பார்வதியின் பயணம்!
வாழ்க்கை சிலருக்கு
சில வரங்களை அளிக்கிறது.
சிலருக்கு, எந்த ஒரு தடங்கலும் இல்லாத நெடுஞ்சாலைப் பயணம்.
சிலருக்கோ, எந்த திசையில்
போனாலும், வந்தவழி திரும்ப நேரும்
முட்டுச்சந்து.
இயற்கையோ இறைவனோ,
அப்படித் தடம் தேடி
அலைய நேர்பவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்களை உறுதுணையாக வழங்க மறப்பதில்லை.
தன்னம்பிக்கை,
துணிச்சல், நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகள் – இப்படி!
நம் இன்றைய கதை நாயகி
பார்வதி அப்படியான வரம் வாங்கி வந்தவர்.
தொட்டது துலங்கும்
கணவன். கடின உழைப்பும், எந்தத்
துறையில் கால்வைத்தாலும் அதில் வெற்றிபெறும்வரை கொஞ்சமும் தளராத முனைப்பும்,
குப்புசாமியின் குணங்கள்.
தனியார் வங்கித்
தொழில் மற்றும், பரம்பரை கைத்தறி
நெசவு.
முதலாளி என்றால் மேலப்பாளையம் நினைவுக்கு கொண்டுவரும் வெகு சிலரில் ஒருவர்.
தவறிப் போன தம்பி,
தானே வலிய வந்து குறைபட்டுப் போன
பொன்னம்மாள் என்று வலிகளுக்கும் குறைவில்லாவிட்டாலும், வகைக்கு மூன்றாய் ஆறு குழந்தைகள்.
கடைக்குட்டி
கனகசபாபதி கைக்குழந்தை.
வங்கி வேலைகளுக்காய்
அடிக்கடி வெளியூர் பயணம்.
மெத்தை வீட்டுக்காரர்
என்று புது அடையாளம் தந்த,ஊரே
திரும்பிப் பார்க்கும் வண்ணம் கட்டிவந்த மாடிவீடு கட்டுமானம் முடியும் நேரம்.
அந்த, விதி ரகசியமாய் சிரித்த நாளிலும், கும்பகோணம் பயணம்.
வீட்டுக்குத் தேவையான
கட்டுமானப் பொருட்களை வாங்கி, வண்டியில்
ஏற்றிவிட்டு, கும்பகோணத்தில்
ஈரோட்டுக்கு ரயில் ஏறிய குப்புசாமி, அதற்குப்பின் என்ன ஆனார் என்பது, அறுபதாண்டு ரகசியம்.
கூட இருந்து வண்டி
ஏற்றிவிட்ட செம்பணன் அறிந்ததும், அவர்
ஈரோடு போவதாய் சொன்னது மட்டுமே.
ஏறத்தாழ, வருடம் ஒன்றாய்ப் பிறந்த ஆறு குழந்தைகள்,
சற்றே மனநிலை பிறழ்ந்த மாமியார், குறைபட்டு வீட்டோடு நிற்கும் தங்கை. கட்டுமானம்
முடியும் நிலையில் குடியிருக்கும் வீடு.
இந்த நிலையில்,
காற்றோடு கரைந்த கணவன்!!
படிப்பு வாசனை அற்ற
பார்வதி கலங்கிய நேரம் குறைவு.
வேறு ஒருபெண்ணாய்
இருந்தால்,
இன்னொரு நல்லதங்காள் கதை இந்த ஊருக்குக்
கிடைத்திருக்கும்.
பிறந்தது முதலே
துணிச்சல்காரி என்று பேர் வாங்கியவருக்கு, அதை இப்படி நிரூபிக்க
வேண்டிய கட்டாயம்.
கணவனின் ஆப்த நண்பர்
முருகேசனின் ஆலோசனைப்படி, வங்கியை உடனே மூடும்
நடவடிக்கையில் இறங்கி, அதை வெற்றிகரமாய் முடித்தார். இடைப்பட்ட
அவகாசத்தில், வீட்டுக் கட்டுமான வேலைகளையும் ஒரு
முடிவுக்குக் கொண்டுவந்தார்.
தம்பி முறையாகும்
செம்பணனை துணைக்கு வைத்துக்கொண்டு,
தறிகளை மட்டும், எண்ணிக்கையைக் கூட்டி, நெறிப்படுத்தினார்.
வசதி குன்றிய
குடும்பத்திலிருந்து வந்த செம்பணனை மட்டுமே, உறுதியாக நம்பி, எல்லாப் பொறுப்பையும் கொடுத்தார். காக்கை கூட்டமாய் மொய்த்த மற்ற உறவுகளை
நிறுத்தவேண்டிய இடம் அறிந்து நிறுத்தினார்.
குப்புசாமி காணாமல்
போனதால் கிளம்பிய புரளிகளைப் புறம்தள்ளி நிமிர்ந்து நின்றவர், எவரிடத்தும், எதற்கும் போய் நிற்பதில்லை என்பதிலும்
உறுதியாகவே இருந்தார்.
1940, 50களில் ஒரு
பெண் இவ்வளவு துணிச்சலாய்த் தன்னந்தனியே ஒரு குக்கிராமத்தில் தலையெடுப்பது என்பது எவ்வளவு
நம்பமுடியாத விஷயம்?
அதிலும், தகப்பன் இல்லாத பிள்ளைகள் தறுதலைகளாய் மாறும்
என்ற ஊர் எதிர்பார்ப்பை, செயலால் பொய்யாக்கினார்.
எப்போதும், பார்வதி பேசியது, செயல்கள் மூலமே.
மூத்த மகன், அந்த ஊரின் முதல் மருத்துவர்.
சென்னை
மருத்துவக்கல்லூரியில் மகனைக் கொண்டு M.B.B.S. சேர்த்த அவரது
துணிச்சல் எல்லார் வாயையும் அடைத்தது.
மூன்று மகள்களுக்கு,
உள்ளூர் பள்ளி இறுதி வரை படிப்பு.
இரண்டாவது மகனையும்,
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் கொண்டு சேர்த்த மெத்தை
வீட்டுக்காரம்மாவை ஊரே வியந்தது.
தறிப்பட்டறை வருமானம், ஊருக்கு வடக்கே சோளக்காட்டு வெள்ளாமை எல்லாமே சிந்தாமல், சிதறாமல் மகன்கள் படிப்பாகவும், மேற்கொண்டு தறிகளாகவும்
வளர,
மூத்த மகள்
விஜயலட்சுமிக்கு படித்த மாப்பிள்ளைதான் என்பதில் உறுதியாய், தூரத்து சொந்தமாய், வேலூரிலிருந்து மணமகனைத் தேடிக்கொண்டு வந்தார்.
நாத்திகனாய் சிடுசிடுத்த மூத்த மாப்பிள்ளை, பின் மூத்த மகனாய் துணை
நின்றது வரலாறு.
படிப்பில் சற்றே
சுணங்கிய கடைக்குட்டி மகனையும், சென்னை பிரசிடென்சியில்
பட்டப்படிப்புக்கு சேர்த்தபின்பே ஓய்ந்தார்.
மூத்த மகனுக்கு பெரிய
இடத்தில் சம்பந்தம்,
இரண்டாவது மகளுக்கு, அதனினும்
பெரிய இடத்தில் ASST DIRECTOR,EMPLOYMENT என்ற நிலையில் பணிபுரிந்த அரசு உயர் அதிகாரி, மாப்பிள்ளை.
இரண்டு மருத்துவ
மகன்களுக்கும், அரசு மருத்துவர் வேலை.
இரண்டாவது மகனுக்கு, நன்றிக்கு அடையாளமாக செம்பணனின் மூத்த மகள் உமா.
சொந்தம் விடவேண்டாம்
என்று, உள்ளூரில், படிக்காவிட்டாலும், தொழிலில் சிறந்த, வெகு குணவான் அண்ணன் மகன், மூன்றாவது மகளுக்கு.
கடைக்குட்டி கனகுக்கு, ஸ்டேட் பேங்க் வேலை. மாறுதல் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்து, தறிப் பட்டறையை ஒட்டியே, கட்டிடம் கட்டி, அதே பேங்க்குக்கு
வாடகைக்கு விட்டு, உள்ளூரில் உத்தியோகம்.
இரண்டாம் மகள்வழிப்
பேத்தியே கனகுக்கு மனைவி.
தான் சுமங்கலிதானா
என்பதே கடைசி வரை தெரியாத வாழ்க்கை.
அத்தனை வஞ்சனை செய்த
கடவுள்மேல் உள்ளூர உறைந்த வெறுப்போ என்னவோ,
பெரிதாக கோவில் குளம்
சென்றதில்லை.
இறுதிவரை எவரிடத்தும்
தலை வணங்கி நின்றதில்லை.
மகனோ, மகளோ, தன் இறுதி மூச்சுவரை தன்னால் முடிந்த
கடமைகளையும் சீர்களையும் குறைவின்றி நிறைவேற்றம்.
பிழைப்பது கடினம்
என்று மருத்துவச்சி கை விரிக்க, மூன்றுநாள் போராடி, மூத்த மகளுக்கு தலைப் பிரசவம் முதல், பேரன் பேத்தி
திருமணங்கள் வரை, நிறைவாய் முடித்து, தொண்ணூறு வயது வரை பெருவாழ்வு வாழ்ந்தார் பார்வதி.
எனக்கென்னவோ, “சோதனைகளையும் துயரங்களையுமே தருவேன், வாழ்ந்துகாட்டு
பார்ப்போம்” என்ற சென்னிமலை முருகனை, அவர் நிமிர்ந்து பார்த்து யாசிக்கவே இல்லை,
வென்றும் வாழ்ந்தும்
காட்டிய அவர் வாழ்வை, அந்த முருகன்தான், மலை மீதிருந்து, தலை குனிந்து பார்த்து, வணங்கி வியந்து நின்றதாய்த் தோன்றுகிறது.
பார்வதிகள் அடிக்கடி
தோன்றுவதில்லை.
தோன்றினாலும்
இவர்போல் இத்தனையும் தாண்டி வென்றதில்லை.
பெண்மை வாழ்கவென்று
பாரதி வியந்தது, பார்வதிகளைப் பார்த்தே!!.
இன்று சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு திணறும் வாழ்க்கைமுறைக்கு இது சிறந்த மருந்து.
பதிலளிநீக்குஅருமையான படைப்புகளை படைக்கும் வாழ்வியலின் ஆதாரமாய்/எடுத்துக்காட்டாய் படைக்கும் ஆண்டவனுக்கும்,
அதை உலகறிய பகிர்ந்த உங்களுக்கும் நன்றி சகோ..
Thanks Brother!
பதிலளிநீக்கு