இந்த நீயா நானா
நிகழ்ச்சியை நேற்றுவரை எனக்குப பார்க்க நேர்ந்ததில்லை.
எனக்குப் பொதுவாக,
மைக் கிடைத்ததென்று பேசிக்கொண்டே
இருக்கும் ஆட்களைப் பிடிப்பதில்லை. அதிலும் இந்த கோபிநாத்தின் அரைகுறைத் தோரணைகள்
கொஞ்சம் கூடுதல் அலர்ஜி.
எங்கள் வீட்டில்
நல்லவேளையாக, யாரும் சீரியல்கள் மற்றும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே
இல்லை.
பொதுவாக டிவியைத் தவிர்த்துவிடும் நான், இரவு
உணவின்போதுமட்டும், தோசைக்குத்
தொட்டுக்கொள்ள வசந்த், மெகா டிவி
சேனல்களில் பழைய பாடல்களைப் பார்ப்பதுண்டு.
நேற்றைய நீயா நானா,
புடவைகள் பற்றி என்பதால், மனைவி, மகள் விருப்பத்தால் உட்கார்ந்து பார்க்க நேர்ந்தது
.
இந்த நிகழ்ச்சியைப்
பார்த்ததில் நான் புரிந்துகொண்டவை.
1. கையில்
மைக் கிடைத்துவிட்டால், எல்லாவற்றையும்
உளறுவது நம் சமூக குணம்.
2. அதிலும்,
பெண்கள் கொஞ்சம் அதிகப்படி உற்சாகத்தில்
உளறுகிறார்கள்.
3. இந்த
நிகழ்ச்சி, குடும்பங்களிடையே,
குழப்பங்களையும் வேறுபாடுகளையும்
ஏற்படுத்தவே நடத்தப்படுகிறது.
கோபிநாத்தின்
கேள்விகளும், சிரிப்பும்
எரிச்சலூட்டும் விதமாகவே அமைந்திருக்கின்றன.
“நாத்தனாருக்குப் புடவை எடுக்க, ஒரு
நிமிடம் போதும், எங்களுக்கு என்றால் பல கடைகள் ஏறி
இறங்குவோம்.”
“அவர்களுக்கு என்றால் பட்ஜெட்டுக்குள்
எடுப்போம், எங்களுக்கு அப்படி அல்ல.”
“எனக்கு அண்ணன் வாங்கிக்கொடுத்த புடவை
பிடிக்கவில்லை. அதைக் கட்டாமல் வேறு யாருக்கோ கொடுத்துவிட்டேன்.”
இதெல்லாம்,
நேற்று, பெண்களின் முத்துச் சிதறல்கள்.
இதையெல்லாம்
சொல்லிவிட்டு அவர்கள் நேரே வீட்டுக்குத்தானே போவார்கள்?
அந்த நிகழ்ச்சியைப்
பார்க்க நேர்ந்த அந்த நாத்தனார்களை இவர்களும், இவர்களை அவர்களும் எப்படி எதிர்கொள்வார்கள்?
அவர்களின் பரஸ்பர
உறவு என்ன ஆகும்?
இனி, இவர்கள் அவர்களுக்கு எடுத்துக் கொடுக்க நேரும்
புடவைகள் அவர்களால் எந்தவித மகிழ்வோடு பெற்றுக்கொள்ளப்படும்?
இப்படியான
முட்டாள்க் கேள்விகளைக் கேட்டு, தான் எதிர்பார்த்த பதிலை அவர்கள் வாயிலிருந்து தோண்டியெடுத்து, கை கொட்டிச் சிரிக்கும் கோபிநாத்தின் உளவியல்
என்ன?
இளமையில் வறுமை
காரணமாக, ஒரே உடையை ஐந்து வருடம்
உபயோகித்தேன். அதனால்தான் வசதி வந்ததும் ஆயிரம் சேலைகள் வாங்கினேன் என்று ஒரு
பெண்மணி செயற்கையாய்க் கண் கலங்கியது TPR ரேட்டிங்குக்காக என்று பட்டது எனக்கு
மட்டும்தானா?
நேற்றைய
நிகழ்ச்சியில் ஒரு பெண்,
“உங்களை, உங்கள் உடையோ, அலங்காரமோ, நிறமோ வைத்து மதிப்பிடுவது உங்களுக்குத்தான் அவமானம்” என்று வாதாடியதை, ஒரு
பெண்ணும் சற்றும் கவனிக்காததும்,
“எனக்கு நல்லவிதமாகத் தைத்துக்கொடுப்பவரின் முகவரியை என் நெருங்கிய தோழிக்குக்கூடச் சொல்லமாட்டேன், என்
தனித்தன்மை போய்விடும்” என்ற பெண்ணை எல்லோரும் ஆரவாரமாக ஆதரித்ததும்
எனக்கு ஆச்சர்யமாக
இருக்கவில்லை.
சராசரிப் பெண்கள்
அவ்வளவு அறிவு வளர்ச்சி பெறவில்லை, அவர்கள்
சுயநலமிகள்
என்ற வருத்தப்படுத்தும் உண்மை நேற்று மறுபடி இந்த நிகழ்ச்சியில் நிரூபணமானது.
ஒரு பெண், தன அலுவலகத்தில் தன்னைவிடக் குறைந்த பதவியில்
இருப்பவர் அதேபோல் ஒரு சேலை கட்டிவந்ததால், ஒரு சேலையை தான் மீண்டு கட்டவே இல்லை, அது, தன் பதவியின் கம்பீரத்துக்கு இழுக்கு என்று பேசியதை, பெரும்பாலும் பெண்கள் ஆதரித்தார்கள்.
மேலும் அவரே, தன்னைவிட மேலதிகாரி அந்தப் புடவையைக் கட்டிவந்தால்
தான் பெரிதும் மகிழ்ந்திருப்பேன் என்று சொன்னது, அவரது மேலதிகாரியின் உளவியலுக்குப் பொருந்தாதா என்று தெரியவில்லை.
அந்த மனநிலை
அநாகரீகமானது என்று ஒலித்த குரல் ஒற்றையாய் ஒலித்தது சோகம்.
நிகழ்ச்சியின்
சிறப்பு விருந்தினர்களாக வந்த தமிழச்சி தங்கபாண்டியனின் மிகை அலங்காரமும், அடிக்கும் உதட்டுச் சாயமும் அவரால் நியாயப்படுத்தப்
பட்டபோதும்,
இன்னொரு விருந்தினராக
வந்த வழக்கறிஞர்,- அஜிதாவோ, அபிதாவோ, - அவரது எளிமையான கம்பீரத்துக்குமுன் அதீத அசிங்கமாகவே பட்டன.
அந்த வழக்கறிஞர், “தன் பதின்ம வயதுமுதல், அலங்கார உடைக்கும், பூவுக்கும் அலங்காரத்துக்கும் இடமே கொடுத்ததில்லை. தன்
அறிவு சார்ந்தே தான் மதிப்பிடப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்று சொன்னபோது பெரிதாக யாரும் அதை அங்கீகரித்ததாய்ப் படவில்லை..
பெண்களை, அழகுசாதனப் பொருட்கள் அடிமையாக்கி
வைத்திருப்பதை மீண்டும் ஒருமுறை உணரமுடிந்தது.
இந்த நீயா நானா
நிகழ்ச்சிகள் மூலம் விஜய் டிவி ஏற்படுத்த
நினைக்கும் மாறுதலைப் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.
ஆனால்,ஒரே ஒரு பதில் தெரியாத கேள்வி எனக்கு.
இந்த கோபிநாத்தை
ஆங்கிலம் பேசக்கூடாது என்று ஏன் தடைபோடக்கூடாது?
அவரது கைதட்டல்சிரிப்பையும், உடல்மொழியையும் விட, மிகக் கேவலமாக இருந்தது அவரது ஆங்கிலம்.
நேற்று இரு
தரப்பிலிருந்தும் ஒருவருக்கு பரிசு வழங்கினார்கள்.
ஆனால், பரிசுக்கு உரியவர்கள், இந்தமாதிரி நிகழ்ச்சியையும் இரண்டுமணிநேரம்
பார்க்கும் மன உறுதி மிக்க தமிழர்களே!
Image Courtesy: Google.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக