புதன், 7 ஜனவரி, 2015

அவர்கள் அந்தப் பாலத்துக்கு அடியில்தான் காத்திருந்தார்கள்.....


அவர்கள் அந்தப் பாலத்துக்கு அடியில்தான் காத்திருந்தார்கள்.

ராசு, கோவிந்தன் மற்றும் நாலு தீவட்டித் தடியர்கள்.

பண்ணிரண்டு கண்களும், மூக்கு முட்டக் குடித்த விஸ்கியால் தீயைப் போல் சிவந்திருந்தன. அத்தனை பேர் கையிலும் உருட்டுக்கட்டை, மடித்திருந்த லுங்கிக்குள் கத்தி... பக்கத்தில் பெட்ரோல் கேன்!

அரை பாட்டில்  விஸ்கியையும் அப்படியே வாய்க்குள் கவிழ்த்த ராசு, “வக்காளி, இன்னைக்கு அவன் இந்த எடத்தத் தாண்டக்கூடாது என்று சொன்னவன் வெறியோடு, காலி பாட்டிலை தெரு மத்தியில் போட்டு உடைத்தான்.
அந்த நேரம் பார்த்து ஓயாது அடித்தது போன்! 

"த்தா....இவளுக்கு வேற வேலையே இல்லை!" கண்ணைச் சுருக்கிக்கொண்டு போனைப் பார்த்த ராசு, அடித்து ஓய்ந்ததும் போனை அணைத்துப் பாக்கெட்டுக்குள் போட்டான்.

மார்கழி மாதத்து முன்னிருள் நேரம். 
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெருந்துறைக்கு வலதுபுறமாய்த் திரும்பும் சாலை. 
அந்தப்பாலத்துக்கு அடியில் புகுந்து செல்லும் ஏறத்தாழ 500 மீட்டர் தூரத்துக்கு ஒரு ஈ காக்கை கிடையாது. பொதுவாக நல்ல நாட்களிலேயே  அந்த இடம் மனித சஞ்சாரமே இல்லாது கிடக்கும். ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு ஆளரவமே இருக்க வாய்ப்பில்லாத அத்துவானம்.

அவர்களில் யாருக்குமே நிதானம் இல்லை. எல்லோரும் ராசுவால் காசுக்கும் சாராயத்துக்கும் அழைத்துவரப்பட்டவர்கள்.

முகத்திலேயே கெட்ட காரியம் செய்யவே பிறந்தவர்கள் என்று பச்சை குத்தியதுபோல் தோற்றம்.

இந்த வழியாகத்தான் குமார் தினசரி பக்கத்து கிராமத்திலிருந்து பெருந்துறையிலிருக்கும் பைனான்சுக்கு வருவான். 
அந்த ஏரியாவிலேயே இன்னும் கான்டஸா கார் வைத்திருப்பவன் அவன் மட்டும்தான். 
இன்னும் புதுக்கருக்கு கழியாமல் பளபளக்கும் கறுப்புக் கார். தினசரி, காலை அரைமணி துடைக்காமல் வண்டியை எடுக்கமாட்டான்.

குமார், ராசுவுக்கு தூரத்து சொந்தக்காரன். பழகுவதற்கு இனியவன், பைனான்ஸ் தொழிலுக்குத தேவையான கறாரும் கண்டிப்பும் இருந்தாலும், எல்லோருக்கும் நல்லவன் என்று பேர் எடுத்தவன். ராசுவுக்கு பக்கத்து தோட்டத்துக்காரன்.

ராசுவும் அவனும் ஒரே கட்சி.

குடிகாரன், அடாவடிப் பேர்வழி என்று ராசு மீது எல்லோருக்குமே ஒரு கடுப்பு இருந்தாலும், யாரும் அவன் முன்னால் அப்படிப் பேசமுடியாது. முரட்டு முட்டாள். என்னவேண்டுமானாலும் செய்வான் என்பதாலேயே, எல்லோரும் அவனுக்கு பயந்ததுபோல் விலகியே போவார்கள்.

ராசு குடும்பமும், குமார் குடும்பமும் நல்ல அன்போடு பழகினாலும், ராசுவும் குமாரும் பேசிக்கொள்வதில்லை.

காரணம், பொறாமை.

ஊருக்குள்ளும் கட்சியிலும் குமார் வேகமாக வளர்ந்துவருவதும், அதே வேகத்தில் ராசுவின் செல்வாக்கு சரிந்துவருவதும் கண்கூடான காரணம்.
கூட இருந்தவர்கள் வேறு, சாராயத்துக்கு ஆசைப்பட்டு உள்ளுக்குள் குமைந்த தீயை விசிறிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில்தான் உள்கட்சித் தேர்தலை அறிவித்தது கட்சித்தலைமை.
பெருந்துறை வட்டச் செயலாளர் பதவிக்கு குமார் போட்டி போடப்போவதாகத் தெரிந்தபோதே, ராசு நண்பர்கள் மூலம் தூது விட்டான்.
தலைவர் பதவிக்கு வேண்டுமானால் குமார் நிற்கட்டும், செயலாளர் பொறுப்பு தனக்கே கிடைக்கவேண்டும் என்பதில் ராசு உறுதியாக இருந்தான். 
அதற்காக முதலில் சமாதானமாகப் பேச்சு ஆரம்பித்து, படியாத கோபத்தில் மிரட்டல் வரை போனது.

குமார் எதற்கும் அசரவில்லை. மட்டுமல்ல, கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அவனுக்குப் பின்னால் நின்றார்கள்.

இந்த நிலையில்தான் கோவிந்தன் அந்த யோசனையைச் சொன்னான்!

எங்கு போனாலும், மாலை வீட்டுக்குப் போய் ஒரு குளியல் போட்டுவிட்டு, சரியாக எட்டு மணிக்கு பெருந்துறை பைனான்சுக்கு வந்துவிடுவான். ஒன்பது மணிக்கு கணக்கு முடித்துவிட்டு ஒருமணி நேரம் கட்சி ஆபிஸ். பின் வீடு. இதுதான் குமாரின் தினசரி வழக்கம். என்றாவது ஏதும் வாங்கவேண்டியிருந்தால் அவன் மனைவியும் கூட வருவதுண்டு.

இன்றைக்குத்தான் அவர்கள் நாள் குறித்திருந்தார்கள். 
வண்டி அந்த வளைவு திரும்பியதும், நாட்டு வெடிகுண்டை வீசி, அவன் நிலை குலைந்ததும், கையேடு கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி உருத்தெரியாமல் கொளுத்துவது என்று.

பக்கத்து வீட்டு இளைய மகன் மணிகண்டன் பதட்டத்தோடு அண்ணா அண்ணா என்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடிவந்தான்.
ரவி, அப்போதுதான் குளித்துவிட்டுப் பெருந்துறைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான்.

என்னடா, என்ன ஆச்சு, இப்படி ஓடி வர்றே என்று கேட்டபோது,
அண்ணா, அண்ணிக்கு திடீர்ன்னு வலி வந்துருச்சு. அண்ணனும் வீட்டில் இல்லை. எனக்கு பயமா இருக்கு. அப்பா உங்களால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகமுடியுமா ன்னு கேட்டார். அண்ணா இன்னைக்குன்னு பார்த்து போனே எடுக்க மாட்டேங்கறார் ன்னு ஏறத்தாழ அழும் தொனியில் கேட்டான்.

அவன் அண்ணிக்கு இது தலைப் பிரசவம். நிறை மாதம்!

காலேஜ் படிக்கும் பையன் பெண்பிள்ளைபோல் அழுவது பொறுக்கமுடியாமல் சரி என்று தலை ஆட்டிய ரவி,
போய் அண்ணியை வாசலுக்குக் கூட்டிவா, நான் சட்டையை மாட்டிக்கொண்டு வர்றேன் என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் விரைந்தான்.

எதற்கும் இருக்கட்டும் என்று பணம் ஒரு ஐம்பதாயிரம் எடுத்துப் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தவனை, அவன் மனைவி கரம் பிடித்துத் தடுத்தாள்.

ஏங்க, ஒரு நிமிஷம்.! மணிதான் நல்லா கார் ஒட்டுப்வானே, அவனையே கூட்டிக்கிட்டுப் போகச்சொல்லுங்க. இன்னைக்கு இருக்கிற நிலவரத்துக்கு நீங்க கூட்டிக்கிட்டுப் போறது எனக்கு உசிதமாகப் படலை

ஒரு நிமிடம் யோசித்த ரவி, சரி என்று தலையை ஆட்டிவிட்டு,
காரை எடுத்துக் கொண்டுபோய் பக்கத்து வீட்டு வாசலில் நிறுத்தினான்.

மணி, நான் வருவது அவ்வளவு நன்றாக இருக்காது, நீயே அப்பாவையும் கூட்டிக்கிட்டு நேரா KMCH போயிடு. இந்தா, இந்தப் பணத்தை செலவுக்கு வெச்சுக்க என்று கொடுத்துவிட்டு, நகர்ந்தான்.

மணிகண்டன், அவன் அண்ணி, அப்பா மூவரையும் சுமந்துகொண்டு, அந்தக்கார் பெருந்துறைக்கு விரைந்தது.

"அதோபார் ராசு, குமாரோட கார்" ன்னு கோவிந்தன் காட்டியபோது மசமசப்பாகத் தெரிந்தது கறுப்புக் கார்.

அடுத்த நிமிடம், திட்டப்படி எல்லாமே நடக்க, வெறியோடு எரியும் காரைப் பார்த்து சிரித்தான் ராசு.

ஒழிந்தான் பரதேசி நாய்!

ரவிக்குமாருக்கு விஷயம் தெரிய வரும்போது பத்துமணி ஆகியிருந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக