வெள்ளி, 12 டிசம்பர், 2014

லிங்கா ஆ ஆ ஆ ஆ! இன்று காலை என் TL லில் கண்ணில் பட்ட மூன்று பதிவுகள் கீழே.

ரஜினி படத்தை கூட ரேட்டிங்,விமர்சனம் பார்த்தா போவாங்க? ரஜினி மட்டும் இருந்தால் போதாது!
ரஜினியால் கமல் ஆக முடியும். ஆனால் அது தேவையற்றது. கமலால் ரஜினி ஆகவே முடியாது.
ஒரு கலைஞனுக்கு வேலை ரசிக்கறவங்கள சந்தோஷப் படுத்தறதுதான்!அந்த தன்வேலையை 100% இத்தன வருஷமாக செய்து வரும்தலைவருக்கு #HappyBirthdayRajiniKanth

இவை என் வேலையை எளிமையாக்கியிருக்கின்றன.அலெக்ஸ் பாண்டியன், சூர்யா, ஜான், காளி, மாணிக்பாஷா இதெல்லாம் வேறு யாராவது செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எனக்கென்னவோரஜினி படம் என்பது ரஜினியால் மட்டுமே நடிக்க முடிந்த படம் என்றே படுகிறது.

முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, நல்லவனுக்கு நல்லவன், நெற்றிக்கண், இதெல்லாம் நீங்கள் ஆகச் சிறந்த நடிகன் என்று கொண்டாடுபவர்களால்கூட, அந்தக் காலகட்டங்களில் நடித்தே இருக்க முடியாத படங்கள்.


இதைச் சொல்வதால் நான் கமல் வெறுப்பாளன் என்று தூற்றப்படும் வாய்ப்பு இருப்பினும், நாயகன்  ரஜினி நடிப்பில் வந்திருந்தால் இன்னும் வேறு லெவல் போயிருக்கும் என்று படுகிறது

மேலும், இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் மிக எளிதாக கமலைத் தாண்டி ஸ்கோர் செய்திருப்பார்.

ரஜினி படம் என்று ஒரு formulaவை இவர்களே உருவாக்கி அதில் தங்கள் லேபிளை ஒரு ஓரமாக ஒட்டி விற்பனை செய்யும் வேலையை எல்லா பெரிய இயக்குனர்களுமே செய்திருக்கும்போது ரஜினியைக் குறை கூறும் தகுதி யாருக்குமே இல்லை.

ரஜினிக்கு இருக்கும் கரிஷ்மா எனக்குத் தெரிந்து வேறு யாருக்குமே இல்லை. எந்த ஒரு கட்சி பின்புலமும் இல்லாமல், ஒரு வித்தியாசமான தமிழ் பேசிக்கொண்டு, கறுப்பாய் ஒரு உருவம், தமிழ்நாட்டில் இந்த உயரம் தொடும் என்று யாரேனும் நினைத்திருக்க முடியுமா?


ரஜினி படம், technicalஆக மிரட்டியதில்லை, மாறுவேடப் போட்டி போல மேக் அப், கெட்டப் சேன்ஜ் இருந்ததில்லை.

கதை, ஜோடி, இசை என்று எந்த விஷயத்திலும் அலட்டிக் கொண்டதில்லை.
அது ரஜினி படம்! அவ்வளவே.

ரஜினி படம் உலகத்தரத்தில் இல்லை, ரஜினி ரசிகர்கள் ரசனை இல்லாதவர்கள், இப்படி ஒரு வாதம்.

என் அப்பா, தாத்தாவிலிருந்து, நேற்றுப் பேசத்தெரிந்த குழந்தை வரை ரசிப்பவை ரஜினி படங்கள்.

குடும்பத்தோடு, ஒரு காட்சி கூட முகம் சுளிக்காமல் பார்க்கக் கூடிய படங்கள் ரசனைக் குறைவாய் இருந்துவிட்டுப் போகட்டும், அருவெறுக்க வைக்காமல் இருந்தால் போதும்.

அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டு- இன்றைய ஒரு பதிவில்!

கோடி கோடியாக சம்பாதிக்கும் ரஜினி ஏழைகளுக்கு என்ன செய்தார்?


எல்லாத் தொழிலிலும் கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்?

ரஜினிக்குத் தொழில் நடிப்பு. 
அதில் அவர் சம்பாதிப்பதை அவர் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் யார் முடிவு செய்ய?

அரசியலை, ரசிகர்களை அவர் பயன்படுத்திக்கொள்கிறார் - இது அடுத்த குற்றச்சாட்டு!

உண்மையில் அரசியல்வாதிகள்தான் அவரைப் பயன்படுத்தத் துரத்துகிறார்கள்.

ஏன் இந்த ஊடகங்கள் எல்லாவற்றிலும் அவர் கருத்து சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்
தங்கள் வியாபாரத்துக்கு, பத்திரிக்கைகள் வாசகர்களைப் பயன்படுத்தும்போது
ஒரு நடிகன் தன் ரசிகர்களைப் பயன்படுத்துகிறான்.

ரசிகனுக்கு சோறு போட்டாயா, இதற்கு குரல் கொடுத்தாயா, அதற்கு குரல் கொடுத்தாயா என்று ஏன் அவர்மேல் ஏறுகிறீர்கள்
அவர் படத்தை, அவர் வியாபாரம் செய்ய அவரது உத்திகளை விமர்சிக்கும் தகுதி, அரசு பதில்களுக்கும், நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை விற்றுப் பிழைக்கும் ஊடகங்களுக்கு அறவே இல்லை.

அமிதாப் போல வயதுக்கு ஏற்ற வேடங்களை அவர் ஏற்க அவர் முடிவு செய்யும்போது அதை ரசிப்போம்.

இப்போதைக்கு, சிவாஜி போரடித்தால், மொட்டை எம்ஜியார் வந்து சரி செய்துவிடுவார்.
எந்திரன் மொக்கை போடும்போது சுட்டி வந்து வித்தை காட்டிவிடுவார். 

பத்து நிமிட வேட்டையன் ஒரு முழுப் படத்தையும் நிற்க வைப்பான்.

ஒரு சூப்பர் ஸ்டார் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ரஜினி, நடிகனாக மாறும்போது மார்லன் பிராண்டோவோடு  ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

அதுவரை என்னைப்போல் ஆட்களெல்லாம், ரஜினி படம் மட்டும் திரையரங்கில் பார்த்துக் கொள்கிறோம்.


சரி,  லிங்கா என்ன ஆச்சு?

வழக்கமான ரஜினி படம்தானாம்!


அது சரி, அதற்குமேல் அவரை நாம் என்ன செய்ய விட்டோம்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக