செவ்வாய், 20 ஜனவரி, 2015

உயிரின் வலி!


ரவிக்குத் தவிப்பாக இருந்தது. 

காலையிலிருந்து மகளின் கையைப் பிடித்தவாறே உட்கார்ந்திருந்தான். இடையில் தன்னை மீறிவந்த உறக்கத்திலும், மகள் வலி, வலி என்று அரற்றுவது நெஞ்சைப் பிசைவது போல் இருந்தது
.
மருமகனை நினைக்கும்போதெல்லாம் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, மகளோ மனைவியோ பார்க்காதபோது கசியும் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் இப்படித் துணியாய்த் துவண்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும் மகளின் கோலம் சகிக்கமுடியாததாக இருந்தது.

போதாத குறைக்கு அந்த டாக்டரம்மா வேறு அவனைத் தனியாக அழைத்து மட்டைக்கு இரண்டு கீற்றாய்ச் சொல்லிவிட்டார்.

இன்னும் எட்டு மணி நேரம் கடந்தால்தான் எதையும் சொல்லமுடியும். வீணாக மனதை அலட்டிக்கொள்ளவேண்டாம். பிறப்பையும் இறப்பையும் மேலிருப்பவன் தீர்மானிக்கிறான்.

ரவிக்கு மகள் என்றால் உயிர். 
சின்னதாய் ஒரு முள் குத்தினால்கூடத் துடித்துப்போய்விடுவான்.

அப்படி செல்லமாய் வளர்த்த மகள் இப்படித் தவிக்கும்போது பெற்ற மனம் துடித்துப் புலம்பியது.

தெரிந்த குடும்பம், நல்ல மரியாதையான பையன், உள்ளூரிலேயே வேலை என்று ஆயிரம்முறை அலசித்தான் பெண்ணையே கொடுத்தான்.

நேற்று வரை நன்றாகத்தான் இருந்தாள். 

நேற்று மாலை வாக்கிங் போய்விட்டு நேராய் அவள் வீட்டுக்குத்தான் போய் காபி வாங்கிக் குடித்துவிட்டு, ஒருமணி நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தான்.

காலை ஏழு மணிக்கு மருமகனிடமிருந்து போன்.

நிலாவுக்கு உடம்பு சரியில்லை. பக்கத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது. உடனே நீங்களும் அத்தையும் புறப்பட்டு வாருங்கள்.

கையில் எடுத்த காபி டம்ளரை அப்படியே வைத்துவிட்டு பதறித்துடித்து வந்தவன், இப்போது மணி நான்கு. இன்னும் ஒரு சொட்டு தண்ணீர் குடிக்கவில்லை. 
மகள் படுக்கையை விட்டு எழவில்லை.

இவர்கள் வரக் காத்திருந்தாற்போல் மாமா, இன்றைக்கு எனக்குத் தவிர்க்கமுடியாத ஒரு மீட்டிங். எப்படியும் இரவாகிவிடும். ஏதாவது என்றால் உடனே கூப்பிடுங்கள் என்று போய்விட்டான் பாவி.

இந்த டாக்டரம்மா வைத்த எட்டுமணி கெடு முடிய இன்னும் இரண்டு மணி நேரம்.

நூறு முறை மனைவியை விரட்டியிருப்பார், போய் டாக்டரை அழைத்துவரும்படி.

வந்து பார்த்த மருத்துவரிடம் கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. இப்படித் துடிக்கிறாளே என்று புலம்ப,

நாலஞ்சு வருஷம் ஆனபின்னால் இப்படி ஆகியிருந்தால் பரவாயில்லையாஎன்று கேட்கிறாள் ராட்சஷி.

அவளுக்கென்ன, ஆயிரம் பேஷன்ட்டில் ஒருத்தி. என்று மனைவியிடம் புலம்பித் தீர்த்தான்.

கடைசியாக இப்போது வந்த டாக்டரிடம், “ஏதாவது செய்யுங்களேன் என்று குழைந்தபோது, கண்ணீரை அடக்கமுடியாமல் கலங்கிவிட்டான் ரவி.

ஒரு நிமிடம் அவனை உற்றுப்பார்த்த டாக்டர், நர்ஸைக் கூப்பிட்டு தியேட்டரை ரெடி பண்ணச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பயம் வயிற்றில் பட்டாம்பூச்சியாய் படபடக்க, “முருகா, முருகா என்று அரற்றிக்கொண்டே மகள் ஸ்ட்ரெட்சரில் கண் மறையும்வரை பார்த்துகொண்டு நின்றவன், தளர்ந்துபோய் உட்கார்ந்தான்.

ரவியின் மனைவிதான் உடனே, மருமகனுக்கும் போன் செய்ய, அவன் வந்து சேர்ந்தபோது அவன் முகத்தைக் கூட நிமிர்ந்துபார்க்கப் பிடிக்காமல் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்தவாறே ஆபரேஷன் தியேட்டர் கதவையே வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் ரவி.

திடீரென்று மகளின் உச்சஸ்தாயி அலறல் நெஞ்சைப் பிளக்க, கதவைத் திறந்து ஓடிவந்த நர்ஸ் சொன்னாள்,
நீங்க தாத்தா ஆய்ட்டீங்க”, 
சுகப் பிரசவம்!”
பேத்தி!!

சந்தோஷத்தில் மருமகனைக் கட்டிப் பிடித்துக் குழந்தைபோல் அழ ஆரம்பித்தான் ரவி.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக