வியாழன், 26 மார்ச், 2020

உலகின் கடைசி மனிதன்


உலகின் கடைசி மனிதன்!


அரை மயக்கத்தில் கிடந்த சார்லஸ் பால்டன் மண்டைக்குள் விர்ர்ர் என்று குழப்பமான சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது.

இடையிடையே எதையோ நகர்த்தும் சத்தம்,
யாரோ நடமாடும் ஓசை.

கண்களின்  மேல் ஏதோ பெரும் பாரத்தை வைத்ததுபோல் இமைகள் கனத்து, இப்படிப் படுத்துக் கிடப்பதே ஒரு வகையில் வசதியாக இருந்தது.

நேற்றிரவு நடந்தது குழப்பமாக மனக்கண்ணில் ஓட, உடம்பு ஒருமுறை உலுக்கிப் போட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்போடு பேசிக்கொண்டே நடந்தது வந்ததுதான் கடைசியாக நியாபகத்தில் இருக்கிறது.

திடீரென்று அடித்துப் பெய்ய ஆரம்பித்த மழையில் நனையாமல் இருக்க ப்ரொடகால் எல்லாம் மறந்து வேகமாய் ஓடி வந்ததும், அதற்குப் பின் நடந்தவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக, பனி கரையும் காலைபோல, மனதுக்குள் விரிந்தது.

எத்தனை சொல்லியும் இந்த வேசி மகன்கள் கேட்காமல் இப்படி எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டார்களே என்று ஆத்திரம் பொங்கியது.

யாரைக் குறை சொல்வது?

இதில் தனக்கு மட்டும் பங்கில்லையா?

எண்ணெய், எண்ணெய் என்று அடித்துக்கொள்ளும்போதே, நாளைக்கு இது தண்ணீருக்காக நடக்கும் சண்டைக்கு முன்னோட்டம் என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டான் கிருஷ் - இந்தியாவிலிருந்து வந்த இளம் விஞ்ஞானி.

அவனைத் தன்னுடைய உதவியாளனாகப் போட்டதற்குப் பலமுறை டைரக்டரிடம் சண்டை போட்டிருக்கிறார்.

ஆனால் எல்லாமே அவன் சொன்னதுபோல்தான் நடந்தது.

எதையும் நேரிடையாகச் சொல்லாமல், அத்வைதம், த்வைதம் என்று குழப்படியாய் பேசுவான்.

எல்லா இந்தியர்களும் இப்படி பேசிப்பேசியே வீணாகிப் போனீர்கள். இனியாவது சொல்வதைச் செய் என்று கடிந்துகொள்வார்.

எல்லாம் கை மீறிப்போனபின்பு, போன வாரம்தான், அவரைப் பார்த்துப் புன்னகையுடன் உயிரை விட்டான்.

இளைஞன். இன்னும் பால்குடி மறவாத சிறு பிள்ளைபோல் முகம். ஆனால், அபாரமூளை.

"இந்த மூன்று வருடங்கள் இப்படித்தான்" என்று அவன் சொன்னபோது, நாஸாவே கைகொட்டிச் சிரித்தது.

இப்போது அப்படிச் சிரித்தவர்களில் யாருமே உயிரோடு இல்லை.

இதற்கு முந்தைய மழையில், எல்லோருமே நனைவதை, கண்ணாடிக்குள்ளிருந்து பார்த்தது ஞாபகம் இருக்கிறது.

மனித குல வரலாற்றில் மிகமிகத் துரிதமான மூன்று வருடங்கள்.

ஏசு பிறந்ததாய் சொல்லப்படும் காலத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களில் நடந்த மொத்த மாறுதல்களையும், தூக்கிச் சாப்பிட்ட மூன்று வருடங்கள்.

ஒபாமாவை கைகுலுக்கி வீட்டுக்கு அனுப்பிட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்த சில மாதங்களில் போட்ட சில உத்தரவுகளை, "பேரழிவின் ஆரம்பம்" என்று வர்ணித்தான் கிரிஷ்.

மனிதன் உருவாக எடுத்துக்கொண்ட லட்சக்கணக்கான ஆண்டுகளை அழிக்கப்போகும் மிகச்சில வருடங்கள் இவை என்பது புரிய ஆரம்பித்தபோது
புதின், அழிவின் முதல் பட்டனை அழுத்தியிருந்தார்.

டென் கமெண்ட்மென்ட்ஸ் படத்தில் வருவதுபோல், பசிபிக் கடல் சுருங்குவதை, மலைகள் சிதைவதை, தாவரங்களும் உயிர்களும் கருகுவதை, கையாலாகாமல் வேடிக்கை பார்த்தபோது, அடுத்தது இதுதான் என்று மனதுக்குள் ஓடியது ஒவ்வொன்றும் இம்மி பிசகாமல் நடந்தது.

ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு அணு ஆயுதங்களையும், ரசாயன ஆயுதங்களையும் அடுக்கி வைத்துக்கொண்டே போனபோதே, இப்படி ஆகும் என்பது தெரிந்ததுதான்.

ஆனால், எப்படியும் இன்னும் பல நூறு தலைமுறை வரை இது நடக்காது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டது உலகம்.

திடீரென்று, ஒசாமாவுக்குப்பின் பலம்பெற ஆரம்பித்த மூர்க்க ஐஎஸ்ஐ முட்டாள்கள் கையிலா அந்தப் பாழாய்ப்போன ஆயுதங்கள் கிடைக்கவேண்டும்?

இலக்கில்லாமல் மொத்த மனித குலத்தையே எரிக்கும் வெறி, எல்லா நாட்டின் மேலும் அவற்றை வாரி இறைக்க,
விளைவைப் புரிந்தும், அமெரிக்கா மீதான வெறுப்பில், தன் ஆயுதங்களையும் வெடித்துதீர்த்தது ரஷ்யா.

அங்கங்கே, ராட்சஷ குடைகளாய் வெடித்ததில், எண்ணி மூன்றே மாதங்களில் மொத்த உலகமும் கருகிப்போனது.
 
போதாக்குறைக்கு சீனாவிலிருந்து குதித்த கொரோனா வைரஸ்!

புல்பூண்டு கூட மிச்சமில்லாத சுடுகாடாய்ப் போன உலகத்தில், அங்கங்கே, சிறு சிறு குழுக்களாக மீதி இருந்தவர்களுக்கும், வானத்திலிருந்து வந்தது ஆபத்து.

ஒற்றை உயிரினம் மிஞ்சாத நிலை. 
எந்த ஒரு கருவியோ, மின்சாரமோ, எதுவும் மிஞ்சாத ஏறத்தாழ காட்டுமிராண்டி வாழ்க்கை.

எப்போதோ, கட்டிவைத்த ஏழடுக்குப் பாதுகாப்பு இல்லத்தில், மூத்த விஞ்ஞானிகள், எஞ்சிய சில மனிதர்கள், இன்னும் பதவியை விடாத அமெரிக்க அதிபர் என்று ஒரு சிறு குழு.

மெல்ல முடிந்தததை எல்லாம் பசிக்குத் தின்றுகொண்டு, இருந்த அழுக்குத் தண்ணீரில் சொட்டுச் சொட்டாய் தொண்டையை நனைத்துக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிழைப்புக்கு வழியை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்.

தொடர்பு சாதனங்கள் முற்றிலுமாக அற்றுப்போன நிலையில், இதுபோல் உலகில் வேறு எங்கும் சிலர் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகரும்போது, வந்தது அடுத்த ஆபத்து.

மேகங்கள் திரண்டு மழை அறிகுறி தோன்றியபோதே, கிரிஷ் சொன்னான்.
வெளியே போகவேண்டாம். கதிரியக்கம் கன்னாபின்னாவென்றிருக்கும் நிலையில் பெய்யும் மழை நல்லதல்ல.

அடித்துப் பெய்ய ஆரம்பித்த மழை கட்டுடைக்க, தாகத்தில் வெளியே பாய்ந்தது ஜனம்.

அந்தக் கோரம் இன்றுவரை மறக்கவில்லை.

பெய்தது அமில மழை.

நனைந்த எல்லோரும் கருகிச் சிதைந்து சுருண்டதை கையாலாகாமல் பார்த்தபோது, வாய்விட்டுக் கதறினார் ட்ரம்ப்.
என் தேவனே, எம்மை ஏன் கை விட்டீர்கள்?”

நாம்தான் கடவுளைக் கைவிட்டோம்.
இது பேரூழிக் காலம்". 
"இனி எல்லாம் நாட்கணக்குத்தான். ஏசுவோ, அல்லாவோ, கிருஷ்ணனோ, செய்ய ஏதுமில்லை என்று புன்னகையோடு சொன்னான் கிரிஷ்.

அப்படித்தான் அதுவும் நடந்ததது.

பெய்யும் அமில மழையில், கிரிஷ் உட்பட, ஒவ்வொருவராய்க் கரைந்தது, இப்போது மிஞ்சிய மூன்றடி சதுரத்தில், நேற்றிரவு, தான் மட்டும் ஓடிவந்து அடைந்தது நியாபகம் வந்தது சார்லஸுக்கு.

அதிபரும், எஞ்சி இருந்த ஒற்றை பாதுகாப்பு அதிகாரியும் நேற்றைய மழையில் கரைவதைப் பார்த்தது இப்போது நிழலாடியது.

அப்படியாயின், இப்போது கேட்கும் சத்தங்கள் என்ன?
யார் என்னை சுமந்துபோய் எதன்மீதோ கிடத்துவது?

எஞ்சியிருந்த வேறு ஏதோ குழுவா, அல்லது தேவன் அனுப்பிய மீட்பரா?

யாராய் இருந்தால் என்ன, பற்றிக்கொள்ள ஒரு துரும்பு கிடைத்துவிட்டது
.
சிரமப்பட்டுக் கண் விழித்தபோது.... 
அவர்களை, அல்லது அவைகளைப் பார்த்தார் சார்லஸ்.

எட்டடிக்குக் குறையாத உயரம்
என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத உருவத்திலிருந்து கைபோல் நீண்டிருந்த ஏதோ ஒன்று சார்லஸை அந்த மேஜை மீது அழுத்திப் பிடித்திருந்தது.

அவர்களின் தலைமீது ஏதோ, ட்ரான்ஸ்மிட்டர் போலிருந்த சாதனம் மெல்லக் கமறியது.

அசரீரியாக ஒரு குரல், மெஷின் போல் சிந்தசைசர் போல் ஒலித்தது.

நாங்கள் நேரோ கிரகஉயிர்கள். உங்கள் பூமியிலிருந்து, கோடிக்கணக்கான ஒளி வருடங்களுக்கு அப்பாலிருந்து வருகிறோம்.
பாலைவனம் போலும், எரிமலை போலும் கருகிக்கிடக்கும் உங்கள் கிரகத்தில், அசையும் பொருளாக நீ மட்டும்தான் இருந்தாய்.
உன் பெயர் மனிதன் என்பதும், உன் மொழியும் எங்கள் சாதனங்கள் சொல்லும் தகவல்.

உன்னை எங்களோடு எடுத்துச் சென்றால் ஏதும் பலன் உண்டா என்று பார்த்தோம்.

உன் தலைக்குள் இருக்கும் சாதனம், எதையும் அழிக்கும் வக்கிரம் வாய்ந்ததுஎனவே, உன்னை எடுத்து வரவேண்டாம் - என்று கட்டளை வந்து விட்டது.
நாங்கள் புறப்படுகிறோம்.

சொல்லிக்கொண்டே, மரம்போல் நின்றிருந்த ஒன்றில் ஏறிக்கொண்டு பறந்து விட்டன.

முழு பலத்தையும் திரட்டி எழுந்த சார்லஸ், தலைக்குமேல் ஏதோ, சத்தம் கேட்க, 
நிமிர்ந்து பார்த்தார்.

சோ வெனப் பெய்ய ஆரம்பித்தது அமில மழை.

கரைந்து மடிந்தார் உலகின் கடைசி மனிதர்.

அடுத்த உயிர் ஜனிக்ககோடிவருடத் தவத்தை ஆரம்பித்தது பூமி!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக