உனக்கென்ன குளிர்ப்
பெட்டியில் கால் நீட்டிப் படுத்துவிட்டாய்.
இதோ, இன்னும் சில மணித்துளிக்குள்,
எரியும் நெருப்பில் கரைந்தும் போவாய்.
உரிமை இல்லாத ஊமை
அழுகையில் நீ பெறாமல் பெற்றபிள்ளை.
யாருக்கும் வாய்க்கக்கூடாது
இப்படி ஓர் துயரம்.
என்னைப் பெற்றவளோடு
எனக்கு நான்கு தாய்.
அதில்
இரண்டாவதை இன்று இழந்தேன்.
என் மழலை முழுதும்,
அதன்பின் இளமையின் ஆரம்பத்திலும்,
உன் கையால் உண்டு வளர்ந்தேன்
தாயே. இன்றைக்கு
மறித்து நிற்கும் வேலிகளும்
விலக்கி வைத்த அகழிகளும்,
கிளைகளைத் துண்டிக்கலாம்.
என் வேர்கள் என்றும் உன்னோடுதானே!
எத்தனை வேலிபோட்டு
உரிமை பறித்தாலும்,
கருவில்
சுமக்காத உன் மூத்த மகன் நான்தானே.
கட்டி அழும்
உரிமையின்றித்
தள்ளி நின்று மருகுதலினும்,
தூரநின்றே கதறிப்
போகிறேன்.
விலகி நிற்பதென்று ஆனபின்பு,
எல்லா தூரமும் ஒன்றுதான்.
எதையோ மனதில் வைத்து,
குறுக்கில் மறித்து,
வென்றதாய்
நினைப்பவர்கள்,
உன் உடலை வைத்துக்கொள்ளட்டும்,
உன் ஆத்மா என்றென்றும் என்னோடுதானே.
இதோடு முடிந்துவிடாது
எதுவும்.
என்னை நெஞ்சில் சுமந்தவள் நீ.
உன்னை உயிரில்
சுமந்து காத்திருப்பேன்.
என் காலம் முடிந்து
வருவேன்,
மீண்டும் உன் மடி
அமர்ந்து உன் கையால் அமுதுண்ண.
அதுவரைக்கும்,
காலம் தந்த வலி மறந்து காத்திரு என்
தாயே.
உன் மகன் தூரத்தில்
சிந்தும் கண்ணீர்
உன் சிதை
நெருப்பைக் குளிரவைக்கும்.
போய் வா என்னைப்
பெறாது பெற்றவளே,
மீண்டும் சந்திப்பேன் உன்னை என் மீனாட்சி அம்மாவாய்….
No comments:
Post a comment