சனி, 24 ஜனவரி, 2015

கொஞ்சம் பெரிய, கசப்பு மாத்திரை!


ரவி அந்த ஊரைப்பற்றி எப்போதாவது கேள்விப்பட்டதுண்டு.

ஆயின் அங்கு நாமும் போய் வசிப்போம் என்று நினைத்ததில்லை. 
ஒரு தனிமைக் கொடுங்கணத்தில்  ஒருநாள் அங்கு வந்து எட்டிப்பார்த்தான்.

வண்ணமயமான அந்த ஊரின் வசீகரம் புரியாமல், ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவனை, சில அறிமுகமான முகங்கள் வசீகரித்தன

அவர்களின் ஆளுமைகளைப் பார்த்தும், அந்த ஊரின் எளிய நிபந்தனைகளால் ஈர்க்கப்பட்டும், ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு ஒரு தெருவில் காலியாகக் கிடந்த வீட்டில் குடியேறினான்.


அந்த ஊரின் கட்டற்ற சுதந்திரமும், நமக்கான தெருவை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமையும், அவனை, பெருவாரித் தமிழர்கள் இருந்த தெருவில் குடியேற வைத்தது.

ஆரம்ப சுதந்திரத்தில் எல்லாத்தெருவிலும் புகுந்து புறப்பட்டவன், மெதுவாக, தன் எல்லைகளை உணர்ந்து, அதற்குள் சுற்றிவர ஆரம்பித்தான்.,
ஒரு மிகச் சிறு குழுவுக்குள் ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்க, மெதுமெதுவே, அந்தத் தெருவின் பொது அம்சங்களை கவனிக்க ஆரம்பித்தவன், தன் மகளையும் அந்த ஊருக்கு அழைத்துவந்து, அவளுக்குப் பிடித்த தெருவில் குடியேறவிட்டான்.

என்றேனும் இருவரும் சந்திக்க நேர்வதுண்டு.

தூரத்துப் பச்சைதானே கண்ணுக்கு அழகு,
அருகில் வர, அழுக்குகளும் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தன!

வண்ணமயமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்வில், திடீரென்று, சில விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தான்.

அந்தத் தெருவில் ஒரு சின்னப் பிரச்னை, இரண்டு பெரும் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொள்வது.

இத்தனைக்கும், அங்கு யாருக்குமே, தனிப்பட்ட விரோதங்கள் வர வாய்ப்பே இல்லை.

காரணங்கள் மிக அற்பமானவை.

எந்தத் துறையிலும் எனக்குப் பிடித்தவர்தான் உயர்ந்தவர் என்று இரண்டு குழுக்களாகக் கச்சை கட்டிக்கொண்டு சண்டை.

தனக்கு இந்தக் குறுகிய காலத்தில் நெருக்கமானவர்களிடம் கொஞ்சம் கவலையாகவே ரவி கேட்டான்!
ஏன் இப்படி? அவரவர் ரசனை அவரவர்க்கு, இதில் எதற்கு ஒப்பீடு? நீங்கள் கொண்டாடுவது உங்களுக்குப் பெரிதாயிருப்பதுபோல், மற்றவருக்கும் தோன்ற வேண்டியதில்லையே ?”

இது பரவாயில்லை ரவி, உனக்குப் பிடித்தவரை திட்டுவதைவிட, உன்னையும் உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவதுதான் இங்கு வழக்கமாக இருக்கிறது. இதை ஒன்றும் செய்வதற்கில்லை. நீயும் வேடிக்கை பார்ப்பதாயிருந்தால் பார். அல்லது, உன் வீட்டுக்குள் அவர்கள் வராமல் தாளிட்டுக்கொள்!

இது ஒரு விசித்திரமான வாதம்.

உனக்குப் பிடித்தால் பார் இல்லாவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு போ என்பது எலோருக்கும்தானே பொருந்தும்?

உங்கள் ரசனைக்கு நான் ஒத்துப்போகவேண்டும் என்பது என்ன விதமான சுதந்திரம்?

ஒரு பெண்ணுக்கு, ஒரு நடிகனைப் பிடிக்கிறது, அந்த நடிகனை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவள் பிறப்பு முதல், அவள் கணவன் வரை அசிங்கப்படுத்தி விமர்சிக்க எப்படி மனம் வருகிறது
அதற்கான உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?

இங்கு கட்டற்ற சுதந்திரம் இருக்கிறது என்பதற்காய் நீங்கள் செய்யும் இதே செயலை, நிஜவாழ்வில் உங்களால் செய்ய யோசிக்கவாவது முடியுமா

அப்படிச் செய்தால் இப்போதிருக்கும் அதே முகத்தோடு உங்களால் தெருவில் நடமாட முடியுமா?


இந்த ஊர் உங்கள் வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலா?

உங்கள் ரசனைக்காக உங்கள் தாயின், மனைவியின் கற்பு பேசப்படுவதையும் அடுத்தவர் சுதந்திரம் என்று கடக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?”

நண்பர்கள் பதட்டத்துடன் ரவியின் வாயைப் பொத்தினர்.
ரவி, அவர்கள் உன்னையும் தரம் தாழ்ந்து பேசக்கூடும். உன் வயது கருதி அவர்கள் தரும் மரியாதையைத் தொலைத்துக்கொள்ளாதே.

உண்மையான அவர்களின் அக்கறை ரவியை மௌனம் சாதிக்க வைத்தது.

சிலநாள் அமைதியாக இருந்த அவனை, அந்தக் கேள்வி வண்டாய்க் குடைந்துகொண்டே இருந்தது.


இப்படி வாய் மூடி மௌனமாய் இந்த ஊரில் வாழ்ந்து நாம் சாதிக்கப்போவதென்ன?

இது என்ன நம் நிரந்தர வாசஸ்தலமா?

வண்ணங்களில் மயங்கி உள்ளே வந்தவன், எண்ணங்களைச் சொல்லாமல் வேடிக்கை பார்ப்பதைவிட விலகிப் போய்விடுவதே விவேகமல்லவா?

எனவே, தான் நினைப்பதை, தன் வீதியில் சொல்லிவிட நினைத்தான்,

கற்கள் வந்தாலும், பூக்கள் வரினும், புன்னகையோடு ஏற்றுக்கொண்டு, நினைத்ததைச் சொன்ன திருப்தியுடன் தொடர்வது,
அல்லது
அவசியமானால் விலகுவது என்று முடிவெடுத்தான்.

1. உங்கள் ரசனையை நீங்கள் உரக்கச் சொல்லுங்கள். மற்றவர் ரசனை பிடிக்காவிடில், அவர்களை வசை பாடுமுன், அந்த வசவை, உங்களுக்குப் பொருத்திப் பாருங்கள். உங்கள் நிஜவாழ்வில் அந்தச் சொற்களைப் பேசுபவனை, ஊர் என்ன சொல்லும் என்று ஒருகணம் நினையுங்கள்.

2. மரியாதையுடன் ஒதுங்கிப் போவதையும், அருவெறுத்து விலகிப்போவதையும் குழப்பிக்கொண்டு, வென்றதாய் நினைத்து உங்கள் உயரம் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

3. நீங்கள் எப்படி என்று உங்கள் நேசங்கள் அறியவேண்டும் என்பதை நீங்கள் முடிவெடுங்கள்.

4. ஏளனப்படுத்துவதாலும், அசிங்கமாய்ப் பேசுவதாலும் வென்றுவிட்டதாய் உங்களை ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

5. தப்பித் தவறி, உங்கள் அறைக்குள் நுழைய நேரும் உங்கள் தாயையோ, துணையையோ, அதற்காய் கூசி வருந்தவைத்துவிடாதீர்கள்.


அடுத்த விஷயம்,
ஆபாசம்.

நம் பக்தி இலக்கியங்களில் இல்லாத காமத்தை இன்னும் எத்தனை முயன்றாலும் யாராலும் எழுத முடியாது.

காமம் ஒன்றும் தீண்டாப் பொருளும் அல்ல, வாழ்க்கைக்கு வேண்டாப் பொருளும் அல்ல.

காமம் எழுதுவதாய் ஒரு வன்மத்துடன் வலிந்து ஆபாசம் எழுதுவது சிலர் வாடிக்கை ஆகிப்போனது.

அதன் எல்லைகள் அனைவருக்குமே புரியும்
அதை அவரவர் வகுத்துக்கொள்வதன்றி ரவிக்கு அது குறித்து ஏதும் கருத்துக்கள் இல்லை.

எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்று யாரும் கட்டிலைத் தூக்கி வாசலில் போட்டுக்கொள்வதில்லை.

இயற்கை உபாதைகளை, வீட்டுக்குள் தீர்க்க முடியாத கட்டத்தில் தெருவில் சுவர் பார்த்துத் திரும்பிநின்று தீர்த்துக்கொள்வதும், வீதியைப் பார்த்துக் கழித்துச் செல்வதும் அவரவர் பாடு.

முகம் சுளித்துப் போவதும், வேடிக்கை பார்த்து ரசிப்பதும், நடப்பவர் இஷ்டம்!

இதன் எதிர் வினைகள் எப்படி இருப்பினும் சொல்ல நினைத்ததை, சொல்லிவிட்ட திருப்தி ரவிக்கு.

இந்த ஊரில் ரவி இருப்பதும் இல்லாமல் போவதும் கேள்வியே இல்லை.

நீங்கள் இருக்கும் ஊரும் தெருவும் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு முடியாதா என்பதே கேள்வி!!


நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக