செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ட்விட்டர் காதல்!'எந்நேரமும் அந்தப் பாழாப்போன கம்ப்யூட்டரையே கட்டி அழுதுக்கிட்டிருக்காம கொஞ்சநேரம் படிச்சுத் தொலைக்கலாமல்லடா. அப்பனைப் போலவே உருப்படாம போறதுன்னு சத்தியம் பண்ணியிருக்குது சனியன்."

பால் டம்ளரோடு அறைக்குள்ளே வந்த பூரணி நங்கென்று அவன் தலையில்  ஒன்று வைத்தாள்.

அம்மா எப்போதுமே இப்படித்தான்.

சிடுமூஞ்சியாகவே பிறந்திருப்பாள் என்று தோன்றுமளவு முகம்.

அவனையோ, தங்கை மதுவையோ சதா ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பது வழக்கமான ஒன்றுதான்.

நல்லவேளை அவள் உள்ளே  வரும் சத்தம் கேட்டுத்தான் அவசர அவசரமாக ட்விட்டரை மினிமைஸ் பண்ணினேன். 

அதைப் பார்த்திருந்தால், ஆடித் தீர்த்திருப்பாள். கொஞ்சம்கூட, காலேஜ்  பையனைப் போலவே நடத்தமாட்டாள். எந்நேரமும் கூச்சலும் திட்டும் வசவும்தான்.

தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளைகள் என்ற எந்தவிதமான யோசனையும் இல்லாமல் கை நீட்டிவிடுவாள்.

சமயங்களில் நினைத்தால் பாவமாகவும் இருக்கும்.

அப்பாவிடம் அவள் வாங்குவதில் நூற்றில் ஒன்றைத்தான் பிள்ளைகளுக்குத் திருப்பித் தருகிறாளோ என்றும் தோன்றும்.

அப்பாவுக்குக் கலெக்டரேட்டில் நில ஆக்கிரமிப்புத் துறையில் ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை,
 நல்ல சம்பளம், தயங்காமல் கை நீட்டுவதில் மேல் வரும்படிக்கும் ஒன்றும் குறைச்சல் இல்லை.

ஆனால் எந்நேரமும் குடி, போதாக்குறைக்கு, சீட்டாட்டம் உட்பட எல்லாக் கெட்ட பழக்கங்களுக்கும் குறைச்சலே கிடையாது.

என்றைக்கும்,சீட்டாடித் தோற்றுப் போய்த்தான் வருவார்.

ஏதோ ஒரு வம்பு,
சாம்பார் சரியில்லை,   பொரியலில் உப்பில்லை என்று ஆரம்பிக்கும் சண்டை பரஸ்பரம் கூச்சலில் தொடர்ந்து, அப்பா பெல்ட்டால் விளாசுவதில் போய் முடியும்.

வாரத்தில்  நான்கு நாட்களாவது தவறாது நடக்கும் இந்த சண்டை எனக்கும் மதுவுக்கும் பழகிப் போன விஷயம். அவசர அவசரமாக டின்னர் முடித்து அவரவர் அறையில்போய் கதவைத் தாழ் போட்டுக்கொண்டு விடுவோம்.

இது ரெண்டும் எப்படிண்ணா ரெண்டு பெத்ததுக, என்று மது சமயத்தில் ஆச்சரியமாகக் கேட்பாள்.

அம்மா ஒரு வகையில் பாவம்தான். அப்பாவால் ஒரு சுகமும் இல்லை, கூடப் பிறந்தவர்களும் யாரும் இல்லை, ஏறத்தாழ ஒரு அனாதையாக இவரிடம் சிக்கிக்கொண்டாளோ என்று எனக்குப் படும். அப்பா பக்கத்தில் நிற்கும்போது அம்மா அழகு. அதுவே அவர் கோபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்!   

நான் PSGயில்  EEE மூன்றாம் வருடம். தங்கை மது B.Sc  ஹோம் சயன்ஸ் முதல் வருடம்- அவினாசிலிங்கம் கல்லூரியில்.

இன்றைக்கு ஷாலினியுடன் DM இல் வழியும் அவசரத்தில் தாழ்போட மறந்த்ததுதான் வினையாகப் போயிற்று. நல்லவேளை, அக்கௌன்ட் ஓப்பன் செய்யும் நேரத்துக்குள் அம்மா வந்துவிட்டாள். அவளுக்கு விஷயம் தெரிந்தால் சாமியாடித் தீர்த்திருப்பாள்.

எங்களுக்குத் திட்டிக்கொண்டே அப்பா  எல்லாம் செய்துவிடுவார். ஆளுக்கொரு கம்ப்யூட்டர், எனக்கு அப்பாச்சி, அவளுக்கு ஸ்கூட்டி. அதிலெல்லாம் எந்தக் குறைவும் கிடையாது. அதுக்கு இதுக்கு என்று பொய் சொல்லி வாங்கும் காசு தாராளமான செலவுக்குப் போதும்.

ஆனால் ஒரு பெரும் குறை,

வீட்டுக்குள் சிரித்துப் பேசுவது அநேகமாக இல்லாத விஷயமாகிவிட்டது.

அதுதான் காரணமோ என்னவோ,
ஷாலினியுடன் சாதாரணமாக ஆரம்பித்த ட்விட்டர் நட்பு, இன்று தினமும் ஒரு மணி நேரமாவது DMஇல் கொஞ்சிக்கொள்வதில் தொடர்கிறது.

பெரும்பாலும், காலேஜில் இருக்கையில், லஞ்ச் டைமில் ஹாய் என்று ஒரு மெசேஜ் வரும், குறைந்தது ஒருமணி நேரம் நீளும் உரையாடலில், ஒரு வார்த்தை கூட உண்மையைப் பேசியதில்லை.

அது கிரீஷ் கொடுத்த ஐடியா.
ஸ்டுடண்ட்ன்னு சொல்லாத மச்சி, ஒருத்தியும் மதிக்க மாட்டாளுக, சும்மா அள்ளிவிடு, வேலையில் இருப்பதாகவும், மாசம் ஐம்பதாயிரம் சம்பளம், வயசு முப்பத்தைந்து, மனைவி ஒரு நோயாளி
இப்படிச் சொன்னால்தான் இந்தக் காலத்துப் பெண்கள் ஈசியாக விழுவார்கள். அப்படியே, ஆறுதல் சொல்வதுபோல் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம். ரிஸ்க் இல்லாத உறவையே இன்றைய பெண்கள் விரும்புவார்கள் என்று ஏகத்துக்கும் ஏற்றிவிட்டான்.  

அப்படியெல்லாம் ஆரம்பித்த புளுகு மூட்டை,  ஷாலினியுடன் தினசரி கொஞ்சம் எல்லை மீறிய வழிசல்கள், செக்ஸ் ஜோக்குகள் என்று விரிந்து, இன்றைக்குத்தான் போட்டோ பரிமாறிக்கொள்ளும் கட்டத்துக்கு வந்திருக்கிறது.

ஷாலினி கல்லூரி மாணவியாம். 
வீட்டில் அம்மா அப்பா, ஓயாத சண்டை, உதவாக்கரை அண்ணன் என்று ஆரம்பித்து, இன்று உள்ளாடை வரை பேசுமளவு வளர்ந்தாகிவிட்டது. 

இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்வதில் ஆரம்பித்து, இன்று போட்டோ பரிமாற்றம்.
பிடித்திருந்தால், அடுத்த கட்டம் என்று பேச்சு.

ஆவலாய் ட்விட்டர் அக்கவுண்டில் போய் DM பார்த்தால்
ஒரு அட்டகாசமான இளம்பெண். கண்டிப்பாக என்னைவிட ஒரு ஐந்து வயது அதிகம்தான் இருக்கும்.

அட்டகாசமான உடல்,

குறுஞ்சிரிப்பு கொஞ்சும் முகம்.

கூடவே என்னுடைய படமும் கேட்டிருந்தாள்.

இதற்கும் கிரிஷ் கொடுத்த ஐடியாதான்.

பொண்ணு சூப்பரா இருந்தால் கொடுக்கச் சொல்லி நேற்றே ஒரு படத்தை கூகுளில் எடுத்து, பட்டி பார்த்துக் கொடுத்திருந்தான்.
அட்டகாசமான, முப்பத்தைந்து வயது மனிதன் புகைப்படம்.

அதை அனுப்பிய அடுத்த நிமிடம், “யூ ஆர் சோ ஹேண்ட்சம் என்று ஒரு முத்தமிடும் ஸ்மைலியுடன் பதில்.

கை கால்கள் லேசாக நடுங்க, (முதல் அனுபவம் பாஸ்) மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து ஒரு சின்ன நோட்டம் விட்டேன்.

மது அவள் அறையில் கம்ப்யூட்டரை நோண்டிக்கொண்டிருக்க,
அம்மா, படுக்கையறைக்குள் தாழிட்டுக்கொண்டிருக்க, அப்பா வந்த அரவமே காணவில்லை.

ரூமுக்குள் வந்தவுடன் முதல் வேலையாகக் கதவைத் தாழ் போட்டேன்.

எப்போ மீட் பண்ணலாம் என்று அடிக்கக் காத்திருந்ததுபோல்,

இந்த ஃப்ரைடே ஓகேவா என்று பதில் வந்தது.

ஆஹா, அப்பா சொந்தக்காரர் வீட்டு விசேஷத்துக்கு ஊருக்குப் போகிறார், அம்மா சாயங்காலமே சொல்லியிருந்தார் மருதமலை போவதாகவும், தங்கரதம் பார்த்து வர நேரமாகும் என்றும்.
மது எப்படியும், காலேஜ் முடித்து ஊர்சுற்றி ஏழு மணிக்குத்தான் வருவாள்.

கை நடுங்க,
"எங்கே?" என்று டைப் செய்தேன்.

"பரூக் பீல்ட், மூன்றுமணி ஷோ, கூட்டமில்லாத படம்"என்று வந்தது பதில்.

எப்படி?

"டிக்கெட் ஆன்லைனில் புக் செய்து, காபியை DM பண்ணுங்க".

நீ எப்படி வருவே ஷாலு?

நீங்க சமத்தா, உள்ளே போய் சீட்டில் உட்காருங்க, நான் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக்குவேன்.

அப்புறம்?”

இதுதான் கடைசி,”

படம் முடியும்வரைக்கும், நான் உங்களுக்கு. அதற்கப்புறம் என்னை மறுபடி தொந்தரவு செய்யக்கூடாது.

ஓகே டார்லிங். அதை பிறகு பார்த்துக்கலாம். நீயா என்னைக் கூப்பிட வைக்கும் சாமார்த்தியம் எனக்கு இருக்கு.

அதை வெள்ளிக்கிழமை பார்க்கிறேன்.

அதற்குப் பின் வந்த எந்த உரையாடலும், என் மண்டையில் ஏறவில்லை.

பரூக் பீல்ட் தியேட்டரில் பெட் டிக்கட் ரிசர்வ் செய்து, காபியை அனுப்பியபிறகுதான் தூக்கமே வந்தது.

அடுத்து வந்த நாட்களில், காதுமடல் சூடாகவே அலைந்துகொண்டிருந்தேன்.

கிரிஷ்தான் தைரியமா போ மாப்ள,  அவ்வளவுதூரம் அங்க வந்ததுக்கு அப்புறம் உன் வயசெல்லாம் அவளுக்கு ஒரு மேட்டரே இல்லை. அரை இருட்டு வேறு, துணிஞ்சு விளையாடு என்று தைரியம் சொன்னான்.

ஷாலினி வேறு, “கடவுள் ஒரு மோசமான ஆர்கிடெக்ட்- “ஏன்?” என்று நேரில் பார்க்கும்போது சொல்லுங்கள் பார்க்கலாம். இது ஒரு உங்க டைப் ஜோக்!” என்று உசுப்பேற்றி வைத்திருக்க

அந்த வெள்ளிக் கிழமையும் விடிந்தது.

நேற்றிரவே, அப்பா ஊருக்குப் போயாச்சு. 

மது, இன்னைக்கு என்னவோ, கொஞ்சம் ஓவர் மேக் அப், சாங்கியத்துக்கு 
ஒரு புத்தகம் எடுத்துக்கிட்டு, "அம்மா, இன்னைக்கு நான் கொஞ்சம் லேட் ஆகும்" அப்படின்னு சொல்லிட்டு போறா.

(இவளை ஒருநாள் விசாரிக்கணும் என்று அந்த பரபர மனநிலையிலும் எனக்குப் பட்டது)

நான் இருக்கறதிலேயே, நல்ல ட்ரெஸ் எடுத்துப் போட்டுக்கிட்டு, கிளம்பிட்டேன்.

இன்னைக்கு அம்மா என்னவோ என்னைப் பெருசா கண்டுக்கலை. 
அப்பா ஊரில் இல்லாத சந்தோசமோ, இல்லை கோவிலுக்குப் போகும் முனைப்போ, தலை ஆட்டி விடை கொடுத்துவிட்டு, கதவைத் தாழ் போட்டுக்கொண்டாள்.

மூணுமணி எப்படா ஆகும்ன்னு கடனேன்னு காலேஜுல உட்கார்ந்திருந்தேன்.

மூணுமணிக்கு தியேட்டருக்குப் போய் சீட்டில் சாஞ்சாச்சு.

மூணே கால்

படம்போட்டு பத்து நிமிஷம் ஆச்சு.

பக்கத்து சீட்டுக்கு யாரோ வரும் சரசரப்பு.

இதய்ம் படபடக்கத் திரும்பிப்  பார்த்தேன்.
:
:
:
:
:
:


அம்ம்ம்மாஆஆ!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக