சனி, 31 ஜனவரி, 2015

உளறல் மொழி


ஒரு விருந்தாளியைப்போல் வந்துவிட்டு
சொல்லாமலே போய்விட்டது பனிக்காலம்! 
உரிமைக்காரனாய் உறுத்துப்பார்க்கிறது
வெயில்!


காதல் பற்றி கவியெழுத
உன்பெயரைத் தலைப்பிட்டேன்.
அதனின் சிறந்தவரி அகப்படாது,
தலைப்பே கவிதையாச்சு.


இருள் அடர்வனத்தில்
ஒற்றை ஒளிக்கீற்று,
உன் கூந்தலின்
நடுவகிடு!


சட்டென்று வீசிய காற்றில்
தீ விசிறிப் போனது உன் சேலை.


வார்த்தை இல்லாக் கவிதை ஒன்றை
வாசித்தது என் விழி.

பார்வைகளின் உரசலில்
பற்றி எரிந்தது தேகம்.

அடித்துப் பெய்த மழையில்
நனைந்தது உடை,
உலர்ந்தது உயிர்.உன் கூந்தல் வனத்தில் சிக்கிக்கொண்டு,
வெளியேற மனமின்றி,
வழி தேடுவதாய் பொய்யாய்
அலைகின்றன விரல்கள்!


அறியாமல் படர்ந்தது
உன் நிழல்.
வெந்து தணிந்தது
என் தேகம்.


ஓரவிழியால் உறுதிப்படுத்திக்கொண்டுதானே நகர்ந்தாய். 
பிறகேனடி தொலைத்ததாய்ச் சொன்னாய்
என் மடியில் விழுந்த
உன் கூந்தல் பூச்சரத்தை!வீசிப்போன உன் புன்னகைக்குப்
பொருள் எழுதிக்கொண்டிருந்தேன்
விடியும்வரை.ஜன்னலில் எட்டிப்பார்த்து
வெட்கத்தில் சிவந்தது
நிலவு.


எல்லா வளைவுகளிலும்
நேர்த்தியாய்ப் பயணிக்கிறாய்
என்றான் பின்னிருக்கை நண்பன்.
ஏனோ வெட்கத்தில் சிவந்தது
உன் முகம்.போதும் என்றதன் அர்த்தம்
புரியாததுபோல் நகர்ந்தேன்.
எட்டி வளைத்தது உன் கரம்!

கண்ணீர்த் துளி பிடித்துக்
கண்ணிலிருந்து இறங்கிப்
போய்விடுவாயோ என்றுதான்
அழுகையை விழுங்கிக் கொண்டிருக்கிறேன்


என் பெயரையாவது உன் மகனுக்கு 
வைத்திருக்கலாமே என்று கேட்டேன்,
காதலும் காமமும் அற்று அதை 
எப்படிஅழைப்பதென்று திருப்பிக்கேட்டாய்.

எதிர்பாரா நெருக்கத்தில்
தீயாய்த் தகித்தது
பனித்துளி.


எங்காவது ஓடி ஒளிந்துகொள்ளலாம் என்றால்,
இந்த ஒற்றை நிலா என்னை உறுத்துப் பார்க்கிறது!!


கண்ணீரைத்தான் தரப்போகிறாய் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், காத்திருப்பாவது மிச்சமாகியிருக்குமே!


பாதம் ஓட்டும் 
ஈர மணலாய் 
உன் நினைவு.


கண்ணுக்கு மை தீட்டாதே, 
கறுத்துப்போய்விடுவேன்!பேசிக்கொண்டிருக்கும்போதே
யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்கிறாய். 
எனக்கு வழக்கம்போல் தாமதமாகத்தான் புரிகிறது!


இருக்க இடம் கொடுத்தால், 
இறுக்க இடம் பார்க்கிறாய்!


இமைத்திரையில் எத்தனை சுவாரஸ்யமான 
படங்களை ஓட்டிக்காட்டுது கனவு!


உன்னையும் என்னையும் பார்க்காமல், 
தேய்ந்து மருகுது நிலவு.
புன்னகை வீசி
தூக்கம் திருடிப்போனாய்

நீரூற்ற நீ இன்றி 
நலம் கேட்க நான் இன்றி
அழுது தவிக்கின்றார் 
ஆற்றங்கரைப் பிள்ளையார்!யாருமற்ற பயணங்களில் 
ஒளிவிரல் தலைகோத
கூடவே வருகிறது 
ஜன்னல் நிலா!


அடுத்த நொடி நிச்சயமில்லை என்பதை 
யாரும் உணர்வதே இல்லை
ஓலை வரும்வரை!!


தகிக்கும் பனியும் நீ
உறையும் நெருப்பும் நீ!!


ஆமோதிக்க மனமில்லையெனில் 
அமைதி காத்துவிடு! 
மறுதலித்து மரணிக்கவைக்காதேஎன் கண்ணியச் சுவர் உடைக்கும் 
உன் ஆடை அசைக்கும் பூங்காற்று!


நலமா என்ற ஒற்றைக் குறுஞ்செய்தி 
முள்ளை விதைக்குது விழியில்!


உனக்கென்ன ஒற்றைப் பார்வையை 
வீசிப்போய்விட்டாய்- 
பற்றி எரியுது என் படுக்கை!


உறைய வந்தவன் 
உறைந்துபோனேன்!


விழியில் தெறிப்பது 
பனித்துளியா
தீச்சரமா?

ஒற்றை விழிவீச்சில் 
உயிர் அறுக்கும் கொலைகாரி நீ!வீசிப்போன புன்னகையில் 
பற்றிப் படர்ந்திருக்கும் 
உயிர்க் கொடி!

ஆழ்ந்துறங்கும் நேரம்
முன்நெற்றி முத்தத்தில் ஊழித்தீ!

ஒற்றைத்துளி போதும் 
என் உயிர்த்தீ அணைக்க- 
உன் விழியோரம்!


விழிப்பில் நினைவுகள்
உறக்கத்தில் கனவுகள்
உனக்கென்று வேறு வேலைகளே இல்லையா
வதம் செய்தல் தவிர?உன்னில் ஒளிந்துகொள்வதாய்ப்போன உயிர் 
எங்கே ஒழிந்ததோ.


காதல் வழியும் காமம் 
கசப்பதே இல்லை! 
காதலில்லாக் காமம் 
சகிப்பதே இல்லை!!


பணம் தேட ஆரம்பித்த பருவத்திலிருந்து
அழுகிப்போய், பிணவாடை வீசுது வாழ்க்கை!


என் பெருமூச்சில் உலர்ந்தது 
உன் ஈரச்சேலை!

மைக்கரை உடைத்து வழியுது காதல்- 
கண்ணீராய்!


நீயில்லாது இருந்துவிட முடியும்!- 
வாழத்தான் ......

என்றாவது சந்திப்போம் என்றும்
சந்திக்கவே கூடாது என்றும் 
மாறிமாறித் துடிக்கிறது இதயம்!
மறத்துவிடத்தான் நினைக்கிறேன்- 
இந்த பாழாய்ப்போன மாடிப்படி வளைவுதான்....


நிலவில்லா இரவுகளில் 
கவனம் ஈர்க்கின்றன நட்சத்திரங்கள்!


எதை வேண்டுமானாலும் 
தவணை முறையில் 
தரட்டும் வாழ்க்கை - 
மரணத்தைத் தவிர!கூடலின் நினைவாய்க் 
குளிர்ச்சியை விட்டு
வந்ததுபோலவே மாயமானது- 
பூவிதழ் பனித்துளி!

நீ நனைந்த குளம் குதித்து 
மோகம் தணிக்குது நிலவு!

மேகம் மறைக்காத நிலவு! 
ஒப்பனையற்ற உன் முகம்!!

இடுப்பு வளைவில் ஏறி அமர்ந்து 
இறங்க மறுக்குது மனம். 
தளும்பித் தவிக்குது குடம்!காற்றில் வாசத்தையும் 
பார்வையில் நேசத்தையும் 
அனுப்பிவிட்டு, வேஷத்தை 
வார்த்தையில் வைக்கிறாய்.

அள்ளிமுடிந்த கூந்தல் வனத்தில் 
தொலைந்துபோனது என் மனது.

நதிக்கரை நாணலாய் சிலிர்க்கும் மனது
உன் மேனிதொட்ட காற்றின் வருடலில்!

விழியெட்டும் தூரத்தில் நீ
மார்கழிக் காற்றில் அனல்.

விரல்களைவிட
விழிகளின் வருடல் தகிக்கிறது!


அங்கெல்லாம் தொடாதே என்று, 
கை கொண்டு மூடினாள்- 
என் கண்களை!


பார்வைகளில் புரியாத காதலா 
வார்த்தையில் விளங்கிவிடப்போகிறது?


மார்கழி விடியலில் ஓடும் நீரில் கால் நனைய
உச்சியில் குளிர் சொடுக்கும் - 
ஏதோ ஓர் சலனம் தந்துசென்ற உன் நினைவைப்போல!


ஒற்றையடி வரப்பு 
எதிரெதிரே நாம் 
வழிவிட விலகிவிடுவாயோ என்று 
தவிக்கும் நம் மனங்கள்!கூடல் சுகம் அறியாமல் 
சூழ் கொள்ளும் தாவரங்கள்!

பிரிவில் தணல் மூட்டும் 
நிலவின் உக்கிர வெம்மை 
உச்சிவேளைச் சூரியனுக்கும் 
இருப்பதில்லை!