புதன், 4 பிப்ரவரி, 2015

நான் கோவிலுக்குப் போனபோது!!!மார்கழி முடிந்ததென்று
நடுக்கம் குறைந்து சிரிக்கிறார்
ஆற்றங்கரைப் பிள்ளையார்!எதையாவது இறைஞ்சு என்று
என்னிடம் இறைஞ்சினான் இறைவன்!
கேட்டால்தான் தருவாயெனில்
உன்னிடம் கேட்பதற்கு என்னிடம்
கேள்விகளே உண்டென்றேன்!
கல்லாய்ச் சமைந்தான் கடவுள்!


ஒரு மாறுதலுக்கு என்னை
உட்காரவைத்துவிட்டு
ஊரைச்சுற்றப் போய்விட்டான்.
இறைவனாய் இருப்பது
அத்தனை வசதியாக இல்லை!

கர்ப்பக்கிருகம் மூச்சுமுட்டுவதாய்
என் கை பிடித்து வீதி வந்த
ஆண்டவனை விரோதித்துப் பார்த்தன
உயிர்கள்!

இருட்டில் வைத்துப் பூட்டுகிறார்களே என்று
கவலைப்பட்ட குழந்தையைப் பார்த்துக்
கண்ணீரோடு சிரித்தார் கடவுள்
எத்தனை சொல்லியும்
உலகைப் புரிந்துகொள்ளாமல்
விழிக்கிறான் கடவுள்நாளை வந்து
மிச்சம் சொல்வதாய்
தப்பித்து வந்துவிட்டேன்!

உன் இருப்பைச் சொல்ல
ஏதாவது கண்டாயா
என்று கேட்டேன் கடவுளிடம்!
குழந்தையாய்ச் சிரித்துத் தலையசைத்தான்!எப்படித்தான் இருக்கிறார்களோ என்று
வியந்து திரும்பிவந்தான்
ஊரைச்சுற்றப் போன இறைவன்!
இப்போதாவது உரைத்ததே என்று
புன்னகைத்து வீடு வந்தேன்!


பாவிகளே என்னை ஏன் கைவிட்டீர்
என்ற தேவனின் கேள்வி
எங்கள் சண்டைச் சத்தத்தில்
கரைந்துபோனது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக