திங்கள், 30 மார்ச், 2015

துரோகத்தின் விலை!

நித்யாஆஆஆ


"நீ என் கூட ஊட்டிக்கு வர்றது ஆபீஸில் யாருக்கும் தெரியவேண்டாம் நித்யா. நீ நாளைக்கே ஒருவாரம் லீவ் சொல்லிடு, சனிக்கிழமை காலை ப்ளைட்ல கோயமுத்தூர் கிளம்பிடு. டிக்கெட் நான் புக் பண்ணிடறேன். நான் மாலை பிளைட் பிடிச்சு வந்துடுறேன். அங்கிருந்து ஊட்டிக்கு சேர்ந்தே போய்டுவோம். நாலு நாள் பையர்ஸ் கான்பரன்ஸ்ல நமக்கு நிறைய நேரம் கிடைக்கும்".
கணவரின் அறையைத் தாண்டும்போது கிசுகிசுப்பான குரலில் போனில் பேசுவது தெளிவாகவே கேட்டது லட்சுமிக்கு.

தள்ளாடும் கால்களை எப்படியோ இழுத்துவந்து அறைக்குள் விழுந்தாள்.

இந்த மனிதருக்கு என்னகுறை வைத்தேன்?  இன்றைக்கும் ஒவ்வொன்றாய் அவர் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வேனே.

நேற்றுக்கூட, “ரெண்டு பிள்ளைகளைப் பெத்தவ மாதிரியாடி நீ இருக்கேஎன்று விடியவிடியக் கொஞ்சிக்கொண்டுதானே இருந்தார்.

ஆனால் அரசால்புரசலாகக் காதில் விழுந்த தகவல்களும், சமீபகால உற்சாக ஆபீஸ் புறப்பபாடுகளும், டிரெஸ்ஸிங் டேபிளில் புதிதாய் வந்த செண்ட் பாட்டிலும் சந்தேகத்தை ஊதிவிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன!

நாற்பது வயதில் நாய்குணம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. 
இதை எப்படி, யாரிடம் சொல்லி சரி செய்வது?

இந்த மனிதர் மட்டும் நம்பிக்கை துரோகம் செய்வது உண்மையானால் இனி, இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்கக்கூடாது.

கண்ணையும், முகத்தையும் துடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தபோது, பிள்ளைகள் இருவரும் டிரைவருடன் பள்ளிக்குக் கிளம்பியிருந்தார்கள்.

மறுபடியும் கணவரின் அறைக்குள் போனபோது குளிக்கப் போயிருந்தார். அவசரமாக அவர் போனை எடுத்துப் பார்த்தபோது, தினமும் அந்த நித்யாவுக்கு காலையும் மாலையும் போன் செய்து பேசியிருப்பது தெரிந்தது.
அமைதியாக அழுக்குத் துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டு, ஹால் சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.

சரியாக அரைமணி நேரம் கழித்து லட்சுமி... என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் சிவராமன்.

வழக்கமான கோட்டும், டையுமான உடை இன்று மட்டும் ஏதோ அதிகப்படியான அலங்காரமாகப் பட்டது லட்சுமிக்கு.

டைனிங் டேபிளில் உட்கார்ந்து, தோசையை எடுத்து ஒரு விள்ளல் வாயில் போட்டவர்,
இந்த சாம்பாருக்காகவே உன்னை இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாம்டி!”  என்றபோது, வழக்கமான மலர்ச்சி இல்லாமல் கடனே என்று புன்னகைத்தாள் லட்சுமி.

ஏம்மா, என்னாச்சு, உடம்புக்கு ஏதாவது சரியில்லையா என்று குழைந்தபோது, “இந்த நாடகமெல்லாம் போதும் என்று உரக்கக் கத்தத் தோன்றியது.

இருந்தும், கையும் களவுமாகப் பிடிக்கும்வரை எதையும் காண்பிக்கக்கூடாது என்று பல்லைக் கடித்துக்கொண்டு, ஒன்னும் இல்லைங்க, காலைல இருந்து கொஞ்சம் தலைவலி, அதுதான் என்று சமாளித்தாள்.

சின்ன வண்டியை எடுத்துக்கிட்டுப் போய் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்துடு செல்லம்!
இன்னைக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் ஒருமணிக்கு போன பண்றேன், டாக்டர் என்ன சொன்னாருன்னு சொல்றே!
ரொம்பத்தான் நடிக்கிறார் மனிதர் என்ற கசப்பை விழுங்கிக்கொண்டு, சரி என்று மண்டையை ஆட்டினாள் லட்சுமி.

லட்சுமி, சிவராமன் கல்யாணம், பணமும் பணமும் சேர்ந்ததுபோல், பெரியவர்கள் பார்த்து நடத்திய ஆடம்பரக் கல்யாணம்.
ஒரே மகளைத் தங்கள் தகுதிக்கு ஏற்ற பையன் கையில் பிடித்துக் கொடுத்த சந்தோஷத்திலேயே லட்சுமியில் அப்பா அம்மா இருவரும் அடுத்த ஒரே வருடத்தில் கார் விபத்தில் ஒன்றாக இறந்துபோக, இந்தப் பத்துவருடங்களாக இரண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கோலோச்சிவருகிறார் சிவராமன்.

லட்சுமிக்கு அவரும், பிள்ளைகளும், வீடும் வேலைக்காரர்களுமே உலகமாய் சிக்கலில்லாத வாழ்க்கை!

சிவராமன், நாற்பத்து மூன்று வயதுக்குள், சென்னையில் வர்த்தகத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய புள்ளிகளில் ஒருவராக வளர்ந்தவர். கடும் உழைப்பாளி, இரண்டுமடங்காய்ச் சேர்ந்த சொத்தை, திறமையாக ஏற்றுமதி வியாபாரத்தில் போட்டு, ஒன்றுக்குப் பத்தாய் எடுக்கும் புத்திசாலி.
தொழிலிலும் சரி, குடும்பத்திலும் சரி, கண்டிப்பும் அரவணைப்புமாக மிக நேர்த்தியான நிர்வாகி.

தவறிக் கூட அலுவலக விஷயங்களை வீட்டில் பேசமாட்டார்.
கேட்டால், வீடு, ஆபீஸ் இரண்டும் தண்டவாளங்களைப்போல் இணையாமல் நேர்க்கோட்டில் இருந்தால்தான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும் என்று தத்துவம் பேசுவார்.

அது ஒருவகையில் லட்சுமிக்கும் வசதியாக இருந்தது.

ஆனால், இந்த நித்யா விவகாரம் வந்தத்தும்தான் யாரிடம் போய் ஆலோசனை கேட்பது என்று புரியாமல் குழம்பித் தவிக்கின்றாள்!

கடந்த சில நாட்களாக சிவராமன் பாடல்களை முணுமுணுப்பதும் உல்லாசமாக சீட்டியடிப்பதும் ரொம்பவே புதுசு.
இப்போது நினைத்துப் பார்க்கையில் எல்லாம் அந்த நித்யா என்ற பெயரை அவர் சொல்ல ஆரம்பித்தபோது வந்த மாற்றம்தான் என்று பட்டது லட்சுமிக்கு.

சரியாக ஒருமணிக்கு போன் செய்து, டாக்டரிடம் போனியாம்மா என்று அக்கறையைக் கேட்டவரை தேவையில்லாமல் சந்தேகப்பட்டோமோ என்று ஒரு நிமிடம் தோன்றியது, அடுத்த வார்த்தையில் அடங்கிப்போனது.
லட்சுமி, இந்த சனிக்கிழமை ஒரு பையர் மீட்டிங்குக்காக ஊட்டி போகிறேன், வர நாலு நாள் ஆகும் என்றபோது, நிஜமாகவே தலை வலிக்க ஆரம்பித்தது லட்சுமிக்கு!

அடுத்த இரண்டு நாட்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை லட்சுமிக்கு. யாரைக் கேட்பது, யார் உதவியை நாடுவது என்று ஒன்றுமே புரியாத கையறுநிலை.

வெள்ளிக்கிழமைதான் ஒரு சின்ன மின்னல் கீற்றாய் ஒரு வழி தெரிந்தது.

வக்கீல் வரதராஜன், அப்பாவின் நண்பர். அவருக்கு போன் செய்து, “அங்கிள், ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் பேசவேண்டும் என்று கேட்டபோதே, குரல் அடைத்து அழுகை பொங்கியது.

இப்போவே வாம்மா”, என்ற கனிவான குரல் கேட்டதும் மனதுக்கு ஒரு தெம்பு வந்ததுபோல் இருந்தது.

உடனே, பெசண்ட் நகரிலிருக்கும் அவர் ஆபீஸுக்கு காரை எடுத்துக்கொண்டு போனவள், தான் கேட்க நேர்ந்த உரையாடல்களையும், அவர் நித்யாவுடன் ஊட்டி போவதையும் சொல்லி முடித்தபோது, கண்களில் மாலையாகக் கண்ணீர்.

லட்சுமி, நீ ஒன்றும் சின்னப் பெண் அல்ல. இதை நீ நேரிடையாக அவரிடம் கேட்டு, அவர் இல்லை என்று மறுத்துவிட்டால் உனக்குத்தான் அசிங்கமாகப் போகும்,”
ஒன்று செய், ஞாயிறு இரவு விமானத்தில், நாம் இருவரும் கோவை போவோம், இரவு பத்துமணி சுமாருக்கு நேராக சொல்லாமல் கொள்ளாமல் போய் ஊட்டியில் நிற்போம். கையும் களவுமாக சிக்கினால், அதன்பின் சட்டப் பூர்வமாக உனக்கு எல்லா உதவியையும் செய்யவேண்டியது என் பொறுப்பு.
நீ எதற்கும் கவலைப் படாதே.

வீட்டுக்கு வந்தபோது லட்சுமிக்குக் கொஞ்சம் ஆறுதலாகக்கூட இருந்தது.
மனதின் ஓரத்தில், தன சந்தேகம் பொய் என்று ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது.

கணவர் ஊட்டி போவதாய்க் கிளம்பிப் போனபின், மறுநாள் பிள்ளைகளிடம் சேலம் வரைக்கும் ஒரு திருமணத்துக்குப் போவதாகவும், திங்கள் மதியம் வந்துவிடுவதாகவும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.ஊட்டி மலை ஏறும்போது, கார் சத்தத்தையும் மீறி நெஞ்சு துடிப்பது லட்சுமிக்குக் கேட்டது.

வேண்டுமென்றே கொஞ்சம் தாமதித்து, சரியாகப் பத்து மணிக்கு தாஜ் ஹோட்டல் சூட் அறைக்கதவைத் தட்டும்போது, தான் காண நேரும் காட்சி பற்றிய பதட்டமான கற்பனை தந்த கிறுகிறுப்பில், வரதராஜனின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள் லட்சுமி.

கதவைத் திறந்த சிவராமன், அவர்களைப் பார்த்த கண்ணில் தெரிந்த அதிர்ச்சியைவிட, அவரது கோலம் லட்சுமியைத் தாக்கியது.

அந்த இரவு நேரத்திலும், சற்றும் கசங்காத அலுவலக தோரணையிலான கோட் அணிந்து கதவைத் திறந்த சிவராமன், “என்னம்மா ஆச்சு, ஏன் இந்த நேரத்தில்,” என்று பதட்டமாய்க் கேட்க,

வரதராஜன்தான் உள்ளேபோய் பேசலாம்என்று வலுக்கட்டாயமாக ரூமுக்குள் புகுந்தார்.

அங்கே, முன்னாள் இருந்த டீபாயில் அலுவலக பேப்பர்களும் லேப்டாப்பும் பரத்திவைக்கப் பட்டிருக்க, சேரில் உட்கார்ந்திருந்த ஒல்லியான் மனிதர் கண்ணில் கேள்வியோடு எழுந்தார்.

நித்யா, நீ உன் ரூமுக்குப் போ, என்றவர், வரதராஜனிடம் சொன்னார், "மீட் மை பி ஏ நித்யானந்தன்!."

அவர் வெளியேறியபின், தன்னைக் கட்டிக்கொண்டு கதறிய மனைவியை பரிவோடு புரியாமல் பார்த்தார் சிவராமன்.

வரதராஜன்தான்  பொறுமையாய் லட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட நேர்ந்த சூழலையும், அவளைத் தான்தான் அழைத்து வந்ததையும் பக்குவமாக எடுத்துச் சொன்னார்.

வாய்விட்டுச் சிரித்த சிவராமன், "அடி முட்டாளே, எனக்கு இதற்கெல்லாம் நேரமே இல்லை. ஒரு பெரிய ஆர்டர் விஷயமாக, ரேட் கொடுக்க வேண்டியிருந்தது. ஆபீஸில் ஏதோ உள்ளடி வேலைகள் நடப்பதாய் சந்தேகம் எழுந்ததால், நித்யானந்தத்திடம் அதைப்பற்றி தனிமையில் பேசுவதற்காக அவனை ஊட்டிக்கு யாருக்கும் தெரியாமல் வரச்சொன்னேன். அவனை நான் நித்யா என்று கூப்பிடுவது உனக்குத் தப்பாய்ப் புரிந்திருக்கிறது.
இதை நீ என்னிடமே கேட்டிருக்கலாமே! என்று கோபமே இல்லாமல் வாஞ்சையோடு சிரித்தார்.

சரி, வந்தது வந்தாய், ஊட்டியில் வேறு ரொம்பக் குளிருது, காலை ஆறுமணி ப்ளைட்டில் உன் அங்கிள் மட்டும் ஊருக்குப் போகட்டும், நீ டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு இங்கே தங்கிவிடு!” என்று கண்ணடித்தார்.

வெட்கமும் வருத்தமுமாய் ஆயிரம் சாரி சொல்லிவிட்டு, பிள்ளைகள் தனியாய்த் தவித்துப்போகும் என்று சொன்னவளை, மேலும் ஒருமணி நேரம் வரதராஜன் இருப்பதுபற்றிய லஜ்ஜையே இல்லாமல் கொஞ்சிவிட்டுத்தான் மனமே இல்லாமல் அனுப்பினார் சிவராமன்.

திரும்பிக் கோவைக்குக் காரில் வரும் வழியெல்லாம், “நான் பெரிய முட்டாள் அங்கிள், அவரைப் போய் தப்பாப் புரிஞ்சுக்கிட்டது மட்டுமில்லாமல் உங்களையும் அலைய வைத்துவிட்டேன் என்று வெட்கமும், வருத்தமும், மகிழ்ச்சியுமாய் புலம்பிக்கொண்டே வந்தாள் லட்சுமி.
விடும்மா, என் நண்பனின் மகள் நீ. உனக்காக இதைக்கூட செய்யமாட்டேனா, நீ உன் கணவரோடு சந்தோஷமாக இருந்தாலே எனக்குப் போதும் என்று நூறாவது தடவையாக ஆறுதல் சொன்ன வரதராஜன், தனக்குள்  புன்னகைத்துக்கொண்டார்!


இருவரையும் அனுப்பிவிட்டு, பக்கத்து அறை கதவைத் தட்டிய சிவராமன், நித்யானந்தமாக நடித்த ரமேஷ் குமாருக்கு ஐநூறு ரூபாய்க் கட்டு ஒன்றைக் எறிந்துவிட்டு, நாளை வரதராஜன் அக்கவுண்ட்டுக்கு ஐந்து லட்சரூபாய் ட்ரான்ஸ்பர் செய்துவிடு என்று சொல்லிவிட்டு, சிக்கனமான உடையில் காத்திருந்த நித்யாவை அள்ளிக்கொண்டு அறைக்குள் புகுந்தார்.

நித்யா செல்லமாகக் காதுக்குள் சிணுங்கினாள்
ஒரு இரவு அநியாயமாக வீணாய்ப் போனதே சிவா!


  


செவ்வாய், 24 மார்ச், 2015

ஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும் !

ஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும்!


அவ்வளவு அழகு பாட்டி வீட்டு முற்றம்.
நாலுபுறமும் தாழ்வாரங்கள்.
நடுவே தொட்டி என்று மற்றவர்களாலும் முத்தம் என்று ரவியாலும் சொல்லப்படும் முற்றம்.

தூண்களைப் பிடித்துக்கொண்டு, நண்டும் சிண்டுமாக எப்போதும் பத்து உருப்படிகள் விளையாடிக் களித்த இளமைப் பருவங்கள்.
இந்தப் பால்யம்தான் எவ்வளவு வேகமாகக் கடந்துபோய் விடுகிறது.
அதிலும், இந்தப் பெண்கள் பால்யம் தொலைப்பதில் ஆண்களைவிட எவ்வளவு வேகம்!. 

எனக்கென்னவோ, பெண்கள்  எல்லாவற்றிலுமே ஆண்களைவிடக் கொஞ்சம் வேகமாகவும் அவசரத்தோடுமே செயல்படுவதாகப் படுகிறது.

இளையராஜா என்றொரு அசுரன் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரம்.

லட்சுமிக்கு எப்போதும் காற்றில் எந்தன் கீதம் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பூக்கட்டுவது ரொம்பப் பிடிக்கும்.

தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்துகொண்டு கிறங்கிப்போய் அவள் பாடிக்கொண்டிருக்கும்போது ரவிக்கு ஒரு குறுகுறுப்பு மனதுக்குள் ஓடும்.

அப்போதுதான் கல்லூரி வாசலைத் தட்டும் வயது. இப்போதுபோல் டிவி, இணையம் என்று பரந்து திறந்த ஜன்னல்கள் இல்லாத  உலகம். 
எல்லாமே இலை மறை காய்மறை என்றே கற்றுக்கொள்ள வேண்டிய நிலை.
அப்போதே, லக்ஷ்மியின் விழிகள் ஏதோ சொல்வதுபோல் தெரியும்.
இதை சமவயதுத் தோழன் அத்தை மகன் மனோவிடம் சொன்னபோது, கற்பழிக்க வந்த வில்லனைப் பார்ப்பதுபோலப் பார்த்தான்.

விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் காலையில் எல்லோரும் ஆற்றுக்குக் குளிக்கப்போவதுதான் வழக்கம்! வேலியோரப் பூக்களும், குளித்து நீர் சொட்ட நடந்துவரும் ஈர உடை தேவதைகளும் நடக்கும் தூரத்தை வண்ணமாக்கும்.

திடீரென்று, ஆற்றுக்குப் போவதைவிட, அருகிருக்கும் வாய்க்காலுக்கே போகலாம் என்று இழுக்க ஆரம்பித்தான் ரவி.
காரணம் லட்சுமி!

ஒரு அதிகாலை விடியலில் முற்றத்தில் சுகமாக உறங்கிக்கொண்டு இருந்தவனின் போர்வைக்குள் நுழைந்த விரல்கள் அவன் இதழ் கிள்ள, காதருகே கிசுகிசுத்தது குரல் வாய்க்காலுக்கு குளிக்கப் போலாமா?”

என்னவென்று புரிந்து கண்விழிக்கும்போது, நிழலாய்க் கடந்துபோனது உருவம்.

என்ன என்று புரிந்து விதிர்த்துப் போய் எழும்போது, ஒன்றுமே தெரியாததுபோல் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் லட்சுமி. "பத்துமணிக்கு வாய்க்காலுக்குப் போகணும் அத்தை. ஒரு மூட்டை துணி இருக்கு துவைக்க."

கதை வசனம் ஒன்னும் புரியாத விஜயலட்சுமித் தாயார், அதை ஏண்டி எங்கிட்ட சொல்லறே? நான் வீட்டில்தான் குளிப்பேன், வேணும்னா உங்க பெரியம்மா வருவாங்க, அவங்கள கூப்பிட்டுப் பாருன்னு சொல்ல,
இல்லத்தே, பக்கத்து வீட்டு ராணி கூடப்போறேன். சரியா பத்துமணிக்கு, பத்துமணிக்கு அத்தை என,

இங்க வந்து எதுக்கு ஏலம் விட்டுக்கிட்டு இருக்கே, அங்க பாரு எங்க வீட்டுல எல்லாம் இன்னும் போர்வைக்குள்ளேயே உருளுதுக.
சொல்லிக்கிட்டே, உத்தேசமாக எதோ ஒரு மண்டையில ஒரு தட்டு தட்டி, “டேய், எல்லாப் பசங்களும் எந்திருச்சுத் தொலைங்கடா, மணி எட்டாச்சு. காப்பிக் கடைய முடிச்சு, இட்லி வடிச்சுக் கொட்டவே பொழுதாயிரும் ன்னு ஒரு சத்தம் போட,

போறபோக்குல ரவியைக் காலால ஒரு எத்து எத்தி, “இப்படி எழுப்பணும் அத்தை, இந்த சோம்பேறிப் பசங்கள அப்படின்னு சொல்லிக்கிட்டே போய்ட்டா!

பேயறஞ்ச மாதிரி உட்கார்ந்திருந்த ரவி, ஹால் கடிகாரம் எட்டுமுறை அடிக்க, பதறிப்போய் எழுந்தான்.

அடேய் பாவிகளா, எல்லாரும் எழுந்திருங்கடா மணி எட்டாச்சுன்னு உலுக்க, பளார்ன்னு ஒன்னு விட்டான் மணிவண்ணன். எட்டுமணிக்கே என்னடா உனக்கு அவசரம்? லீவுலகூட தூங்க விடமாட்டேங்குது நாயி ன்னு காலைத் தூக்க, ஆரம்பிச்சது அன்னைக்கான ஆட்டம்.

வழக்கம் போல, எல்லாப் பயலும் லோட்டா நிறைய காப்பி வாங்கிக் குடிச்சதோ, வரிசையா பல்தேச்சு முடிச்சு ஆளுக்கு அரை டசன் இட்லி முழுங்கியதோ, ரவிக்கு உறைக்கவே இல்லை. 

எப்படா குளிக்கப் போகலாம்ன்னு எட்டாவது தடவை கேட்டப்போ,
இடுப்புல பக்கெட்டோட லட்சமி உள்ளே வந்தாள்.

அண்ணா, இந்த மாமாவீட்டுப் பசங்களோட சேர்ந்து சோம்பேறி ஆகாதீங்க. போய் குளிக்கற வேலையைப் பாருங்கன்னு
வாய் மனோகரனிடம் பேசியது. கண் ரவியைக் கொஞ்சியது.

லட்சுமி போன பத்தாவது நிமிடம், எப்படியோ எல்லோரையும் திரட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு லட்சுமி தேடி நெடும்பயணம்.

போகும் வழியில் ஒரு மனிதர், பாவம் வெளியூர் போலகண்ணில் தவிப்போடு, போயும்போயும் ரவியிடமா கேட்கவேண்டும்,
தம்பி, இங்கே யூரின் போற எடம் எங்க இருக்கு”?
எங்களுக்கெல்லாம் அவரவர்கிட்டையே இருக்குங்கண்ணா!
வாய்க்காலுக்குப் போகும்வரைக்கும் வயிறு கிழியும் சிரிப்பு, வழியே அதிர்ந்தது!

ஆனால், வழியில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டி, ஆச்சியிடம் சொல்லி, அந்த மனிதரைக் கொல்லைக்கு அனுப்பியபிறகே நடக்க ஆரம்பித்தான் 

இதுதான் ரவி.

ஒரிஜினல் காவேரிக்கரைக் குசும்பு.

இருக்குமிடத்தைக் கலகலப்பாக வைத்துக்கொள்ளும் கலையில் நிபுணன்.
சட்டென்று எல்லோரிடமும் சிநேகிக்கும் பேச்சு.

தெருவில் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் பெரும்பகுதி நேரம் கிச்சனில்தான் வாசம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆப்தன் - லட்சுமியைத் தவிர, யாரிடமும் கண்கள் அலையாமல் பேசும் குணம்.

அது என்னவோ, லட்சுமியைப் பார்க்கும்போது மட்டும் கண்கள் சொன்னபேச்சைக் கேட்பதில்லை.

லட்சுமிக்கும் இவன் கண்களைத் தொடர்வதில் கூச்சமில்லை.

முறைப் பெண் என்பதைத் தாண்டி எப்போதும் இவனை முறைக்கும் பெண்.

விடுமுறைக்கு ரவி எப்போது வருவான், எந்த நேரம் எங்கிருப்பான் என்பது லட்சுமிக்கு மனப்பாடம்.

எந்த வீட்டுக்குள் ரவி நுழையவும், அத்தை, பெரியம்மா என்று ஏதாவது அழைத்துக்கொண்டு தற்செயலாக ரெண்டாவது நிமிஷம் லட்சுமி உள்ளே நுழையவும் சரியாக இருக்கும்.

சின்னஅத்தை வீட்டில் இருட்டு நடையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது தற்செயல்தான் என்று முதல்முறை ரவி நம்பிக்கொண்டிருந்தான்.

அடுத்தடுத்து மோதல்களும், கன்னத்தில் பதிந்த ஈரமும்தான் ரவிக்கு அந்த வீட்டின் நடையை சொர்க்கமாக்கியது. 

வினாடி நேரத் தீண்டல்கள்தான்,  
ஆனால் அன்றைய பொழுதை சூடாக்க அது போதுமானதாகவே இருந்தது.

இந்தச் சின்னச் சின்னக் கள்ளத்தனம் இன்று தைரியமாக வாய்க்காலுக்குக் கூப்பிட்டிருக்கிறது.

போன வேகத்தில் துணி துவைக்கவும், முங்கு நீச்சல் போட்டி வைக்க்கவுமாக அமளி துமளிப் பட்டதில், ரவியும் லட்சுமியும் நடு வாய்க்காலில் இறங்கி மூழ்கியதை யாரும் கவனிக்கவில்லை.

பத்து நிமிடம் கழித்து மனோகரன்தான் கேட்டான்,
என்னடா, உதட்டில் காயம்?”
 வீங்கிய உதட்டைத் துடைத்துக்கொண்டே லட்சுமியைப் பார்த்தவாறே சொன்னான்- மீன் கடிச்சுடுச்சுடா!
ஆமா மாமா, கொஞ்சம் பெரியமீன்தான் கடிச்சிருக்கு, பசியோட இருந்திருக்கும்போல!” - இது குறும்புச் சிரிப்போடு லட்சுமி.

பாவம் அப்பாவி மனோகரன் ஏம்மா, உன்னையும் கடிச்சுடுச்சா, எங்க கடிச்சது?” என்ற கேள்விக்கு அவள் முகம் ஏன் அப்படி சிவந்தது என்று புரியாமல் விழித்தான்!

ஒரு மணி நேரக் குளியலுக்குப்பின் திரும்பி வரும்போது யாரோ ஒருத்தன் கேட்டான்,
ரவி, நீ துணி தொவைச்சத நான் பார்க்கவே இல்லை?”

அன்று மட்டுமல்ல,
அந்த விடுமுறையில் பத்து நாளும், ரவி துணியை யார் துவைத்துத் தந்தார்கள் என்றும்,
சில நிமிடங்கள் இரண்டுபேர் மட்டும் அத்தனை பேர் கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்றும்,
பாவம் அந்த அப்பாவி விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தெரியவே இல்லை.

விடுமுறையின் கடைசி நாள் குளித்து முடித்து வந்து வீட்டில் தலை துவட்டும்போது, பக்கத்து வீட்டில் லட்சுமியின் அம்மா, ரவியின் அத்தை, சத்தம்போடுவது துல்லியமாகக்கேட்டது
ஏண்டி, புத்தம்புது மைசூர் சந்தன சோப்பை வாய்க்காலில் விட்டுவிட்டு, யாரோட ஹமாம் சோப்பையோ எடுத்துக்கிட்டு வந்திருக்கே, கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடி, அந்த சோப்பைத் தூக்கி ஏறி.

இரண்டு வருடம் கழித்து, கல்லூரி விடுமுறையில் வேலூர் வந்த ரவிக்கு,
லட்சுமி தன ஒருமாதக் குழந்தையைக் காட்டியவாறே கொஞ்சம்கூட சலனமே இல்லாமல் சந்தோசமாகத்தான் சொன்னாள்
குட்டிம்மா, பெரியப்பாவைப் பாருங்க!ரவிதான் பாவம், அந்த மைசூர் சாண்டல் சோப்பை ஏறத்தாழ ஐந்து வருடத்துக்குமேல் பத்திரமாக வைத்திருந்தான்.
ஆனால், ஹமாம் சோப்பை மட்டும் ஏனோ அதற்குப்பின் அவன் உபயோகிக்கவே இல்லை!

ஓவியங்கள் நன்றி: 
இளையராஜா & ராஜா ரவிவர்மா 

வெள்ளி, 20 மார்ச், 2015

நேற்றைய என் பதிவுக்கு எதிர்வினையும் பதில்களும்!


மற்றவர்களோடு பகிர்ந்தவை

இந்தியா அடிப்படையில் விவசாயநாடு. அதை மறந்ததும், பசுமைப் புரட்சி என்று, ரசாயனங்களால் மண்ணை மலடாக்கியதும்பெரும் பிழை! 
இனி, ஒரு துளி விவசாய நிலத்தையும் கட்டடங்களுக்குத் தாரைவார்ப்பதில்லை என்ற உறுதியும், கூட்டுப் பண்ணை விவசாயமுறை ஊக்குவிப்பும், ரசாயன உர ஒழிப்பும், நிச்சயம் நம்மை உணவு உற்பத்தியில் தன்னிறைவாக்கி, உலகை நம்மிடம் கையேந்த வைக்கும். 
நீர் மேலாண்மை, நிலவள மேலாண்மை என்று வெறும் ஏட்டில் இருக்கும் திட்டங்களை உறுதியோடு செயல்படுத்தினால் போதும்

நில கையகப்படுத்தும் திட்டம் பற்றியது மட்டுமே என் கவலை. 
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிப் பயனில்லை!

நம்மைவிடப் பலமடங்கு அறிவானவர்கள் அரசியல்வாதிகள். நாம் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. 

தலைமுறைகளைத் தாண்டி யோசிக்கும் போக்கு அவர்களிடம் குறைந்ததே இத்தனை கேட்டுக்கும் காரணம். 


உடனடி லாபம் என்பதைத்தவிர்த்துப் பார்த்தால், இயற்கை விவசாயமே நிரந்தரத் தீர்வு.
_________________________________________________________________________________@swamy662 அவர்களுடனான விவாதம்

நிறைய பிழைகள்இருக்கு ..அந்த கட்டுரையில் ..தயாராயிட்டு வாரேன் ..குறிப்பா விவசாயிகள் விஷயத்தில்
சொல்லுங்கள். பிழைகளைத் திருத்திக்கொள்ளலாம்!

கண்டிப்பா வாசன் ஜி ..முழு லாங்கரா தாரேன் .இந்த சட்ட வடிவமே ..தமிழ்நாட்டு நிலகையக சட்டத்தின் பிரதியாமே அப்படியா
தெரியவில்லை நண்பரே, ஒருவேளை அதன் மேம்பட்ட வடிவமாக(?) இருக்கலாம்!

அப்படிதான் சொல்றாங்க ..TN LAND ACQUISITION BILL 99 ஆம் ..தேடிட்டு இருக்கேன் படிச்சா பகிர்கிறேன்
நான் பிஜேபி பக்தன் இல்லை அதையும் முதல்லேயே சொல்லிடுறேன் ..தப்பான ஒரு எண்ணம் இருக்கு நண்பர்கள் மத்தியிலே

அவசியம் பகிருங்கள். நீங்கள் எந்தக்கட்சி என்பது நீங்கள் உண்மை சொல்வதைத் தடுக்கப்போவதில்லை!

இவர்களின் செயல் இந்திய வளர்ச்சிக்கு பலமா இருக்கு ..அதை எதிர்ப்பது அரசியல் என்பதால் மட்டுமே ஆதரவு அது தான் என் நிலை..இந்த சட்டம் NEED OF THE HOUR என்று நினைக்கிறேன்
இதில் அரசியல் பேசவோ, பாஜகவை எதிர்க்கவோ நான் வரவில்லை. நல்லன யார் செய்தாலும் வரவேற்போம். நான் எக்கட்சியும் சாராதவன்.

நிச்சயமாக .தவறு என்றால் தவறு தான்.ஆனால் எ.கட்சிகள் கூவுவது போல இல்லை என்பதுஎன் கருத்துமக்களை தூண்டிவிட போராட்டம் இந்த சட்டம் தவறில்லை..ஆனால் அதை சரியாக மாநில அரசுகள் நடைமுறை படுத்த வேண்டும் அது தான் கவலை.
அதை மட்டும் எப்படி என்று நிறுவுங்கள் நண்பரே. எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒப்பிட்டுச் சொல்லுங்கள்!


நண்பா இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை ..நிலகையக படுத்தாமல் இங்கே ஏதேனும் ஒரு ஆணை கட்டபட்டுள்ளதா
வளர்ச்சி பணிக்கு நிச்சயம் சில அவசர அதிரடி சட்டங்களும் செயல்பாடும் தேவைதான்
நிலத்தின் அடியில் மீத்தேன் அதிக அடர்த்தி அடைந்தால் என்னாகும் படிங்க http://earthsky.org/earth/new-explanation-for-siberias-mystery-craters 
காவிரி டெல்டா பகுதில் ..அபிர்தமான பெட்ரோல் / தங்கம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம் ..அப்போ உங்கள் நிலை

உங்கள் வாதங்கள் பிழையானவை. உண்மையான வளர்ச்சி என்பது எல்லாத்துறைகளிலும் சீராக அடைவது. வளர்ச்சி என்பது தொழிற்சாலைகள் மட்டும்தானா? விவசாயம் வளர்ச்சி சார்ந்ததல்லவா? உணவுப்பொருள் தன்னிறைவே, ஒருநாட்டின் அடிப்படைவளம்.நல்லவேளையாக, நம் நாடு அந்தவிசயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டது.ஒருநாள்உணவுப்பொருள் இறக்குமதி இல்லாவிட்டால், சிங்கப்பூரின் நிலை என்ன தெரியுமா நண்பரே? ஊழலும், ஜனத்தொகையும் மலிந்த நாட்டில், உணவுப்பொருள் இறக்குமதி செய்ய நேர்ந்தால் என்ன ஆகும்? காவிரிப் படுகையில் தங்கமும் பெட்ரோலும் கிடைத்தாலும், அறிவார்ந்தவர் நிலை இதுவாகத்தான் இருக்கும் நண்பரே. கண்டிப்பாக,காவிரிப் படுகையில் தங்கமும், பெட்ரோலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்தஅவசரச் சட்டமா நண்பரே?


கிடைத்தால் உங்கள் நிலை என்னவாக இருக்கும் ..என்பதே கேள்வி..
காவிரிப் படுகையில் தங்கமும் பெட்ரோலும் கிடைத்தாலும், அறிவார்ந்தவர் நிலை இதுவாகத்தான் இருக்கும் நண்பரே!

மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களை கையக படுத்தவே இந்த திட்டம் என்பது போல பேசுகின்டீர்கள் .மேலும் தொழிற்சாலைக்கு மட்டும் அல்ல..பல வளர்ச்சி பணிக்கு.அணைகளுக்கு,சாலைகளுக்கு .ரயில் பாதைகளுக்கு,  குடியிருப்புகளுக்கு சேர்த்துதான் இந்த திட்டம் . industrialcorridors PPP projects, rural infrastructure,affordable housing&defence.க்கு மட்டுமே அனுமதி வேண்டாம் மற்ற அனைத்து கையக படுத்தலுக்கும் 70% உடன்பாடு வேண்டும். விவசாயிகள் ஒப்புதல் தேவை இல்லை என்பது வெறும் 5 செக்டர்க்கு மட்டுமே..

அப்படியானால், விவசாய நிலங்களைத் தவிர்த்து என்று ஒரு திருத்தம் கொண்டுவாருங்களேன்? 80% விவசாயிகள் அனுமதி பெறவேண்டும் என்ற ஷரத்து நீக்கம், நீர்வளப் பாசன வசதியுள்ள நிலங்களுக்கு விலக்கில்லை என்பதெல்லாம் விவசாய நிலங்களைக் குறி வைக்காத மாற்றங்கள்தானா நண்பரே? கண்மூடி ஆதரிக்கும் நோக்கு தவிர ஏதும் உங்கள் வாதத்தில் இல்லை!
எங்கள் சோற்றில் கைவைக்காமல், உங்கள் "வளர்ச்சிப் பணிகளை" மேற்கொள்ளுங்கள்! முதலில் தரிசுநிலங்களை மட்டும் வளரவையுங்கள்


தரிசு நிலங்களுக்கே பல சிக்கல்கள் இருக்கு அதான் பிரச்சனையே
விவசாய நிலத்தை கையகப் படுத்தமாட்டோம்.ரசாயனக் கழிவுகளை நிலத்தில் கொட்டமாட்டோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

இந்த அரசால் ஏதேனும் நல்லது நடந்து விட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்ற கவலை ..அவசரம்
விவாதம் அது அல்ல. இது உங்கள் அரசியல் கவலை. அதற்கு விவசாயிகளை பகடை ஆக்காதீர்கள். வளர்ச்சி வேறு, வீக்கம் வேறு!
முதலில் திருத்தங்களை ஒழுங்காகப் படியுங்கள். உங்கள்வளர்ச்சித் திட்டக் கழிவுகளைஅம்பானிவீட்டுத் தோட்டத்தில்கொட்டுங்கள்

நீங்கள்தான் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தப் போவதில்லையே!!!!!!!!!!!!! பிறகெதற்கு வாதம்!

அதை தான் ஜி சொல்றோம்..இது வெறும் எ.க அரசியல் ..மக்களை குழப்பி மீன் பிடிக்கும் முயற்சி!
வியாழன், 19 மார்ச், 2015

தாது வருடத்துப் பஞ்சமும், நில ஆக்கிரமிப்புச் சட்டமும்!

தாது வருடத்துப் பஞ்சமும், நில ஆக்கிரமிப்புச் சட்டமும்!


தாது  வருஷத்துப் பஞ்சம் பற்றிப் பலரும் படித்திருப்பீர்கள்.

இன்றைக்கு, பற்றியெரியும் கிரிக்கெட் பிரச்னைகளுக்கு நடுவே, அது எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கும் என்று தெரியவில்லை.
அன்றைக்கு அந்தப் பஞ்சத்துக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்திருக்கலாம். 
ஆனால் இன்றைக்கு நம்மை அதை நோக்கி நகர்த்திச் செல்ல, எல்லா அரசியல் கட்சிகளும் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாகவே தோன்றுகிறது.

அதிலும், இன்றைய மிருகபல பாஜக அரசு நிறைவேற்றியுள்ள நில கையகப் படுத்தும் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்கள், அதை நில ஆக்கிரமிப்புச் சட்டமாகவே பார்க்கத்தூண்டுகின்றன.

இதுபற்றிப் பலரும் எழுதி, விவாதித்த நிலையில், என் இனிய நண்பர் பாலு அவர்கள் என் கருத்தையும் அறிந்துகொள்ள விரும்பியதுவும், அவர் சொன்னதுபோல், நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு நம்மாலான ஒரு சிறு ஆதரவுக்குரல் என்பதுவுமே இதை எழுதத்தூண்டியது.

பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த சட்டங்களைவிடவும் கடுமையான சட்டம் இது. 
அரசுக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்து, விவசாயிகளின் கோவணம் வரை உருவிக்கொள்ளும் உரிமையை அரசுக்குக் கொடுக்கும் சட்டத்திருத்தம் இது.

இதன் முக்கியமான சில அம்சங்களை மட்டும் அலசுவோம்.

1. அந்தப் பகுதியிலிருக்கும் 80% விவசாயிகள் அனுமதி பெற்றே நிலம் கையகப்படுத்தமுடியும் என்ற கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்படுகிறது.
2. நிலம் கையகப்படுத்த உரிமையுள்ள தொழில்களின் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டு, அரசாங்கத்தின் பங்களிப்பே இல்லாத முழுமையான தனியார் தொழிற்சாலைகளுக்கும் இந்த விலக்கு வழங்கப்படுகிறது.
3. ஐந்து ஆண்டுகளுக்குள், திட்டம் முடிக்கப்படாவிட்டால் விவசாயிக்கே நிலத்தை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்ற அம்சம் விலக்கிக்கொள்ளப்படுகிறது.
4. ஏதோ ஒரு காரணத்தால், அந்த தொழிற்சாலை தொடங்கப்படாவிட்டால், நிலத்தை திருப்பிக்கொடுக்க வேண்டியதில்லை.
5. தொழிற்சாலைக்கு என்று கையகப்படுத்திய நிலத்தை விற்பனை செய்யத் தடை ஏதும் இல்லை.
6. நீர்வளம் மிக்க விளைநிலங்களை கையகப்படுத்த இருந்த தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது.
7. இரண்டாண்டுகளுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்றவிதி தளர்த்தப்படுகிறது.
8. இதுகுறித்து எந்தவிதமான முறையீட்டுக்கும் நீதிமன்றத்தை அணுகமுடியாது.

மொத்தத்தில்
நீங்கள் போட்டிருக்கும் வேஷ்டி சட்டை ஒரு பெருமுதலாளிக்குப் பிடித்திருந்தால்
நீங்கள் எந்தக்கேள்வியும் கேட்காமல் 
கழட்டிக்கொடுத்துவிட்டு
கையை வைத்து மறைத்துக்கொண்டு 
வீட்டுக்கு ஓடிவிடவேண்டும்.

அதை, அவன் போட்டுக்கொள்கிறானா, வண்டி துடைக்க வைத்துக்கொள்கிறானா என்பதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது என்பதைவிட, உரிமையில்லாத விஷயம் என்பதுதான் இந்தச் சட்டம் சொல்வது.

India's per capita availability of agricultural land has shrunk to 0.3 hectare per farmer compared to over 11 hectares in the developed world.

(இந்தியாவில், ஒரு குடிமகனுக்கான விலை நிலம், 0.3 ஹெக்டேர் அளவுக்கு சுருங்கியிருக்கிறது, இது, வளர்ந்த நாடுகளில், 11 ஹெக்டேர் என்ற அளவில் இருக்கிறது.)

At the same time population has more than doubled since 1970s to 1122 million, putting India's food security in question.

(அதே நேரத்தில், இந்தியாவின் ஜனத்தொகை 1970 லிருந்து இரண்டு மடங்காகி, நம் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது!)

The per capita consumption of food has increased since independence, but the country still compares poorly when it comes to nutrition intake.

(உணவு உட்கொள்ளும் அளவு சுதந்திரத்துக்குப்பின் உயர்ந்திருந்தாலும், சத்துள்ள உணவு என்பதில் நம் நாடு மிகவும் பின்தங்கியே உள்ளது!)


இவை, பாராளுமன்றத்தில், அன்றைய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வமான அறிக்கையின் சில விபரங்கள்!
ஜனத்தொகைக்கு ஏற்ற விளைநிலங்களின் பட்டியலில், ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு.

நாடு
ஒரு மனிதனுக்கு விவசாய நிலம், ஹெக்டேரில்
ஆஸ்திரேலியா
2.07
கனடா
1.32
அமெரிக்கா
0.49
தென்னாப்பிரிக்கா
0.23
தாய்லாந்து
0.3
இங்கிலாந்து
0.1
சவூதி அரேபியா
0.11
எத்தியோப்பியா
0.17
இந்தியா
0.13
ஜப்பான்
0.03
மலேசியா
0.03
சிங்கப்பூர்
0

இது 2012 ம் வருட ஒப்பீடு.

இது இப்போது சுருங்கியிருக்குமா, வளர்ந்திருக்குமா என்பதை, உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

இப்படியிருக்கும் நிலையில், இந்தச் சட்டம்பசியோடு காத்திருக்கும் பணமுதலைகளிடம் நம் நலிந்த விவசாயிகளை சிக்க வைக்கத் துடிக்கிறது.

இந்த சட்டத்தை முதலில் ஆதரித்துக் குரல் கொடுத்தவர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.

கேரளத்தில் அடித்து விரட்டப்பட்ட கோகோகோலா கம்பெனிக்கு பெருந்துறையில் ரத்தினக் கம்பளம் விரித்ததும்
நோக்கியா செய்த நம்பிக்கை துரோகம் கண்டுகொள்ளாமல் போனதும்
விளைநிலங்களை வளைத்துப்போட்டு, தரிசாக்கிப் பின் பிளாட் போடும் அரசியல் முதலைகள் கட்சிப் பாகுபாடின்றி நிறைந்திருப்பதும்
தமிழகத்தை இந்தச் சட்டம் எப்படி பாதிக்கும் என்பதற்கு கவலை தரும் காரணிகள்.

வங்காளத்தில் அடித்து விரட்டப்பட்ட நானோ கார் தொழிற்சாலையை குஜராத்துக்கு வலிந்து இழுத்துவந்தவர் இன்றைய பாரதப் பிரதமர்.

அந்த நானோ கார் முயற்சி தோல்வி என்று டாடா இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார்.ஒரிசாவில் வேதாந்தா நிறுவனத்தின் விதி மீறல்கள் குறித்து எழுத ஆரம்பித்தால் அது பல கதைகளாய் விரியும்.

தொழிலதிபர்களின் அடிவருடிகளாய் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் இந்த சட்டத்திருத்தம், குரங்கு கையில் எரியும் கொள்ளியைக் கொடுப்பது போல!

நிலம் கொடுப்பவருக்கும், அங்கிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்பது இன்னொரு ஏமாற்றுவேலை.

குடும்பமே வயல்வேலை செய்யும் இடத்தில், ஒருவருக்கு மட்டும் அவரது படிப்பறிவை வைத்து அடிமட்ட ஊழியர் வேலை கொடுப்பது என்னவிதமான இழப்பீடு?

இதிலும் எத்தனை குளறுபடிகள் செய்யமுடியும் என்பதற்கு நோக்கியாவே உதாரணம்.

இத்தனை வில்லங்கத்தோடு இந்த அவசரச் சட்டத்தை ஏன் விவாதமே இன்றி நிறைவேற்றத் துடிக்கிறது மத்திய அரசு என்பது, அம்பானிகளுக்கும் அதானிகளுக்குமே வெளிச்சம்.

இதை ஊருக்குமுன் ஆதரிக்க அதிமுக வுக்கு என்ன அவசியம் என்பதற்கு விளக்கமே தேவையில்லை.

தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப் படுத்தப்பட்ட தானைத் தலைவி, பாஜக கூட்டணிக் கட்சிகளே ஆதரிக்க மறுத்து விளக்கம் கேட்டுக் கொடிபிடிக்கும் சட்டத்தை, ஊருக்குமுந்திப் போய் தாங்கிப் பிடிக்க நேர்ந்தது அப்பட்டமான சுயநல பேரம்.

ஏற்கனவே, விவசாயம் மரித்துவருகிறது. 
இந்த நிலையில்
இது குழிக்குள் தள்ளி விவசாயி தலையில் மண்ணைப் போடும் சட்டம்.

இதற்கு எதிராக வாய் திறக்க யோசிக்கும் நாம்
அநேகமாக, பசிக்கும்போது, உணவுக்கு பதிலாக, பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்துக் கொடுக்கும் வயிறு நிரப்பி மாத்திரைகளுக்கும், பாட்டிலில் அடைத்து விற்கும் சாயத் தண்ணீருக்கும் மட்டுமே வாய் திறக்க நேரும்!

எதற்கும் கொஞ்சம் அரிசி, பருப்பு காய்கறிகளை புகைப்படம் எடுத்து நம் ஸ்மார்ட் போன்களில் சேமித்து வைப்போம். 

நம் பேரன் பேத்திகளுக்குக் காட்டிக் கதை சொல்ல உதவும்.