சனி, 3 ஜனவரி, 2015

உறவுக்கு ஒரு பூச்செண்டு!


யாதுமாகி நின்றாய்.எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரிவதில்லை என் ஒவ்வொரு பதிவையும்.

சரி, என் இன்றைய என் காலைப்பதிவோடு ஆரம்பிப்போம்.

நாளை என் மனைவியின் பிறந்தநாள்! 
பெண்களின்மேல் மரியாதையும் பரிதாபமும் பிறக்கக் காரணி! செல்லம்மாளுக்கு ஞானக்கிறுக்கன்! 
இவளுக்கோ வெறும் கிறுக்கன்.

எப்படி இது நிகழ்ந்ததென்றே தெரியாத ஒரு கணத்தில்தான் அது நிகழ்ந்தது.
என் மீதான என் மாமன் மகளின் வெறித்தனமான காதல்!
அது எனக்கு ஒரு ஆச்சர்யமே இன்றுவரை!!
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடித்திரிந்த பால்யத்தில் ஏதோ ஒன்று காரணமாய் இருந்திருக்கலாம்! 

ஒரு நல்ல கணவனுக்கான எல்லாத்தகுதிகளும் கொண்ட ஒரு டாக்டர் மாப்பிள்ளையின் காதலை மூர்க்கமாக மறுத்து என்னைக் கரம் பிடித்தது பெண்மையின் வழமையான முட்டாள்த்தனம். அதுவும்தன் தகப்பனே ஒரு மருத்துவராக இருக்கையில்!

நண்பன் சொன்னதுபோல், ரொம்ப நல்லவனைவிட, கொஞ்சம் முரடனையே பெண்களுக்குப் பிடிக்கும் என்பது காரணமோ?

அவளைக் காதலித்த என் இருபத்தைந்து ஆண்டுகால நண்பனுக்கு ஆதரவாய் நான் செய்த குளறுபடிகளையும் உறுதியாய் மீறிப் பிடிவாதமாய் நின்றது இன்றும் கொஞ்சம் குருட்டுத்தனமாய்த் தோன்றினாலும்,
குறையொன்றும் இல்லாத அன்பு, வரம்.

என் எல்லாக் கோமாளித்தனங்களையும் சகித்துக்கொண்டு,
நாளும் மாறும் என் சித்தன்போக்கு மனநிலைக்கு வளைந்து கொடுத்து வெள்ளிவிழா வரை ஓட்டிவிட்ட சாமர்த்தியத்துக்கு ஒரு வணக்கம்.

கூடா நட்புகள் கேடாய் முடிந்து எல்லாவற்றையும் மொத்தமாய் இழந்தபோதும், தளராது துணை நின்ற முகம் சுளிக்காத அன்புக்கு இன்னொரு வணக்கம்.

அன்பைத் திரட்டிச் செய்ததுபோல் இரண்டு உயிர்களைப் பெற்றுத் தந்ததற்கு இன்னொன்று.

இத்தனை அன்புக்கும் பிரதியாய் என்ன செய்யலாம்?

அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால், நான் மனைவியாயும், அவள் என் கணவனாகவும் பிறந்து இதே வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்.

ஆனால், நான் அவள் இடத்தில் இருந்தால், என்றைக்கோ போடா வெண்ணெய் என்று தூக்கி அடித்துவிட்டுப் போயிருப்பேன்.

அதனால், அடுத்த ஜென்மத்திலாவது அவளே திருந்திஎன்னிலும் சிறந்தவனைக்  கரம் பிடிக்கட்டும்.

நிச்சயம் she deserves a far better husband!


இன்னொரு நூறாண்டு என்னோடு வாழ்ந்து திருந்த வாழ்த்துக்களும் அன்பும்!.

கருத்துகள் இல்லை: