கல்லூரியிலிருந்து
கல்விச் சுற்றுலா என்று ஜல்லியடிக்க பெங்களூருக்குக் கிளம்பும்போதே தீர்மானமாக,
சுஜாதாவைப் பார்த்தேவிடுவது என்று
ரகசியத் தீர்மானம்.
அதற்கென்றே அரைநாள்
ஒதுக்கினால், புறப்படும்போதே, குரல்வளையை கடிக்க வருவார்கள் என்று தெரியும். எனவே,
அங்கு போய் ஒரு குழுவாய் மோதிக்கொள்ளலாம்
என்று திட்டம்.
பண்ணாரி, திம்பம் வழியாக, மைசூர், கண்ணம்பாடி
என்று எல்லாமே ஒழுங்காகத்தான் போனது.
நள்ளிரவில் பெங்களூர்
போனதும், TALK OF THE TOWN ல்
சோமபானமும், கல்சுரல் நடனமுமாய்
கொண்டாடக் கிளம்பிய தொரையிடம் தயங்கித் தயங்கி,
“டேய் நாளைக்கு ஒரு
பத்து மணிக்கு சுஜாதாவை போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம்” ன்னு சொன்னா,
“யார் யாரு” ன்னு அதிகாரமா கேட்டான்.
“நானும், மோகன், இன்னும்
ஒரு நாலு பேர் மட்டும் போயிட்டு வர்றோம், நீங்க அப்படியே கெம்பே கௌடா சர்க்கிள் பொண்ணுங்கள ஒரு சர்வே எடுத்து
வெச்சுருங்கடா” அப்படின்னா,
“ஏன், எல்லாரும் போனா ஆகாதா” ன்னு ஒரு எதிர் கேள்வி.
“அடப்பாவி! கூட்டமா
போனா மரியாதையா இருக்காது,
அதுவும், இந்த ரமேஷ் பயல மாதிரி காட்டானுக்கெல்லாம் அங்க
வந்து எப்படி நடந்துக்கணும்னு தெரியாது” ன்னா,
ஆமா, யாரைப் பார்க்கப் போறீங்க ன்னு புதுசா கேக்குது
பக்கி.
“சுஜதாவைடா, இன்னைக்கு விட்டா, மறுபடியும் எப்போடா நமெக்கெல்லாம் சான்ஸ் கிடைக்கும்” ன்னு பணிவா பேசுனா, திடீர்ன்னு,
தொரை மூஞ்சீல ஒரு ஒளிவட்டம்.
‘எனையும் கூட்டிக்கிட்டுப் போறதுன்னா சொல்லு,
எல்லா நாயையும் நான் சமாளிச்சுக்கறேன்!”
இந்த ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கல.
ரமேஷ் காட்டான்னா,
இது, ஆதிவாசி,
இது எங்க சுஜாதா
வீட்டுக்கு, அப்படின்னு ஒரு தயக்கம்.
ஆனா, அவனப் பகைச்சுக்கிட்டா, நாளைக்கு வண்டி எடுக்கமுடியாதுன்னு தெரியும்.
சரி, பார்த்துக்கலாம்ன்னு ஒத்துக்கிட்டேன்.
அன்னைக்கு, நைட்டு, கேபரே போற சமூகக் கடமையை தள்ளிப்போட்டுட்டு, எங்களோடவே, ரூம்ல இருந்த துரை, திடீர்ன்னு காணாம போய்ட்டான்.
மூணு மணிக்கு
சவத்தைக் காணாமேன்னு தேடிப்போன முரளி, அவன் ஏதோ பரீட்சைக்கு படிக்கறமாதிரி வராண்டா லைட் வெளிச்சத்துல
படிசுக்கிட்டிருக்கான்டான்னு ஆச்சரியமா
சொன்னான்.
நரி இடம் போனா என்ன,
வலம் போனா என்ன, மேல விழுந்து புடுங்காம இருந்தா சரின்னு, இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கிட்டேன்.
காலைல, ஆறுமணிக்கு, என் வாழ்க்கைலயே சந்திக்காத ஒரு காட்சி.
சத்தியமா சொல்றேங்க,
கல்யாணம் ஆன மறுநாள்கூட, என் பொண்டாட்டியே என்னை அவ்வளவு அன்பா
எழுப்புனதில்லைங்க!
பளப்பளன்னு குளிச்சு,
கைல காப்பியோட, மச்சான் எந்திருடான்னு உலுக்கறான் தொரை.
அப்போதுதான், கைய விடுடின்னு, ஸ்ரீதேவிகிட்ட கனவுல சண்டை போட்டுக்கிட்டிருந்தவன்,
கண்ணை முழிச்சு அப்படியே ஷாக் ஆய்ட்டேன்.
ஈரோடு வெய்யில்லயே
வாரம் ஒருநாள் குளிக்கற தொரை, அன்னைக்கு
வழுவழுன்னு ஷேவிங் பண்ணி, ரெண்டு
கோட்டிங் FAIR AND LOVELY போட்டு, அதுமேல ஒரு மூணு இஞ்ச் கனத்துக்கு பாண்ட்ஸ் அப்பியிருந்தான்.
நெஜமாலுமே, எனக்கு ஒன்னும் புரியல,
“தொரை, என்னடா இது,? பெங்களூர் குளிர்ல நீ இந்த வேலையெல்லாம் முடிக்க
எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகியிருக்குமே”ன்னு கேட்டா, அநியாயத்துக்கு வெட்கப்பட்டுக்கிட்டே சொல்லுது,
“சுஜாதாவைப்
பார்க்கப் போகவேண்டாமாடா?”
எனக்கு
அன்னைக்குத்தாங்க, சுஜாதாவோட
உண்மையான தாக்கம் புரிஞ்சுது.
மாய்ஞ்சு மாய்ஞ்சு
படிக்கற எங்களைவிட, நேற்று
ராத்திரி புக் வாங்கிப்படிச்ச தொரையை இந்த அளவு பாதிச்ச அவரோட எழுத்து வீரியம்
எனக்கு பெரிய வியப்பு.
தீர்த்தவாரி முடிச்சு,
உருண்டு கெடந்த மத்த எல்லோரையும் புழு
மாதிரி பார்த்த தொரை, எங்கள
வெரட்ட ஆரம்பிச்சான் - நேரமாச்சுன்னு!
ஆச்சர்யம் விலகாம
குளிச்சிட்டு ஆறுபேர் மட்டும் கெளம்பிட்டோம்.
அன்னைக்கு
எல்லாருக்கும் ஸ்வீட்டோட டிபன் உபயம் துரை.
BEL QUARTERS எங்க
இருக்குன்னு விசாரிச்சுக்கிட்டு,
மல்லேஸ்வரம் தாண்டிப் போனா, வண்டி போய்க்கிட்டே இருக்கு.
இப்படியே போனா, ஆந்திரா பார்டரே வந்துரும்னு நாங்க கவலைப்பட்டு விசாரிச்சுக்கிட்டே போறோம், தொரை ஓரமா உக்காந்து, தனியா சத்தமா பேசிக்கிட்டே வர்றான்.
யாருகிட்டடா
பேசறேன்னு கேட்டா,
கடலோரம், கடலோரம்ன்னு பாட்டுப் பாடுச்சாம் பக்கி.
ஒரு வழியா, சுஜாதா சார் வீடு கண்டுபிடுச்சு,
இறங்கப் போறோம்.
வண்டி முழுக்க, புகை மண்டலம்.
என்னடான்னு பாத்தா, தொரை, கைக்குட்டைல இருந்து, பௌடர் சிந்த, பைனல் கோட்டிங் போட்டுக்கிட்டிருக்கு.
மோகன் எங்கிட்ட வந்து, “மாப்ள, எனக்கு என்னமோ, விபரீதமா படுதுடா, இந்த நாயி சரோஜாதேவி தவிர வேற புக் படிச்சு நான் பார்த்ததே இல்லை. அதுலயும்
இவன் சரளமா பேசற நாலஞ்சு கெட்டவார்த்தைகளைத் தவிர மத்ததெல்லாம் தப்பு தப்பாத்தான்
படிப்பான். என்னமோ தப்பா படுது”ங்கறான்.
எனக்கு சுஜாதா சார்
வீட்டு வாசல்ல நிக்கறது தவிர ஏதுமே மண்டைல ஏறல.
ஒருவழியா, கதவைத் தட்ட, வந்தது, ஒரிஜினல்
சுஜாதா.
சாரோட மனைவி.
‘சார் டூடிக்கு போய்ட்டாருங்க தம்பி, சாயங்காலம்தான் வருவாரு” அப்படின்னு அன்பா சொல்லி, எங்கள
உள்ள உக்காரச்சொன்னாங்க.
காலைல இருந்து அட்ரஸ்
தேடி அலைஞ்சு இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தம் இருந்தாலும், பசி வேற கிள்ளுது.
மினிமம் காப்பியாவது தேற்றும் நோக்கில், கூச்சமே இல்லாமல்,
மினிமம் காப்பியாவது தேற்றும் நோக்கில், கூச்சமே இல்லாமல்,
“மேடம், எங்கள சாப்பிடவெல்லாம் கட்டாயப்படுத்த வேண்டாம். காப்பி மாத்திரம் போதும்”ன்னு சொன்ன என்னை முறைச்சுப் பார்த்த தொரை பார்வைல கொலைவெறி.
நல்ல பில்டர் காப்பி
குடிச்சு, சந்தோஷமா வந்து வண்டி
ஏறுனா,
“சுஜாதா சார் எழுதுன
பேனா ஒன்னு வாங்கிக்கிட்டு வந்திருக்கலாம்”ன்னு வண்டி நகந்தவுடனே
மோகன் கேட்டது பாதிதான் காதுல விழுந்துச்சு.
என் பொடரியில விழுந்த
அறையில கண்ணுக்குள்ள நட்சத்திரம் பறக்குது.
என்னப் பெத்த தாய்
கூட என்னை அந்த அடி அடிச்சதில்லைங்க.
அத்தனை பேரும் சேர்ந்து தொரையை அமுக்கலைன்னா,
இன்னைக்கு இதைப் படிக்கற துர்ப்பாக்கியம்
உங்களுக்கு நடந்திருக்காது.
என்னடா ஆச்சுன்னு
கேட்டா,
“ஏண்டா, சுஜாதா ஆம்பளைன்னு என்கிட்டே சொல்லலை”ன்னு கத்துது.
நீதான், நேத்து அவர் புக் வாங்கிப்படிச்சயேன்னு கேட்டா,
அந்தக் குளிர்ல,
கேபரேவை தியாகம் செய்து
கேபரேவை தியாகம் செய்து
நடுஜாமத்துல
பெங்களூர் மாநகரத்துல
அலைஞ்சு திரிஞ்சு
அந்த அறிவாளி
வாங்கிவந்த புத்தகத்தை என் மூஞ்சியில எறியுது.
கடல் மீன்கள் பாட்டு
புஸ்தகம்.
சுஜாதா நடிச்சது.
ராத்திரி பூரா அத
மனப்ப்பாடம் பண்ணி, சுஜாதாவை
பார்க்க வந்திருக்கு.
அந்தக்
கொலைவெறியிலதான் என்னைப் பொரட்டி எடுத்திருக்கு பக்கி.
No comments:
Post a comment