சென்று வா என் தோழனே!
என்றேனும் நீ என்னை நினைத்ததுண்டா?
நான் உன்னை மறக்க நினைக்கையில் எல்லாம் உன்னை நினைக்க மறந்ததில்லை.
நாம் கடைசியாய்க் கை பற்றி நின்ற நாளின் உன் கைகளின் இளஞ்சூடும், புயலடித்த சென்னைக் கடற்கரை முன்னிரவில் நாம் களித்த பெருமழையின் கடுங்குளிரும் உன்னை எனக்கு நியாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்!
நம் உறவும் அப்படித்தானே! சூடும் குளிருமாக!!
உன்னிடம் நான் பெற்றது மிக அதிகம்! கொடுத்தது ஏதுமில்லை- மீளாத்துயர் தவிர!
பால்யம் முதல் இன்றுவரை, உன்னை நான் மறந்ததில்லை!
மறப்பேனோ என்றா, நீ உயிராய் நினைத்த ஒன்றை எனக்கே என்று தந்துபோனாய்!!
உன்னால் பெரிதும் நேசிக்கப்பட்ட உன் மகள் பாப்புவை எனக்கே எனக்கென்று தாரை வார்த்துக்கொடுத்த நாளில் நீ நினைத்ததுண்டா நமக்குள் இப்படி பிளவு வரும் என்று?
நமக்கிடையேயான இடைவெளியை யார்யாரோ ஆழப்படுத்திவிட்டார்கள் என்பதைவிட, அந்தப் பள்ளம் தோண்டிய முதல் மண்வெட்டி என்னுடையதும்தானே!
இன்று ஒளிரும் தீபத்தில் ஏதோ ஒரு ஒற்றை தீபம் போனவருடம் உனைப் பிரிந்த உன் இணைதீபமாய் இருக்கக்கூடும்!!
உன் தெய்வாவைத்தேடி தெய்வத்திடம் போனாயோ நீ!
நான் எப்போதும் எனக்கு நேரவேண்டுமென்று யாசிப்பதுபோல், உறங்குவதுபோல் உன்னை அணைத்திருக்கிறது மரணம்!
உனக்கும் எனக்கும் அப்படி ஓர்
ஒற்றுமை.
நான் உன்போல் இருப்பதாகச் சொன்னவர்களை நான் சினந்ததுண்டு. ஆனால்
என் மகன் உன்னைப்போல் இருப்பதாக நானே உணர்கிறேன்.
என் தகப்பனோடு நட்பாய் இருந்தவன் நீ. என் வயதுக்கு மீறிய சிநேகிதனாய்
எனக்கும் வாய்த்தவன் நீ. ஏனோ, என் மகனுக்கு உன் தோழமை
வாய்க்கவில்லை.
கடைசி முறையாய் ஒரு கள்ளக்காதலி போல் உன்னை உன் கிளினிக்கில்
சந்தித்தபோது, என் விரல் கோர்த்துக்கொண்டு நீ பேசியதெல்லாம் இன்னும் என்
நினைவில்.
உன் மீளா உறக்க முகம் ஓர் கணமாவது காண ஆவல்!!
வேண்டாம்!!
உன் இந்த உறக்கமாவது என் தொல்லையின்றி நிம்மதியாய் முடியட்டும்!!
உன்னை என் தாய் மாமனாய், மாமனாராய் செய்தது விதி.
ஆயின் நீ
இன்றுவரை என் ஸ்நேகிதன்.
என்றாவது கண்டிப்பாய் மீண்டும் சந்திப்போம்!
விட்ட இடத்திலிருந்து நம் அன்பைத் தொடருவோம்!
அதுவரை, அமைதியோடு,
போய்வா என் தோழனே!!!
என்றாவது கண்டிப்பாய் மீண்டும் சந்திப்போம்!
விட்ட இடத்திலிருந்து நம் அன்பைத் தொடருவோம்!
அதுவரை, அமைதியோடு,
போய்வா என் தோழனே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக