நித்யாஆஆஆ
"நீ என் கூட
ஊட்டிக்கு வர்றது ஆபீஸில் யாருக்கும் தெரியவேண்டாம் நித்யா. நீ நாளைக்கே ஒருவாரம்
லீவ் சொல்லிடு, சனிக்கிழமை காலை
ப்ளைட்ல கோயமுத்தூர் கிளம்பிடு. டிக்கெட் நான் புக் பண்ணிடறேன். நான் மாலை பிளைட்
பிடிச்சு வந்துடுறேன். அங்கிருந்து ஊட்டிக்கு சேர்ந்தே போய்டுவோம். நாலு நாள்
பையர்ஸ் கான்பரன்ஸ்ல நமக்கு நிறைய நேரம் கிடைக்கும்".
கணவரின் அறையைத்
தாண்டும்போது கிசுகிசுப்பான குரலில் போனில் பேசுவது தெளிவாகவே
கேட்டது லட்சுமிக்கு.
தள்ளாடும் கால்களை எப்படியோ
இழுத்துவந்து அறைக்குள் விழுந்தாள்.
“இந்த மனிதருக்கு என்னகுறை வைத்தேன்? இன்றைக்கும்
ஒவ்வொன்றாய் அவர் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வேனே”.
நேற்றுக்கூட, “ரெண்டு பிள்ளைகளைப் பெத்தவ மாதிரியாடி நீ
இருக்கே” என்று விடியவிடியக் கொஞ்சிக்கொண்டுதானே இருந்தார்.
ஆனால் அரசால்புரசலாகக் காதில் விழுந்த தகவல்களும், சமீபகால உற்சாக ஆபீஸ் புறப்பபாடுகளும், டிரெஸ்ஸிங் டேபிளில்
புதிதாய் வந்த செண்ட் பாட்டிலும் சந்தேகத்தை ஊதிவிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன!
நாற்பது வயதில்
நாய்குணம் என்பது சரியாகத்தான் இருக்கிறது.
இதை எப்படி, யாரிடம் சொல்லி சரி செய்வது?
இந்த மனிதர் மட்டும் நம்பிக்கை
துரோகம் செய்வது உண்மையானால் இனி,
இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட
இருக்கக்கூடாது.
கண்ணையும், முகத்தையும் துடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தபோது, பிள்ளைகள் இருவரும் டிரைவருடன் பள்ளிக்குக் கிளம்பியிருந்தார்கள்.
மறுபடியும் கணவரின்
அறைக்குள் போனபோது குளிக்கப் போயிருந்தார். அவசரமாக அவர் போனை எடுத்துப்
பார்த்தபோது, தினமும் அந்த நித்யாவுக்கு
காலையும் மாலையும் போன் செய்து பேசியிருப்பது தெரிந்தது.
அமைதியாக அழுக்குத்
துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டு, ஹால் சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.
சரியாக அரைமணி நேரம்
கழித்து “லட்சுமி...” என்று
கூப்பிட்டுக்கொண்டே வந்தார் சிவராமன்.
வழக்கமான கோட்டும், டையுமான உடை இன்று மட்டும் ஏதோ அதிகப்படியான அலங்காரமாகப் பட்டது
லட்சுமிக்கு.
டைனிங் டேபிளில்
உட்கார்ந்து, தோசையை எடுத்து ஒரு விள்ளல் வாயில் போட்டவர்,
“இந்த சாம்பாருக்காகவே உன்னை இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாம்டி!” என்றபோது, வழக்கமான மலர்ச்சி
இல்லாமல் கடனே என்று புன்னகைத்தாள் லட்சுமி.
“ஏம்மா, என்னாச்சு, உடம்புக்கு ஏதாவது சரியில்லையா” என்று குழைந்தபோது, “இந்த நாடகமெல்லாம் போதும்” என்று உரக்கக் கத்தத் தோன்றியது.
இருந்தும், கையும் களவுமாகப் பிடிக்கும்வரை எதையும் காண்பிக்கக்கூடாது என்று பல்லைக்
கடித்துக்கொண்டு, “ஒன்னும் இல்லைங்க, காலைல இருந்து கொஞ்சம் தலைவலி, அதுதான்” என்று சமாளித்தாள்.
“சின்ன வண்டியை எடுத்துக்கிட்டுப் போய்
டாக்டரைப் பார்த்துவிட்டு வந்துடு செல்லம்!
இன்னைக்கு ஆபீஸ்ல
முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் ஒருமணிக்கு போன பண்றேன், டாக்டர் என்ன சொன்னாருன்னு சொல்றே!”
ரொம்பத்தான்
நடிக்கிறார் மனிதர் என்ற கசப்பை விழுங்கிக்கொண்டு, சரி என்று மண்டையை
ஆட்டினாள் லட்சுமி.
லட்சுமி, சிவராமன் கல்யாணம், பணமும் பணமும் சேர்ந்ததுபோல், பெரியவர்கள் பார்த்து நடத்திய ஆடம்பரக் கல்யாணம்.
ஒரே மகளைத் தங்கள்
தகுதிக்கு ஏற்ற பையன் கையில் பிடித்துக் கொடுத்த சந்தோஷத்திலேயே லட்சுமியில் அப்பா
அம்மா இருவரும் அடுத்த ஒரே வருடத்தில் கார் விபத்தில் ஒன்றாக இறந்துபோக, இந்தப் பத்துவருடங்களாக இரண்டு நிறுவனங்களையும் இணைத்துக்
கோலோச்சிவருகிறார் சிவராமன்.
லட்சுமிக்கு அவரும், பிள்ளைகளும், வீடும் வேலைக்காரர்களுமே உலகமாய் சிக்கலில்லாத
வாழ்க்கை!
சிவராமன், நாற்பத்து மூன்று வயதுக்குள், சென்னையில் வர்த்தகத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய புள்ளிகளில்
ஒருவராக வளர்ந்தவர். கடும் உழைப்பாளி, இரண்டுமடங்காய்ச்
சேர்ந்த சொத்தை, திறமையாக ஏற்றுமதி வியாபாரத்தில் போட்டு, ஒன்றுக்குப் பத்தாய் எடுக்கும் புத்திசாலி.
தொழிலிலும் சரி, குடும்பத்திலும் சரி, கண்டிப்பும் அரவணைப்புமாக மிக நேர்த்தியான
நிர்வாகி.
தவறிக் கூட அலுவலக
விஷயங்களை வீட்டில் பேசமாட்டார்.
கேட்டால், வீடு, ஆபீஸ் இரண்டும் தண்டவாளங்களைப்போல் இணையாமல்
நேர்க்கோட்டில் இருந்தால்தான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும் என்று தத்துவம்
பேசுவார்.
அது ஒருவகையில்
லட்சுமிக்கும் வசதியாக இருந்தது.
ஆனால், இந்த நித்யா விவகாரம் வந்தத்தும்தான் யாரிடம் போய் ஆலோசனை கேட்பது என்று
புரியாமல் குழம்பித் தவிக்கின்றாள்!
கடந்த சில நாட்களாக சிவராமன்
பாடல்களை முணுமுணுப்பதும் உல்லாசமாக சீட்டியடிப்பதும் ரொம்பவே புதுசு.
இப்போது நினைத்துப்
பார்க்கையில் எல்லாம் அந்த நித்யா என்ற பெயரை அவர் சொல்ல ஆரம்பித்தபோது வந்த
மாற்றம்தான் என்று பட்டது லட்சுமிக்கு.
சரியாக ஒருமணிக்கு
போன் செய்து, டாக்டரிடம் போனியாம்மா என்று அக்கறையைக்
கேட்டவரை தேவையில்லாமல் சந்தேகப்பட்டோமோ என்று ஒரு நிமிடம் தோன்றியது, அடுத்த வார்த்தையில் அடங்கிப்போனது.
‘லட்சுமி, இந்த சனிக்கிழமை ஒரு
பையர் மீட்டிங்குக்காக ஊட்டி போகிறேன், வர நாலு நாள் ஆகும்” என்றபோது, நிஜமாகவே தலை வலிக்க ஆரம்பித்தது லட்சுமிக்கு!
அடுத்த இரண்டு
நாட்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை லட்சுமிக்கு. யாரைக் கேட்பது, யார் உதவியை நாடுவது என்று ஒன்றுமே புரியாத கையறுநிலை.
வெள்ளிக்கிழமைதான்
ஒரு சின்ன மின்னல் கீற்றாய் ஒரு வழி தெரிந்தது.
வக்கீல் வரதராஜன், அப்பாவின் நண்பர். அவருக்கு போன் செய்து, “அங்கிள், ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் பேசவேண்டும்” என்று கேட்டபோதே, குரல் அடைத்து அழுகை பொங்கியது.
“இப்போவே வாம்மா”, என்ற கனிவான குரல்
கேட்டதும் மனதுக்கு ஒரு தெம்பு வந்ததுபோல் இருந்தது.
உடனே, பெசண்ட் நகரிலிருக்கும் அவர் ஆபீஸுக்கு காரை எடுத்துக்கொண்டு போனவள், தான் கேட்க நேர்ந்த உரையாடல்களையும், அவர் நித்யாவுடன் ஊட்டி
போவதையும் சொல்லி முடித்தபோது, கண்களில் மாலையாகக் கண்ணீர்.
“லட்சுமி, நீ ஒன்றும் சின்னப் பெண்
அல்ல. இதை நீ நேரிடையாக அவரிடம் கேட்டு, அவர் இல்லை என்று
மறுத்துவிட்டால் உனக்குத்தான் அசிங்கமாகப் போகும்,”
“ ஒன்று செய், ஞாயிறு இரவு விமானத்தில், நாம் இருவரும் கோவை போவோம்,
இரவு பத்துமணி சுமாருக்கு நேராக
சொல்லாமல் கொள்ளாமல் போய் ஊட்டியில் நிற்போம். கையும் களவுமாக சிக்கினால், அதன்பின் சட்டப் பூர்வமாக உனக்கு எல்லா உதவியையும் செய்யவேண்டியது என்
பொறுப்பு.”
“நீ எதற்கும் கவலைப் படாதே”.
வீட்டுக்கு வந்தபோது
லட்சுமிக்குக் கொஞ்சம் ஆறுதலாகக்கூட இருந்தது.
மனதின் ஓரத்தில், தன சந்தேகம் பொய் என்று ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும்
தோன்றியது.
கணவர் ஊட்டி
போவதாய்க் கிளம்பிப் போனபின், மறுநாள் பிள்ளைகளிடம் சேலம் வரைக்கும் ஒரு
திருமணத்துக்குப் போவதாகவும், திங்கள் மதியம் வந்துவிடுவதாகவும்
சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
ஊட்டி மலை ஏறும்போது, கார் சத்தத்தையும் மீறி நெஞ்சு துடிப்பது லட்சுமிக்குக் கேட்டது.
வேண்டுமென்றே கொஞ்சம்
தாமதித்து, சரியாகப் பத்து மணிக்கு தாஜ் ஹோட்டல் சூட்
அறைக்கதவைத் தட்டும்போது, தான் காண நேரும் காட்சி பற்றிய பதட்டமான கற்பனை
தந்த கிறுகிறுப்பில், வரதராஜனின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்
லட்சுமி.
கதவைத் திறந்த
சிவராமன், அவர்களைப் பார்த்த கண்ணில் தெரிந்த அதிர்ச்சியைவிட, அவரது கோலம் லட்சுமியைத் தாக்கியது.
அந்த இரவு
நேரத்திலும், சற்றும் கசங்காத அலுவலக தோரணையிலான கோட்
அணிந்து கதவைத் திறந்த சிவராமன்,
“என்னம்மா ஆச்சு, ஏன் இந்த நேரத்தில்,” என்று பதட்டமாய்க் கேட்க,
வரதராஜன்தான் “உள்ளேபோய் பேசலாம்” என்று வலுக்கட்டாயமாக ரூமுக்குள் புகுந்தார்.
அங்கே, முன்னாள் இருந்த டீபாயில் அலுவலக பேப்பர்களும் லேப்டாப்பும் பரத்திவைக்கப்
பட்டிருக்க, சேரில் உட்கார்ந்திருந்த ஒல்லியான் மனிதர்
கண்ணில் கேள்வியோடு எழுந்தார்.
“நித்யா, நீ உன் ரூமுக்குப் போ”, என்றவர், வரதராஜனிடம் சொன்னார், "மீட் மை பி ஏ நித்யானந்தன்!."
அவர் வெளியேறியபின், தன்னைக் கட்டிக்கொண்டு கதறிய மனைவியை பரிவோடு புரியாமல் பார்த்தார்
சிவராமன்.
வரதராஜன்தான் பொறுமையாய் லட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட நேர்ந்த
சூழலையும், அவளைத் தான்தான் அழைத்து வந்ததையும் பக்குவமாக
எடுத்துச் சொன்னார்.
வாய்விட்டுச் சிரித்த
சிவராமன், "அடி முட்டாளே, எனக்கு இதற்கெல்லாம்
நேரமே இல்லை. ஒரு பெரிய ஆர்டர் விஷயமாக, ரேட் கொடுக்க
வேண்டியிருந்தது. ஆபீஸில் ஏதோ உள்ளடி வேலைகள் நடப்பதாய் சந்தேகம் எழுந்ததால், நித்யானந்தத்திடம் அதைப்பற்றி தனிமையில் பேசுவதற்காக அவனை ஊட்டிக்கு
யாருக்கும் தெரியாமல் வரச்சொன்னேன். அவனை நான் நித்யா என்று கூப்பிடுவது உனக்குத்
தப்பாய்ப் புரிந்திருக்கிறது”.
“இதை நீ என்னிடமே கேட்டிருக்கலாமே!” என்று கோபமே இல்லாமல் வாஞ்சையோடு சிரித்தார்.
“சரி, வந்தது வந்தாய், ஊட்டியில் வேறு ரொம்பக் குளிருது, காலை ஆறுமணி ப்ளைட்டில்
உன் அங்கிள் மட்டும் ஊருக்குப் போகட்டும், நீ டிக்கெட்டை கேன்சல்
செய்துவிட்டு இங்கே தங்கிவிடு!” என்று கண்ணடித்தார்.
வெட்கமும் வருத்தமுமாய்
ஆயிரம் சாரி சொல்லிவிட்டு, பிள்ளைகள் தனியாய்த் தவித்துப்போகும் என்று
சொன்னவளை, மேலும் ஒருமணி நேரம் வரதராஜன் இருப்பதுபற்றிய லஜ்ஜையே
இல்லாமல் கொஞ்சிவிட்டுத்தான் மனமே இல்லாமல் அனுப்பினார் சிவராமன்.
திரும்பிக்
கோவைக்குக் காரில் வரும் வழியெல்லாம், “நான் பெரிய முட்டாள்
அங்கிள், அவரைப் போய் தப்பாப் புரிஞ்சுக்கிட்டது மட்டுமில்லாமல்
உங்களையும் அலைய வைத்துவிட்டேன்” என்று வெட்கமும், வருத்தமும், மகிழ்ச்சியுமாய் புலம்பிக்கொண்டே வந்தாள்
லட்சுமி.
“விடும்மா, என் நண்பனின் மகள் நீ.
உனக்காக இதைக்கூட செய்யமாட்டேனா,
நீ உன் கணவரோடு சந்தோஷமாக
இருந்தாலே எனக்குப் போதும்” என்று நூறாவது தடவையாக ஆறுதல் சொன்ன வரதராஜன், தனக்குள் புன்னகைத்துக்கொண்டார்!
இருவரையும்
அனுப்பிவிட்டு,
பக்கத்து
அறை கதவைத் தட்டிய சிவராமன், நித்யானந்தமாக நடித்த ரமேஷ் குமாருக்கு ஐநூறு ரூபாய்க் கட்டு
ஒன்றைக் எறிந்துவிட்டு, “நாளை வரதராஜன் அக்கவுண்ட்டுக்கு ஐந்து லட்சரூபாய் ட்ரான்ஸ்பர்
செய்துவிடு” என்று சொல்லிவிட்டு, சிக்கனமான உடையில் காத்திருந்த நித்யாவை
அள்ளிக்கொண்டு அறைக்குள் புகுந்தார்.
நித்யா
செல்லமாகக் காதுக்குள் சிணுங்கினாள் –
“ஒரு இரவு அநியாயமாக வீணாய்ப் போனதே சிவா!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக