சீதாயணம்
அந்திச் சூரியன்
ஒளியில் தங்கத்தை வார்த்தது போல் சலனமே இல்லாது ஓடிக்கொண்டிருந்தது தம்ஸா
நதி. ஏதோ சிந்தனையில் ஒரு கோட்டோவியம்
போல் நதிக்கரையில் அமர்ந்திருந்தாள் சீதா.
நகரத்திலிருந்து
வரும் சேதிகள் அவ்வளவு உவப்பானதாக இல்லை.
பட்டத்தரசி இல்லாமல்
நடக்கும் அஸ்வமேத யாகம் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்று.
இவ்வளவு வன்மமா ராமன்
நெஞ்சில்?
எவனோ சொன்னான்
என்பதற்கு எனக்கு தண்டனையா?
என்னைக் குற்றவாளி
என்றே, விசாரணையின்றி முடிவு செய்தானா ராமன்?
தன் மீது
ஆசைப்பட்டாள் என்ற காரணத்துக்காகவே, ஒரு பெண்ணென்றும் பாராமல் சூர்ப்பனகையின் நாசியையும், செவியையும் சிதைத்து அனுப்பியதுதான் தங்கள்
பிரிவுத்துயருக்குக் காரணம் என்றும், அந்த வகையில், பிறன்
மனையை விரல் நகத்தாலும் தீண்டாத இராவணன்
ராமனிலும் உயர்ந்தவன் என்றும் ஒரு ஊடற் பொழுதில் சுட்டியது, இரகுவம்ச ராமன் மனதில் நீங்கா வடுவாய்ப் பதியும் என்று
அவள் நினைத்தாளில்லை.
அவ்வளவு சராசரி ஆடவனா, அவதாரபுருஷன் என மூலோகமும் கொண்டாடும் நீலமேக சியாமள வண்ணன்?
தன் வன்மத்துக்கு ஒரு
பற்றுக்கோலாகவே யாரோ சொன்ன அவதூறை பயன்படுத்துமளவு தன் ராமன் கீழிறங்கியது
இன்றுவரை நம்பமுடியாத ஊமை வலி.
அசோக வனத்தில்
சிறையிருந்தபோது தன் மணாளனைப் பற்றித் தன் மனதில் கிஞ்சித்தும் தோன்றாத சந்தேகம்
ராமனுக்கு வரலாமா?
கண்டனன்
"கற்பினுக்கு அணியினை" என்று அனுமனை சொல்லத்தூண்டியது ஆண்களின் பொது
புத்தியா?
இருக்கின்றாள்
என்பதன் விளக்கமே, கற்போடு
என்பதுதானே?
இதை அடுத்தவன்
உரைத்து அறியும் நிலையிலா என் ராமன்?
பேதை மனம் இன்னும் “என் ராமன்” என்கிறதே, இதை என்ன செய்வது?
இஷ்வாகு வம்சத்து
அரசர்களே, பெண்களை மதிப்பவர்கள்
இல்லையோ என்று ஓடிய மனவோட்டத்தை ஒரு சின்ன இகழ்ச்சி முறுவலில் அழித்துவிட்டு,
அருகில் வந்து நீர் அருந்திக்கொண்டிருந்த
மானின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
ஒரு மானால் தான்
அடைந்த துயரங்களை விட, அதன்
தொடர்ச்சியாய் நடந்த சம்பவங்கள் தன நாயகனை சராசரி ஆக்கிய கதைதான் வேதனை கூட்டியது.
அமுதம் கடைய மந்தார மலையைத்
தாங்கிப் பிடித்தபோது, உடலில்
இறங்கிய விஷம் கொஞ்சம் உள்ளத்திலும் இறங்கியது போலும்.
பெண்ணாய்ப் பிறந்தால்
எந்தக் குலமானாலும் ஒரே விதி.
தாயார் சுனன்யா முகம்
கண்முன் நிழலாடியது.
ஒருவேளை, விதேஷ வம்சத்தின் நேரடி வாரிசாக
இருந்திருந்தால் இத்துனை துயரங்களை சந்திக்க நேர்ந்திருக்காதோ?
ஜனகனின் ரத்தத்தில்
உதித்திருந்தால், ஒரு வண்ணானின்
வார்த்தையைக் காரணம் காட்டி கட்டியவளைக் காட்டுக்கு அனுப்பும் துணிவு ராமனுக்கு வந்திருக்காதோ?
ஒருவேளை, இந்த மீளாப் பிரிவு, பதினான்கு
ஆண்டுப் பெருமூச்சின் வெப்பம் தாளாது ஊர்மிளை இட்ட சாபமோ?
ஒரே விஷயத்துக்கான
பதிலில்லாக் கேள்விகள் அந்தக் குறையிருட்டில் அவளைச் சுற்றிச் சிதறிக் கிடந்தன.
துரத்தும் கேள்விகளை
உதறி எழ முயன்றபோது, அவள் தோளில்
ஒரு பிஞ்சுக் கரம் விழுந்தது.
பால் வண்ணத்தில்
மினுங்கும் கரம் பார்த்தவுடன் உள்ளத்தில் பீறிடும் தாய்மைப் பெருக்கில், மைந்தனை அள்ளி அருகில் அமர்த்திக்கொண்டாள்.
சீதைக்கு எப்போதும்
குசனிடம் ஒருதுளி அதிகப் பிரியம்.
தன்னைப்போல் பால்
வண்ணம் என்பதால் அல்ல,
ஏனோ, லவனின், நீல வண்ணம், ராமனை நினைவு படுத்துவதால் ஒரு சின்ன ஊசிக் குத்தல் எப்போதும் மனதில்.
அன்று விஷயம் கேட்டுப்
பதறி வந்த அகலிகை சொன்னது இன்றும் கேட்பதுபோல் இருக்கிறது.
“அவதார புருஷன் ஆயினும் ராமனின் மனம் நீலம்
பாரித்தே கிடக்கிறது. அந்த வண்ணம் உன் மகனின் தோலை ஊடுருவி உள்ளே இறங்காது
பார்த்துக்கொள்!”
“தனிமையில் அந்திக்கருக்கலில் என்ன
செய்கிறீர்கள் தாயே?”
மைந்தனுக்கு பதில்
சொல்லாமல் புன்னகைத்து எழுந்த சீதாதேவி, “அண்ணன் எங்கேயடா,” என்றபோது, சிறுவனின் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை
மிளிர்ந்தது.
“அண்ணன் உங்களுக்கோர் பரிசுடன் ஆசிரமத்தில்
நிற்கிறான் தாயே.”
தூரத்தில் வரும்போதே, கண்ணில் பட்டுவிட்டது குசன் சொன்ன அந்தப்பரிசு.
பால்வண்ணத்தில்
பொட்டுக்களங்கம் இல்லாமல் ஜொலித்தது அந்த அஸ்வம். அதன் முகத்தில் கட்டப்பட்டிருந்த
தாமிரப் பட்டயம் சொன்னது,
“இது தசரத குமாரன், சக்கரவர்த்தி ராமனின் அஷுவமேத யாகத்துக்கான புரவி. அதை மறிப்பதும், தொடுவதும் ராஜத்துரோகம்”.
“இந்தப் புரவி, நம் நந்தவனத்தில்
அத்துமீறி நுழைந்தது தாயே. உங்கள் பழைய கணக்கு ஒன்றைத் தீர்க்கும் நாள்
வந்துவிட்டதுபோலும். அதனால்தான் இது இன்று என் கையில் சிக்கியிருக்கிறது.”
பதறிப்போய் சொன்னாள்
ஜானகி.
“மகனே, இதன் விளைவுகளை நீ
அறிவாயா? நீ இன்னும் சிறு பிள்ளை. ராமனின் மூர்க்க
சைந்யத்துக்குமுன் உங்கள் வயதும் வீரமும் மிகச் சிறிது. பேசாமல் அதை அவிழ்த்துவிடு”.
“வால்மீகி கொடுத்த ஞானமும், கௌசிகர் அளித்த போர்ப்பயிற்சியும் வீணாகாது தாயே. எங்கள் தந்தையை நாங்கள்
எதிர்கொள்ளும் தருணம் வந்துவிட்டதாகவே எங்கள் உள்ளம் சொல்கிறது”.
புன்னகையோடு இந்த
நாடகத்தை ரசித்துக்கொண்டிருந்த வால்மீகி, “அவர்களைத் தடுக்காதே
மகளே. இனி நாடங்கங்கள் விரைந்து நடக்கும்” என்றார்.
புரவி தேடிவந்த
படைகள் புறமுதுகிட்டு ஓடியதும்,
ஆர்ப்பரித்துவந்த
அனுமன் பிள்ளைகள் முகம் பார்த்ததும் உண்மை உணர்ந்து கண்ணீரில் கரைந்ததும்,
ராமனையே புரவிக்காய் வனம் தேடி வரவைத்தது.
தன் மொத்த
சைதன்யத்தையும் வென்று துரத்தியது இரண்டு சிறுவர்கள் என்று கண்ட ராமனின் முகத்தில்
பெரு வியப்பு.
சிறிதும் அச்சமின்றி
வில்லேந்தி நின்ற சிறுவர்களை வாஞ்சையோடு கேட்டான் ராமன்.
“பால்குடி மறவாத பாலகர்களே, தாங்கள் செய்வதன் தீவிரம் அறிவீர்களா?”
“அறிவோம் அரசனே!, இன்று இவ்விடத்து உம்மை எதிர்கொள்ளவே உங்கள் புரவியைக்
கவர்ந்தோம்”.
“யாகப் புரவியைக்க் கவர்தல் அரச குற்றம் என்பதை
அறியீர்களா? இங்கு யாரும் உங்களுக்கு அறிவுரை சொல்லும்
பெரியோர் இல்லையோ?” என்று கேட்ட ராமனின் குரலில் ஏளனம்
துளிர்த்தது.
“வால்மீகி மகரிஷி எங்கள் ஆசான்”.
“எங்களுக்கு அறம் நீவிர் உரைக்கவேண்டியதில்லை வேந்தே”.
“ஆயின், எம்மிடமும் உமக்கோர் கேள்வி
உண்டு.
பட்டத்தரசி இன்றி யாகம் நடத்த உமக்கு உரைத்தவர் யார் மன்னரே?
அறம் தவறுதல் தசரத மைந்தனுக்கு அழகா?” தெறித்து விழுந்தன
கேள்விகள்.
தலை குனிந்து
முறுவலித்தான் தமையன் சொல் தட்டாத இலக்குவன்.
பிள்ளைகளின் குரலில்
தெறித்த எள்ளல் மூர்க்கம் கூட்ட, வில்லை எடுத்துக் கணை
பூட்டினான் ராமன்.
“உங்கள் வம்சம் அறியாது உங்களை அழிக்க என் மனம்
தடுக்கிறது. யார்பெற்ற பிள்ளைகள் நீங்கள்?”
கேள்விக்கு
பதில் கூர்வாளாய் இறங்கியது.
“உலகம் போற்றும் உத்தமி என் தாய்,
எவர் பேச்சோ கேட்டு, அவரைக் கானகம் அனுப்பிய இஷ்வாகு வம்ச தசரத
குமாரன் எம் தகப்பன்”.
“ராமன் என்பது அவர் நாமம்”.
வில் நழுவ, ஓடிப்போய் பிள்ளைகளை ஆரத்த்தழுவி, கண்ணீரில்
குளிப்பாட்டினான் ராமன்.
அதுவரை அகன்றுநின்ற
வால்மீகி, வாஞ்சையோடு ராமனின் சிரம் தொட்டார்.
தூரத்திலிருந்து வந்த
சீதை முகம் இறுகியிருந்தது.
மைந்தர்களையும், மனைவியையும் தேரில் ஏற இறைஞ்சினான் ராமன்.
“உம பிள்ளைகளை உம்மிடம் சேர்த்தேன். இனி, என் தாய் மடிக்குத் திரும்ப உத்தேசம். விடைகொடுங்கள்!” தரை நோக்கிக் கேட்டாள் சீதை.
“என்னை மன்னித்துவிடு சீதா. இனி ஒருமுறை இப்படி
நேராது,” குழறலாய் வந்தது ராமன் குரல்.
“இல்லை நாதா, இனி ஒருமுறை, அந்த அயோத்தி மண்ணை மிதிக்க என் உள்ளம் ஒப்பவில்லை. என் தாய் என்னை
அழைப்பது என் காதில் ஒலிக்கிறது. இனி என் மிச்ச வாழ்க்கை அவள் மடியில்தான் என்று
என் மனம் சொல்கிறது”.
“உங்கள் சொத்தை உங்களிடம் ஒப்படைக்கவே இத்தனை
நாள் காத்திருந்தேன். விடைகொடுங்கள் பிரபு”.
மீண்டும் முகம்
பாராமல் பேசினாள் சீதை.
“பெண்களுக்கு இத்துனை பிடிவாதம் ஆகாது. புறப்பட்டு
என்னுடன். இது உன் பதியின் ஆணை’.
“அவளுக்கு ஆணையிட நீ யார்?” - சீறி வந்தது கேள்வி.
திசைநோக்கி
எல்லாச்சிரமும் திரும்ப,
“என்னைத்தெரிகிறதா மகனே?” கம்பீரமாய்க் கேட்டபடி வந்தாள், கௌசிகன் பத்தினி, அகலிகை.
“உன்னைப் பார்க்கவும் என் கண்கள் கூசுகின்றன”.
“சாப விமோசனம் பெற்ற நாளிலிருந்தே, என் இதயம் மட்டும் இன்னும் பாறையாகத்தான் இறுகியிருக்கிறது.
ரிஷி பத்தினி
என்ற வெற்றுக் கடமைகளைக்கூட நான் செய்வதில்லை. ஏனோ, கௌசிகனுக்கும் என்னை
நெருங்கப் பயம்.
இந்திரனிடம் காட்டமுடியாத ஒரு கையாலாகாத கோபத்தை ஒரு பெண்ணிடம்
காட்டிய மகரிஷி அல்லவா அவர்?
இந்த ஆண்கள் மட்டும்
அரசனானாலும், ஆண்டியானாலும், ஒரே குணத்தார்கள்தான்.
என் மகன் ராமனாவது
மாறுபட்டிருப்பான் என்றிருந்தேன்.
இப்போது உன்னைப் பார்த்த இக்கணத்தில் என்
சாபத்தைத் தொடரவே என் உள்ளம் விழைகிறது.
இந்தக் கேடுகெட்ட
ஆண்களைப் பார்ப்பதிலும், கல்லாய் இறுகியிருப்பதே பெருமை.
போதும்
பெண்ணாய்ப் பிறந்து இந்த மண்ணில் அடைந்த துயரங்கள்.
எனக்கு சாப விமோசனம் தந்த ராமன் சரயு நதியில் மூழ்கி பித்ரு கர்மாக்களுக்கான
தடயங்களும் அற்று இறந்து போகட்டும்.
பெண்ணைப்
போற்றத்தெரியாத இந்த பாரதமண், கலியுகத்தில் பரதேசத்தாராலும், அதன்பின் பிரம்மச்சாரிகளாலும், கைம்பெண்களாலும் மனைவியை
இழந்தவர்களாலுமே ஆளப்படட்டும்.
தவறிப்போய்
ஏதாவது கிருஹஸ்தன் ஆள நேர்ந்தாலும், அவன் ஒரு கைம்பெண்ணின்
வழிகாட்டுதலிலேயே பொம்மை ஆட்சி புரியட்டும்.
பத்தினி சாபம் பலிக்கட்டும்.
பூமாதாவே, உன் மகளை இக்கணம்
ஏற்றுக்கொள். உன் மடியில் அவள் அந்திமக்காலம் வரை சுகமாய் வாழட்டும்.
இனி எந்த ஆண்மகன் முகமும் காணும் கொடுமையற்று, என் உடல்
இப்போதே கல்லாகட்டும்.
அப்படியே ஆகட்டும்
என்று அசரீரி எழுந்தது
தேவர்கள்
பூமாரி பொழிய, நூறு கோடி சூரியப் பிரகாசத்தோடு பூமி பிளக்க, பூமாதேவி, தன மகளை ஆலிங்கனம் செய்து ஏற்றுக்கொண்டாள்.
நிலம்
நோக்கித் தலை குனிந்து நின்ற சக்கரவர்த்தி ராமன், தன் மைந்தர்களைக் கைநீட்டி அரவணைக்க,
அக்னி
உமிழும் கண்களோடு, அகலிகை
மீண்டும் கல்லானாள்.