காரை ஓட்டிக்கொண்டே
ராஜா யோசித்தான்.
அடுத்த மாதம் கல்யாணத்தை வைத்துக்கொண்டு இந்த லீலைகள் இன்னும்
தேவைதானா? ஆனால் பழக்கப்பபட்ட
பதிலைத்தான் மனதும் சொன்னது. மாட்டிக்காமல் செய்யும் எந்தத் தப்பும் தப்பில்லை. மேலும்,
பருவத்தில் அனுபவிக்காமல் பல்லுப்
போன பின்பா அனுபவிக்கமுடியும்?
இவள் எத்தனாவது என்று
ஒரு சின்ன கணக்கு மனத்துக்குள்.
அநேகமாக இருபதுக்குமேல்தான் என்று மொபைலில் இருந்த
வீடியோ லிஸ்ட் சொன்னது.
இது ஒரு கேடுகெட்ட பழக்கம்
ராஜாவுக்கு. அப்பாவின் வியர்வையில் கம்ப்யூட்டர் படித்து, இப்போது ஒரு ப்ரோக்ராமர். மாதம்தோறும் பிடித்தம் போகக்
கையில் வரும் அரை லட்சத்தில், ஊருக்கு
அனுப்பும் ஐயாயிரம் தவிர மீதி எல்லாமே, தண்ணியிலும், பெண்களிலும்
கரைந்துகொண்டிருக்கிறது.
பார்க்க அவ்வளவு
லட்சணம்.
உங்களுக்குப் பிடித்த எந்த ஹீரோவையும் நினைத்துக் கொள்ளுங்கள். அவரது
சாயல் கொஞ்சமாவது அவனுக்கு இருக்கும். பெண்கள் அவனுக்கு ஒரு போதை என்றால், சபலப்பபடும் பெண்களுக்கு அவன் ஒரு போதை.
எந்தப் பெண்ணையும்
அதிகபட்சம் ஒரு மாதப் பழக்கத்தில் கவிழ்த்துவிடுவான். ECR ரோட்டை நோக்கி வார இறுதியில் பறக்கும் இரவல் காரில் எப்போதும் ஒரு புதுப்பெண்
இருப்பாள். மாயாஜால் தாண்டி இருக்கும் ரிசார்ட்களில் ஏதோ ஒன்றில் அறை தயாராக புக்
செய்து வைத்திருப்பான். மறந்தும், ஒரே
ரிசார்ட்டில் திரும்பவும்
தங்கமாட்டான். கூட வரும்
பெண்களைப்போல் அதுவும் புதிது! ஜாக்கிரதை உணர்ச்சி!!
முடிந்தவரை, ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போகும் பெண்களே
அவனது இலக்கு. எப்படியும் இரண்டாவது சினிமா விஜயத்தில் அந்த வாரக் கடைசிக்கு
சம்மதிக்க வைத்துவிடுவான். ஆயிரம் பொய் சத்தியங்கள், காதலில் ஊறவைத்த வசனங்கள், அடுத்த வாரமே, கல்யாண ஏற்பாடு என்று லட்சம் சத்தியங்கள்.
மேலும் பெண்களை உருகவைக்கும் தீண்டல்களில் மன்னன்.
வேலை முடிந்தபின்
அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான். அவர்களும் விட்டால் போதும் என்று
தப்பித்து ஓடவைப்பதிலும் சாமர்த்தியசாலி.
அறைக்குள்
நுழைந்தவுடன், ஒரு வசதியான
கோணத்தில் அந்த செல்போன் கேமராவை சாமர்த்தியமாக செட் பண்ணிவிடுவான். விடிய விடிய
நடக்கும் லீலைகள் அதில் துல்லியமாகப் பதிவாகும்.
மறுநாள் மயக்கம்
கலையாமல் போன் பண்ணும் பெண்ணுக்கு அவனது விட்டேற்றியான பதில் புரியவே நேரமாகும்.
கண்ணீராய் நியாயம்
கேட்கும் பெண்ணுக்கு, உடனே ஒரு MMS, - நேற்றைய சல்லாபங்கள். விலக மறுத்தால்,
இப்போதே நெட்டில் போடப்போவதாய் ஒரு சின்ன
மிரட்டல் போதும். எந்த ஒரு பெண்ணும் அதற்குமேல் தப்பித்தால் போதும் என்று விலகி
ஓடும்.
சில பெண்கள்
கண்ணீரோடு கதறுவதை ரசித்துக் கேட்பான். ஒரு சிரிப்போடு, "இதோடு உன்னை விட்டேனே என்று சந்தோஷப்படு. நீ போனவாரம்
யாரோடு போனாய் என்றும் எனக்குத் தெரியாது, அடுத்தவாரம் வேண்டுமானால் என் நண்பனை அனுப்பி வைக்கட்டுமா?" என்று கூசாமல்
கேட்கும் கேள்விக்குப் பின் எந்தப் பெண்ணும் திரும்பக் கூப்பிட்டதில்லை.
சில பயந்த
பெண்களிடம் நகை, பணம் என்று
பிடுங்கியதும் உண்டு.
ஒருத்தியிடம்கூட,
தான் வேலைசெய்யும் கம்பெனியின் பெயரைச் சொன்னதில்லை.இன்றுவரை
யாரிடமும் மாட்டியதுமில்லை.
இப்படிப்பட்டவனுக்குத்தான்,
கோயமுத்தூர் மில் ஓனர் ஒருவர் தன் மகளைத்
தருவதாக அப்பாவிடம் பேசி முடிவு செய்திருந்தார்.
பொள்ளாச்சிக்கு ஒரு நெருங்கிய
உறவினர் திருமணத்துக்குப் போக நேர்ந்தபோது, அவர் பார்வையில் இவன் பட, நம்ம ரங்கசாமி மகனா இவன் என்று வியந்துபோனார். அவன்
அழகு தன் ஒரே மகள் விமலாவுக்குப் பொருத்தமாகப் பட, அவன் படிப்பு, வேலை என்ற விசாரணைகள் திருப்திதர, உடனே ரங்கசாமியிடம் பேசி, இவனுக்கும்
தகவல் வந்தது.
போனமாதம்தான்
விமலாவைப் போய் பெண் பார்த்து, பார்த்த முதல் பார்வையிலேயே விழுந்தான். குத்து
விளக்குப் போல் தெய்வீகமான அழகு. ஏறத்தாழ இவன் உயரம், ஒரு மில்லிகிராம் அதிகமில்லாத கொடி போன்ற உடல்கட்டு. எல்லாவற்றுக்குமேல், கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு.
ராஜாவுக்கு தன்
அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. தேனில் விழுந்த எறும்பானான். உடனே சம்மதம்
சொன்னபின், நடப்பவை எல்லாம்
கனவுபோல் நம்பமுடியாமல் இருந்தது.
தங்க ஜரிகை இட்ட
கனவு.
கோவையிலேயே பெரிய
மண்டபத்தில், உள்ளூர் எம்பி
தலைமையில் அடுத்தமாதம் கல்யாணம்.
அதற்குமுன், இப்போது, இந்தமாதக் கோட்டா, ECR பயணம்.
சாந்தியை பிக் அப் செய்யத்தான் போய்க்கொண்டிருக்கிறான்.
சாந்தி அப்படி ஒரு
பேரழகி இல்லை. ஆனால் எந்த ஒரு ஆணையும் ஒருதரம் திரும்பிப் பார்க்கவைக்கும்
கவர்ச்சி அவளுக்கு. ஈர உதட்டுச் சுழிப்பும், இடுப்பு நழுவும் சேலையும், மனத்தைக் கொத்திப்போகும் அழகு.
சில மாதங்களுக்கு
முன்தான் அவனது அலுவலகத்தில் மேனேஜருக்கு பெர்சனல் அசிஸ்டன்ட் ஆக வந்து
சேர்ந்தாள்.
சேர்ந்த அன்றே,
ராஜாவின் மனதில் ஆயிரம் சலனங்கள். இத்தனை
நாள் தான் அனுபவித்த எந்தப் பெண்ணும் இவ்ளுக்குமுன் ஒன்றுமே இல்லை என்று
புரிந்தது.
முதல் முறையாக,
தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தன்
லீலையை நடத்தத் துணிந்தான். ஒருகணம், இவளையே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தான். ஆனால், அப்பாவின் கண்டிப்பு நியாபகம் வர, ஒருமுறை அவளை அடைந்ததால் போதும் என்று
முடிவுக்கு வந்தான்.
சாந்தியை ஒருதடவை தொட்டு அனுபவித்துவிடுவது
என்பதில் அவனுக்கு மாற்று நினைப்பே வரவில்லை.
இடையில் வந்த திருமண ஏற்பாடு அவனுக்கு உறுத்தவே இல்லை.
மாட்டிக்கொள்ள
மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தான். இதுவரை தொட்ட அத்தனைபேரும் என்ன
செய்துவிட்டார்கள்? அதே வீடியோ, அதே மிரட்டல் என்று ஒதுக்கிவிட்டு, விமலாவைக் கரம்பிடிப்பது ஒன்றும் சிரமம் என்று
தோன்றவில்லை. மேலும், கல்யாணத்துக்குப்
பின் எப்படியும், கோவையில்
மாமனாரின் மில்லுக்கே போய்விடும் திட்டம் வேறு தைரியம் கொடுத்தது.
சாந்தியை வளைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. வெகு
அலட்சியமாக அவன் எல்லா சிக்னல்களையும் நிராகரித்தாள். ஆனால் அந்த ஈர உதட்டுச்
சுழிப்பில் ஒரு அழைப்பு இருப்பது அவன் பழகிய கண்களுக்குப் புரிந்தது. ஒருவழியாக
அடிமேல் அடி வைத்து அம்மியை நகர்த்திவிட்டான். இன்று சாந்தியுடன் சில்வர்
சேண்ட்ஸ்!
இதோ, சாந்தியை பிக் அப் செய்துகொண்டு
கிளம்பிவிட்டான். இத்தனை முறை இல்லாமல், இதயம் தாறுமாறாய்த் துடித்தது.
ரூமுக்குப் போனவுடன்,
முதலில் ரெஸ்ட் ரூம் போய்வந்தவன்
முகத்தில் புன்னகை அரும்பியது.
சாந்தி தலையில் குத்தியிருந்த அகலமான கிளிப்பை
கழற்றி, படுக்கைத் தலைமாட்டில்
வைத்திருந்தாள். தளர்த்தப்பட்ட
தலை முடி அவள் தயார்நிலையைச் சொல்ல, அவன் அழகின்மேல் அவனுக்கே ஒரு கர்வம் வந்தது.
எதிர்பார்த்தபடி,
அடுத்ததாக சாந்தி ரெஸ்ட் ரூமில் நுழைய,
மொபைல் வசதியான இடத்தில் தன கேமரா
கண்ணைத் திறந்து உட்கார்ந்தது.
விடியும்வரை நடந்தவை
பற்றி எழுதுதல் விரயம். அதிகாலை சாந்தியை விட்டுவிட்டு வந்து படுத்தவனுக்கு,
இன்றுதான் விமலா தன தோழிகளை அழைக்க
சென்னை வருவது நியாபகம் வர, ஒரு
புன்னகையுடன் குளிக்கப் போனான்.
தாய் தகப்பன் அற்ற, அனாதையாகிப்போன சாந்தி, தன்
திருமணத்துக்கு தானே பணம் சேர்த்துக் கொண்டிருந்தாள். அதிகாலையில் தன லேப்டாப்பில்
ஒரு வீடியோவை ஏற்றிக்கொண்டிருந்த சாந்தி சின்னப் புன்னகையோடு, இந்தமுறை எப்படியும் தேறப்போகும் சில லட்சங்கள்
தன் கல்யாணக் கனவை நிறைவேற்றும் என்று முடிவுக்கு வந்தாள். இன்று ராஜா முகத்தில்
மலரப் போகும் திகைப்பை யோசித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தாள்.
.இனி ஒழுங்காகக்
கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிடவேண்டும் என்று ராஜாவை நினைத்துப் புன்னகைத்தபோது,
காலிங் பெல் அடித்தது. இந்நேரத்தில் யார்
என்று கதவைத் திறந்தவள் சந்தோஷ ஆச்சர்யத்தில் அதிர்ந்துபோனாள்.
அவளது கல்லூரித் தோழி
விமலா.
"என்னடி இது
திடீர்ன்னு" என்று கட்டிப்பிடித்து ரூமுக்குள் கூட்டிப் போனாள். "எல்லாம் ஒரு
சர்ப்ரைஸ்தான்" என்று சொன்ன விமலா, "பல்
தேய்ச்சுட்டு வாடி, முதல்ல ஒரு
காபி குடிக்கணும்" அப்படின்னுட்டுப் போய் படுக்கையில் சாய்ந்தாள்.
பல் துலக்கி, முகம் கழுவி வந்த சாந்தி, விமலாவோடு போய் ஒரு சூடான காபி சாப்பிட்டு வரும்வரைக்கும்,
விமலா எதுவுமே பேசவில்லை.
ரூமுக்குள் வந்தவுடன்,
விமலா கேட்டாள். "யாருடி அவன்?"
"யாரைப்பா கேட்கறே"ன்னு
லேப் டாப்பை பார்த்தவளுக்கு சுருக்கென்றது. freeze ஆகியிருந்த படத்தில், ராஜா சிரித்துக் கொண்டிருந்தான்.
என்ன சொல்வதென்றே
தெரியாமல் தலை குனிந்து நின்ற சாந்தி, விமலா உலுக்கிக் கேட்டபின் மெதுவாய் வாய் திறந்தாள். "எங்க ஆபீசில் வேலை செய்பவர், ராஜா".
பத்து மணிக்கு,
அப்பாவிடமிருந்து உடனே வரச் சொல்லி போன்
வர, ரயிலைப் பிடித்து ராஜா ஊருக்குப் போய் சேர்ந்தால், வீட்டில், சாந்தி, விமலாவின் அப்பா.
அப்பாவின் பெல்ட்
இரண்டுமுறை அவன்மீது சுழன்றபின்பே ஓய்ந்தது.
அதன்பின் நேர,
வார்த்தை விரயம் இன்றி, அந்த வெள்ளிக்கிழமையே உள்ளூர் கோவிலில்,
ராஜாவுக்கும் சாந்திக்கும் திருமணம்.
அழகுச்சிலை விமலா,
மணப்பெண்ணின் தோழி.
இப்படி ஓர்
உறுத்தலோடும், விமலாவோடு
ஏற்பாடாகியிருந்த கல்யாணத்தை மறைத்து அவளை வீழ்த்தியதை எப்படி சாந்திக்கு
விளக்குவது என்ற திகைப்புடனும் ராஜா.
சரி, இந்தத் திருப்பம் எப்படி நேர்ந்தது?
வெறும் புகைப்படமா, விமலாவை இப்படி ஒரு வேகமான முடிவை எடுக்க
வைத்தது?
சாந்தி தன்
கல்யாணத்துக்கு பணம் சேர்த்துக்கொண்டிருந்தாள் - எப்படி?
தன் வலையில் சிக்கும்
ஆண்களை மயக்கி, உறவின்போது வீடியோ
எடுத்து மிரட்டிப் பணம் சேர்ப்பது அவள் வழி.
அன்றும், க்ளிப்பில் இருந்த கேமராவில் இருந்து பென் டிரைவ் மூலம்
லேப் டாப்பில் வீடியோவை ஏற்றும்போதுதான் விமலா வந்தாள்.
தோழியைப் பார்த்த இன்ப
அதிர்ச்சியிலும், அவள் அவசரப்படுத்தியதிலும்,
அது பாதியில் நிற்பதை மறந்து பாத்ரூம் போய்
வந்தபோதுதான், விமலா அந்த
வீடியோவை தற்செயலாய்ப் பார்த்திருந்தாள்.
தன்னோடு வேலை
செய்பவர், தன்னை கல்யாணம்
செய்துகொள்வதாய் சொல்லி தன்னோடு உறவுகொண்டதாயும், அப்போது, தான் மட்டும் ரசிக்க, மொபைலில்
படம் எடுத்ததாகவும் அழுது கதையை மாற்றியிருந்தாள் சாந்தி.
அதன்பின் விமலாவோடு கோவைக்கு விமானத்தில் வரும்போதே இதுவும்
நன்மைக்கே என்று, தன் பழைய
பத்துக்கு மேற்பட்ட வீடியோக்களையும் மறந்து, ராஜாவுக்குச் சொல்லப் புதுக்கதை எழுதி வைத்திருந்தாள் சாந்தி.
முதல் இரவில்
தயங்கித் தயங்கி, "என்னை
மன்னித்துவிடு சாந்தி" என்ற ராஜாவிடம், "இனிமேல் உங்கள் பழைய விளையாட்டுக்களை மறந்துவிடுங்கள்" என்று கண்டிப்பு
முகத்துடன் சொன்ன சாந்தி, கட்டியணைத்த
அவன் முதுகுக்குப்பின் புன்னகைத்துக்கொண்டாள் தன அதிர்ஷ்டத்தை நினைத்து!
சில உண்மைகள் வெளிச்சம் காண்பதே இல்லை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக