செவ்வாய், 16 டிசம்பர், 2014

சனிப்பெயர்ச்சி!


காலைல அலுவலக முகவரிக்கு வந்த கடிதத்தைப் பார்த்ததிலிருந்து ரவிக்கு நிலை கொள்ளவில்லை!.

பக்கத்து சீட் சனி, கீதா, என்ன மேன், தேன் குடிச்ச்நரி மாதிரி இருக்கே, பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளா ன்னு கேக்குது 
.
சரியான ஆம்பளக் காமாட்சி. காலைல அவள பைக்குல கொண்டாந்து விட்டுட்டுத் தெறிச்சு ஓடற ஈர்க்குச்சி இந்த தண்ணி பீப்பாய எப்படி மேனேஜ் பண்ணுதுன்னு தெரியல.
மொதல்ல உன் புருஷன் ஓடிப் போகாம பாத்துக்க அப்படின்னு சொன்னதுக்கு, “அந்த நாயி எங்க போனாலும் ராத்திரிக்கு வந்து கால சொரண்டும்ங்குது அலட்சியமா!

கெரகம்! காலைல எந்திருச்சவுடனே கண்ணாடியப் பாத்துத் தொலைச்சதுக்கு இது வேணும்ன்னு மனசுக்குள்ளயே நொந்துக்கிட்டு ஒரு நூறு மீட்டர் தள்ளிப் போய் உட்கார்ந்தா, “என்ன ரவி, வயசுக்கு வந்துட்டயா?,  மூலைல உக்காந்துக்கிட்டே?,  குடிசை கட்டீருவமா?”ங்குது டேமேஜர் கெரகம்.

இந்த மிருகக் காட்சி சாலைக்கு, காலைல ஏழுமணிக்கே தயிர் சாதம், உப்புமான்னு மூட்டை கட்டிக்கிட்டு வந்துபோற நாய்ப்பொழைப்பு. ஒண்ணுகூட அடுத்தவன மனுஷனாவே மதிக்காத பிறவிங்க. மொத மொதலா அந்த டேமேஜர் இந்த ஆபீசுக்கு வந்தப்ப பக்கத்து பில்டிங்ல இருந்து ஒரு டாபர்மேன் கொரைச்சப்ப அப்படி சின்க் ஆச்சு.
இத ரமேஷ் கிட்ட சொல்லிச் சிரிச்ச மறுநிமிஷம் வத்திப் பெட்டிய எடுத்துக்கிட்டு ஓடிப்போச்சு கோதண்டம்.
அன்னைல இருந்து ரவியைக் கண்டாலே, மேனேஜர் கிழத்துக்கு நவத்துவாரமும் எரியும்.

ரவிக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம்தான் ஆச்சு. 
பக்கத்து கிராமத்துல, திண்ணைல சீட்டாடற நேரம்போக மத்த நேரமெல்லாம் தெருப் பொம்பளைங்கள வெறிச்சு பார்த்துக்கிட்டிருக்கற வெட்டி மிராசு ரவியோட மாமனார்.

கத்தாழைச் செடியில ரோஜாப்பூ பூத்த மாதிரி ரெண்டு பொண்ணுங்க.
ஊருல வாத்தி வேல பாக்கற அப்பனைப் பார்த்து ஏமாந்து மூத்த பொண்ணை ரவிக்கு கட்டிவெச்சுருச்சு மிராசு.
ரவியும் நல்லா சந்தோசமாத்தான் இருந்தான். "நம்ம மொகரைக்கு இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி"ன்னு!

சனி சபா ரூபத்துல கல்யாணத்துக்கு வந்துச்சு. 
ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்குன பாரின் சரக்கை ரெண்டு மணி நேரத்துல காலி பண்ணிட்டு, வெடிஞ்சா கல்யாணம்ங்கற நேரத்துல ஒளருது நட்புக் கிரகம்.
"ரவி, என்ன இருந்தாலும் ஜானு உனக்குப் பார்த்த பொண்ணை விட அழகுடா! நீ ஒரு இளிச்சவாய் மூதி. நானா இருந்தா, ரெண்டு வருஷம் பொறுத்து ஜானுவைக் கட்டீருப்பேன்".

எப்படி இருக்கும் ரவிக்கு!

அந்த நாயி ஜானு ஜானுன்னு ஏதோ அத்தை மகளை சொல்லறமாதிரி சொல்லுதே அது, ஜஸ்ட் ஒரு நாலு மணி நேரம் முன்னாடி பார்த்த கொளுந்தியா.

டீச்சர்ஸ் பாட்டில புடுங்கி அவன் மண்டைல போட வந்த ஆத்திரத்தை கஷ்டப்பட்டு அடக்கினாலும், (கொலை கேசுல ஜெயிலுக்கு போற தைரியம் இல்லைங்கறதுதான் உண்மைக் காரணம்),  மனசுக்குள்ள சனியன் சம்மணம் போட்டு உக்காந்துக்கிச்சு. 

காலைல தாலி கட்ட மணவறைல உட்கார்ந்தா, மந்திரம் சொல்ற ஐயர்ல இருந்து, பந்தியில இலை எடுக்கற குப்பாயி வரைக்கும் எல்லாமே ஜானகியாத் தெரியுது.

நல்லாதானடா என் பொண்டாட்டியே எனக்கு கெடச்ச அதிர்ஷ்டம்ன்னு சந்தோசமா இருந்தேன், இப்படி குட்டைய குழப்பிட்டு போறீங்களேடான்னு பொலம்புனப்போ ஊருக்குப் போற அவசரத்துலயும் அந்த கீதா சொல்லுது, "விடு ரவி, எங்க போகப் போகுது? இந்த சனிப் பெயர்ச்சி உனக்கு நல்லா இருக்கு. அப்போ அநேகமா அதே உன்னைத் தேடிவரும்!"

கல்யாணம் முடிஞ்சு, மூணாவது நாளே, சென்னைக்கு மூட்டையக் கட்டிக்கிட்டு கெளம்பும்போது, மாமனார் சொன்னாரு, "அந்த நாத்தம் புடிச்ச ஊருல போயி நீங்க சம்பாதிக்கற முக்கா துட்டை, இங்க நானே குடுத்தர்ரேன் நீங்க இங்கயே இருந்துடுங்க, மேலத்தெரு மாரிமுத்து செத்துப் போனதிலிருந்து சீட்டாட்டத்துக்கு வேற ஒரு கை கொறையுது."

ரவி, ரெட்டை ரெடியா தலை ஆட்டுனா, பொண்டாட்டிக்காரி சொல்றா, "இல்லப்பா, ஜானு கல்யாணம் வரைக்கும் அவரு வேலைக்குப் போகட்டும் அப்பத்தான் எனக்கும் கௌரவம்."

சண்டாளி, ஜானு கூட இருக்கற வாய்ப்பை இப்படி கெடுத்துட்டாளேன்னு மொறைச்சா, ரொமான்ஸ் லுக் விடுது பட்டிக்காட்டுப் பக்கி. 

ஆறு மாசமா, ஜானு ஜானுன்னு மனசுக்குள்ள பொலம்பிக்கிட்டே, அவளை நெனச்சு இவளைக் கொண்டாடிக்கிட்டிருக்கு வாழ்க்கை.

நாளைக்கு சனிப் பெயர்ச்சி. 
கரெக்ட்டா இன்னைக்கு மாமனார் கடிதம்.

மஹா கனம் மாப்பிள்ளை அவர்களுக்குன்னு ஆரம்பிச்சு, மாடு கண்ணு சௌக்கியம், தீபாவளி லேகியம்ன்னு என்னென்னவோ எழுதி, கடிசியில ஒரு கூடை பூவை அள்ளி மேல கொட்டியிருந்தாரு.
"நம்ம ஜானு M.Phil பேப்பர் சப்மிட் பண்ண, சென்னைக்கு வரணும். நாளைக்கே, நானும், ஜானுவும் பொறப்பட்டு வர்றோம். உங்களுக்கு ஒரு பதினைஞ்சு நாளுக்கு ஜானு கூட யுனிவர்சிட்டி போய் வர நேரம் இருக்கும்ன்னா, நாங்க நேரா வீட்டுக்கு வர்றோம். இல்லைன்னா, அவளுக்குத் தெரிஞ்ச ப்ரண்ட் வீட்டுலபோய் தங்கிக்கறேன்னு சொல்றா. உங்களுக்கு ஒன்னும் தொந்தரவு இல்லன்னா, எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லுங்க".

ஆஹா, சனிப்பெயர்ச்சி இப்படியா ஒர்க் அவுட் ஆகும்ன்னு தரைய விட்டு ஒரு அடி, தர்மர் ரதம் மாதிரி மிதக்க ஆரம்பிச்சான் ரவி.

உடனே, மாமனாருக்கு போன். 
மாமா, நீங்க நேரா நம்ம வீட்டுக்கு வந்துருங்க. ஆபீஸ்ல ஆடிட் சமயம். இருந்தாலும், நான் பதினைஞ்சு நாள் லீவு, முடியலன்னா, கால் கடுதாசி குடுத்துட்டு வந்தர்ரேன்னு வழிஞ்சான்.

"ரொம்ப தேங்க்ஸ் மாப்ள, இங்க லச்சுமிக்கு பிரசவ நேரம், நான் கூடவே இருக்கணும். அதுனால, நாளைக்கு ஜானுவ அங்க விட்டுட்டு நான் உடனே ஊருக்கு கிளம்பறேன்".
லட்சுமி வேற யாரும் இல்லைங்க. மாமனார் வீட்டு எருமை.

அப்போ, அந்த இடைஞ்சலும் இல்லையா, கர்த்தரே உம் கருணைக்கு நன்றி அப்படின்னு, கீதாவை கட்டிப் புடிச்சு ஒரு முத்தமே குடுத்துட்டான்.

லீவ் லெட்டர், ராஜினாமா கடிதம் ரெண்டையும் கொண்டுபோய் மேனேஜர் மூஞ்சில விட்டெறிஞ்சான். "உனக்கு எது வேணுமோ எடுத்துக்க, நான் நாளன்னைல இருந்து பதினைஞ்சு நாள் வரமாட்டேன்" ன்னு கவுண்டர் மாதிரி சவுண்ட் விட்டான். இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்த மேனேஜர் தற்காலிகமா, லீவ் லெட்டர எடுத்துக்கிச்சு.

சாயங்காலம் வீட்டுக்குப் போகையிலேயே, பொண்டாட்டிக்கு, எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு அஞ்சு கிலோ அல்வாவும், ஒரு நூறு முழம் மல்லிகைப் பூவும் வாங்கிக்கிட்டுப் போனா, மூஞ்சியத் தூக்கி வெச்சுக்கிட்டு உக்காந்திருக்கு பொண்டாட்டிமாரியாத்தா!

அதுக்குள்ளே மகளுக்கு போன் பண்ணி, நாளைக்கு வர்றோம், மாப்பிள்ளை கிட்ட சொல்லியாச்சுன்னு போட்டுக் குடுத்திருச்சு மாமனார்.

முசுமுசுன்னு புடிச்சுக்கிட்டா. "யாரைக் கேட்டு அந்த ஜானுவை இங்க பதினைஞ்சு நாள் தங்கச் சொன்னீங்க, நொச்சு நொச்சுன்னு அது என் உயிரை எடுக்கும்"ன்னு பொலம்பறா.

நம்ம வீடு இருக்க, அவங்க (மரியாதையா பேசறமாதிரி பில்ட் அப்) வேற எங்காவது போய் தங்குனா நமக்கு நல்லாவா இருக்கும்ன்னு வக்காலத்து வாங்குனான் கள்ளப்பயல்.

என்னமோ பண்ணித் தொலைங்கன்னு, அல்வாவ அப்படியே மடியில வெச்சுக்கிட்டு சீரியல் பாத்து அழ ஆரம்பிச்சா பரதேவதை.

காலைல எந்திருச்சு, மூணு கோட்டிங் சவரம், தீ வெச்சமாதிரி எரியுது கன்னம். பாதி சோப்பு கரையறவரைக்கும் குளிச்சு வெளிய வந்தவனுக்கு, கல்யாணத்துக்கு தெச்ச கோட்டு போடலாம்ன்னு ஒரு நிமிஷம் ஆசை வந்துச்சு. ஆனா, கொஞ்சம் ஓவரா போயிடும்ன்ற பயத்துல, இருக்கறதுலயே அடிக்கற செவப்பு சட்டையும் வெள்ளை பேண்ட்டுமா ஆபீசுக்கு போனா, சபா கேக்கறான், எங்கடா, சவேரா ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு போகப்போறியான்னு.

பொறாமை புடிச்ச நாயி.

இருப்பே கொள்ளாம,மத்தியானமே ஆபீஸ விட்டுக் கெளம்பி, நேரா ரமேஷ் சலூனுக்குப் போயி, ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு, பேஷியல், ப்ளீச்சிங் அது இதுன்னு கண்ட கருமத்தையும் பண்ணிக்கிட்டு, கமலஹாசன் எபெக்டுல வீட்டுக்குப் போனா, வாசல்லையே மாமனார் நந்தி!

அவர் சொன்ன குத்தகை கணக்கு, வெள்ளாமை, விவசாயம் கதையெல்லாம் கொட்டாவிய முழுங்கி கேட்டுக்கிட்டே உக்காந்திருந்தான். 
சரி மாப்ள, நான் போய் படுக்கறேன், காலைல வெள்ளன கெளம்பணும். நீங்கதான் ஜானுவைக் கொஞ்சம் கூடவே இருந்து பார்த்துக்கணும் அப்படீன்னாரு.
அவங்க எங்க மாமான்னா, மெட்ராஸ் வெய்யில்ல தொவண்டு போய்ட்டா, குளிக்கப் போயிருக்கா அப்படின்னு எழுந்து போயிட்டாரு.

நாலுகால் பாய்ச்சல்ல வீட்டுக்குள்ள போனா, பொண்டாட்டிக்காரி "உங்களுக்கு இந்த வெட்டி வேலை தேவையா" ங்கறா,  இவன் பார்க்கற கவர்னர் வேலைக்கு இது வேற!!

விடுடீ, நம்ம ஜானுவுக்கு செய்யாம யாருக்குச் செய்யப்போறோம்ன்ன அவன ஒரு மாதிரி வித்தியாசமாப் பார்த்தா சதி லீலாவதி.

அப்பத்தான், பாத்ரூம் கதவைத் திறந்துக்கிட்டு ஹீரோயின் என்ட்ரி.

கண்ணு ரெண்டும் தெறிக்கத் திரும்பிப் பார்த்தா,
மாமனாரோட முதல் தங்கச்சி, லோக்கல் பள்ளிக்கூட டீச்சர், நூத்தியம்பது கிலோ குதுப்மினார், நாப்பத்தெட்டு வயசு அத்தை.


"இவங்கதான் எங்க ஜானகி அத்தை! M.Phil  பண்ண வந்திருக்காங்க!"கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக