ஏடாகூடக்கதை!
“இந்த சனியன் புடிச்ச H.R அ ரேப் பண்ணப் போறேன் ஒருநாள்”.
தொப்பென்று சீட்டில் வந்து உட்கார்ந்தான் ரவி.
“இதைப் பார்த்தால் கோபம் மாதிரி தெரியலையே ரவி,
ரொம்பநாள் ஆசை போல இருக்கு?”
சீண்டிய ரேவதியை
முறைத்துப் பார்த்த ரவி,
“அதுக்கு நீயே
பெட்டர்!!”
“என்ன ஆச்சு வீட்டுக்குப் போற நேரத்துல?”.
“தினமும் ஒரு டீடைல் கேக்கறாடி. உங்க பாட்டி
என்னைக்கு வயசுக்கு வந்தாங்கன்னு மட்டும்தான் கேக்கல”.
எப்போதுமே
விளையாட்டாய்ப் பேசும் ரவியை எல்லோருக்குமே பிடிக்கும், H.R. ப்ரியாவைத் தவிர.
விடியவிடிய
இழவெடுக்கும் கிளையண்ட் தொல்லைகளில் ரவியின் கோமாளித்தனங்கள்தான் அந்த ஆபிஸுக்கு
ஒரு சின்ன ஒத்தடம்.
ஒருநாள், ப்ரியா, டேட்டா ஷீட் எல்லாம் ஒரு கத்தையா மார்போட
அணைச்சுக்கிட்டு வந்தப்ப ரவி ஒரு நோட்டை எடுத்துகொண்டு அதேமாதிரி எதிர்ல போக,
டக்குன்னு அவள் கையை அனிச்சையாய் விலக்க,
“பாருடி எனக்கு மாத்திரம் காட்டறா” என்று ரேவதியிடம் கிசுகிசுத்ததற்கு அவள் அடக்கமாட்டாமல் சிரிக்க, வந்தது வினை.
அன்றையிலிருந்து,
ரவியை சீண்டிக்கொண்டே இருப்பது அவள்
வேலை.
இது எதிலும் ஒட்டாமல்
உட்கார்ந்திருந்தாள் சாந்தி.
நேற்றிரவு நடந்தது
எதுவுமே தெரியாததுபோல் சிரித்துக் கொண்டிருக்கும் ரவியைப் பார்க்க எரிச்சல்
மண்டியது.
ரவியும் சாந்தியும்
இந்த அலுவலகத்தில் ப்ரோகிராம் அசிஸ்டன்ட் ஆக ஒன்றாகவே சேர்ந்து டீம் லீடரகளாக
பெஞ்சை தேய்த்துக் கொண்டிருப்பவர்கள்.
இருவருக்கும் ஒரே
ரசனை. ஜிம் ரீவ்ஸ் என்றால் சர்ச்சில் பாட்டுப் பாடுபவர் என்று நினைத்திருக்கும்
கும்பலில், Am I that easy to
forget… கேட்டு உருகுபவர்கள்.
நேரம்
கிடைக்கும்போதெல்லாம், சாந்தி வீட்டு சாப்பாட்டுக்கு ஓடிவிடுவான் ரவி.
சாந்தி அம்மாவும் ரவி மேல் பிரியமாகவே இருப்பாள். என்ன செய்து போட்டாலும்
கொறிக்கும் சாந்தியை விட, ரசனையாய் சாப்பிடும் ரவி அவளுக்கும் கொஞ்சம்
உசத்திதான்.
வாரக்கடைசிகளில்
சாந்தி வீடே கதி என்று கிடப்பான் ரவி, மெஸ் சாப்பாட்டிலிருந்து
தப்பித்தால் போதும் என்று அம்மாவின் அறுவைகளை பொறுமையைக் கேட்டுக்கொள்வான்.
அம்மா ரிட்டயர்ட் தமிழ்
டீச்சர்.
எதிலும் ஒரு ஒழுங்கு.
எல்லாமே வைத்த இடத்தில் பத்திரமாக இருக்க வேண்டும். வீட்டில் எதுவும் இடம்
மாறியிருந்தாலே கத்தித் தீர்த்துவிடுவார்.
அப்படியிருக்க,
நேற்றிரவு நடந்ததை அறிந்தால் என்ன
செய்வார்!!
அம்மாவுக்கு சின்ன
விஷயத்துக்கெல்லாம் நாள் கணக்கில் பேசாமல் இருக்கும் பழக்கம் வேறு.
இன்னும் இரண்டு
மாதங்களில் சாந்திக்கு கல்யாணம்.
அமெரிக்க மாப்பிள்ளை.
அது விஷயமாகத்தான் சொந்த
ஊருக்குப் போயிருக்கிறார் அம்மா.
இந்த நேரத்தில் இது.
அம்மா ஊரில் இல்லாது
போகும் நேரத்தில் எல்லாம், ரவிதான்
துணைக்கு வந்து தங்கிக்கொள்வான்.
இது அம்மாவே செய்த ஏற்பாடு.
நேற்றும், “ரவி, நான்
இரண்டு நாள் ஊரில் இல்லை. இன்னைக்கும் நாளைக்கும் நீ இங்கே வந்து தங்கிக்கோ” என்று அம்மாதான் போன் பண்ணி சொன்னாள்.
எப்போதும் இல்லாத
விதமாய், “எனக்கு உடம்பு
சரியில்லை” என்று சுணங்கியவனை, கழுத்தைப் பிடித்து இழுத்துப் போனவள் சாந்திதான்.
அப்போதே,
அவன் உடல் சூடு அவளை என்னவோ
செய்தது.
பேசாமல் அவனை
அப்படியே விட்டிருந்தால் இன்றைக்கு இப்படி உட்கார்ந்து
தவித்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை.
"சனியன், நேற்று இரவு என்ன நடந்தது என்பதே நியாபகம் இல்லாததுபோல்
எப்படி விளையாடிக்கொண்டிருக்கிறான்" என்று ரவி மேல் எரிச்சலாக வந்தது.
"இந்த ஆம்பளைங்களே
சரியான அழுத்தக்காரர்கள், நமக்கு
வருபவன் இப்படி ஈசிகோயிங் டைப் ஆக இருக்கக் கூடாது" என்று கவலையாக இருந்தது.
மண்டையே
வெடித்துவிடும் அழுத்தத்தில் தான் உட்கார்ந்திருப்பது அவளுக்கே வெறுப்பாக
இருந்தது.
“என்ன ஊர் உலகத்தில் இல்லாதது நடந்துவிட்டது
என்று இந்தக் கவலைப் படுகிறாய்?” என்று காலையில் எழுந்தவுடன் ரவி கேட்டபோதே
அவள் சீறினாள்.
“ரவி, உனக்கு அம்மாவைப் பற்றித் தெரியும்தானே, அவங்க எவ்வளவு சென்சிடிவ் ? நீயாவது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே !”
“இதுதாண்டி பொம்பளை புத்தி, நானா உன்கிட்ட கேட்டேன் ? நீதானே
சும்மா படுக்கப் போனவனை கையைப்பிடித்து இழுத்தாய் ?”
உண்மைதான், காரில் ஆபீசில் இருந்து நேற்று கிளம்பும்போதே,
ரவியின் பார்வையில் கிறக்கம் தெரிந்தது.
கார் முழுக்க ஏசியை
மீறி அனல் பரவுவதை உணர்ந்தாள்.
வழக்கம்போல் மியூசிக்
சாப்பாடு என்று நேரம்போனது.
"நான் படுக்கப் போகிறேன் என்னால் முடியல" என்று ரவி
எழுந்தபோது அவள்தான் கையைப்பிடித்து உட்காரவைத்தாள்.
அதன்பிறகு
நடந்ததெல்லாம் அவள் வற்புறுத்தலில்தான்.
இடையில் ரவி, “இதெல்லாம் வேண்டாமே” என்றபோது அவன்
வாயைத்திறக்க விடாமல் செய்தது அவள்தான்.
இப்போது அவனை
முழுதாய்க் குறை சொல்வதும் நியாயம் இல்லைதான்.
இந்த பாழாய்ப்போன ஐ
டி பார்க்கில் ஒரு மெடிக்கல் ஷாப் இருந்துதொலைந்திருந்தால் எவ்வளவு நிம்மதி !
இதை எத்தனை நாள்
மறைக்க முடியும்?
அம்மா கண்டிப்பாகக்
கண்டுபிடித்துவிடுவாள்.
அவள் கேட்டால் என்ன சொல்வது, எப்படி சமாளிப்பது?
கடவுளே எனக்கு எதற்கு
அப்படி புத்தி வேலை செய்தது?
ரவி வேண்டாம் என்றபோதே விட்டிருக்கலாமோ?
அவன் உடம்பின் அனல்
அவளைத் தூண்டிவிட்டது.
இன்றைக்கும் ரவி
அங்குதான் வரப்போகிறான் படுக்கைக்கு.
சுலபமாகச்
சொல்கிறான். “இன்றைக்கு எங்கிருந்தாவது ஒரு மெடிக்கல்
ஷாப்பில் போகும்போதே வாங்கிக்கொண்டு போய்விடலாம்.”
அவளுக்கு அதைக்
கேட்கக் கூச்சமாக இருந்தாலும், பின்விளைவுகளை
எண்ணி அவளுக்கும், வாங்கிக்கொண்டு
போய்விடுவதுதான் சரி என்று பட்டது.
அதில் வெவ்வேறு
பிராண்டுகள் வேறு சொல்கிறான் வெட்கம் கெட்டவன்.
கொஞ்சம்கூட தப்பு
செய்த லஜ்ஜையே இல்லாதவன் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே, கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.
"ரவி, போலாமா,?"
காரில் போகும்போது,
கிசுகிசுப்பாய் சொன்னாள்.
"மெடிக்கல் ஷாப்
போயிட்டுப் போலாம் ரவி".
சத்தமாகச் சிரித்தவன்,
அவள் முகம் சுருங்குவதைப் பார்த்து, "சாரிடா, சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்".
மெடிக்கல் ஷாப்பில்
வண்டியை நிறுத்தியவன்,
"அந்த
பாரின் பிராண்டுதான் வேணுமா,
எதுக்கும்
சேப்டிக்கு ரெண்டா வாங்கிடட்டுமா" என்று கேட்டவன்,
அவள் முறைக்கவும்,
"சரிசரி நீ இரு
நான் போய் வாங்கி வருகிறேன்" என்று இறங்கிப்போனான்.
வந்தவன் எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பினான்.
வீட்டுக்கு வந்து
சாப்பிட்டு முடிக்கும்வரை அதைப்பற்றி எதுவும் பேசவே இல்லை ரவி.
சாந்திக்கும் அதை
எத்தனை முறை கேட்பது என்று கூச்சம்.
பாக்கெட்டிலிருந்து
முன்ஜாக்கிரதை என்று சொல்லி ஒரு மாத்திரையை விழுங்கியவன், அதை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
"முட்டாள். இந்த
அட்டைப் பெட்டியை அங்கேயே தூக்கிப் போட்டுவிட்டு வரமாட்டாயா, நாளைக்கு டஸ்ட் பின்னை நோண்டினால் அம்மாவுக்கு
எல்லாம் தெரிந்துபோகாதா" என்று கத்தினாள்.
"நீ என்னடி இன்னும்
சின்னக்குழந்தையா, அம்மாவுக்கு
இப்படி பயப்படறே", என்று
சிரித்தவன்,
"குட் நைட்" என்று அவள்
கன்னத்தைத் தட்டிவிட்டு, பெட்
ரூமை நோக்கி நடந்தான்.
நேற்றிரவு ஜுரம்
என்று வாயில் வைத்த அம்மாவின் இம்போர்டட் தெர்மாமீட்டரை கீழே போட்டு உடைத்த ரவியை
மனதுக்குள் திட்டிக்கொண்டே, அட்டைப்
பெட்டியிலிருந்து எடுத்த அதே பிராண்ட் தெர்மாமீட்டரை அதற்கான இடத்தில்
வைத்துவிட்டு,
நிம்மதியாய், ஹால்
சோபாவில் சுருண்டாள் சாந்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக