த மாமன் மகன்.
அதை விட முக்கியம்,
பார்வதிக்கு பேசி முடித்திருக்கும்
குப்புசாமிக்கு தம்பி.
அவன் பராக்கிரமங்களை
செவி வழி கேட்டே மனதுக்குள் காதல் வளர்த்தாள் பொன்னம்மாள்.
அக்காவுக்கு
குப்புசாமி என்று முடிவானதிலிருந்தே மனம் துள்ளிக்கொண்டிருந்தது.
அண்ணனோடு, திருமணம் பேச வந்த சிதம்பரத்தை கண் குளிர கண்டாள்.
மனம் முழுக்க பூவாய்
வளர்த்தாள்
சொல்லப்போனால், ஊரே பார்வதி குப்புசாமி கல்யாணத்துக்காக காத்திருந்தது.
அழகி பொன்னம்மாளுக்கு
எந்த சீமையிலிருந்து ஒரு பேரழகனை பிடித்துவரப்போகிறார்கள் என்று பார்ப்பதற்கு!
சிதம்பரம் கொஞ்சம்
ஷோக்கு பேர்வழி.
குப்புசாமியின்
நேர்மையான குணம் அறிந்தவர்கள் எல்லோரும் தன் தம்பிக்கு பொன்னம்மாளை பலிகொடுக்க
மாட்டான் என்றே உறுதியாக நம்பினார்கள்.
பார்வதியும் நல்ல அழகி
என்றாலும், பொன்னம்மாளின் பக்கத்தில்
நிலவின் முன்
நட்சத்திரம்போலவே தெரிவாள்.
பொன்னம்மாளுக்கு
முன்னால் யாரை நிறுத்தினாலும், வாலியைப்போல் அவர்களின் அழகில் பாதியை
பிடுங்கிக்கொள்ளும் வசீகரம்.
பொன்னம்மாள், தலை நிமிராப் பேரழகி.
பார்வதி கம்பீரமான
துணிச்சல்காரி.
எதையும் தைரியமாக
எதிர்கொள்வதில் அவளுக்கு நிகர்
யாருமில்லை.
இந்த கதை பொன்னம்மாள்
பற்றி….
பார்வதி கதையை பிறகு
பார்க்கலாம்.
பார்வதிக்கும்
குப்புசாமிக்கும் எதிர்பார்த்தபடி திருமணம் முடிந்தது.
அப்போதிருந்து குப்புசாமி
தன் மாமனாருடன் சேர்ந்து பொன்னம்மாளுக்கு
ஒரு அழகான குணவானைத் தேட ஆரம்பித்தான்.
பொன்னம்மாளுக்கு
சிதம்பரத்தின் மீது இருந்த ரகசியக் காதலை ஓரளவு குப்புசாமி அறிந்தே இருந்தான்.
இத்தனைக்கும்,
பொன்னம்மாள் இன்னும் நிமிர்ந்து பார்த்து
சிதம்பரத்திடம் ஒரு வார்த்தை பேசியதில்லை.
ஆனால் அவனைப்
பார்க்கும்போதுகளில்
அவள் கண்ணில்
தெறிக்கும் மின்னலும்,
கன்னத்தில் பாயும்
செம்மையும்
ரகசியத்தில்
வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்தன
சிதம்பரம் நல்லவனே
என்றாலும் சில தேவையற்ற பழக்கங்கள் அவன் மனதையும் உடலையும் சீரழித்து வந்ததை
குப்புசாமி அறிவான்.
என்னதான் சரியான ஜோடி
என்றாலும்,
பொன்னம்மாளை சிதம்பரத்துக்கு
தாரை வார்ப்பது துரோகம் என்பது குப்புசாமியின் எண்ணம்.
கூட்டி வந்த எல்லா
மாப்பிள்ளைகளையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டிவிட்டுக்கொண்டே இருந்த பொன்னம்மாளை குப்புசாமி நேரிடையாகக் கேட்டேவிட்டான்.
பொன்னம்மாளின் பதில்
தீர்க்கமாகவும் திடமாகவும் வந்தது.
“மாமாவை தவிர வேறு யாரையும் என்னால் நினைக்க
முடியாது.
இல்லாமல் நீங்கள்
பிடிவாதம் காட்டினால் பாவடி கிணற்றில் என் பிணம் மிதக்கும்”
சொன்ன குரலின்
உறுதியில் குப்புசாமி திகைத்துப் போனான்.
தன தம்பியின் பழக்கவழக்கங்கள், அவன் உடல்நிலை எல்லாவற்றையும் மிகைபடுத்தாமலும், தாட்சண்யம் இன்றியும் தெளிவாய், கிளிப்பிள்ளைக்கு
சொல்லுவதைப்போல் சொன்னான்.
கூட இருந்து கேட்ட பார்வதி
பொன்னம்மாளிடம் தீர்க்கமாகவே சொன்னாள்.
“பாவடி கிணற்றுக்கு உன்னை கொடுத்தாலும்
கொடுப்பேனே தவிர, உன்னை இந்தமாதிரி பலி கொடுக்க நான் விடமாட்டேன்”.
“அப்படி நீ அவன்தான் வேண்டும் என்று பிடிவாதம்
பிடிப்பதாக இருந்தால் அதன் பிறகு,
சாகும்வரை உன் முகத்தில்
விழிக்கமாடேன்”.
பார்வதியின்
பிடிவாதம் பொன்னம்மாளுக்கும் தெரியும்,
அவள் சொல்வது தன்
மீதான அன்பாலேயே என்று புரிந்தாலும், தீர்க்கமாகவே சொன்னாள்.
“ஒரே ஒருநாள் வாழ்ந்தாலும் என் மாமனோடு
வாழ்வேன்.
மாமனில்லாத வாழ்க்கை
எனக்கு வேண்டாம்”.
தங்கையின் காலிலேயே
விழுந்தாள் பார்வதி.
எதற்கும் அசைந்து
கொடுக்கவில்லை பொன்னம்மாள்
.
குடும்ப நண்பன்
முருகேசனை பலமுறை பொன்னம்மாளிடம் பேசவைத்தான் குப்புசாமி.
ஆனால் ஒரு
பாறையைப்போல் உறுதியாக நின்றாள் பொன்னம்மாள்.
பார்வதி சத்தியவதி.
சொன்னதைப்போலவே பொன்னம்மாள்
முகத்தில் விழிப்பதையும் தவிர்த்தாள்.
கண் பட்டதுபோல் அக்கா
தங்கைகள் பேசாமல் திரிவதை ஊரே வேதனையாய் பார்த்தது.
என்ன சொல்லி என்ன,
பொன்னம்மாள்
ஒருத்தியின் பிடிவாதம் வென்றது.
தங்கையிடம் ஒரே ஒரு
சத்தியம் வாங்கிக்கொண்டாள் பார்வதி.
ஊரே மெச்ச
சிதம்பரத்தின் கை பிடித்ததாள் பொன்னம்மாள்.
குப்புசாமி நல்ல
உழைப்பாளி.
அவன் தொட்டது
துலங்கியது.
ஊரே அண்ணாந்து
பார்க்கும்படி மாடி வீடு கட்டினான்.
மெத்தை வீடு என்று
ஊர் அழைத்தாலும்,
ஒரே வீட்டுக்குள்
வாழ்ந்தாலும்,
பார்வதியும்
பொன்னம்மாளும் பேசிக்கொள்வதில்லை.
ஆனால் அக்காவுக்கு
செய்து கொடுத்த சத்தியத்தை கடைசிவரை காப்பாற்றினாள் பொன்னம்மாள்.
காலம் யாருக்கும்
நிற்காமல் ஓடியது.
பார்வதி ஆறு
குழந்தைகளை பெற்றாள்.
தரைத் தளத்தில் பார்வதி, மாடியில் பொன்னம்மாள்.
தான் உண்டு தன் அறை உண்டு என்றிருந்த பொன்னம்மாளிடம்
குழந்தைகள் மெத்தையம்மா என்று பிரியமாக ஒட்டிக்கொண்டன.
வாரம்தோறும்
வெள்ளிக்கிழமை சந்தைக்கு போகும் பார்வதி, தங்கைக்கு வேண்டும் என்பதை வாங்கி வந்து தருவாள்.
ஆனால் அதை
பிள்ளைகள்தான் கேட்டுச் சொல்லவேண்டும்.
அக்கா பிள்ளைகளுக்கு,
நூல் நூற்ற காசிலும்,
அக்கம்பக்கம்
அவசரத்துக்கு வட்டிக்கு விட்ட காசிலும்,
கேட்டதெல்லாம் வாங்கி
தருவாள் பொன்னம்மாள்.
அக்கா பிள்ளைகளை
தன் பிள்ளைகளாகவே வளர்த்தாள்.
எல்லோருக்கும்
கல்யாணம் ஆகி,
வந்த பேரன்
பேத்திகளுக்கு மட்டுமல்ல,
வீட்டுக்கு வந்த
மருமகன், மருமகளுக்கும்
மெத்தையம்மாள் என்றே
ஆகிப்போனாள் பொன்னம்மாள்.
அந்த வளவில் அத்தனை
குழந்தைகளுக்கும் மெத்தையம்மா நெருக்கம்.
எல்லா பிள்ளைகளும்
அவளுக்கு ஒன்றே.
தன் 90 + வயதில் பார்வதி இறந்து போகும்வரை இருவரும்
பேசிக்கொள்வதெல்லாம் யாரையாவது இடை நிறுத்தித்தான்.
இருவருக்குமே அப்படி
ஒரு வைராக்கியம்.
ஆனால் ஊடுபாவாய்
பாசம் இழையோடுவது அனைவருக்குமே சொல்லாமல் புரியும்.
அக்கா இறந்த அன்று பொன்னம்மாளின்
கதறல் சொன்னது அவர்களின் பிணைப்பை.
இன்று எங்கள்
மெத்தையம்மாளுக்கு வயது நூறுக்குமேல்.
நெகுநெகுவென்ற
வெளிர்நிற நார்மடிப் புடவை.
இன்னும் தானே
நடந்துபோய் குளித்துவந்த பிறகே சாப்பாடு.
அதே சுத்தம்.
கொஞ்சம்போல் காது மட்டும் திறனிழந்தாலும், தன் வேலைகளை தானே செய்துகொள்ளும் மன உறுதி.
அதே கருணை நிரம்பிய
உள்ளம், சொற்கள்.
அதே பளீர் நிறம்.
இன்றைக்கும் பேரழகி
எங்கள் மெத்தையம்மா.
இன்னுமொரு நூறாண்டு
வாழும் அழகு.
சிதம்பரம் பற்றி
சொல்லவே இல்லையே.
திருமணம் முடிந்த
மூன்று மாதங்களில்,
எந்த சுகத்தையும்
எங்கள் மெத்தையம்மாளுக்குத் தராமலே
அந்தக் காலத்து தீரா வியாதியான காச நோய்க்கு மருந்தின்றி இறந்து
போனார்.
அதை அறிந்தே மணம்
புரிந்த மெத்தையம்மா,
அக்காவுக்கு
செய்துகொடுத்த சத்தியம் காக்க,
இல்லறவாழ்வில்
ஈடுபடாமலே மூன்று மாத வாழ்க்கையைக் கழித்தாள்.
சத்தியம்
வாங்கிக்கொண்டு, தங்கைக்கு மணம் செய்த பார்வதி,
பொன்னம்மாளுக்கு
மறுமணம் புரிய எடுத்த முயற்சிக்கு,
பொன்னம்மாளின்
விதவைக்கோலம் அழுத்தமாய் பதில் சொன்னது.
தங்கை பிடிவாதமாய்
வாழ்வை கெடுத்துக்கொண்ட வருத்தம் பார்வதிக்கு சாகும்வரை.
இன்றும் தன்
காதலுக்கு சாட்சியாய்,
எண்பது வருடங்களுக்கு
மேலாக பாதுகாத்து
வாழ்ந்துவரும்
சிதம்பரத்தின் கருப்பு
வெள்ளைப் புகைப்படத்தை
அதே காதலுடன்
காப்பாற்றி வாழ்ந்து வருகிறார் எங்கள் பேரழகி.
சுட்டாலும் பொன்(ன்)அம்மா..
ReplyDelete