திங்கள், 16 மார்ச், 2015

இரண்டாவது தற்கொலை!

இரண்டாவது தற்கொலை.
படுக்கைஅறைக் கதவை அவர்கள் உடைத்துத் திறந்தபோது, அவள் முழுமையாக இறந்திருந்தாள்.

அவர்கள்?

அந்தப் பெண்ணின் அப்பாவிக் கணவன், அண்ணன், க்ரைம் A.C. ரவி, இரண்டு போலிஸ்காரர்கள், ஒரு இன்ஸ்பெக்டர்.

பலமுறை, பல விதங்களில் பார்த்த காட்சிதான். 
ஆனால் இந்த அறைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட வினோத உணர்ச்சி, இதை சந்தேகப்படு என்று சொல்வதுபோல் இருந்தது ரவிக்கு.

எதேட்சையாக அரைமணி நேரம் முன்பு D-2 போலீஸ் ஸ்டேஷனுக்கு ரவி வந்தபோதுதான் அந்த போன் வந்தது.

"இன்ஸ்பெக்டர், என் மனைவி படுக்கை அறைக்குள் இருக்கிறாள். பத்து நிமிடமாகக் கதவைத் தட்டியும் பதில் இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது. உடனே வாங்க ப்ளீஸ்"

பதட்டமும் அழுகையுமாக ஒரு இளைஞன் குரல். அதில் தொனித்த ஏதோ ஒன்று ரவியை, நானே வருகிறேன் என்று ஏரியா இன்ஸ்பெக்டருடன் கிளம்பவைத்தது.

வரும் வழியெல்லாம் இதுவரை பார்த்த தற்கொலைகள் மனதுக்குள் அலையடித்தன. இருபத்தைந்து வருட போலீஸ்  உத்தியோகத்தில் எத்தனை துர்மரணங்கள், எத்தனை ரத்தம், வன்முறை.

சே! இந்த வருடம் கட்டாயம் எழுதிக் கொடுத்துவிட்டு, கிராமத்தில் போய் விவசாயம் பார்க்கலாம் என்று நினைத்ததை நிர்மலாவிடம் சொன்னால், கேலி வழியச் சிரிப்பாள்.
அதுவும் புரமோசன் எட்டும் தூரத்தில் இருக்கும்போது!

வீட்டுக்குள் நுழைந்ததும், காலவிரையம் செய்யாமல் கதவை உடைக்கச் சொன்னார்.

உள்ளே மெலிதான ஏசி சத்தம் கேட்டபோது, அவள் ஏதோ மயக்கத்தில் இருக்கும் வாய்ப்பையே எதிர்பார்த்தார்.

ஏசி போட்டுக்கொண்டு, தூக்குப் போட்டுக் கொள்வது கொஞ்சம் அபத்தமாகத்தான் பட்டது. ஆனால் மனித மனத்தில் இல்லாத அபத்தங்களா?

புடவையில் தூக்கு மாட்டிக்கொண்டு முற்றிலுமாக இறந்துபோயிருந்தாள். 

கண்கள் பிதுங்க, நாக்கு கடிக்கப்பட்டு ரத்தம் உறைந்திருந்தது. விரல் நகங்கள் நீலநிறமாக மாறியிருந்தன. கடைசி நேர அவஸ்தையில் பிரிந்த கழிவுகளில் புடவை நனைந்திருந்தது. மொத்தத்தில், கொஞ்சம் அசுத்தமாக இறந்திருந்தாள்.

கதவை உடைத்து அந்தக் காட்சியைப் பார்த்ததும் ஒரு வினோதமான அலறலோடு மயங்கி விழுந்தான் அந்த அண்ணன். அவனை ஹால் சோபாவில் படுக்க வைத்துவிட்டு,
வரிசைக் கிராமமாக, ஃபோட்டோகிராபர், ஃபாரன்சிக் ஆட்கள், ஆம்புலன்ஸ் எல்லாவற்றுக்கும் சொல்லச்சொல்லிவிட்டு அறைக்கு வெளியே வந்து உட்கார்ந்தார்.

இப்போதுகூட ரவி அங்கிருக்க வேண்டியதில்லை. 
ஸீன் ஆஃப் கிரைம் விபரங்களை சேகரித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எழுந்த அவரை, அந்த இளைஞனின் ஓயாத அழுகை சத்தம் சற்றே உறுத்தியது.

ஆரம்பத்திலிருந்தே, ஒரு மிகைப்பட்ட நாடகம் பார்க்கும் உணர்ச்சி.
என்னவோ தவறாக இருப்பதாக மட்டும் மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது.
இந்த உள்ளுணர்வு அவருக்குப் பொய்த்ததே இல்லை.

மிஸ்டர், கொஞ்சம் கண்ணைத் துடைத்துக்கொண்டு இங்கே வந்து உட்காருங்கள். சில அடிப்படையான கேள்விகள். ப்ளீஸ். எங்கள் கடமை.

மூக்கை உறிஞ்சிக்கொண்டே வந்து உட்கார்ந்தவனை ஏற இறங்கப் பார்த்தார்.

சந்தேகமே இல்லாத அழகன், நல்ல உயரம், சிகரெட் பழக்கத்தில் சற்றே கறுத்த உதடுகள். பார்ட்டிகளில் குடித்த பியரோ, ஏதோ ஒன்றால், கண்களுக்குக்கீழே தொங்கிய பைகள். அலைமோதும் கண்கள், இளம் தொப்பை.
பார்த்த முதல் பார்வையிலேயே, மேல்மட்டத்தைச் சேர்ந்தவன் என்று அடிக்கோடிடும் எல்லா அடையாளங்களும்.
இல்லாவிட்டால், இந்த ஏரியாவில், மாதம் முப்பதாயிரத்துக்குக் குறையாத வாடகையில் குடியிருக்க முடியாது.

சொல்லுங்கள், என்ன நடந்தது!
சார், என்பெயர் வினோத். அவள் வனிதா. நான் வேலை செய்யும் மல்டி நேஷனல் கம்பெனியில், என்னோடு வேலை செய்யும் சரவணனின் தங்கை.
இரண்டு நாட்களாகவே அவளுக்கு மனநிலை சரியில்லை. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகவே இருந்தாள். இன்றைக்கு, நான் வேலைக்குக் கிளம்பும்போதுகூட, வேண்டுமானால் இரண்டு நாள் உங்க அம்மா வீட்டுக்குப் போய் இருந்துட்டு வா ன்னு சொன்னேன்.
நான் தனியாகப் போகலை. சாயங்காலம் வரும்போது அண்ணனைக் கூட்டிக்கிட்டு வாங்க, அண்ணனோடு போய்க்கிறேன் அப்படின்னு சொன்னா சார்.
ஆபீஸ் போனவுடனே சரவணன்கிட்ட சொன்னேன். உடனே அவளுக்கு போன் பண்ணினான். அடிச்சுக்கிட்டே இருந்தது. சரி, ஒரு பத்து நிமிஷம் கழிச்சுப் பேசலாம்ன்னு நான் கூப்பிட்டப்பவும் பதில் இல்லை.

பயந்துபோய், நானும் சரவணனும் உடனே புறப்பட்டு வந்தபோது கதவு உள்ளே பூட்டியிருந்தது. காலிங் பெல்லை அடிச்சபோது கதவு திறக்கலை. என்கிட்டே இருந்த டூப்ளிகேட் சாவியைப் போட்டுத் திறந்து உள்ளே வந்தோம்.

படுக்கை அறைக் கதவு உள்ளே பூட்டியிருந்தது. 
அதற்கும் ரெண்டு சாவி உண்டு. 
இன்னைக்கு புறப்படும் அவசரத்தில், அதை படுக்கைக்கு அருகில் டிரெஸ்ஸிங் டேபிள் மேலேயே விட்டுப் போய்ட்டதாலே அதை திறக்க முடியவில்லை.

திரும்பவும் கால் பண்ணுனப்போ, அவள் மொபைல் பெட்ரூமுக்குள்ளே அடிக்கற சத்தம் கேட்டுச்சு.

பயந்துபோய் கதவை உடைக்கலாம்ன்னு சொன்னப்ப, சரவணன்தான் போலீசை கூப்பிடலாம்ன்னு சொன்னான்.

அதுக்கப்புறம் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே, படுபாவி இப்படிப் பண்ணித் தொலைச்சுட்டா!

அதற்குள், மெதுவாக எழுந்து உட்கார்ந்த சரவணன் தலை தலையாக அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க
அவனைப் பிறகு விசாரித்துக்கொள்ளலாம் என்று மெதுவாக அந்தப் படுக்கை அறைக்குள் நுழைந்தார்.

ஃபாரன்சிக் ஆட்களும் ஃபோட்டோக்ராபரும் வந்து வேலையை ஆரம்பித்திருந்தார்கள்.

படுக்கையை ஒட்டிய டேபிளில், ஒற்றை சாவி, வளையத்துடன் கிடந்தது. அந்த டிரெஸ்ஸிங் டேபிளில் வேறு எதுவுமே இல்லை.

மற்றபடி, வித்தியாசமாக எதுவும் கண்ணில் படவில்லை.

ஃபாரன்சிக் புரோகிதர்கள் சடங்குகளை முடித்து சைகை காட்ட,
ஆடப்ஸி சம்பிரதாயத்துக்கு ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்ட உடலின் பிதுங்கிய விழிகள் அந்த அறையைக் கடைசியாக ஒருமுறை பார்த்துக்கொண்டன. 

அதை லட்சியமே செய்யாமல், ஆங்காங்கு பௌடர் அடித்து ரேகை சேகரித்துக்கொண்டிருந்தார்கள் கருமமே கண்ணான ஆட்கள்.

அன்று மாலை தன்னை வந்து சந்திக்கும்படி அந்த இளைஞர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு, ஜீப்பில் ஏறப்போனவர், இன்னொருமுறை உள்ளே போய் பெட் ரூமை நோட்டம் விட்டவர், மேலும் இரண்டு உத்தரவுக்குப் பின் கிளம்பினார்.

அன்றைய எல்லா வேலைகளுக்கு இடையிலும் அந்த வனிதாவின் கண்கள் ஏனோ அவரைத் துரத்திகொண்டே இருந்தன.

ஆறு மணிக்கு வந்த வினோதன் சற்றே தெளிந்திருந்தான்.
"சொல்லுங்க, உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு?"
"எட்டு மாசம்".
"சூசைட் பண்ணிக்கற அளவுக்கு உங்களுக்குள்ளே என்ன பிரச்னை?"
"சார், பிரச்னை எங்களுக்குள்ளே இல்லை, அவளுக்குள்ளேதான்".

"லுக் மிஸ்டர், இந்த வார்த்தை விளையாட்டெல்லாம் எனக்கு வேண்டாம். கல்யாணம் முடிஞ்சு ஒரு வருடம்கூட ஆகாத நிலையில் சூசைட்! உங்களைக் கேள்வியே கேட்காமல் என்னால் அரெஸ்ட் பண்ணமுடியும். நடந்தது என்ன என்பது ஒரு சின்னப் பொய்கூட இல்லாமல் எனக்கு வேண்டும்".

அவர் குரலும் பார்வையும் வெகு கூர்மையாக அவன் மேல் படிய, முதன்முறை, அவன் கைகள் நடுங்குவதைப் பார்த்தார்.

"சார், நான் சொல்லிடறேன்".

அவள் அண்ணன் சரவணன் என் ஆபீஸ் தோழன். அவனைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போகும்போது, வனிதாவைப் பார்த்திருக்கிறேன். 
அவள் அழகின்மேல் எனக்கொரு ஈர்ப்பு. 
சரவணனிடம் பேசினேன்
பிறகு எல்லாமே, வேகமாக நடந்தது.

கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கும் அவளுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல்தான் இருந்தது
இந்த டைரியை நான் பார்க்கும் வரை.

அவள் கல்லூரி நாட்களில், ரமேஷ் என்று ஒருபையனை உருகி உருகிக் காதலித்திருக்கிறாள். அவனைப் பற்றி இந்த டைரி முழுக்கக் கவிதைகள்.
ஒரு விபத்தில் அந்தப் பையன் இறந்திருக்கிறான்.
அதற்குப் பிறகுதான் என்னைக் கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறாள்.

இந்த விபரம் எதுவும் அவர்கள் வீட்டுக்கும் சரவணனுக்கும் கூடத் தெரியவில்லை.

ஒருநாள் உறவின் உச்சத்தில், அவள் அறியாமல் என்னை ரமேஷ் என்று கூப்பிட்டுவிட்டாள். 
என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 
அதற்குப்பின் அவளை நான் தொடக்கூட இல்லை.

தினசரி எங்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தில் அவள் களைத்துப்போய் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

இதைச் சொல்லி இறந்தவளைக் களங்கப்படுத்த நான் விரும்பவில்லை. மற்றபடி, அவள் தற்கொலை செய்துகொள்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நீயே அவளைக் கொன்றுவிட்டு எங்களுக்கு போன் செய்து நாடகமாடியிருக்கிறாய் என்று நான் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?”

இது ஒரு குருட்டுத்தனமான முயற்சிதான். ஆனால் சட்டென்று கேட்டுவிட்டு அவனைக் கூர்ந்து பார்த்தார்.

இப்போது அவன் உதடு துடிப்பது துல்லியமாகத் தெரிந்தது.

“With your permission” என்று, நடுங்கும் விரல்களால் சிகரெட்டைப் பற்றவைத்தவன், இரண்டு இழுப்புக்குப் பின் நிதானத்துக்கு வந்தான்.

"இந்த அபத்தத்துக்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. ஒரு நடத்தை கெட்டவளைக் கொலை செய்து என்வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்ளுமளவு நான் முட்டாள் இல்லை சார், மேலும் படுக்கை அறைக் கதவை உங்கள் ஆட்கள்தான் உடைத்துத் திறந்தார்கள் என்பதை நியாபகம் வைத்துக்கொண்டு கேள்வி கேளுங்கள்"
"இனியும் இதுபோல்தான் கேள்வி கேட்பீர்கள் என்றால், நான் ஒரு வக்கீலைப் பார்க்கவேண்டியிருக்கும்".

அவன் தெளிய எடுத்துக்கொண்ட குறுகிய நேரம் ரவியை ஆச்சரியப்படுத்தியது

இருந்தும், கொஞ்சமும் அதைக் காட்டிக்கொள்ளாமல், "மிஸ்டர், ஃபாரன்சிக் ரிப்போர்ட் வந்தவுடன் நான் உங்களைக் கேட்கும் கேள்விகள் வேறுமாதிரி இருக்கும்.
இப்போது நீங்கள் போகலாம். விசாரணை முடியும்வரை நீங்கள் எங்கள் அனுமதி இல்லாமல் வெளியூருக்கு எங்கும் போகக்கூடாது."
"இன்ஸ்பெக்டர், இவருடைய கைரேகையை வாங்கிக்கொண்டு அனுப்புங்கள் - இப்போதைக்கு".

அதன்பின், அந்த சரவணனையும் அழைத்து விசாரித்தார். 
நல்ல திடகார்த்திடமான ஆண்பிள்ளை. 
ஆனால், வார்த்தைக்கு வார்த்தை தங்கையை நினைத்து அழுதவனுக்கு, வினோதைப் பற்றிச் சொல்ல ஒரு குறையும் இருக்கவில்லை. வினோத்தை சந்தேகப்பட எந்தஒரு தகவலும் அவனிடமிருந்து கிடைக்கவில்லை.

மறுநாள் வந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் அது தூக்கிட்டதால் விளைந்த மரணம் என்பது தவிர, சந்தேகப்படும்படி எதுவும் இல்லை.

முதல்முதலாகத் தன் உள்ளுணர்வு பொய்த்துப் போனது ரவிக்கே ஆச்சரியமாக இருந்தது.

இருந்தும், தான் ஏதோ ஒன்றை மிஸ் பண்ணுவதுபோலவே தோன்றிக்கொண்டே இருந்தது.

இன்ஸ்பெக்டர் சேகரை அறைக்குள் அழைத்தார்.

"உட்காருங்கள் சேகர். அந்த வனிதா கேஸ் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?"
"சார், அது ஒரு ஓப்பன் அண்ட் ஷட் கேஸ் சார். நாம்தானே கதவை உடைத்துத் திறந்தோம் மேலும், ஆடப்ஸி ரிப்போர்ட்டும் அதை தற்கொலை என்றுதானே சார் ஊர்ஜிதம் செய்கிறது?"
"இல்லை சேகர், எனக்குள் ஏதோ ஒன்று சமாதானம் ஆகவில்லை. புறப்படுங்கள். கடைசியாக ஒருமுறை அந்த வீட்டுக்குப் போய்விட்டுவந்து பைலை மூடிவிடலாம்"

சேகர் முகத்தில் நிச்சயம் அலுப்பு தெரிந்தது.
ஊர்ஜிதமான கேசுக்கு ஏன் இப்படி மெனக்கெடுகிறார் என்று தோன்றியதை விழுங்கி, கிளம்பினார்.

கதவைத் திறந்து கேள்வியாய்ப் பார்த்த வினோத்தை கூட்டிக்கொண்டு மீண்டும் அந்தப் பெட்ரூம் உள்ளை போனவர், முதலில் அந்தத் தாழ்ப்பாளை உற்றுப் பார்த்தார்,

"வினோத், இது ஆட்டோமேடிக் லாக்கா", என்று கேட்டவர், மேலிருந்த தாழ்ப்பாளைக் கொஞ்சம் கேள்வியோடு பார்ப்பதைக் கண்ட வினோத் முகம் சுருங்குவதை அலட்சியம் செய்து, எதுவும் பேசாமல் வண்டிக்கு வந்தவர், நேரே, ஃபாரன்சிக் லேபுக்கு வண்டியை விடச் சொன்னார்.

தயாராக இருந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தவர், 
"சேகர், நாளைக்கு மாலை ஒரு ஏழு மணிக்கு அந்த சரவணனை வரச் சொல்லுங்கள். ஒரு இறுதி விசாரனைக்குப்பிறகு  கேஸை மூடிவிடலாம்."

மறுநாள், மாலை சரியாக ஏழரை மணிக்கு சேகரை அறைக்கு அழைத்தார்.

கதவைத் திறந்து உள்ளே சேகர் வந்த இடைவெளியில் வெளியே விசிட்டர் நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

உட்காருங்கள் சேகர். வெளியே யாரது?

உங்களைப் பார்க்க, நீங்கள்தான் வரச்சொன்னதாக அந்த சரவணன் சார்.

இருக்கட்டும் நீங்கள் உட்காருங்கள் என்றவர், ஒரு இரண்டுநிமிடம் கண்மூடி யோசனையாகவே மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

கண்ணைத் திறந்தவர், சென்ட்ரியைக் கூப்பிட்டு, கொஞ்சம் காற்றோட்டமாகக் கதவைத் திறந்து வைக்கச் சொன்னார்.

அதற்குப்பின் பேச ஆரம்பித்தவர் குரல் வழக்கத்தைவிடக் கொஞ்சம் உயர்ந்தே ஒலித்தது.

"சேகர், அந்தக் கேஸை என்ன செய்யலாம்?"
"தற்கொலை என்றுதானே தெரிகிறது சார்!"

"இல்லை சேகர், இது ஒரு திட்டமிட்ட, சாமார்த்தியமான கொலை".

சேகரிடம் சின்னத் திடுக்கிடல்.

"எப்படி சார்?"

"சேகர், ஆரம்பத்திலிருந்தே அந்த வினோத்தின் கண்களில் ஒரு சலனம். எதையோ மறைப்பது எனக்குப் புரிந்தது. அது என்னவென்றுதான் புரியவே இல்லை".
"நேற்று ஃபாரன்சிக் ரிப்போர்ட் அந்த முடிச்சை அவிழ்த்தது."
"அந்த ஆட்டோமாடிக் கதவு, உள்பக்கக் குமிழை அழுத்திவிட்டு மூடினால், தானாக லாக் ஆகும்படி இருந்தததை கவனித்தீர்களா சேகர்?"

ஆமாம் சார்!

வேறு என்ன பார்த்தீர்கள் அந்தக் கதவில்?

வேறு..... வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை சார்!

மேலே ஒரு தாழ்ப்பாள் இருந்ததைப் பார்த்தீர்களா?
ஆமாம் சார்.

கதவைத் தாளிட்டுத் தூக்கு மாட்டிக்கொள்பவள் ஏன் அந்தத் தாழைப் போடவில்லை
இது ஒரு சின்ன விஷயம்தான்.

சரி, அந்த பாரன்சிக் ரிப்போர்ட் அந்த ஆட்டோமேடிக் லாக்கை பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்கள்!

"அந்தக் குமிழில், கை ரேகைகள் எதுவுமே இல்லை!"

இது உங்களுக்கு அபத்தமாகப் படவில்லையா?

இப்போது நான் ஒரு கோர்வையாகச் சொல்கிறேன். 
எங்காவது ஓட்டை இருந்தால் சொல்லுங்கள் சேகர்.

காலையில் அவனுக்கும், அவன் மனைவிக்கும் வாக்குவாதம் அவள் பழைய காதலைப் பற்றி. 
இறந்துபோய்  இல்லாதவனைக் காரணம் காட்டி விவாகரத்தும் பெறமுடியாத சூழல்.
அவளோடு வாழவும் முடியாத உறுத்தல்.
தன் வாழ்க்கைக்கு அவள் இருப்பது இடைஞ்சல். 
என்ன செய்யலாம்?
புடவையில் அவளைத் தொங்கவிட்டுவிட்டு, ஆட்டோமாடிக் லாக்கை அழுத்திவிட்டு, கைரேகையை சுத்தமாகத் துடைத்துவிட்டு வெளியே வருகிறான்.
கவனமாக, படுக்கை அறை சாவியை மட்டும் "மறந்துபோய்" உள்ளேயே வைத்துவிடுகிறான். கதவைப் போலீஸ் உடைத்துத் திறப்பது அவனுக்கு ஸ்ட்ராங் அலிபி.

ஆபீஸுக்குப் போனபிறகு, சரவணனிடம் அவன் தங்கை மனநிலை குறித்தும், அவள் ஊருக்குப் போவதுபற்றியும் குறை சொல்கிறான்.

கண்டிப்பாக ஃபோனில் பதில் இல்லாவிட்டால், தன்னோடு சரவணனும் பதறிக்கொண்டு வருவான் என்பது அவனுக்கு அலிபி நெம்பர் இரண்டு.

எல்லாமே திட்டப்படி நடந்தாலும், என் இருபத்தைந்து வருட போலீஸ் புத்தி ஏனோ அவனை சந்தேகப் படச்சொன்னது.

ஃபாரன்சிக் ரிப்போர்ட் அதை ஊர்ஜிதப்படுத்தியது.

கதவைத் தாழ் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்பவள், ரேகையை அழிப்பது என்ன சாத்தியம்?

Great சார். இப்போதே, அவனைக் கஸ்டடிக்கு எடுத்து விடலாம்.

எடுத்து
என்ன செய்வீர்கள்
லாக்கில் கைரேகை இல்லை என்பது, வினோத்தின் கைரேகையும் அதில் இல்லாதபோது எந்தவிதத்தில், கோர்ட்டில் நிற்கும்?

ஒரு சுமாரான வக்கீல் கூட இந்தக் கேஸை கீழ்க் கோர்ட்டிலேயே உடைத்து எறிந்துவிடுவான்.

என்ன செய்வது சார்
வேறு வழியே இல்லையா?

இருக்கிறது.
ஒரு அரைமணிக்கு முன்னாள் நான் ஒரு வினோதமான வேலை செய்தேன். 
அந்த வினோத்துக்கு ஃபோன் செய்து, நேரிடையாக பேரம் பேசினேன்.

ஃபாரன்சிக் ரிப்போர்ட் அவனைக் குற்றம் சாட்டுகிறது. புடவையில் இரண்டு இடங்களில், அந்த வனிதா கழுத்தில் ஒரு இடத்தில் அவன் கைரேகை தெளிவாக இருக்கிறது என்று அழுத்தமாகப் பொய் சொன்னேன். நம்பிவிட்டான். 

அதை நான் வெளியே சொல்லாமல் இந்தக் கேஸை தற்கொலை என்று முடிக்க பத்துலட்ச ரூபாய் பணம் கேட்டேன். 
அதை எங்கே, எப்படிக் கொடுக்கவேண்டும் என்று சொல்ல, நானே எட்டரை மணிக்கு அவன் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறேன்.

யாருக்கும் தகவல் சொல்லாமல் அவனை மட்டும் தனியே காத்திருக்கச் சொன்னேன்.

போனிலேயே அழுதுவிட்டான் 
எனக்காகத் தனியே  காத்திருப்பதாய் சொல்லியிருக்கிறான்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வலுவான யாராவது ஒருவன்வனிதாவைப் போலவே, அவனைத் தொங்கவிடுவது மட்டுமே இதற்கு சரியான தீர்வாக முடியும். 
Poetic Justice!! 

ஆனால், அதை யார் செய்யமுடியும்? அது நம் வேலையும் இல்லை. 

எனக்காகக் காத்திருக்கும் இந்த ஒருமணி நேர மன உளைச்சல்தான் என்னால் அவனுக்குத் தரமுடிந்த அதிகபட்ச தண்டனை.

நம் நாட்டு சட்டங்கள் அவ்வளவுதான்.

ஒரு பத்து நிமிடம் அந்த அறையில் கடும் மௌனம் நிலவியது.

"சரி சேகர், நீங்கள் அந்த கேஸை தற்கொலை என்றே முடித்துவிடுங்கள்."

"வெளியே காத்திருக்கும் அந்த சரவணனை வரச் சொல்லுங்கள்".

சரவணனைக் காணவில்லை. 
சென்ட்ரியைக் கேட்டபோது, அவன் பத்து நிமிடங்களுக்கு முன்பே போய்விட்டதாகத் தெரிந்தது.

அதைப்பற்றி வேறு எதுவும் பேசாது அந்த ஃபைலை தற்கொலை என்று முடித்து,  hence, I find this to be a clear case of suicide and recommend it  to be treated as closed என்று எழுதி
கையெழுத்துப் போடும்போது,
ஃபோன் அடித்தது.
.
.
.
.
.
.
.
கதையின் தலைப்பு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக