ஹமாமும் மைசூர்
சாண்டல் சோப்பும்!
அவ்வளவு அழகு பாட்டி வீட்டு
முற்றம்.
நாலுபுறமும்
தாழ்வாரங்கள்.
நடுவே தொட்டி என்று
மற்றவர்களாலும் முத்தம் என்று ரவியாலும் சொல்லப்படும் முற்றம்.
தூண்களைப்
பிடித்துக்கொண்டு, நண்டும் சிண்டுமாக எப்போதும் பத்து உருப்படிகள்
விளையாடிக் களித்த இளமைப் பருவங்கள்.
இந்தப் பால்யம்தான்
எவ்வளவு வேகமாகக் கடந்துபோய் விடுகிறது.
அதிலும், இந்தப் பெண்கள் பால்யம் தொலைப்பதில் ஆண்களைவிட எவ்வளவு வேகம்!.
எனக்கென்னவோ, பெண்கள் எல்லாவற்றிலுமே
ஆண்களைவிடக் கொஞ்சம் வேகமாகவும் அவசரத்தோடுமே செயல்படுவதாகப் படுகிறது.
இளையராஜா என்றொரு
அசுரன் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரம்.
லட்சுமிக்கு
எப்போதும் காற்றில் எந்தன் கீதம் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பூக்கட்டுவது
ரொம்பப் பிடிக்கும்.
தாழ்வாரத்துத் தூணில்
சாய்ந்துகொண்டு கிறங்கிப்போய் அவள் பாடிக்கொண்டிருக்கும்போது ரவிக்கு ஒரு
குறுகுறுப்பு மனதுக்குள் ஓடும்.
அப்போதுதான் கல்லூரி
வாசலைத் தட்டும் வயது. இப்போதுபோல் டிவி, இணையம் என்று பரந்து
திறந்த ஜன்னல்கள் இல்லாத உலகம்.
எல்லாமே
இலை மறை காய்மறை என்றே கற்றுக்கொள்ள வேண்டிய நிலை.
அப்போதே, லக்ஷ்மியின் விழிகள் ஏதோ சொல்வதுபோல் தெரியும்.
இதை சமவயதுத் தோழன்
அத்தை மகன் மனோவிடம் சொன்னபோது, கற்பழிக்க வந்த வில்லனைப் பார்ப்பதுபோலப்
பார்த்தான்.
விடுமுறையில் ஊருக்கு
வரும்போதெல்லாம் காலையில் எல்லோரும் ஆற்றுக்குக் குளிக்கப்போவதுதான் வழக்கம்!
வேலியோரப் பூக்களும், குளித்து நீர் சொட்ட நடந்துவரும் ஈர உடை தேவதைகளும் நடக்கும் தூரத்தை வண்ணமாக்கும்.
திடீரென்று, ஆற்றுக்குப் போவதைவிட, அருகிருக்கும் வாய்க்காலுக்கே போகலாம் என்று
இழுக்க ஆரம்பித்தான் ரவி.
காரணம் லட்சுமி!
ஒரு அதிகாலை
விடியலில் முற்றத்தில் சுகமாக உறங்கிக்கொண்டு இருந்தவனின்
போர்வைக்குள் நுழைந்த விரல்கள் அவன் இதழ் கிள்ள, காதருகே கிசுகிசுத்தது
குரல் “வாய்க்காலுக்கு குளிக்கப் போலாமா?”
என்னவென்று புரிந்து
கண்விழிக்கும்போது, நிழலாய்க் கடந்துபோனது உருவம்.
என்ன என்று புரிந்து
விதிர்த்துப் போய் எழும்போது, ஒன்றுமே தெரியாததுபோல் அம்மாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தாள் லட்சுமி. "பத்துமணிக்கு வாய்க்காலுக்குப் போகணும்
அத்தை. ஒரு மூட்டை துணி இருக்கு துவைக்க."
கதை வசனம் ஒன்னும்
புரியாத விஜயலட்சுமித் தாயார், “அதை ஏண்டி எங்கிட்ட
சொல்லறே? நான் வீட்டில்தான் குளிப்பேன், வேணும்னா உங்க பெரியம்மா வருவாங்க, அவங்கள கூப்பிட்டுப்
பாரு”ன்னு சொல்ல,
“இல்லத்தே, பக்கத்து வீட்டு ராணி கூடப்போறேன். சரியா பத்துமணிக்கு,
பத்துமணிக்கு அத்தை” என,
“இங்க வந்து எதுக்கு ஏலம் விட்டுக்கிட்டு
இருக்கே, அங்க பாரு எங்க வீட்டுல எல்லாம் இன்னும்
போர்வைக்குள்ளேயே உருளுதுக”.
சொல்லிக்கிட்டே, உத்தேசமாக எதோ ஒரு மண்டையில ஒரு தட்டு தட்டி, “டேய், எல்லாப் பசங்களும் எந்திருச்சுத் தொலைங்கடா, மணி எட்டாச்சு. காப்பிக்
கடைய முடிச்சு, இட்லி வடிச்சுக் கொட்டவே பொழுதாயிரும்” ன்னு ஒரு சத்தம்
போட,
போறபோக்குல ரவியைக்
காலால ஒரு எத்து எத்தி, “இப்படி எழுப்பணும் அத்தை, இந்த சோம்பேறிப் பசங்கள” அப்படின்னு சொல்லிக்கிட்டே போய்ட்டா!
பேயறஞ்ச மாதிரி
உட்கார்ந்திருந்த ரவி, ஹால் கடிகாரம் எட்டுமுறை அடிக்க, பதறிப்போய் எழுந்தான்.
அடேய் பாவிகளா, எல்லாரும் எழுந்திருங்கடா மணி எட்டாச்சுன்னு உலுக்க, பளார்ன்னு ஒன்னு விட்டான் மணிவண்ணன். “எட்டுமணிக்கே என்னடா
உனக்கு அவசரம்? லீவுலகூட தூங்க விடமாட்டேங்குது நாயி” ன்னு காலைத் தூக்க, ஆரம்பிச்சது அன்னைக்கான ஆட்டம்.
வழக்கம் போல, எல்லாப் பயலும் லோட்டா நிறைய காப்பி வாங்கிக் குடிச்சதோ, வரிசையா பல்தேச்சு முடிச்சு ஆளுக்கு அரை டசன் இட்லி முழுங்கியதோ, ரவிக்கு உறைக்கவே இல்லை.
எப்படா குளிக்கப் போகலாம்ன்னு எட்டாவது தடவை
கேட்டப்போ,
இடுப்புல பக்கெட்டோட
லட்சமி உள்ளே வந்தாள்.
“அண்ணா, இந்த மாமாவீட்டுப்
பசங்களோட சேர்ந்து சோம்பேறி ஆகாதீங்க. போய் குளிக்கற வேலையைப் பாருங்க”ன்னு
வாய் மனோகரனிடம்
பேசியது. கண் ரவியைக் கொஞ்சியது.
லட்சுமி போன பத்தாவது
நிமிடம், எப்படியோ எல்லோரையும் திரட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு
லட்சுமி தேடி நெடும்பயணம்.
போகும் வழியில் ஒரு
மனிதர், பாவம் வெளியூர் போல, கண்ணில் தவிப்போடு, போயும்போயும் ரவியிடமா
கேட்கவேண்டும்,
“தம்பி, இங்கே யூரின் போற எடம்
எங்க இருக்கு”?
“எங்களுக்கெல்லாம் அவரவர்கிட்டையே
இருக்குங்கண்ணா!”
வாய்க்காலுக்குப்
போகும்வரைக்கும் வயிறு கிழியும் சிரிப்பு, வழியே அதிர்ந்தது!
ஆனால், வழியில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டி, ஆச்சியிடம் சொல்லி, அந்த மனிதரைக் கொல்லைக்கு அனுப்பியபிறகே நடக்க ஆரம்பித்தான்
இதுதான் ரவி.
ஒரிஜினல்
காவேரிக்கரைக் குசும்பு.
இருக்குமிடத்தைக்
கலகலப்பாக வைத்துக்கொள்ளும் கலையில் நிபுணன்.
சட்டென்று
எல்லோரிடமும் சிநேகிக்கும் பேச்சு.
தெருவில் எந்த
வீட்டுக்குள் நுழைந்தாலும் பெரும்பகுதி நேரம் கிச்சனில்தான் வாசம். பெண்களுக்கும்
குழந்தைகளுக்கும் ஆப்தன் - லட்சுமியைத் தவிர, யாரிடமும் கண்கள்
அலையாமல் பேசும் குணம்.
அது என்னவோ, லட்சுமியைப் பார்க்கும்போது மட்டும் கண்கள் சொன்னபேச்சைக் கேட்பதில்லை.
லட்சுமிக்கும் இவன்
கண்களைத் தொடர்வதில் கூச்சமில்லை.
முறைப் பெண் என்பதைத்
தாண்டி எப்போதும் இவனை முறைக்கும் பெண்.
விடுமுறைக்கு ரவி
எப்போது வருவான், எந்த நேரம் எங்கிருப்பான் என்பது லட்சுமிக்கு
மனப்பாடம்.
எந்த வீட்டுக்குள்
ரவி நுழையவும், அத்தை, பெரியம்மா என்று ஏதாவது
அழைத்துக்கொண்டு தற்செயலாக
ரெண்டாவது நிமிஷம் லட்சுமி உள்ளே
நுழையவும் சரியாக இருக்கும்.
சின்னஅத்தை வீட்டில்
இருட்டு நடையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது தற்செயல்தான் என்று முதல்முறை ரவி நம்பிக்கொண்டிருந்தான்.
அடுத்தடுத்து
மோதல்களும், கன்னத்தில் பதிந்த ஈரமும்தான் ரவிக்கு அந்த
வீட்டின் நடையை சொர்க்கமாக்கியது.
வினாடி நேரத்
தீண்டல்கள்தான்,
ஆனால்
அன்றைய பொழுதை சூடாக்க அது போதுமானதாகவே இருந்தது.
இந்தச் சின்னச்
சின்னக் கள்ளத்தனம் இன்று தைரியமாக வாய்க்காலுக்குக் கூப்பிட்டிருக்கிறது.
போன வேகத்தில் துணி
துவைக்கவும், முங்கு நீச்சல் போட்டி வைக்க்கவுமாக அமளி
துமளிப் பட்டதில், ரவியும் லட்சுமியும் நடு வாய்க்காலில் இறங்கி
மூழ்கியதை யாரும் கவனிக்கவில்லை.
பத்து நிமிடம்
கழித்து மனோகரன்தான் கேட்டான்,
“என்னடா, உதட்டில் காயம்?”
வீங்கிய
உதட்டைத் துடைத்துக்கொண்டே லட்சுமியைப் பார்த்தவாறே சொன்னான்- “மீன் கடிச்சுடுச்சுடா!”
“ஆமா மாமா, கொஞ்சம் பெரியமீன்தான்
கடிச்சிருக்கு, பசியோட இருந்திருக்கும்போல!” - இது குறும்புச் சிரிப்போடு லட்சுமி.
பாவம் அப்பாவி
மனோகரன் “ஏம்மா,
உன்னையும் கடிச்சுடுச்சா, எங்க கடிச்சது?” என்ற கேள்விக்கு அவள் முகம் ஏன் அப்படி
சிவந்தது என்று புரியாமல் விழித்தான்!
ஒரு மணி நேரக்
குளியலுக்குப்பின் திரும்பி வரும்போது யாரோ ஒருத்தன் கேட்டான்,
“ரவி, நீ துணி தொவைச்சத நான்
பார்க்கவே இல்லை?”
அன்று மட்டுமல்ல,
அந்த விடுமுறையில் பத்து
நாளும், ரவி துணியை யார் துவைத்துத் தந்தார்கள் என்றும்,
சில நிமிடங்கள்
இரண்டுபேர் மட்டும் அத்தனை பேர் கண்ணில் எப்படி மண்ணைத்
தூவினார்கள் என்றும்,
பாவம் அந்த அப்பாவி
விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தெரியவே இல்லை.
விடுமுறையின் கடைசி நாள் குளித்து
முடித்து வந்து வீட்டில் தலை துவட்டும்போது, பக்கத்து வீட்டில்
லட்சுமியின் அம்மா, ரவியின் அத்தை, சத்தம்போடுவது
துல்லியமாகக்கேட்டது
“ஏண்டி, புத்தம்புது மைசூர்
சந்தன சோப்பை வாய்க்காலில் விட்டுவிட்டு, யாரோட ஹமாம் சோப்பையோ
எடுத்துக்கிட்டு வந்திருக்கே, கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடி, அந்த சோப்பைத் தூக்கி ஏறி”.
இரண்டு வருடம்
கழித்து, கல்லூரி விடுமுறையில் வேலூர் வந்த ரவிக்கு,
லட்சுமி தன ஒருமாதக்
குழந்தையைக் காட்டியவாறே கொஞ்சம்கூட சலனமே இல்லாமல்
சந்தோசமாகத்தான் சொன்னாள்
“குட்டிம்மா, பெரியப்பாவைப் பாருங்க!”
ரவிதான் பாவம், அந்த மைசூர் சாண்டல்
சோப்பை ஏறத்தாழ ஐந்து வருடத்துக்குமேல் பத்திரமாக வைத்திருந்தான்.
ஆனால், ஹமாம் சோப்பை மட்டும் ஏனோ அதற்குப்பின் அவன்
உபயோகிக்கவே இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக