நேற்றின் நீழல்!
கூடச் சேர்ந்து சிரித்தது நினைத்தோ,
தேய்ந்து மருகுது நிலவு?
உன்னைத் தேடி
ஊரூராய் அலைகிறது
ஒற்றை நிலா!
இலவு காத்த கிளி,
நிலவு சேர்த்த காதல்!
இன்னும் எப்படி வெட்கம் கெட்டு
என் வானில் வருகிறது நிலா!
எத்தனை
காதலுக்குப்
பொய்சாட்சி
சொல்லியிருக்கும்
அந்த மனசாட்சி
அற்ற
நிலா!
நிலவில்லா வானம்!
நிம்மதியாய் நிமிர,
கண்சிமிட்டும் நட்சத்திரம்
அத்தனையும் காதல் சொல்லும்!
உன் மறுப்பையாவது
எழுதி அனுப்பு.
பிரிக்காமல்
நம்பி சுமந்து திரிகிறேன்
உன் கரம் தொட்ட
காகிதத்தை!
கவலைக் கூர்முனை
உழுது
என்
உயிர்க்காகும் பழுது
அது தவிர்க்க
இன்றேனும்
ஓர் கடிதம்
எழுது.
கனவுக்கு அஞ்சித்
தூங்க மறுத்தால்,
கண்ணுக்குள்
உறுத்துது
காதல்
மரணமும் உன்போல்
கொடியது.
விலகிநின்றே
வேடிக்கை பார்க்கிறது!
ஆமென்பதற்கும்
அன்றென்பதற்கும்
இடையில் துடிக்குது
உயிர்.
என் பெயர்
தாங்கும்
உன் மகனுக்குச்
சொல்,
உயிரில்லாத
உடலொன்று
ஊருக்குள்
அலைகிறது
அவன் பேர் கொண்டு
என்று!
நானறியாது எனைப் பார்க்க நேரும்
கொடுங்கணத்தில் அறியாததுபோல்
கடந்துபோய்விடு. கட்டுவிட்டுக் கதறச் சம்மதமில்லை
இன்னும் ஒரு முறை பலரறிய.
நள்ளிரவு
காதுரசும்
கண்ணீர்த் துளி
யாருக்கும்
கேளாது
உரக்கச் சொல்லும்
உன் பெயரை.
உன் திசையிருந்து
வரும் காற்றில்
என் உயிரின்
வாசம்!
உன்பெயர் சொல்லாத
ஏதோ ஒன்றை
இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறது என் மனம்.
ஓடிப்போய்
அதன்பின் ஒளிந்துகொள்ள!
என்றேனும்
நதிக்கரையில்
என் உடல்
எரிக்கும் தணல் சொல்லும்
உனக்கான என்
நேசம்.
நம் கால் நனைத்த அலையை
பத்திரமாய்
வைத்திருக்குமோ
இந்தக் கடல்?
தலை சாய்த்து
இதழ் சுளித்தால்,
எவர் முகத்தும்
உன் சாயல்!
உன்னைப் பார்க்காமலே
என் காலம் கடந்திருந்தால்,
வண்ணமில்லா வானவில்லாயிருக்குமோ
வாழ்க்கை!
மறந்ததாய்
நினைக்கும்போதெல்லாம்
குத்தும் முள்
எவரோ உச்சரிக்க
என் செவி உரசும்
ஒற்றைச்சொல்லாய்
உன் பெயர்.!
மார்கழிப்பனித்துளியோ,
அடித்துப்
பெய்யும் பெருமழையோ,
வேலியோரப்
பூச்செடியோ,
ஏதோஒன்று
எப்போதும் இருக்கிறது
உன்னை
மறக்கவொட்டாது கொல்வதற்கு.

No comments:
Post a comment