செவ்வாய், 20 ஜனவரி, 2015

நாணல் சட்டங்களும் ஊடக வியாபாரமும்!


இன்றைய காலை நாளிதழ் - தி ஹிந்து தமிழ் - ஒரு மகத்தான ஆராய்ச்சி செய்திருக்கிறது.

ஜெ, ஜெட்லி சந்திப்பில் தவறே இல்லை என்று நிறுவ கடும் முயற்சியின் ஒரு பகுதியாக சட்ட நிபுணர்களின் கருத்து என்று ஒரு சப்பைக்கட்டு.

நிச்சயம் அந்த so called நிபுணர்கள் ஜெ வழக்கை படித்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் மேல் முறையீட்டிற்காக கடும் நிபந்தனைகளுடன் பிணையத்தில் வெளியே வந்திருக்கிறார்.
அப்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தலையாயது அவர் யாரையும் சந்திக்கக் கூடாது என்பது.

இந்த நிபுணர்கள் வாதம் - பிணையில் வந்தவர் நிரபராதி என்றே கருதப்பட வேண்டும் என்பது.எவ்வளவு அபத்தம்?

சட்டம் தெரியாதவர்கள் கூற்றல்ல இது. மேதைகள் என்று அந்தப் பத்திரிகை சுட்டுபவர்கள் கருத்து.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்பவரை, நிரபராதி என்று கூற முடியாது. தீர்ப்பை நிறுத்திவைத்திருக்கும் நிலையில் அவர் பிணையில் வந்த கைதியே. தீர்ப்பு ரத்து செய்யப்படும்வரை அந்த நிலையே தொடரும்.

இப்பொழுதும், நிபந்தனைகளில் ஒன்றை மீறினாலும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்பது எல்லா நிபந்தனைக் கைதிகளுக்கும் பொருந்தும்.

நிரபராதிக்கு எதற்கு நிபந்தனைகள்?

மக்களை முட்டாளாக்கும் முயற்சி இது.

நண்பர்கள் என்ற முறையிலும், கட்சித்தலைவர்கள் என்ற முறையிலும் நடந்த சந்திப்பு இது என்பது அடுத்த வாதம்.

சட்டப்படி, அதன் இடுக்கில் வரும் சுண்டெலிகளுக்கு இந்த வாதம் சரியே.
ஆனால் சந்தித்தது அவர்கள் கூற்றுப்படியே, இரண்டு 'தலைவர்கள்".
அதில் ஒருவர் "மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர்".

அந்த மாண்பு குறித்ததுதான் கேள்வியே! 

மாண்புகளை மதிக்காதவர் மக்களின் முதல்வர் என்பது பழைய, பழகிய செய்தி.
ஆனால், மத்திய சட்டத்துறை அமைச்சர், தன மாண்பை விடுத்து, ஒரு பிணையத்தில் வந்த குற்றவாளியை சந்திப்பது தர்மத்திற்கு உட்பட்டதா?

சட்டப்படி குற்றமாகாத சில விஷயங்கள் தார்மீக நியாயப்படி குற்றமே.

தன கட்சிக்கு ஆதரவு கோர பாஜகவில் வேறு தலைவர்களே இல்லையா?

இந்த சந்திப்பு நீதித்துறைக்கு ஒரு தேவையற்ற அழுத்தம் தராதா?

உடனே நீதித்துறையின் நேர்மையை சந்தேகிப்பதா என்று ஆரம்பிக்கவேண்டாம். 

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம்.

நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுப்பது நம் நாட்டில் நடைமுறையில் இல்லையா?

இந்த சந்திப்பு, தவறான உதாரணம் ஆகாதா?

ஏற்கனவே, நீதிமன்றத்தை அரசு வழக்கறிஞர் கேலிக்கூத்தாக்கிக்கொண்டிருக்கும் நிலையில் இது வேறு.

அதே பத்திரிக்கையின் உள்பக்க மூலையில் ஒரு செய்தி, முக்கியத்துவம் இல்லாமல்.

கருணாநிதியின் கேள்விகள்.

பதினோரு ஆண்டுகள் வருமான வரித்துறை வழக்கை இழுத்த ஜெ, ஒருமுறைகூட, துறைவாயிலாக பிரச்னையைத் தீர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லாதவர், பாஜக அரசில், அருண் ஜெட்லி, அந்தத்துறை அமைச்சர் ஆனபின் அவரை சந்தித்தவுடன், சமாதான ஏற்பாட்டுக்கு வருகிறார், மாண்புமிகு ஜெட்லி கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறை அதை ஏற்கிறது.

தண்டனை உறுதி என்ற நிலையில், அபராதம் கட்ட ஒப்புக்கொண்டால் எல்லோருக்கும் இந்த ஒப்புதல் கிடைக்குமா, சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்பது மாயைதானா என்ற கருணாநிதியின் கேள்வி நியாயமானதல்லவா?

இப்போது சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் இருக்கையில், சட்டத்துறை அமைச்சர் அவரை வலிந்து சந்திப்பது யூகங்களுக்கு வழி வகுக்காதா என்று கருணாநிதி கேட்பது தவறா?

இந்திராகாந்தி காலத்திலிருந்து சட்டம் பல அடக்குமுறைகளை மீறி சுவாசித்துவருகிறது.

அதன் குரல்வளையை நசுக்க பாஜக முயல்கிறது.

இதை, எந்தக் காரணம் பற்றியோ, நம் மரியாதைக்குரிய பத்திரிக்கைகள் நியாயப்படுத்துகின்றன.

இது எந்த விதத்திலும் நம் இறையாண்மைக்கு நல்லதல்ல.

தமிழின் இன்னொரு பெருமைக்குரிய நாளிதழ் தினமணி, இதை ஒரு செய்தியாகவே கருதவில்லை என்பது உச்சகட்ட வேதனை.

கருணாநிதியின் நியாயமான கேள்விகள் புறக்கணிக்கப்படுவதும், பத்திரிகைகளின் ஒட்டுமொத்த ஜெ சார்பு நிலையும் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!

இந்தப் போக்கு, அவர்களின் நோக்கத்துக்கு மாறாக, நடுநிலைவாதிகளையும், கலைஞரைநோக்கி நகர்த்திச்செல்லும்.

மக்கள் விழிக்கத் தாமதமாகலாம் 
ஆனால் விழிக்கத்தவறியதில்லை.

இதை நம்மைவிட, இந்த ஊடக வியாபாரிகள் நன்கறிவார்கள்.

இப்போது ஏதோ, மறதியிலோ, நிர்ப்பந்தத்திலோ தடுமாறுகிறார்கள் பாவம்.


வரலாறு இவர்களின் பிழையை மன்னிக்காது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக