புதன், 21 ஜனவரி, 2015

சூரியனைத் தொழுவோம்
தேனிப்பக்கம், வறுமையைத்தவிர வேறு எதுவும் எட்டிப்பார்க்காத ஒரு ஒதுக்குப்புறம் பண்ணைப்புரம்!

அங்கே, எந்த நட்சத்திரமும் வழிகாட்டாத குடிசைக்குள் ஒரு தேவன் பிறந்தான் - எங்கள் ராகதேவன்!
இப்படிச் சொல்வதுகூடத் தவறுதான். இசை, மானிட உருவில் அவதரித்தது.

இது கொஞ்சம் - ஆனால் கொஞ்சமே கொஞ்சம் மிகைதான். 
ஆனால் நிச்சயம் இந்தப் பாராட்டுக்கு தகுந்தவன்தான்  - என்றும் 
இளைய - ராஜா.

பக்கத்து ஊர்க்காரனுக்குக்கூடத் தெரியாத பண்ணைப்புரத்தை உலகறிய வைத்தவன் ராசையா!

இசைக் குடும்பத்தில் பிறந்து, இசையை அருந்தி வளரும் ஆசிர்வதிக்கப்பட்ட ஆரம்பம் அமையப்பெறாதவன்.

அந்தப் பிறப்பையும், வளர்ந்த சூழலையும் இன்றைய சாதனையையும் இணைத்துப் பார்க்கையில்தான் இளையராஜாவின் உயரம் புரியும்.


எதுவும் சுலபத்தில் கிட்டாத சூழலில், திசை மாறிப் போகாமல், இசைமாரி பெய்த மேகம் ராஜா1975 - தமிழ் சினிமா செய்த தவம், பஞ்சு அருணாச்சலம் கைபிடித்து வந்ததொரு வரம்.

அதன்பிறகு, அந்தக் கறுப்புச் சூரியன் நின்ற திசைதான் 
இசைக்குக் கிழக்கு.

அதிகபட்சம் நாட்டுப்புறப்பாட்டு மட்டுமே கேட்டுவளரும் சூழல் அமைந்த ஒரு சிறிய கறுத்த உருவம், வெஸ்டர்ன் கிளாசிக் முதல், கர்னாடக இசைவரை புலிப்பாய்ச்சல் பாய்ந்ததை இசை உலகம் மிரண்டுபார்த்தது!ஒரு சிறிய புள்ளி விபரம்! 

1983 முதல், 1992 வரையான பத்தாண்டுகளில் இளையராஜா இசையமைத்தது 455 படங்கள். 

அதிலும், 1984 மற்றும் 1992ல் தலா 54 படங்கள்.

சராசரி 270 பாடல்கள் ஒரு வருடத்தில். அதில் குறைந்தபட்சம் 250 பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.

சராசரி 162 மணிநேர திரை இசைக்கோவை ஒரு வருடத்தில்

நாடி நரம்பெல்லாம் இசை வழிந்து ஓடினால் மட்டுமே இந்த அசுர சாதனை சாத்தியம்.

இளையராஜாவைக் கீறிப் பார்த்தால், இசைக் குறிப்புகள்தான் ரத்தத்துக்குப் பதிலாக வழியும்.


வெறும் பாடல்களால் மட்டுமே ஓடிய படங்களின் எண்ணிக்கை இளையராஜா இசையில்தான் மிக அதிகம்.

பின்னணி இசைக்கோர்ப்பின் மந்திரஜாலம் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிலிர்த்தவர்களுக்குப் புரியும்.

பல படங்களின் 90%  உணர்ச்சிகளை இவரது இசை சொல்லும். 
மீதிதான் இயக்குனர், நடிகர் உட்பட அனைவரும் சொன்னது.

முதல் மரியாதை இதற்கு ஒருசோறு பதம்.திரை உலகில் எத்தனைபேர் அரிசியில் "இளையராஜா வழியாக" என்று ஆண்டவன் எழுதி அனுப்பினான் என்பதையோ,

எத்தனை குப்பைக் காகிதங்கள் இந்த சூறைக்காற்றில் கோபுரம் ஏறியது என்பதையோ,

இந்த வெள்ளந்தி மனிதனை உபயோகப்படுத்தி உயரம் தொட்டுப்பின் ரணப்படுத்திய பெரிய மனிதர்கள் யாவர் என்பதையோ,

இவரின் ஞானச் செருக்கை ஜீரணிக்க முடியாமல், திட்டமிட்டு நடந்த நாடகங்கள் என்ன என்பதையோ,

இப்போது நான் எழுதப் போவதில்லை.- 
ஏற்கனவே என் இரு பதிவுகளில் சொன்னவை அவை.

ஆனால்,

திரை இசை என்னும் குடுவைக்குள்ளிருந்து இந்த சமுத்திரத்தை விடுதலை செய்த நல்லகாரியம் செய்தவர்கள் அந்தப் புண்ணியவான்கள்.How to name it ல் ஆரம்பித்து, பொங்கிப் பிரவகித்தது அந்தக் கடல்!

திருவாசகம் கேட்டு உலகமே உருகியது.

இசைச் சங்கமங்கள் இப்படி ஒரு மேதை இருப்பதை உலகுக்கு ஓங்கி உரைத்தன, வருடும் இசை மொழியில்!

இணையத்தில் பலமுறை நேற்று முளைத்த நாய்க்குடைகளுடன் இந்த ஆலமரம் ஒப்பீடு செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஏதோ ஒரு படத்தில், அவரது குழுவில், ஒரு பாட்டின் இடைவரும் ஜால்ரா வாசித்தவனைக் கொண்டுவந்து, அந்தப் பாடலை அவன்தான் கம்போஸ் செய்தான் என்னும்வரை பேசவும் கேட்டிருக்கிறேன்.

அதில் எதுவும், இந்த இசைச் சூரியனை அழுக்குப் படுத்தாது என்று புரிந்து அமைதியாய்க் கடந்திருக்கிறேன்.

ஆயிரம் திரைப்படங்கள்
அதில் குறைந்தது ஐயாயிரம் பாடல்கள்
அதில் மிகக் குறைந்தபட்சம்  நாலாயிரம் ஹிட் பாடல்கள்.

இவை இளையராஜாவின் சாதனைகள் அல்ல.

நாடோடித்தென்றல் உட்பட பல படங்களின் பாடல்களை எழுதியதும், வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கும் எழுத்துக்களும்
தனி ஆல்பங்களும்
பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்த பக்திப் பாடல்களும் 
சிம்பொனியும் - 
எதுவுமே இவரது சாதனை அல்ல.

ஆயிரம் பாடல்கள் கேட்டாலும், அதில் இளையராஜா பாடல்களை இனம்காணக் கற்ற 
நம் காதுகளும்,

துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் வெற்றி, தோல்வி என எல்லா நிலைகளிலும் இவர் இசைதேடும் 
நம் மனங்களும்,

எந்த நல்ல இசை கேட்டாலும் அது இளையராஜாவே என்று தீர்மானிக்கும் 
நம் புத்தியும்

இந்த ராஜனின் சாதனைகள்!

மூன்று தலைமுறைகள் போற்றுமளவு யாராவது இசையில் இவர்போல் நின்று விட்டு வரட்டும்
அப்போது அவர்களை இவரோடு ஒப்பிட்டுக்கொள்ளுவோம்.

தீபாவளி வாணவேடிக்கைகள் அழகுதான்
ஆனால் அவை சூரியனுக்கு ஒப்பாகாது!

வாண வேடிக்கைகளை ரசிப்போம்,
இந்த இசைச் சூரியனை,

தொழுவோம்!!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக